அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'தகவம்' இராசையா   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மா.பா.சி.  
Monday, 12 March 2007

இராசையா மாஸ்டரின் வாழ்வு ஒரு சிறந்த புத்தகம்


 
 
சலசலப்பு எதுவுமின்றி பொதுப் பணியைத் தனது வாழ்வின் இயக்கமாக்கிக் காட்டியவர் அமரர்.வ.இராசையா. வீரகேசரிப் பத்திரிகையில் தனது வாழ்வாதாரத்திற்கான தொழிலை ஆரம்பித்துப் பின்னர் ஆசிரியப் பணிக்குத் திரும்பியவர். இவரது ஆசிரியப் பணியைக் கொழும்பு ஆசிர்வாதப்பர் கல்லூரி தனதாக்கிப் பெருமை கொண்டது. ஈழ கேசரி, மறுமலர்ச்சி ஆகிய முன்னோடி ஈழத்துப் பத்திரிகைகளில் இவர் ஆரம்பித்த இலக்கியப் பணி இவர் இக் கல்லூரியில் தொடக்கிவைத்த தமிழ் இலக்கிய மன்றம் மூலம் முன்னேற்றம் கண்டது. இம்மன்றம் நான்கு தசாப்தங்களை கண்டும் இன்னமும் மாணவர் மத்தியில் இலக்கிய வித்துகளை ஊன்றிக் கொண்டிருக்கிறது.

வட கொழும்பில் சிறந்த கலைஞர்கள் தோன்றுவதற்கு இம் மன்றம தொட்டிலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிக ஊக்கத்தை கொடுத்தது இராசையா மாஸ்டரால் அன்று தயாரித்து ஒலிபரப்பாகிய சிறுவர் மலர், இளைஞர் மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள். இலக்கிய மன்றத்தில் கலை ஆர்வம் கொண்ட மாணவர்கள் இனம் கண்டு இந் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்களில் நடிக்க வைத்தார். உரைச்சித்திரங்களில் குரல் கொடுக்க வைத்தார்.

இன்றைய பிரபல தொழிலதிபர் தெ.ஈஸ்வரன் இவரது மாணவர் எனக் கூறப்படுகிறது. ஒலிபரப்புத்துறையில் மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் தன் அடையாளத்தைப் பதித்திருக்கும் ஒய்வு பெற்ற ஒலிபரப்பாளர்கள் ஜோர்ஜ் சந்திரசேகரன் இலங்கை பாராளுமன்றத்தில் சமகால மொழி பெயர்ப்பாளராக இருந்து பின்னர் இலங்கை நிருவாக சேவையில் இணைந்து பிரதேச செயலராக ஓய்வு பெற்ற எஸ்.வி.ஆர்.வேதநாயகம் ஆகியோர் இராசையா மாஸ்டரின் மாணவர்களே.

தூய தமிழை பரம்பல் செய்வதில் அமரர் இராசையா கண்ணும் கருத்துமாக வாழ்ந்தவர். திருகோணமலையை திரிகோணமலை எனவும் ஊர்காவற்றுறையை ஊர்காவல்துறை எனவும் சென் லூசியாஸ் வீதி என்பதை புனித லூசியாள் வீதி எனவும் எழுதுவார். சில அறிவிப்பாளர்கள் மக்கள் லங்கியை மாக்கள் வங்கி என ஒலிக்க வைக்கின்றனரென சில சந்தர்ப்பங்களில் சஞ்சலப்படுவார். இவரது தெளிவான உச்சரிப்பும் குரலுமே இராசையா மாஸ்டர் இலங்கை வானொலி ஆஸ்தான நிகழ்ச்சி தயாரிப்பாளராக்க கை கொடுத்தன. நாவற்குழியூர் நடராசன் சானா சண்முகநாதன் , லிவியன் நமசிவாயம் ஆகிய அன்றைய தமிழ் ஒலிபரப்பின் உச்சங்களோடு மிக நெருக்கமாகவும் இருந்தார்.

