Monday, 26 February 2007
நான் ஆச்சரியப்படுகின்றேன் வன்முறையின் மீதான எனது விருப்புக் குறித்து..
 01. இப்பொழுதெல்லாம் நான் மிகவும் அச்சப்படுகின்றேன் எழுத நினைப்பவைகளை விரைந்து எழுதிவிட வேண்டும் போன்ற எண்ணம் அடிக்கடி என்னை உசுப்பிவிடுகின்றது. வாழ்வு மிகவும் சுருங்கிப் போன ஒன்றாகத் தெரிகின்றது. உண்மையில் எங்களது நாளையென்பது எங்களது கைகளில் இல்லை. அது சிங்கள ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிகளின் மௌனத்தில் கிடக்கின்றது. நான் நினைக்கிறேன் உலகில் வேறு எந்த மக்களுக்கும் இப்படியொரு துயரம் ஏற்பட்டிருக்காதென்று நாம் அழிந்தாலும் வேறு எவருக்கும் இந்த இழி நிலை ஏற்பட்டுவிடக் கூடாதென்று பிரார்த்திப்போமாக.
02. நான் இங்கு வன்முறை என்று குறிப்பிடுவது விடுதலை அரசியல் சார்ந்த வன்முறை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். இது குறித்து நான் நீண்ட நாட்களாக தலையை பிய்த்துக் கொண்டதுண்டு. எப்படி என்னால் வன்முறையை நியாயப்படுத்த முடிகின்றது? எப்படி வன்முறை தழுவிய போராட்டங்களின் பக்கமே நிற்க முடிகின்றது? சில வேளை இதை பலரும் நம்பமாட்டார்கள் ஆனால் இதுதான் உண்மை. எனது இருப்பிடத்தில் தொந்தரவு செய்யும் ஒரு எலியைக் கூட அடித்துக் கொல்லக்கூடிய வன்முறைசார்ந்த உணர்வை நான் கொண்டிருக்கவில்லை. முன்னர் நான் வசித்துவந்த வைத்தியசாலை விடுதியில் ஒரே எலித் தொல்லை இப்பொழுது வசிக்கும் இடத்திலும் அதே நிலைமைதான். எனது நூல்களை நறுக்கி எனக்கு பெரும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய போதும் ஒரு எலியைக்கூட என்னால் அடித்துக் கொல்ல முடியவில்லை. ஆனால் எனது தாயாரோ நித்திரைக் குளுசையை மாவோடு பிசைந்து வைத்து எத்தனையோ எலிகளை அடித்துக் கொண்டிருக்கின்றார். இதற்காகவே நடுச்சாமத்தில் எழுந்து கொள்ளிக் கட்டையோடு திரிவார். எலிகள் மயக்கத்தில் அங்கும் இங்கும் ஓடித் திரியும் அடிடா ஓடப்போகுது, ஓடப்போகுது என்று கத்திக் கொண்டே கொள்ளிக்கட்டையோடு வருவார், நானோ சாதாரணமாக அது ஓடிட்டுது என்பேன். பின்னரென்ன கொஞ்சம் ஏச்சு வாங்க வேண்டியதுதான். நீங்கள் நம்ப வேண்டும் நான் இப்போது இரத்தத்தை பார்க்கவே விரும்புவதில்லை. இறந்தவரின் உடலைக் கூட பார்க்க விரும்புவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் இப்பொழுதெல்லாம் இறப்பு வீட்டிற்கு செல்லக்கூட நான் விரும்புவதில்லை. ஆனால் மற்றவர்கள் என்னவும் சொல்விடுவார்களோ என்ற, ஒரு விதமான அச்ச உணர்வினாலேயே வேண்டா வெறுப்பாக சென்று வருகின்றேன். இவைகள் வாழ்வின் நிலையற்ற தன்மை குறித்த பயத்தால் ஏற்பட்டதோ அல்லது நான் ஏதோ திடீரென்று எல்லாவற்றையும் உள்ளுக்குள் தேடித்திரியும் சித்தர்களின் பக்தனாகிவிட்டதாலோ நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் இப்படியான சில இயல்புகளுடன்தான் எனது அரசியல், கருத்தியல் நம்பிக்கைகள் உருப்பெற்றுள்ளன என்பதில்தான் நான் கவனம் கொள்கின்றேன். ஏனென்றால் ஒரு புறம் இப்படியொரு இயல்பைக் கொண்டிருக்கும் நான் மறுபுறமோ போராளிகளின் வெற்றி குறித்து