அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 07 July 2022

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மே தினத்துக்கு இன்று வயது 121   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தினக்குரல்  
Tuesday, 01 May 2007

அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் அணிகள் மத்தியில் 1885 இல் ஒரு சுற்று நிருபம் விநியோகிக்கப்பட்டது.
1886 மே முதலாம் திகதி வர்க்க ரீதியான போராட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து பின்வரும் வாசகங்களுடன் அந்தச் சுற்று நிருபம் அமைந்திருந்தது.

`கிளர்ச்சி செய்வதற்கான ஒரு தினம் ஓய்வுக்கல்ல. உலகின் தொழிலாளர் சக்தியை அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் சமூக அமைப்புக்காக வலிந்து பேசுபவர்களினால் உத்தரவிடப்பட்ட தினம் அல்ல இது. தொழிலாளர் சக்தி அதன் சொந்தச் சட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்குமான ஒரு தினம். அடக்கியொடுக்கி ஆள்பவர்களின் சம்மதத்தையோ, அங்கீகாரத்தையோ பெறாமல் தொழிலாளர் சக்தி செயற்படுவதற்கான தினம். சகல தேசங்களினதும், மக்களினதும் விதி மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கு எதிராக உழைப்பாளிகளின் படையணி அதன் ஐக்கியத்தை எதிரிகள் அஞ்சத்தக்க வகையில் வெளிப்படுத்துவதற்கான ஒரு தினம். அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக கிளர்ந்தெழுவதற்கும் அறியாமைக்கும் சகல வகையான போர்களுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்குமான ஒரு தினம். ஒரு நாளைக்கு 8 மணித்தியாலயமே வேலை. ஓய்வுக்கு 8 மணித்தியாலம்; நாம் விரும்பியதைச் செய்வதற்கு எஞ்சிய எட்டு மணித்தியாலங்கள் என்ற உரிமையை அனுபவிப்பதை ஆரம்பிப்பதற்கான ஒரு தினம்.

121 வருடங்களுக்கு முன்னர் - அதாவது 1886 மே முதலாம் திகதி அமெரிக்கா பூராவும் பொது வேலை நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த வேலைநிறுத்தமானது, ஒரு சில தினங்களுக்குள்ளாக, அமெரிக்க உழைக்கும் வர்க்கம் முன்னொரு போதுமே அனுபவித்திராத படுமோசமான ஒடுக்குமுறைக்கு வழிவகுத்தது. பிரடெரிக் ஏங்கெல்ஸின் தலைமைத்துவத்தின் கீழ் 1889 இல் இரண்டாவது சர்வதேசியத்தின் ஸ்தாபக மகாநாட்டில் அந்த நாள் மே தினம் என்று பெயர் சூட்டப்பட்டதுடன், பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய போராட்ட நடவடிக்கைக்கான தினம் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

கடந்து சென்ற இந்த 121 வருட காலகட்டத்திலும் மே தினமானது பொதுவில், சகல நாடுகளினதும் வர்க்க உணர்வுடைய பாட்டாளி வர்க்கம் அதன் நிலைமைகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்வரும் வருடங்களுக்கான திட்டங்களை வகுப்பதற்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைக் கொண்டாடுவதற்கும் உலகம் பூராவும் கம்யூனிசத்தைக் காண்பதென்ற இறுதி இலக்கை தங்களது போராட்டத்தின் மூலம் அடைவதற்கான உறுதிப்பாட்டைப் பிரகடனம் செய்வதற்குமான ஒரு தினமாக வளர்த்தெடுக்கப்பட்டு பரந்துபட்டு வந்திருக்கிறது.

121 வருடங்களுக்கு முன்னரான உலகை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம்.

1848 இல் கார்ள் மார்க்ஸும், எங்கெல்ஸும் வர்ணித்ததைப் போல் கம்யூனிஸம் அப்போது ஒரு பேய் பூதமாக விளங்கும் நிலை இருக்கவில்லை. அது விறல் கொண்டெழுந்து ஐரோப்பாவின் முடியாட்சிகளை உலுக்க ஆரம்பித்திருந்தது.

பாரிஸ் கம்யூன்

1871 இல் பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தினர், உடைமைகள் இல்லாத மக்களின் பெயரில் முதற் தடவையாக, அதிகாரத்தைக் கைப்பற்றத் துணிந்து செயற்பட்டனர். சமூகத்தை முற்றிலும் தீவிரமான ஒரு திசையில், சகல வர்க்கங்களையும், சகல ஒடுக்குமுறைகளையும் ஒழித்தொழிப்பதை நோக்கி மாற்றியமைப்பதற்கு அன்று அவர்கள் துணிந்தார்கள். அதுவே கீர்த்திமிகு பாரிஸ் கம்யூன் ஆகும்.

ஆனால், பாரிஸ் கம்யூன் பிரான்ஸினதும், புரூசியாவினதும் (ஜேர்மனி) முதலாளித்துவ மற்றும் பிற்போக்குவாத அட்டகாசக்காரர்கள் முன்னால் `இறந்து'விட்டது.

ஜேர்மனியில் புரூசிய அரசானது 1878 இல் மிகவும் கொடூரமான சோஷலிச விரோத சட்டங்களைக் கொண்டுவந்து புரட்சிகரக்கட்சியை சட்ட விரோதமானதாக்கியது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, புதிய காலனி நாடுகளில் இருந்து சூறையாடிக் கொண்டு வரப்பட்ட செல்வம் தொழிலாளர் இயக்கம் மயக்க நிலைக்குள்ளாகும் அளவுக்கு பிரிட்டிஷ் தொழிலாளர்களின் சகல தரத்தினரையும் ஊழல் மயப்படுத்தியிருந்தது.

ஒரு கணம் நோக்குகையில், பாரிஸில் கொழுத்தப்பட்ட செஞ்சுவாலை, அணைக்கப்பட்டுவிட்டது போலவே தோன்றியது. ஆனால், எதிர்பார்த்திராத ஒரு மூலையில் இருந்து வந்த வர்க்கப் போராட்ட ஒலி திடீரென்று அந்த `சஞ்சலமற்ற' நிலையைத் தகர்த்தெறிந்தது. வட அமெரிக்காவில் புதிதாகத் திளைத்த நகரங்களின் ஒன்றில் இருந்து அந்த ஒலி கிளம்பியது. அதுதான் சிக்காகோ.

புதியதோர் கண்டத்துக்கு பாய்ந்த புரட்சி

புரட்சியானது முற்றிலும் புதியதொரு கண்டத்துக்குப் பாய்ச்சல் எடுத்தது. ஆனால், சிக்காகோவின் தொழிலாளர்கள் உண்மையில் அமெரிக்கர்கள் அல்லர். இவர்களில் அதிகப் பெருந்தொகையானோர் ஜேர்மனி, அயர்லாந்து, பொஹிமியா, பிரான்ஸ், போலந்து மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்தவர்களே. இவர்களில் பலர் படிப்பறிவற்ற விவசாயக் குடிமக்கள். உயிர் வாழ்வுக்காக அந்நிய மண்ணுக்குப் படையெடுத்த பட்டாளம்.

இவர்களைத் தவிர, ஏற்கனவே வர்க்கப் போரட்ட உணர்வுகளினால் தூண்டப்பட்ட வேறு பிரிவினரும் இருந்தனர். குறிப்பாக ஜேர்மனியில் இருந்து வந்த தொழிலாளர்கள் மத்தியில் இயல்பான ஒரு வர்க்க உணர்வும் சிக்கலான அனுபவத்தின் காரணமாக ஏற்பட்ட பட்டறிவும் மேலாதிக்க உலக ஒழுங்கிற்கு விரோதமான உணர்வும் காணப்பட்டன. ஒரு புதிய தீவிரப் போக்குடைய தலைமைத்துவம் - குறிப்பாக, மார்க்ஸினதும், ஏங்கல்ஸினதும் முதலாவது சர்வதேசியத்துடன் தொடர்பு கொண்டிருந்த ஜேர்மன் குடியேற்ற வாசிகள் மத்தியில் முகிழ்த்தது. இவர்களுக்கு உறுதுணையாக, அடிமைகளின் விடுதலைக்கான சந்தடிமிக்க போராட்ட காலத்தில் தீவிரப் போக்குடைய குடியரசுக் கட்சிக்காரராக விளங்கிய அல்பேர்ட் பார்சன்ஸ் நின்றார். அமெரிக்காவின் அடிமை எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஐரோப்பாவின் குழப்ப நிலைமைகளில் இருந்து பெறப்பட்ட இரு கண்டங்களின் ஒரு முகப்பட்ட அரசியல் அனுபவம் இங்கு வழிகாட்டியாக அமைந்தது.

பொலிஸ் அடக்குமுறை

1877 இல், ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பரவிய வேலை நிறுத்தம், சிக்காகோ உட்பட பல நகரங்களில் பொதுவேலை நிறுத்தமாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், பொலிஸாரின் அடக்குமுறையினால் அவை ஒடுக்கப்பட்டன.

முன்னரெல்லாம், அமெரிக்காவின் வாழ்க்கை நிலைமைகள், வறுமைப்பட்ட குடியேற்ற வாசிகளுக்குக் கூட, அவர்கள் விட்டு வெளியேறிய சொந்த நாடுகளில் இருந்த நிலைமைகளை விட மேம்பட்டவையாகவே இருந்தன. கைத்தொழில் துறை பூதாகரமாக வளர்ச்சி கண்டது. மெக்சிக்கோவின் கணிசமான பிராந்தியங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலைமைகளின் காரணமாக, தொடர்ச்சியான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாயிற்று. இதைவிட, களவாடப்பட்ட நிலங்கள் பெருமளவில் இருந்ததால், சொத்துக்களை அம்பாளிக்க முடியும் என்ற நம்பிக்கை தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டது.

எவ்வாறெனினும், 1880 களில் இந்த நிலைமைகள் சகலதுமே மாற்றம் காணத்தொடங்கின. தென்பகுதி அடிமைச் சொந்தக்காரர்களை முதலாளித்துவ வர்க்கம் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னரேயே தோற்கடித்திருந்தது. அத்துடன், கறுப்புத் தோல்காரர்களை சுரண்டுபவர்களை ஒரு நவீன ஒழுங்கிற்குள் 1870 களில் மீளத் தன்வயப்படுத்தியும் கொண்டது அந்த வர்க்கம்.

புதிதாக விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் நிராயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களின் சகல அரசியல் உரிமைகளும் பறிக்கப்பட்டு அரை நிலப்பிரபுத்துவ முறைமைக்குள் கட்டியாளப்பட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் தான் பெரும்பாலும், இறுதி `இந்தியப் போர்கள்' முடிவுக்கு வந்தன.

இறுதிச் சரணாகதி ஆண்டாக 1886 விளங்கியது. எல்லைகள் மூடப்பட்டன; களவாடுவதற்கு `சுதந்திர நிலங்கள்' இதற்கு மேலும் இருக்கவில்லை; உபரி தொழிலாளர் சக்திக்கான `பாதுகாப்புக் காரணி'யும் இருக்கவில்லை என்பதே இதன் அர்த்தம். இதனுடன், சேர்ந்து 1873 இல் பாரிய பொருளாதார மந்தநிலையும் வந்தது. இந்த பொருளாதார மந்த நிலை இரு தசாப்தங்களாக நீடித்தது. வேலையில்லாத் திண்டாட்டம் தோன்றியது. முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு வறுமையும் அதன் கோர வடிவங்களில் தாண்டவமாடியது. இந்தியர்களை சிதறடிக்கச் செய்து, மெக்சிக்கோவை சின்னாபின்னமாக்கி, அடிமைச் சொந்தக்காரர்களைத் தோற்கடித்து பின்னர் அடிமைகளுக்கும், துரோகமிழைத்து அமெரிக்க முதலாளித்துவம், இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர் சக்தியை அதன் தொழிற்சாலைகளில் பயன்படுத்திக் கொழுக்கும் ஒரு முதலையாக உருமாற்றம் கண்டது.

எவ்வாறெனினும், ஆளும் வர்க்கம் இந்த முறைமையை வலுப்படுத்திக் கொண்டு இருந்த வேளையில், புதிய கனவுகளை அதாவது, பாட்டாளி வர்க்கக் கனவுகளைக் காண ஆரம்பித்த மக்கள் கூட்டத்தினரும் இருந்தனர். பல்வேறு விதமான ஆரவார மொழிகளில் இந்தக் கனவுகள் அரசியல் தோற்றப்பாட்டில் வெளிக்காட்டப்பட்டன.