அவரது உடைகளைப் போல் அவரது உள்ளமும் தூய்மையானதாகவே இருந்தது.

எழுதும் எழுத்துக்கள் ஊனப்படாது உரிய உருவைக் கொண்டவைகளாக இருக்கும். பாலர் வகுப்புக்களில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் எழுத்துக் கொப்பிகளில் காணப்படும் எழுத்துகளுக்கு நிகரானவையாக எழுதுவார். இந்த தனித்துவத்தை மாஸ்டர் கடைசிவரை பேணி வந்தார்.

மரபுவாதிகளுக்கும் அவர்களது எதிரணியினருக்கும் பாலமாக இருந்த பெரியார். கே.டானியல், டொமினிக் ஜீவா படைத்த இலக்கியங்களை ஒடுக்க முனைந்த அக்காலத்தின் தகவத்தின் அடையாளத்தோடு கே.டானியலின் பஞ்சமர் நாவலுக்கு கொழும்பில் ஆய்வரங்கொன்றை நடத்திய துணிச்சல்காரர்.

பகுத்தறிவு இயக்கத்தின் பரம்பலுக்குத் தனது உழைப்பை அர்ப்பணித்தார். மூட நம்பிக்கைகளை வெறுத்தார்.ஆனால் தானொரு ஈ.வே.ரா.வின் பக்தனென சன்னதம் கொள்ளவில்லை. யாழ்ப்பாண மண்ணில் ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலருக்கு சிலை எழுப்ப வேண்டுமென பத்திரிக்கைகள் மூலமாக முன் மொழிந்தவர் அமரர் வ.இராசையா எனவும் கூறுகின்றனர்.

தகவத்தின் மூலமாக ஈழத்துப் புனைகதை இலக்கியத்தை நெறிப்படுத்த எத்தனித்த இவர் ஈழத்துச் சிறுவர் இலக்கியத்திற்கு தனது பாலர் கவிதை நூல்கள் மூலமாகப் புதிய இரத்தத்தைப் பாய்ச்சினார். ஐம்பது குறள்களைத் தேர்ந்தெடுத்து இவர் எழுதிய எழுத்துருக்கள் முழுக்க குடும்பத்தையும் வழி நடத்தும் ஆற்றலைப் பெற்றவையெனத் தமிழ் உலகு பாராட்டுகின்றது. வாழ்வைச் செழுமைப்படுத்தும் இராசையா மாஸ்டரின் நூல்களை சமுதாயப் பெறுமானத்தை அங்கீகரித்துப் பல இலக்கிய அமைப்புகள் அவைகளுக்கு விருதுகளும் வழங்கி இருக்கின்றன.

இத்தகைய அரும்பணிகளைத் தமிழ் இலக்கியத்திற்கும் மானுடத்திற்கும் அர்ப்பணித்த பண்பாளரான தமிழ் பெரியார் வ.இராசையா அண்மையில் தனது இறுதி நிலையை அடைந்தது பல கல்விமான்கள் , கலை இலக்கியவாதிகள் ஆகியோரது நெஞ்சங்களை உருகவைத்தது. தமிழுலகிற்கு ஏற்பட்ட இந்த வெற்றிடம் எப்படி நிரப்பப்படுமென அவர்கள் சஞ்சலம் கொண்டு தவித்தனர்.

நெகிழ்ந்து கொண்டிருக்கும் இராசையா மாஸ்டரின் அபிமானிகளில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , கம்பவாரிதி இ.ஜெயராஜ், எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த சட்டத்தரணி சோ.தேவராஜா, கவிஞர் ஏ.இக்பால், எழுத்தாளர் த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினர். மன அலைகளை பதிவு செய்யும் நோக்கோடு ஞானம் கலை இலக்கியப் பண்ணை கடந்த ஞாயிற்றுக் கிழமை அஞ்சலிக் கூட்டமொன்றை கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் ஏற்பாடு செய்தது. ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

[நன்றி: 09 - March - 2007 தினக்குரல்]


     இதுவரை:  26118159 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5973 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com