அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 33 arrow ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் பொ.இரகுபதி  
Monday, 16 April 2007
பக்கம் 1 of 3

(யாழ்ப்பாணம் தெல்லி்ப்பழை மகாஜனக் கல்லூரியில் அதன் பழைய மாணவரான, பேராசிரியர் பொ.இரகுபதியால் 24.06.2005ல் ஆற்றப்பட்ட 'பாவலர் தெ.அ.துரையப்பாபி்ள்ளை நினைவுப் பேருரை - 9' நன்றியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது.)

Ponnampalam Ragupathy  M.A., Ph.D
Former Professor of South Asian Studies and Head of the Postgraduate  Departments, Utkal University of Culture, Orissa.
Visting Professor, Facullty of Arts, University of Jaffna.
'Cultural Identity of the Tamils of Sri Lanka'
Pavalar Thuraippapillai Memorial Lecture - 9
Published by: P.Suntharalingam, Principal Mahajana College,  Tellippalai,  Sri Lanka.
Printed at: Bharathi Pathippakam, 430, K.K.S Road, Jaffna. 24.06.2005

முதன்மை விருந்தினர், சிறப்பு விருந்தினர், கெளரவ விருந்தினர், மகாஜனாவின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், மற்றுமுள்ள அவையோருக்கு வந்தனங்கள். இவ்வுரையை நிகழ்த்த முன்னர் இந்த மகாஜனாக் கல்லூரியையும் இங்கு எனக்கு கற்பித்த ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் மனதிலிருத்தி வணங்கிக் கொள்கிறேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1983ம் ஆண்டு, இதே நினைவுப் பேருரையின் ஐந்தாவது தொடரை நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணத்து ஆதிக்குடியிருப்புகள் பற்றி, 1980ஆம் ஆண்டு தொடங்கிய எனது கலாநிதிப்பட்ட ஆய்வினை முடித்திருந்த வேளை அது. அந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் தமிழில், மகாஜனாவில், முதன்முதல் வெளியிடப்படவேண்டும் என்று எனது ஆசிரியரும் மகாஜனாவின் அன்றைய அதிபருமான பேரறிஞர் த.சண்முகசுந்தரம் ஆசைப்பட்டார். அதன் விளைவு, 'பெருங்கற்கால யாழ்ப்பாணம்' என்ற அந்த நினைவுப் பேருரை.
இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் உலக அரங்கிலும் உள்நாட்டிலும் பாரிய மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. தேசியம் பற்றிய கேள்விகளுக்கும், இனம் பற்றிய கேள்விகளுக்கும் விடை காண்பதே அன்று வரலாறு - தொல்லியல் துறைகளிடம் இருந்து எதிர்ப்பாக்கப்பட்டது. அவற்றைக் கவனித்துக் கொண்ட அதேவேளையில், அவற்றிற்கப்பால், எனதாய்வின் அடிநாதமாகவிருந்த, சூழலுக்கும் மனிதனுக்குமிடையிலான இடைத்தாக்கமென்ற பண்பாட்டுத்தளத்தை எவரும் பெரிதாகக் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை. சமூகம், அந்த ஆய்வில், தனக்கு முக்கியமென்று கண்டதற்கே மதிப்பளித்தது. ஈழத்தில் தமிழர் தொன்மையை நிறுவுவதும் அதற்கூடாக சிங்கள - பெளத்த தேசியவாதச் சவாலை எதிர்கொண்டு ஈழத்தமிழர் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுக்கூட்டுவதுமே சமூக வரவேற்புக்கு உரியனவாயிருந்தன.
