அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 26 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எட்டுத்திக்கும் மதயானைகள் -02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 05 March 2007

02.

பிரான்ஸில் தமிழர்கள் அல்லது தமிழுக்கும் பிரெஞ்ச்மொழிக்கும் உள்ள உறவு பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை நோக்குவதும் நல்லதென்று நினைக்கின்றேன். பிரான்ஸ் நாட்டிற்கும் தமிழ்மொழி பேசுவோருக்கும் இடையேயான உறவு முன்னூற்றைம்பது ஆண்டுகால பழமை வாய்ந்தது. 1673ல் பிரெஞ்சுக்காரர் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கரையோரத்தை வந்தடைவதுடன் இந்த உறவு தொடங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்ச் உறவின் அசலான சாட்சியங்களாக தமிழ்நாட்டில் உள்ள பாண்டிச்சேரி காரைக்கால் பிரதேசங்கள் இன்றைக்கும் திகழ்கின்றன. 1770ம் ஆண்டுகளில் இந்திய தீபகற்பத்தில் ஆளுமை செலுத்துவதில் பிரித்தானியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே போட்டியும் போரும் அதிகரித்திருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையின் துறைமுகமான திருகோணமலையை பயன்படுத்துவது யாரென்ற பிரச்சனையும் முக்கியத்துவம் பெற்றது. 1782ல் கப்பத்தான் சவ்றனின் தலைமையிலான பிரெஞ்சுக் கடற்படை திருக்கோணமலையைக் கைப்பற்றியது. அதன்பின் பிரித்தானிய - பிரான்சிய பிணக்குத் தீரும் வரையில் திருக்கோணமலை பிரான்சியரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

இது பற்றி பாண்டிச்சேரியை சேர்ந்த வீராநாயக்கரின் நாட்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த நாட்குறிப்பு 1778ம் ஆண்டிற்கும் 1792ம் ஆண்டிற்கும் இடையில் எழுதப்பட்டதாகும். இந்த வீராநாயக்கரின் நாட்குறிப்பை பிரான்சின் தலைநகரான பாரிசிலுள்ள தேசிய நூல்நிலையத்தில் தூரகிழக்கு நாடுகளின் கையெழுத்துச் சுவடிகளுக்கான பகுதியில் கண்டெடுத்ததாக பதிப்பாளர் ஓர்சே மா. கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார். தமிழ்நாட்டின் வரலாற்றை சமூகப் பண்பாட்டியலை எடுத்தியம்பும் இவ் ஏட்டுப்பிரதிகள் எப்படி பிரான்ஸ் நாட்டுக்குள் வந்து சேர்ந்தன? இதனைத் தெரிந்து கொள்வதும் சுவையான விடயம்தான். இந்த பெருவாரியான பழைய தமிழ்நாட்டு கையேட்டு சுவடிகளை சேகரித்து பிரெஞ்ச் அரசின் கையில் சேர வழிவகுத்தவர் எதுவார்ட் அரியேல் என்னும் பிரெஞ்ச்-தமிழ் அறிஞராவார். இவர் 1840ம்-1850ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் அரசாங்கத்தில் பணியாற்றினார். அவ்வேளையில் எதுவார் அரியேல் தமிழ்நாட்டு பண்பாட்டிலும் தமிழ்மொழியிலும் பற்றுக்கொண்டு தமிழை நன்கு கற்றார். அத்துடன், தனக்குக் கிடைத்த எல்லாத் தமிழ் நூல்கள், சுவடிகள் என அனைத்தையும் தேடி சேகரிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பாண்டிச்சேரியின் வரலாறு கூறும் ஆனந்தரங்கப்பிள்ளையின் தினசரிதையை அதாவது நாட்குறிப்பை அவரது சந்ததியாரின் வீட்டில் கண்டுபடித்தார். இந்த எதுவார் அரியேல்தான் திருக்குறளின் ஒரு பகுதியையும் நாலடியாரையும் பிரெஞ்சுக்கு மொழிமாற்றம் செய்தவராவார். இவ்வகையாகத்தான் தமிழ்மொழி பிரெஞ்சுக்கு வந்து சேர்ந்தது. தமிழை பிரெஞ்சுக்கு கொண்டுவந்த அந்த பிரெஞ்ச்-தமிழ் அறிஞன் பின்னாளில் என்னவானான் என்பதுபற்றி சரிவரத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் முதலில் எப்போது பிரான்சுக்கு வந்த சேர்ந்தனர் என்னபதற்குத் திட்டவட்டமான வரலாறு கூறமுடியவில்லை. ஆயினும், சந்துஉடையார் என்பவர் 1869 அல்லது 1870ம் ஆண்டளவில் பிரான்சுக்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. சந்து உடையார் தமிழ் நாட்டின் சோழமண்டலக் கரையில் இருந்து பிரெஞ்ச் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கரீபியன் தீவுகளான குதலோப்புக்கோ அல்லது மார்ட்னிக்கிக்கோ செல்லும் நோக்குடன் புறப்பட்டார் என்றும், கடற்பயண வழியில் பிரான்சிலேயே அவர் தரித்து நிற்கவேண்டியதாயிற்று என்றும் கூறப்படுகின்றது. இவ்வேளையிலேயே பிரான்சின் கீழைத்தேய மொழியியல் கல்லூரியின் இயக்குநர்களில் ஒருவரான யூலியன் வின்சன்ற் என்பர் சந்து உடையாரைச் சந்தித்திருக்கின்றார்'. யூலியன் வின்சன்ற் காரைக்காலில் பறந்து தமிழ்மொழியையும் அறிந்த பிரெஞ்சுக்காராவார். அவரின் ஏற்பாட்டில் சந்து உடையார் பாரிசில் உள்ள கீழைத்தேய மொழியியல் கல்லூரியில் தமிழ் கற்பித்திருக்கிறார். பின்னர் அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பமுடியாமலே 1878ல் பிரான்சில் இறந்துவிட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புத் தெரிவிக்கின்றதது. தற்செயலாக வந்து பிரான்சில் தனித்துப்போன சந்து உடையாரின் இறுதிநாள் வாழ்க்கையும் தொலைந்து போனவரின் வாழ்க்கையாகவே வரலாற்றின் பக்கங்களில் மறைந்து கிடக்கின்றது. தமிழை பிரான்சுக்குள் கொணர்ந்த எதுவார் அரியேலும், பிரான்சில் தமிழைக் கற்பித்த சந்து உடையாரும் வரலாற்றில் தொலைந்து போனவர்கள்தானா? வரலாறு இப்படி எத்தனையோ விடயங்களை மறைத்து வைத்திருக்கின்றது. இங்கு வந்து சேர்ந்த இலங்கைத்தமிழரின் வரலாறும் நாளை மறைந்து போய்விடலாம்!'

