Wednesday, 14 March 2007
உயர்ந்த கோபுரமொன்றின் உள்ளேறி இறங்கும் வழியைத் தொலைத்துவிட்டேன். கட்டடத்தில் எல்லாப் பக்கமும் இருந்த சாளரக் கதவுகளை தட்டித் தட்டி களைத்துப் போனேன். கடைசியாக என்னிடமிருந்த வாசல்கள் என் கண்களே. கண்களைத் திறந்தேன். தனிக்க விடப்பட்ட அந்தக் கொடிய வாழ்வின் குறியீடாயிருந்த கனவை விட்டு வெளியில் வந்தேன்.
நான் வாழ்க்கைக்குள் இருக்கும் வரை கனவுகள் என்னை விட்டுவைக்கப் போவதில்லை. என் ஆழ்மனதில் ஒரு விலங்கு தன் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அது என் கற்பனைக் காட்சிப் படிமங்கள் சிலவற்றை கத்தரித்து வைத்திருக்கிறது. நள்ளிரவுக் கனவுகளின் தொகுப்போடு சில வேளைகளில் முற்பகல் கனவுகளையும் பொருத்திவிடுகிறது. கனவு முழுவதிலும் நானே கதாநாயகன். அதுவே சாத்தியமும் கூட.
புறத்தைப் பார்க்கும் என் கண்களால் அகத்தைப் பார்க்க முடிவதில்லை. அதனால் கனவுகளில் வாசித்தலோ எழுதுதலோ சாத்திமில்லை. ஆனால் நேற்றிரவு ஒரு கனவில் நான் எழுதிக்கொண்டிருந்தேன். என் பழங் கவிதைகளிலிருந்து உதிர்ந்து போன வார்த்தைகள் சிலவற்றை எனக்குள் பொருத்திக் கொண்டிருந்தது அவ் ஆழ்மன விலங்கு.
பரிசிலிருக்கும் ஒரு கவிஞன் என்னை உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட வெறியோடு நான் என் படுக்கையறையில் இருந்தவாறு எழுதத் தொடங்கிய போது என் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒருத்தி உள்ளே வந்தாள்.
கவிதை மோகினி
இன்பப் பிரளயம் நிகழ்ந்த ஓர் இரவில் தக தகவென எரிந்த காம அக்கினியில் சுள்ளி விறகுபோல் சட சடத்தெரியும் அவளை மூட்டினேன்
விந்தள்ளித் தெளித்து விளைந்த கவிதை நீயடியென்றேன்.
போர்வைக்குள் அடங்குமா கவிதை பொய்தானே என்றாள் ஆடை விலக்கி அம்மணமாக்கினேன் அக்கினியை அணிந்து கொண்டாள்
வெட்கத்தை சுளகால் விரட்டியவள் - உன் முத்தத்தில் ஏனடா மொச்சை மணமென்றாள் இருப்பிருந்த முத்தம் இப்படித்தான் இருக்குமென்றேன் - நான் பிணங்களோடு புணர்ந்த கதை மறைத்து.
சதை சதையாய் முனகினாள் அவள் முனகல்கள் - என் அறைச்சுவர்களில் முட்டிமோதி ஓர் தனிப் பிரபஞ்சம் உருவாயிற்று.
என் அறைக்குள் முளைத்திருந்த மரத்தில் பஞ்சவர்ணக் கிளியொன்றைக் கையில் வாங்கிக் கொண்டு அவள் காட்டுக்குள் மறைகிறாள் பல வர்ணப் பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.
கனவில் நான் எழுதிக் கொண்டிருந்த போது எப்போது காட்சிக்குள் தொலைந்தேன் என்று தெரியவில்லை. விடிந்த பின் திருத்திய வடிவமே இது. வெகு நாளின் பின் எழுதிய மகிழ்ச்சி எனக்குள். இனி மற மறக்கும் என் சாரத்தை யாருக்கும் தெரியாமல் துவைக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்கிறேன்.
02.02.2007 |