போராட்டந் தொடர்ந்தாலும் தளங்கள் மாறிவிட்டிருப்பதையும் மாறிக்கொண்டிருப்பதையும் அனைவருமறிவர். ஈழத்தில் தமிழர் தொன்மை இன்றொரு கேள்வி அல்ல. தொன்மையை காட்டித்தான் தேசியத்தை நிறுவவேண்டும் என்ற நிலையும் இன்றில்லை. வரலாற்றிலும் தொல்லியலிலும் சிங்கள - பெளத்த தேசியவாதம் இன்றும் குந்தியிருக்கும் அதே மரக்கிளையில்தான் நாமும் இருக்கவேண்டுமென்றும் இல்லை. வரலாற்றையோ தொல்லியலையோ இன்று எவரும் கருத்திலெடுத்துப் படிப்பதாகவும் தெரியவில்லை. அண்மையில் காலமான டெரிடாவின் தகர்ப்புவாத (Deconstruction) சிந்தனைகளுக்குப் பின்வந்த புதிய வரலாற்றியல் (Neo Historiography) இலங்கைக்கு இன்னும் புதியதாகவே இருக்கின்றது. மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் ஆய்வுகள் போனபோக்கில் இந்தத் துறைகளை இழுத்து மூடிவிடலாம் என்பது பரவலான கருத்து. வாழ்வின் இருப்பிற்கு உதவும் வகையில் இந்தக் கற்கை நெறிகள் நெறிப்படுத்தப்படவில்லை என்பதே காரணம்.
இந்த இடத்தில், பேராசிரியர் இநதிரபாலா அண்மையில் வெளியிட்டுள்ள ' The Evolution of an Ethnic Inentity' என்ற நூலின் சமர்ப்பண வரியை குறிப்பிடவேண்டும். எனது மனதை தொட்ட வாக்கியம் அது. 'To the innocents who lost their lives as a direct consequence of misinterpretations of history'. (வரலாற்று திரிபுகளின் நேரடி விளைவாக உயிரிழந்த அப்பாவிகளுக்குச் சமர்ப்பணம்.)
தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்படவேண்டியவை, மாற்றியமைக்கபட வேண்டியவை (Unthinking Social Sciences) என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து.
மாறிவரும் உலகச்சூழல், கல்விக்கருத்துக்கள், சிந்தனைகள் - இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழர் இருப்பை இயையப்பண்ணி வளம்படுத்தக்கூடிய அடையாளம் எது என்பது பற்றிய சிந்தனையையும் ஆய்வுகளையும விவாதத்தையும் தூண்டுவதே இவ்வுரையின் நோக்கம். உலக அரங்கில் கடந்த காலங்களில் அடையாளங்கள் எவ்வகையில் மாறியுள்ளன என்று கவனித்தல் இங்கு அவசியம்.
பொதுவான மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம் என்பனவற்றின் அடிப்படையில் தேசங்கள் கட்டப்பட்டுத் தேசிய அடையாளங்கள் (National Identity) வலுப்பெற்றிருந்த காலத்தில், அவற்றுக்குள் அடக்கிவிடமுடியாத சிக்கல்கள் எழுந்தன. பொதுவுடமை தேசங்கடந்த சித்தாந்தமாக இருப்பினும் பொதுவுடமையை பிரகடனஞ் செய்த நாடுகளும் தேசியச் சிக்கலிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. தேசியங்களை மீறிய இச்சிக்கல்களை இன அடையாளங்களால் (Ethnic Inentity) வந்த சிக்கல்கள் என்று அழைத்தார்கள். இன அடையாளம் என்பதும், இனப்பிரச்சனை என்பதும் உலகின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டது, கையாளப்பட்டது.
பொதுவுடைமையின் வீழ்ச்சி, தேசங்களைத் தோற்றுவித்த ஐரோப்பாவிலேயே தேசியம் 'கண்டவடிவெடுத்து' ஐரோப்பிய கூட்டமைப்பானது. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்களால் கட்டுப்படுத்த முடியாத தொடர்புசாதனப் புரட்சி இவையெல்லாம் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ தேசம் இறந்து போய்விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு ஒரே நேரத்தில் குடியுரிமை பெறலாமென்பது இதன் எதிரொலி. இன்று எந்த தேசத்திற்கும் உண்மையில் இறைமை இருப்பதாகத் தெரியவில்லை. 'கற்பனையில் உருவான சமூகங்கள்' ( Imagined Communities) என்பது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசத்தின் வீழ்ச்சியை வருமுன் காட்டிய பிரபலமான நூல்.

உடைந்தது தேசம் மட்டுமன்று, குடும்பம் என்ற நிறுவனம், மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் -இப்படிப்பல, தம் பாரம்பரிய வடிவங்களை இழந்துவிட்டன. தேசமும் இனமும் கடந்த, அவற்றுக்குள் அடக்கிவிடமுடியாத, வாழ்வியற் சிக்கல்கள் இன்றைய உலகில் வியாபித்திருக்கின்றன. வாழ்வியல் அடிப்படையில் மக்கள் அணிதிரளும் போக்கும் காணப்படுகின்றது. இதனால் இனம், மொழி, மதம் போன்ற பழைய அடையாளங்களுடன் புதிதாக எழுந்துள்ள வாழ்க்கை முறை அடையாளங்களையும் உள்ளடக்கக் கூடியதாக பண்பாட்டு அடையாளம் (Cultural Identity) என்ற கருத்தும் சொற்பிரயோகமும் இன்று பரவலாகி வருகின்றன.
பண்பாடு என்பது நாம் வழமையாக விளங்கிக்கொள்ளும் பொருளில் இன்று நோக்கப்படவில்லை. வாழ்க்கை முறை என்ற பொருளிலேயே இச்சொல் உபயோகிக்கப்படுகின்றது. வாழ்க்கை முறைகள் என்று பன்மையில் விளங்கிக் கொள்வது மேலும் சிறப்புடையது என்ற கருத்தும் உண்டு. உண்மை ஒன்றாக இருக்க வேண்டியதில்லை, பலவாகவும் இருக்கலாம். பன்மையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், பண்பாட்டுப் பக்குவம். இது பண்பாட்டு பன்மைத்துவம் (Cultural Pluralism) என்ற பெயரில் அரசமைப்பியல் விழுமியங்களுள் ஒன்றாக இன்று முன்வைக்கப்படுகின்றது.
தாராண்மை ஜனநாயகம் எனப்படும் மேற்கத்தைய ஜனநாயகங்கள் இதுவரை சர்வசன வாக்குரிமை, பிரதிநித்துவ அரசு, பலகட்சி முறை, சொத்துரிமைச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்கள் -இவற்றையே ஜனநாயகத்தின் அளவுகோலாக வைத்திருந்தார்கள். இப்பொழுது பண்பாட்டு பன்மைத்துவம், தனிமனித பண்பாட்டு உரிமை, வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றையும் முக்கிய அளவுகோல்களாக இணைத்துள்ளார்கள்.
பண்பாட்டை அளவிடும் அளவுகோல்களும் இன்று வேறாகிவிட்டன. ஒரு சமூகத்தி்ன் பழம்பெருமையோ பாரம்பரியமோ மதமோ மொழியோ கலைப்படைப்புகளோ இசையோ நடனமோ பண்பாட்டின் முக்கிய அளவுகோல்கள் அல்ல. மாறாக உணவு, சுகாதாரம், கல்வி, சமூக சமத்துவம், பாற்சமத்துவம், சுற்றுச் சூழலை சிதைக்காத இயைவான வாழ்வு, வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் போன்றவையே ஒரு சமூகம் பண்பாட்டு மேன்மை உடையதா இல்லாததா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாகி உள்ளன.
எது பண்பாடு என்பதும் பண்பாடு பற்றிய விழிப்புணர்வும் அரசியலில் இருந்து தனிமனித வாழ்க்கைவரை அனைத்திற்கும் ஆதாரமாகிவிட்டன. அண்மையில் பிரிட்டிஷ் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ஆமாத்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அபிவிருத்திக்கும் பொருளாதாரத்தி்ற்கும் சம்பந்தமில்லை, அபிவிருத்தி பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற கருத்தை நிறுவியதற்காகவே அவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டது. பண்பாடும் அபிவிருத்தியும் (Culture and Development) என்பது இன்று மேற்குலகக் கல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சுலோகமாகிவிட்டது.
சில தசாப்பதங்களுக்கு முன்னர், அறுபதுகளில் ஏறத்தாழ இதே கருத்தை சீனாவில் மாவோ முன்வைத்தார். அவரது அபிவிருத்திக்கான பெரும்பாய்ச்சல் (Great Leap Forward) வெற்றியளிக்காதபோது அதற்கான காரணம் மக்களது பண்பாட்டில் உள்ள குறைபாடு என இனங்கண்டு அவர் முன்னெடுத்த இயக்கமே பண்பாட்டுப் புரட்சி (Cultural Revolution) என அழைக்கப்பட்து. மேற்குலகு அவரது கருத்தைச் சிலமாற்றங்களுடன் தனதாக்கியுள்ளது.
அடையாளங்குறித்து தமிழருக்கு, குறிப்பாக ஈழத்தமிழருக்குள்ள சில பண்புகளையும் இங்கு நோக்குவது அவசியமாகின்றது. தென்னாசியாவில் மொழியை முன்நிறுத்தி மக்களையும் தேசத்தையும் இனங்கண்டதில் தமிழுக்கும் தமிழருக்கும் தொல்பாரம்பரியமுண்டு. மற்றைய மொழிகளின் சொற்பிறப்பை நோக்கினால் இது புலனாகும். உதாரணமாக, மலையாளம் மலைநாட்டிலிருந்தும், கன்னடம் கருநாட்டிலிருந்தும், தெலுங்கு திரிலிங்க தேசத்திலிருந்தும், மராத்தி மகாராஷ்டிர தேசத்திலிருந்தும், குஜராத்தி கூர்ச்சர தேசத்திலிருந்தும், ஒரியா ஒட்டர தேசத்திலிருந்தும், வங்காளி வங்க தேசத்திலிருந்தும், சிங்களம், சிங்களதேசம் அல்லது இன மக்களிலிருந்தும் தத்தம் மொழிகளின் பெயர்களைப் பெற்றுக்கொண்டன.ஆனால் தமிழரும் தமிழ்நாடும் மொழியில் இருந்து தம் அடையாளங்களைப் பெற்றதை இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு' போன்ற தொடர்களும் பிறநாடுகளை 'மொழி பெயர் தேயம்' எனக் குறிப்பிட்ட மரபுகளும் சங்க இலங்கியங்களின் காலத்திலிருந்து, மொழியை முன்னிலைப்படுத்தி, மொழியால் ஒன்றுபட்ட பண்பினைத் தமிழர்கள் பெற்றிருந்ததை உணர்த்துகின்றன. 'உலகில் தோன்றிய முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு' என்று சொன்னால்தான் நம்மவர்க்குத் திருப்தி என்றெழுதிய புதுமைப்பித்தனின் கிண்டலில் ஆழந்த பொருளுண்டு. மொழி குறித்த அடையாளம் தமிழரிடையே சற்றுப் பலமானது. மொழியின் தொடர்ச்சி பேணப்பட்டதோடு பல பண்பாடுகளுக்கும் ஊடகமாகத் தமிழ் இருந்திருக்கின்றது. சமணம், பெளத்தம், பிராமணீயம், சைவம், வைஷ்ணவம், சித்தர்மரபு, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல சமயப்பண்பாட்டு மரபுகளுக்கு மாத்திரமல்லாமல் நாஸ்திகவாதத்திற்கும் தமிழ் பொதுவான ஊடகமானது. அவற்றால் செழுமையடைந்தது. பண்பாட்டு பன்மைத்துவம் தமிழருக்குப் புதியதன்று.
'தமிழ் கூறும் நல்லுலகு' என்ற அடையாளத்தினுள் ஈழத்தமிழர் உள்ளடங்கியிருந்தனரா என்பது ஆராயப்படவேண்டியது. இருப்பினும் இலங்கையின் முதல் எழுத்தாதாரங்களான பிராமிக் கல்வெட்டுக்களின் காலத்திலிருந்து மொழிசார்ந்த அடையாளத்தால் ஈழத்தமிழர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர் பண்பாட்டின் தொன்மைபற்றி இங்கு நான் குறிப்பிடவேண்டியதில்லை. அது அறியப்பட்ட விடயம். ஆயினும் ஈழத்தமிழர் தம் அடையாளத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களில் அந்த அடையாளத்தின் மையக்கரு காலத்திற்கு காலம் மாறியிருப்பதைக் காணலாம்.