தற்போது நாங்கள் வாழும் பிரான்ஸ் நாட்டின் நிலைமை எவ்வாறானது என அறிந்துகொள்வதும் முக்கியமானது. அண்மையில் பாரிசில் உதைபந்தாட்ட விளையாட்டு கழகங்களிடையேயான போட்டியில் புகழ்பெற்ற பாரிஸ் நகர கழகமொன்றும் இஸ்ரேல் நாட்டு விளையாட்டு கழகமொன்றும் விளையாடியபோது 4க்கு 2 என்ற கணக்கில் இஸ்ரேல் கழகம் வெற்றிபெற்றது. இந்த தோல்வியை பொறுக்கமுடியாத பாரிஸ் விளையாட்டு கழக சார்புவிசிறிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். தோல்வியுற்றவர்கள் இனவாத கூச்சலுடன் - யூத எதிர்ப்புவாத முழக்கத்துடன் கலவரத்தில் ஈடுப்பட்டதே நமது கவனத்திற்கு உரியது. அதாவது, இரண்டாம் உலக யுத்தகால நாசிசம் பிரான்சில் உயிர் பெற்று உலவியது. பிரெஞ் அதிபர் கண்டித்து கருத்து சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஆனால் இதைவிடவும் கடந்த ஆண்டில் பாரிஸ் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் மிகுந்த கவனத்திற்குரியதுடன் படிப்பினைக்குமுரியது. இந்தக் கலவரம் பிரான்சின் முகத்திரையை விலக்கியது என்றால் மிகையில்லை.