பெருமிதப்படுகின்றேன். ஆக்கிரமிப்பாளர்களின் அழிவு குறித்து ஆனந்தப்படுகின்றேன். தமிழர் விடுதலைப் போராட்டத்தை எதிர் கருத்துநிலையில் விமர்ச்சிக்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வருகின்றது. குறிப்பாக பாசிசத்துடன் தொடர்புபடுத்தும் போதெல்லாம் அதற்கான எதிர்வினைகளை ஆற்ற வெளிக்கிடுகின்றேன். அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கும் சில விடயங்களை கோர்த்தெடுத்து எதிர் தர்க்கங்களை உருவாக்க முயல்கின்றேன். சிலர் விடுதலைப்புலிகளை பாசிசத்தோடு தொடர்படுத்தி தங்கள் பண்டிதத் தனங்களை பறைசாற்றும் போதெல்லாம் உடனே ஒன்றை கேட்க வேண்டும்போல் ஒரு எண்ணம் மனதை ஆக்கிரமிக்கின்றது. உங்களது பாசிசம் பற்றிய புரிதலை லெனிடமிருந்து தொடங்குவீர்களா?, மாவோவிடமிருந்து தொடங்குவீர்களா?, ஏன் பேராசான் மார்க்சிடமிருந்து தொடங்குவீர்களா? வலதுசாரி சக்திகள் இன்றும் லெனின், மாவோ போன்றவர்களை அப்படித்தான் விமர்சிக்கின்றன ஸ்டாலின் பற்றி சொல்லவே தேவையில்லை.
நான் கடந்த பத்துவருடங்களிற்கும் மேலாக நமது சூழலின் அரசியல் உரையாடல்களை அவதானித்து வருகின்றேன். இந்தக் காலத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பொதிந்திருப்பதாக கூறப்பட்ட பாசிசம் குறித்த உரையாடல்களை அளவுக்கதிமாகவே கேட்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் இவ்வாறான உரையாடல்கள் எனக்குள் தடுமாற்றங்களை ஏற்படுத்தியதும் உண்மைதான். ஆனால் காலப்போக்கில் அவ்வாறான உரையாடல்கள் எனக்கு மிகவும் சலிப்புத்தரக் கூடிய ஒன்றாகவும் புலம்பல்களாகவுமே தெரிந்தன. மிகவும் சலிப்புத்தட்டக் கூடிய இவ்வாறான உரையாடல்களில் கவனம் கொள்ளவேண்டி ஏற்பட்டதும் ஒரு வகையில் துரதிஸ்டவசமானதுதான். இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட முனைவர் அரசின் நேர்காணல் ஒன்றை வாசிக்க கிடைத்தது. அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை பாசிசத்துடன் இணைத்து புரிந்து கொள்வதானாலேயே அவைகள் ஓரு எதிர்நிலைக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகவும், இதற்கு பிராதன ஊடகங்கள்; (சிற்றிதழ்கள் அடங்கலாக) ஓரு குறிப்பிட்ட சாராரின் கைகளில் இருப்பதே காரணமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசு மிகவும் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பார்ப்பணிய சக்திகளை எதிர்ப்பதாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதாகவும் சொல்லும் சில சக்திகளும் மனித உரிமை, ஜனநாயகம் போன்ற சொல் கொண்டு தமிழர் விடுதலைப் போராட்டத்தை அளப்பதும் அதனை பாசிசம் குறித்த உரையாடல்களாக நீட்டுவதும் நீண்டகாலமாகவே நிகழ்ந்து வருகின்றன. நான் இங்கு பார்ப்பணிய சக்திகளின் புரிதல் குறித்து விவாதிக்கவில்லை. பார்ப்பணிய சக்திகளின் புரிதல் ஒரு வரலாற்று ரீதியான திராவிட அரசியல் வெறுப்புடனும் அதன் மேலாதிக்க பண்புடனும் தொடர்புடையதாகும். இப்பொழுது நான் தம்மை முற்போக்கு சக்திகளாகவும் மார்க்சியர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் மீதே எனது கவனத்தை குவிக்கின்றேன்.
