அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….குமரன்  
Tuesday, 20 March 2007

கதை: தவறாக நினைத்து பிரிந்த தலைவனை எண்ணி வருந்தும் தலைவி அவனுடன் ஒன்றி இணைந்த தான், தவறாக நினைத்து ஊரார் நகைக்கும்படி செய்துவிட்ட தலைவனது செய்கையில் மட்டும் இணையவில்லை என்பது.

காட்சி: இனிய மாலைக்காலம். இயற்கை புன்னகைத்துப் பூப்பூத்து களிக்கிறது. வண்ணக்கலவைகளாகப் பலமலர்களும் இதழ்விரித்துச் சிரித்துக் கிடக்கின்றன. இந்த மலர்ச்சோலையில் சோகவடிவாக மூலையில் அமர்ந்திருக்கிறாள் அவள். சிரித்து மகிழ்கின்ற அவள் முல்லைப் பற்களும், குழித்துக்கிடக்கிற கன்னங்களும்,  கருங்குவளையாக காட்சிதரும் கண்களும் ஏதோ ஒரு சோகமூட்டத்துள் சிக்கிக் தவிப்பனவாய் திகழ்கின்றன.  இயற்கையே சிரி்த்துமகிழ இவளுக்கு என்ன நடந்தது? கேள்வி நமக்கு மட்டுமல்ல அப்போதுதான் வந்த அவள் தோழிக்கும் வருகின்றது. இனிப்பாக மலராக இனிய உறவாக இருக்கின்ற என் நண்பிக்கு என்னாயிற்று? கேட்கவேண்டுமே கேட்காவிட்டால் பொறுக்காதே அருகில் நெருங்கித் தோள் தொடுகிறாள். திடுக்கிட்டு திரும்புகிறாள் அவள்.

வசனம்:  'என்னடி இப்படி இடி வீழ்ந்தது போல்? என்னாயிற்று. எந்தக்கப்பல் கவிழந்தது' வினவுகிறாள் தோழி. மெல்லிய நகையொன்று அவளிடமிருந்து மலர்கின்றது.
'ஒரு கப்பலும் கவிழவில்லை. சும்மாதான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்' பதில் சொலகிறாள். தோழி வாய்விட்டு சிரிக்கிறாள். 'நீ சிந்தனையில் - இந்தச் சோலையில் அதுவும் இனிய மாலையில் புரிகிறது அவரிருந்தால் இப்போது எப்படியிருக்கும்? அதுதானே உன் அறிவார்ந்த சிந்தனை'. தோழி கேட்க 'கேலி செய்யாதேயடி அவர் பற்றித்தான் எண்ணினேன்' அவள் பதில் சொன்னாள்.
'சரி அதற்கேன் இத்தனை சோகம். அவர் என்றாலே உன் நினைவு அற்புதங்களாகக் களிக்குமே. மலர்விரிந்த இந்தச் சோலையைப்போல் உன் உள்ளம் சிரிக்குமே' தோழி தொடருமுன் அவள் இடைமறித்தாள். அதோ அந்த வேங்கை மரத்தைப் பார்ர்தாயா? கேட்டாள் அவள். 'ஆமாம் அதற்கென்ன வீழ்ந்து கிடக்கிறது'. 
'சரி எப்படி வீழ்ந்தது தெரியுமா உனக்கு?'
'சொல்லேன் கேட்போம்'
'நம் காட்டில் அலைந்து திரிகின்றதே யானை அது தன் மயக்கத்தில் மலர்களின் நிறமும், மதர்த்த வடிவமுமாக நிமிர்ந்து நின்ற இந்த வேங்கை மரத்தை உண்மையான வேங்கை என்றே நினைத்துவிட்டது'.
'ஓகோ திமிர்பிடித்த அந்த யானைக்கு வரிவரியா சிவப்புநிற மலர்களும் மரமும் வேங்கையெனவே தெரிந்ததால மோதிச் சாய்த்துவிட்டதென சொல்ல வருகிறாய்.ஆமாம் அதற்கும் உன் நிலைக்கும் என்ன தொடர்பு.'
'இன்னும் பார் உயர்ந்து நின்ற வேங்கை மரத்தில் மலர் பறிக்கின்ற சிரமமின்றி மிக எளிதாக கைக்கெட்டியபடி பறிக்கிறார்கள் பார். இயல்பாகவே மலர் கொய்யும் பழக்கமுள்ளவர்களுக்கு யானையின் செயல் அதை இன்னும் சுலபமாக்கிவிட்டதல்வா? உனக்கு இந்தக்காட்சிகள் ஏதாவது நினைவுகளை எனது இன்றைய நிலைபற்றி நினைவுகளை சொல்லவில்லையா?