நாகதீவு, நாகநாடு போன்ற தொல்லின பிரதேச அடையாளங்களில் இருந்து யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் அடையாளத்தின் முனைப்பு சைவசமயத்திற்கும் சாதிக்கும் மாறியதை ஈழத்து தமிழ் வரலாற்றியல் இலக்கியங்களால் அறிந்து கொள்ளலாம். காலனித்துவ காலத்தில், கிறிஸ்தவத்திற்கெதிரான சைவம், அடையாளத்திற்குக் கருப்பொருளானது. அதுவரை சைவத்திற்கு முதலிடம் கொடுத்த நாவலரே தமிழை முன்னிறுத்தி, ஈழத்தமிழர் அடையாளத்தை நிறுவவேண்டிய சந்தர்ப்பமும் பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிற்பாகத்தில் ஏற்பட்டது. நாவலர் இந்த அடையாளத்தை சிங்கள - பெளத்தருக்கு எதிராக முன்வைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழருக்கு எதிராகவே முன்வைத்தார் என்பதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழ் நூற்பதி்ப்பு தொடர்பான முரண்பாடுகளின்போது வீராசாமி முதலியாருக்கு நாவலர் எழுதிய கண்டனமொன்றிலேயே 'ஓஹோ! யாழ்ப்பாணம் ஒரு சிறு நூலையேனும் செய்திராத தேசம் என்றீரே' எனறு தொடங்கி, யாழ்பாணம் தனக்கெனத் தனிப் பாரம்பரியமுள்ள தமிழ்த் தேசம் என்ற கருத்தை நாவலர் எழுதவேண்டி வந்தது. சிங்கள - பெளத்தத்திற்கு எதிரான தமிழ் அடையாளம் இருபதாம் நுற்றாண்டு வரலாறு. ஈழத்தமிழரது தமிழ்த் தேசியமும் தமிழ் இன அடையாளமும் சிங்கள - பெளத்தத்திற்கு எதிராக தோன்றியமையும் வளர்ந்தமையும் பற்றிச் சில சிறந்த புத்தகங்கள் அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளன. ஆனால் இதன் மறுபக்கம் - ஈழத்தமிழ் அடையாளம், தமிழ்நாட்டுத் தமிழ் அடையாளத்திலிருந்து எப்படி வேறுபட்டதென்பது - இன்னும் சரிவர ஆராயப்படவில்லை.
புவியியற் பிரிவு, பிராமணீய மேலாதிக்கமற்ற சமூகம், நிலவுடைமைக்குச் சமமான கடல்சார் வணிகப் பொருளாதார பாரம்பரியம், அது தொடர்பான சமூக, சாதி அமைப்பு, மொழிவழக்கு வேறுபாடு, ஐந்நூறு ஆண்டுகாலத் தொடாச்சியான பல்காலனித்துவப் பாரம்பரியம் - இவற்றால் ஈழத்தமிழர் இந்தியத் தமிழரிலிருந்து வேறுபட்ட அடையாளமொன்றை உடையவாகள். பண்பாட்டு அடையாளம் என்ற கருத்தும் பதமும் இதை விளக்குவதற்கு வசதியானது. கடந்த சிலதசாப்த அரசியல் சூழலில் ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளத்தின் இந்த தனித்துவம் மேலும் வலுவடைந்திருப்பதாகவே தோன்றுகின்றது.



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 09 Dec 2024 14:56
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 09 Dec 2024 14:56


புதினம்
Mon, 09 Dec 2024 14:56
















     இதுவரை:  26118196 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5954 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com