03. நமது முற்போக்குவாதிகளும் மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத் யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்படவர்கள். இதன்போது சாரின் வீட்டு நாயும் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும் இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார் மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும் அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக் அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட. ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில் மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான கொலைகாரராகத்தான் தெரிவார். ஆனால் ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல் இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன். “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர், கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா? மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின் நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும் கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன் உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு. எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை. கடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிதனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருதாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
பிற்குறிப்பு: 1."எவ்வளவு தீவிரமான கண்டன வார்த்தையும் புலிகளைப் பொருத்தவரையில் எருமை மாட்டுக்கு மேல் மழை பெய்த கதைதான். நூறு அரசியல் கருத்தரங்குகள் வைப்பதன் மூலம் பொதுமக்களின் அபிப்பிராயங்களை வெல்லலாம் என்பதை மறுத்து வெற்றிகரமான ஒரு இராணுவத் தாக்குதலே போதும் மக்களைத் திருப்புவதற்கு என்கின்ற குறுக்கு வழி அரசியலில் உடல் பொருள், ஆவி, சித்தம் அனைத்தையுமே குவித்து வைத்திருப்பவர்களுக்கு, தனிநபர்களை அழித்துவிடுவதன் மூலம் அரசியல் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துக்களையும் ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பது ஆச்சரியம் தருவதில்லை. ஆனால், இவர்கள் எத்தகைய வரலாற்றுக் குறுடர்கள் என்பதை வரலாறு எழுதத்தான் போகிறது".
இது ஈழத்தின் பிரபல கவிஞர் சேரன், நீலன் திருச்செல்வத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது எழுதிய குறிப்புக்கள்.(சரிநிகர்- செப், 1999) புரிந்துணர்விற்கான காலமாகச் சொல்லப்படும், கடந்த ஜந்து வருடங்களில், ஆயிரக்கணக்கான கருத்தரங்குகள் நடைபெற்றும் ஒன்றும் நடக்கவில்லையே இருந்ததையும் இழந்ததைத் தவிர, என்று நீங்கள் யாரும் கேட்கக் கூடாது அப்படி நீங்கள் கேட்டால் அது பாசிசமாகும், பெரும் வரலாற்றுக் குருட்டுத்தனமாகும்.
2."மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம். சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்து நிற்பதால் ஒடுக்குபவர் ஒடுக்கப்படுபவர் ஆகிய இருவரையுமே நேசிப்பது இயலாது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்தப் பக்கம் சேரப் போகின்றீர்கள் என்பதை முடிவு செய்தாக வேண்டும். மேலும் வர்க்க சமுதாயத்தில் இவை அனைத்துமே வர்க்க உறவுகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. மனித நேயம் என்பது குறிப்பாக குட்டி முதலாளித்துவ நிலைப்பாட்டில், வர்க்கத் தன்மையற்றது போலவோ அல்லது வர்க்க உறவுகளைக் கடந்து வர்க்கதன்மையற்ற முரண்பாடுகளைச் சமாளிப்பது போலவோ தோன்றலாம்". மாவோ – யேனான் கலை இலக்கிய மன்றத்தில் ஆற்றிய உரை.
3."தமிழ் நாட்டில் இருக்கிற ஊடகங்களில் பெரும்பகுதியான சிறுபத்திரிகைகள், ஊடகங்கள் ஈழப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு உடையவை என்று சொல்லிவிட முடியாது. ஈழப்போராட்டத்தை அவர்கள் வேறு முறையிலேதான் அனுகுகின்றார்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அவர்களுடைய பார்வையில் இதை ஒரு பாசிசம் என்றும், தனிமனிதம் சார்ந்த செயல்வாடை என்றும் கருதுகின்றனர். அந்த பின்புலத்தில் எழுதக் கூடிய பத்திரிகைகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒரு தொடர்ச்சியான குறிப்பிட்ட ஆதிக்க சாதி சேர்ந்த ஊடக அணுகுமுறை என்பது இங்கு உண்டு. அந்த குறிப்பிட்ட பிரிவினர் இந்த ஈழப் போராட்டத்தை முழுமையாக விமர்சனம் செய்கின்றனர்". (முனைவர் வீ.அரசு, 'ஞானம்' நேர்காணலில்)
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |