அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 09 December 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 33 arrow அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - கருணாகரன்.  
Monday, 30 April 2007

'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.
அப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும்  அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.
 
"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே" என்று கேட்டேன்.
"அதனாலென்ன " என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.
"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன். 
 
"பெயரில் என்ன இருக்கிறது" என்றார் எஸ்போஸ்.
 
பசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.
 
வந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.
 
பத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன்  பேசியிருக்கிறேன்.
 
சற்று நேர அமைதிக்குப்பிறகு "ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.
 
அன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.
 
எஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும்  ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்;  பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு  உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.
 
எந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது.  அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.
 
அவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.
 
"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.
 
அவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார். 
 
அடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.
 
எஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
 
இதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.
 
பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.
 
அவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து  அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது  பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன்.  அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.
 
எஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள்  அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.
 
தமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒருவகைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.
 
என்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார்.  எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.
 
வாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.
 
மூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.
 
அவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில்,  இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.
 
எஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.
 
அவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர்.
 
"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே" என்றால்,
 
"அதை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்" என்பார். "இப்போது இதுதான் என்னுடைய வாதம்" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது.
 
எதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.
 
அவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில்   வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.
 
எஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.
 
மொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.
 
புதிய கவிதையை நாம் வீரியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.
 
சொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.
 
உணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
 
அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய  கவிதைகள் பரந்தளவிலான  கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.
 
அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.
 
இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.
 
'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது.
 
அதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம்  இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது.
 
ஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் தான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார்.
 
அன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது.
 
விவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார்.
 
எஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே  பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில்  அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே  அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.
 
எஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன.
  
    'சிறகுகள், குருதியொழுகும்; சிறகுகள்
     ஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் …
 
     எனது அடையாளம்
     நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …'
    
     ' அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
     அதிகாரத்திற்கெதிரான நமது       இருதயங்களைச்                                              
     சிலுவையிலறைவதா '
 
எஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக்  குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது.
 
எஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம்.
 
அவர் எழுதினார,;
      ' உன்னை அவர்கள் கொல்வார்கள்
       நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
       அப்பரிசு
       நிச்சயமற்ற உனது காலத்தில்
       எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. '
 
இதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.
 
அன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக.
 
சிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல      மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன்.
 
அந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)

 
 
 
                                                        

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 09 Dec 2024 12:55
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 09 Dec 2024 12:55


புதினம்
Mon, 09 Dec 2024 12:55
















     இதுவரை:  26118034 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7053 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com