விளக்கம்: தோழி புரிந்துகொண்டாள். தலைவன் தன் தலைவியை தவறாக நினைத்தான் பிரிந்துவிட்டான். தவறு தலைவியிலில்லை. தலைவன் விளங்கிக்கொண்டதே தவறு. இதனால் தலைவனுக்கு ஏதும் பிரச்சனையில்லை. ஆனால் தலைவி்க்கோ ஏற்கனவே சிக்கல். இவளுக்கும் அவனுக்கும் ஏதோவாமேயென குசுகுசுக்கும் ஊரார். இப்போதோ தலைவன் பிரிந்துவிட்டதனால் மெலிதாக குசுகுசுத்தவர்களுக்கு மிகத் திறந்த வாய்ப்பு. இதை வெளிப்படையாக சொல்லமுடியாத தலைவி மறைமுகமாகச் சொல்கிறாள். வேங்கை மரத்தை தவறாக வேங்கையென்றே யானை நினைத்து மோதிச் சாய்த்துவிட்டது. அதுபோலவே என்னில் தவறில்லாவி்ட்டாலும் அதை தெரியாது பிழையாக விளங்கிய தலைவன் பிரிவினால் என்னை வீழ்த்திவிட்டான். ஏற்கனவே எமதுறவை கொச்சைப்படுத்தி பேசியவர்களுக்கு இது துள்ளி, எட்டி, பாய்ந்து மலர் பறிப்பதைவிட கைக்குள் அகப்பட வீழ்ந்துகிடக்கும் மரத்தில் துளியும் சிரமமின்றி எளிதாக மலர் பறிப்பதைப்போல் அமைந்துவிட்டது. கேட்கவா வேண்டும். பிய்த்துக் கொட்டுகிறார்கள்.
காரணம் விளக்கமில்லாமல் என்னை தவறாக்கிப் பிரிந்துவிட்ட தலைவனால் நேர்ந்ததென மனம் நொந்து கிடக்கின்றாள் தலைவி.

விமர்சனம்: காட்சியும் வசனமும் கதையை புரிய வைத்ததில் இனிய சுவை இங்கிதமான நயம் தவிர இலக்கியம் வாழ்வை விளக்கமாக்கும் தோற்றம் தேர்ந்த ஒரு காட்சியமைப்பாகக் கண்ணில் விரிகின்றது அல்லவா? ஆமாம் இதில் பாடலாசிரியரின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகின்றது. எத்தனை நுணுக்கமாக மறைமுகமாக அவர் தலைவியை காட்டியுள்ளார். நேரடியான பிரச்சனை தலைவியைத் தவறாக பிரிந்த தலைவன். அவனால் உருவான ஊராரின் பழிதூற்றல். அதை நேரடியாக முகத்திலடித்தாற்போல் உயிர்த்தோழியிடம் கூற மனம் வரவில்லை தலைவிக்கு. குறிப்பால் இயற்கையை துணைக்கழைத்து யானையையும் வீழ்ந்து கிடக்கும் வேங்கை மரத்தையும் அதில் இலகுவாக மலர் பறிப்பவர்களையும் உவமையாக்குகிறாள். புரியவேண்டியருக்கு சொல்ல வருவது புரியும். மற்றவர்க்கு வெறும் உவமை புரியும். இலக்கியகாரர்கள் உள்ளுறை உவமம் என்று இதனைச் சொல்வார்கள். இந்த நயம் இந்தத் திறமை எண்ணி வியக்குமளவுக்கு இருக்கின்றது. சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று. புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாயிற்று. ஆனால் தன்காலத்து இயற்கை வருணனையை தலைவி சொல்லியிருக்கிறாள் என்று மட்டுமே அடுத்தவர்களுக்கு தெரிகின்றது. எவ்வளவு நாகரிகம் எவ்வளவு நுணுக்கம்.


இதோ அந்த பாடலாசியர் கபிலர். அவர் குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் அங்கு யானை, வேங்கை மரம் என்பன அந்த நிலத்திற்குரிய இயற்கை அமைவுகள் - நிலக்காட்சியை படம்பிடித்தார்.
பாடல்:  à®’ன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
            பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
            குறவர்மகளிர் கூந்தற் பெய்ம்மார்
            நின்று கொய மலரும் நாடனொடு
            ஒன்றேன் தோழி! ஒன்றினாளே.
                                             குறு:208
 


     இதுவரை:  26118154 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5981 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com