`பிரான்ஸ் மிகப்பெரிய காலனிகளைக் கொண்ட நாடு. இங்கு மக்கள் தங்களுடைய காலனிகளை விட்டுவிட்டு வருகிறார்கள். தவிர்க்கமுடியாமல் பாண்டிச்சேரியில் வழங்கிய மாதிரி பலருக்கு குடியுரிமை வழங்குகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதைவிட முக்கியமான நிலைமை, இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பா பாதிக்கப்படுகிறது. அதைப்போல பிரான்சும் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட பிரான்சைக் கட்டி எழுப்புவதற்கு தொழிலாளர்கள் தேவை. அந்தத் தொழிலாளர்களை தங்கள் காலனிய நாடுகளிலிருந்து வரவழைத்தார்கள். குடியிருக்க வீடு, குடியுரிமை இப்படிக் குடிப்பெயர்வுக்கு என்னென்ன வசதிகளோ அவற்றைச் சொல்லி அழைத்து வருகிறார்கள். கட்டுமான வேலைகளுக்குக் காலனி மக்களை பயன்படுத்தியதற்குப் பின்னால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலோ, அவர்களுடைய சமூகத்தோடு தங்களை இணைத்துக் கொள்வதிலோ பிரான்ஸ் அக்கறை காட்டவில்லை. அதனால் குடியேறிய மக்கள் தனித்துப் போனார்கள். இதற்கு காலனிய மக்களும் பிரான்ஸ் அரசும் காரணமாக இருக்கலாம். அவர்கள் பிரான்ஸிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மக்களின் ஐந்தாவது தலைமுறை இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னமும் வெளிநாட்டவர்களாகவும் இழிவான சொற்களில் அழைக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்களை வைத்திருக்கிறார்கள். இந்த காலனி மக்கள் வட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவற்றை `பிரெஞ்சு மொழி வலைய நாடுகள்' என்கிறார்கள். தங்களுடைய சுகாதாரம் கவனிக்கப்படுவதில்லை கல்வி போதிக்கப்படவில்லை, வீட்டு வசதி சரியாக வழங்கப்படவில்லை என்ற குமுறல் அவர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. இவை குமுறலாகவே இருந்துகொண்டிருந்தன. அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் சரியாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை உருவாக்கப்படவில்லை. அதையும்விட அதிகமாக திட்டமிட்டே ஒதுக்கப்பட்டார்கள். விண்ணப்பங்களில் பெயரைப் பார்த்தே வேலைக்கு அனுமதிக்காத நிலைமையெல்லாம் இருந்தது. இன்னும் நுணுக்கமாகப் பல்வேறு சம்பவங்களைச் சொல்ல முடியும். வரலாற்றில் பிரான்ஸ் தனது கருத்தாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை அறிவித்தது. பிரெஞ்சுப் புரட்சி நடத்தப்பட்டது. இலக்கிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது பிரான்ஸ். இலக்கியச் செழுமையும் நாகரீகம், பண்பாடு கொண்ட நாடாகவும்தான் உலகம் அவர்களை பார்த்தது. ஆனால் உள்முகமாக அவர்கள் நேர் எதிராக இருந்திருக்கிறார்கள் என்பது இந்தக் கலவரம் மூலம் தெரிய வருகிறது.

இந்தக் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்த பின்னர்தான் சமூக நீதி மறுக்கப்பட்ட நிலை இருக்கிறது, அதைத் திருத்தி அமைக்க வேண்டும், புதிதாக திட்டங்கள் போட இருக்கிறோம் என்று அறிவிக்கிறார்கள். உலகம் இன்று வறுமை நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. வறுமையான நாட்டு மக்கள் வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி ஈசல்கள் போல குவிந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியான அகதிகளாக வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. உலகில் அவர்களுடைய படிமானங்களும் தளர்ந்த நிலையில் போய்க்கொண்டு இருக்கிறது. சவாலாக கிழக்கு எழுந்து கொண்டிருக்கிறது. இன்று ஐரோப்பாவிற்கு அடுத்து இந்தியாவும், சீனாவும்தான் இன்று உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்நிலையில் மக்கள் குவிய குவிய அந்த நாடுகளில் பொருளாதாரம், நிறவாதம், இனவாதம் அதிகரிக்கிறது. அரசிலை தீவிரமாக பேசுகிறவர்களுக்கு செல்வாக்கு அதிகம். அவர்களின் செல்வாக்கைத் தடுப்பதற்காக மரபுவழி அரசியல்வாதிகள் தீவிரவாதத்தை கையில் எடுத்தபோது விளைந்ததுதான் இந்தக் கலவரம். தீவிரவாத சக்திகள்போல இனவாத கருத்துக்களை முன்வைத்து தாங்களும் அவ்வாறானவர்கள்தான் என்று வாக்கு அரசியலுக்காக சில அரசியல்வாதிகள் நடந்துகொண்ட முறை மக்களை அவமதிப்பதாக இருந்தது. இக்கலவரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏதும் நடக்கவில்லை. பொது அரசியலில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு போலீசாரால் சுடப்பட்டதுபோல நாளைக்கு எங்களுக்கும் நடக்கலாம் ஒரு அச்சம் பரவியிருக்கின்றது. எங்கள் இலங்கைத் தமிழர்கள் இரண்டு பகுதியினரால் அடிபடுவார்கள். ஒன்று ஐரோப்பியர்களிடம். இரண்டு எங்களைப் போல குடியேறியவர்களிடம் அடிவாங்குவார்கள். இந்த இருவரில் எவர் பக்கமும் தமிழர்கள் இல்லை. இப்பொழுது தமிழர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள் அராபிய, ஆப்பிரிக்க இளைஞர்களின் கோபம் எவ்வளவு ஆபத்தானது என்று.`அத்துடன், பிரான்சின் எதிர்காலம் எத்தனை நிச்சயமற்றது என்பது.
 
இன்னும்வரும்..

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24816785 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10667 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com