மோதலுக்குத் தயார்

இரு வர்க்கங்களுமே மோதலுக்குத் தயாராகின. மோதல் வெகுவிரைவில் வெடிக்கும் என்று இரு தரப்பினருமே தெரிந்திருந்தனர். எந்தக் கிளர்ச்சியையும் அடக்கியொடுக்குவதற்கு கொடூரமான வழிவகைகளூடாக பூர்ஷுவாக்கள் தயார் நிலையில் இருந்தனர். தொழிலாளர்களும், இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தங்களைத் தயார்படுத்தியிருந்தனர். இரகசிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் வர்க்கக்கட்சிகள் அமைக்கப்பட்டு அவை மோசமாகிக் கொண்டுவரும் நிலைமைகளை எவ்வாறு கையாளுவது என்று தங்களுக்குள் தீவிரமான வாதப்பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருந்தன.

அப்போது தொழிற்சங்கங்கள் ஓரளவு சட்டபூர்வமானவையாக அல்லது முற்றுமுழுதாக சட்டபூர்வமற்றவையாக இருந்தன. அன்றைய காலகட்டத்தில் வேலை நிறுத்தத்தைச் செய்வதென்பது, சமூகத்தின் சகல வல்லாதிக்க சக்திகளுடனும் போருக்குச் செல்வதை ஒத்ததாக விளங்கியது.

தீவிரவாதத்தின் மையமாக சிக்காகோ விளங்கியது. 1885 இல் சிக்காகோ மத்திய தொழிலாளர் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

"உழைக்கும் மக்கள் தங்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தங்களை ஆயுதபாணிகளாக்கிக் கொள்ள வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கின்றோம். வன்முறையே இதற்கு உகந்தமார்க்கமாக அமைய முடியும்" - இதுவே அத்தீர்மானமாகும்.

இதுவொரு வெற்றுக்கோஷமாக அமையவில்லை. சிக்காகோவிலே தொழிலாளர்கள் பெரும்பாலும் ஜேர்மனியில் இருந்து வந்தவர்கள். சுரண்டல்காரர்களின் குண்டர் படையணிகளின் வன்செயலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக ஆயுதபாணி திரட்டல் படையணிகளை அமைத்தார்கள். இந்த அமைப்புகள் ஆங்கிலத்தில் " Study and Resistence Associations" என்று அழைக்கப்பட்டன. இது தவிர, இங்கிலிஷ் கிளப், பொஹிமியன் ஷார்ப் சூட்டேர்ஸ் என்ற அமைப்புகளும் இன்னொரு பிரெஞ்சுக் குழுவும் இருந்தன. ஆனால், இந்தத் தொழிலாளர் திரட்டல் படையணிகளை பூர்ஷுவாக்கள் விரைவாகவே தடைசெய்துவிட்டனர். சில அணிகள் கலைக்கப்பட்ட அதேவேளை, வேறு சில அணிகள் தலைமறைவாகின.

8 மணிநேர வேலை

தொழிலாளர் இயக்கத்தின் கவனம் முற்றுமுழுதாக தினமொன்றுக்கு 8 மணித்தியாலம் வேலை என்ற கோரிக்கையின் மீதே திரும்பியது. தொழிற்சங்க சம்மேளனம் தேசிய ரீதியான போராட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது. 1886 மே முதலாம் திகதி தொழிலாளர்கள் 8 மணித்தியாலங்களே வேலை செய்ய வேண்டும் என்றும் இதற்கு உடன்படாத எந்தவொரு தொழிற்சாலையினதும் வாயிற்கதவுகளை மூடிவிடவேண்டுமென்றும் அவை பிரேரித்தன. இத்திட்டத்துக்கு உற்சாகமான பேராதரவு கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் 18 மணித்தியாலயங்கள் வேலை செய்வதே வழக்கமாக இருந்தது. தொழிலாளர்கள் உழைத்து உழைத்து மாய்ந்து செத்தார்கள்.

பட்டினி ஒரு புறம் வாட்ட அவர்கள் குறுகிய நேரமே நித்திரை கொள்வதற்கும் அவகாசம் கிடைத்தது. தொழிலாளர்கள் ஒரு வர்க்கம் என்ற வகையில் மேம்பாடான நிலைமைகளை நோக்கித் தங்கள் தலைகளை உயர்த்துவதற்கு முன்னதாகச் சிந்திப்பதற்கும் சுயகல்வியில் ஈடுபடுவதற்கும் நேரம் வேண்டிக் காத்திருந்தார்கள்.

 [01 - May - 2007]


     இதுவரை:  22358971 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4987 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com