Monday, 05 March 2007
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரேயொரு ஏகாந்தன் ஏகாந்தமாய்ப் பாடிக்கொண்டேயிருந்தான். ஏகாந்தன் ஏகாந்தமாயிருந்த ஊரில் ஏகாந்தனின் பாடல்கள் உயிரென இருந்தன.
பின்னொரு நாள் ஏகாந்தன் புறப்பட்டு மீள்வருகiயின்றிப் போய்விட்ட பின்னர் ஊரின் கூத்தாடிகள் கூடி ஏகாந்தனின் ஏகாந்தத்தை வியந்தார்கள்.
ஏகாந்தனின் ஏகாந்தம் கூடிக்கூச்சலிடும் கூத்தாடிகளின் குறுமதிகளுக்கு எப்போதும் அந்நியமாகவேயிருந்தது. முகமூடியணிந்த கூத்தாடிகளுக்கு நிர்வாணியாயிருந்த ஏகாந்தன் எப்போதுமே அந்நியனாகவேயிருந்தான்.
இருப்பினுமென்ன ஏகாந்தனின் இருப்பிற்கு நாம் மட்டுமே சாட்சியங்களென கூத்தாடிகள் தங்களுக்குள் கண்சிமிட்டிக் கூறிக்கொண்டார்கள்.
கூத்தாடிகளின் கூத்திரைச்சலில் ஊரில் ஏகாந்தன் விட்டுப்போன பாடல் வரிகளில் களைத்துறங்கிய அவனின் உயிருக்குத் துயில் கலைந்தது.
துயில் கலைந்தெழுந்த ஏகாந்தனின் உயிர் கூத்தாடிகளிலெல்லாம் தலைக் கூத்தாடியின் கனவில்சென்றது.
கூத்தாடிகளுக்கெல்லாம் வழிகாட்டும் தலையாய கூத்தாடியே, நான் ஏகாந்தனின் உயிர். இப்போ நான் காற்றில் குடியிருக்கிறேன். காற்றுடன் பேசத்தெரிந்தவர்களைத் தவிர யாரும் என்னைப் புரிந்துகொள்வதில்லை. காற்றின் மொழியறியோர் யாரும் என் மொழியறியார் என் வழியறியார். தீவுகளைத் தாலாட்டும் அலைகளைக் கரைக்கு அழைத்துவரும் கடமை இப்போ என்னிடமே வழங்கப்பட்டிருக்கிறது.
என்துயில் கலைத்த உங்கள் கூப்பாடுகளுள் நானில்லை. காற்றுடன் இலையுரசியெழும் இசையுள் நான் பிரபஞ்பஞ்சத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஓநாய்கள் ஊழையிடும் பனங்காடுகளுள் நான் ஒருபோதும் நுழைந்ததில்லை. சந்தைமனிதர்களின் கூவல்களுக்குள் சரித்திரம் வாழ்வதில்லை.
உன்னைச் சுற்றிவர நின்றவர்கள் அனைவரும் தாம் கூத்தாடிகள் அல்லவென்றும் தற்காலிகமான தம் கூத்துகள் அர்த்மற்றவையென்றும் தெளிவாக அறிந்துகொண்டுதானிந்தார்கள். நீ மட்டுமே உன் கூத்தை நம்பினாய். உன் கூத்தின் பார்வையாளனாய் நீ மட்டுமேயிருந்தாய்.
ஒதுங்கித் தனித்திருந்து பாட்டுரைத்த எனக்கேன் இரைச்சலுள்ள கூத்துகள். கூத்தின் வேடிக்கையைக் கண்டவர்கள் உன்னை நம்புவதாக நடித்துக்கொண்டதையும் நீ கண்டுகொள்ளவில்லை.
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவதைக் கண்டவர்கள் உள்@ர முனகிக்கொள்ளும் ஒலியும் உனக்கு எட்டவில்லை. உன் கூத்திரைச்சல்களுக்குப் பலியாகிப்போனது நீயும் என் தூக்கமும் தான்.
கூடி வியப்பதல்ல ஏகாந்தம். கூழுக்கழைப்பதல்ல ஏகாந்தம். குழுமி நிற்போர் மத்தியிலே கூத்தாடும் கூட்டம் ஏகாந்தன் உயிர்பற்றி ஏதேனும் அறிவதுண்டோ?
அலைவிஞ்சும் கரைகளிலும் மலைமுகட்டின் தனிமையிலும் காற்றாய் நான் வீற்றிருக்க காணாத இடங்களிலே என்னைத் தேடுவதில் ஏதும் பயனுண்டோ சொல் கூத்தாடிகளின் கூத்தாடியே என இறுதியில் வினாவியது ஏகாந்தனின் உயிர்
வெறும் கனவேதானிதுவென இறுதியில் குமுறிக்கொண்டான் கூத்தாடி.
04.03.2007.
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
|