அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நூல்நயம் arrow நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொன்-மணி  
Wednesday, 09 May 2007

வன்னிப்பிரதேசத்தில் குழுமாட்டு வேட்டையென்பது ஒருகலை.  இதற்குத்துணிவு வேண்டும்.
இந்த வேட்டைக்காகச் சிலர் காடுகளில் தங்குவதுண்டு.
சாப்பாடு சகிதம் நடுக்காட்டில் மாடுவரும் தடங்களைப்பார்த்து பரண்  அமைத்து உட்கார்ந்திருப்பர்.
இந்தத்தங்கல் ஒரு மாதம்வரை தொடரும். வேட்டை கிடைத்தால்  அதனை உரித்து நெருப்பில்வாட்டி வத்தல் போடுவார்கள்.
சிலருக்கு இது தொழிலாக அமைந்து விடுகிறது.
சிலர் பொழுது போக்கிற்காகவும் மேற்கொள்வதுண்டு.
குழுமாட்டிறைச்சி வத்தலும், மரை இறைச்சி போலவே இருக்கும்  அதிக வித்தியாசத்தை காண இயலாது.
விசயம் தெரிந்தவர்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டு தாறுமாறாகப்  பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
ஒரு முறை முத்தையன் கட்டில் மிளகாய் செய்தகாலத்தில் மாலை  நேரம் தீவிர வேலையில் ஈடுபட்டிருந்தோம். காட்டுப்பூக்களின்   வாசத்தையும், மூலிகையின் மணத்தையும், கூடவே  தக்காளிச்செடியின் சுகந்தத்தையும், சுமந்து வரும் தென்றல் அன்று  வித்தியாசமான மணம் ஒன்றையும் சேர்த்து இடைக்கிடை வீசி  என்னவோ செய்தது.
வேலை செய்தவர்கள் மூக்கை பலமாக இழுத்துக்கொண்டார்கள்.  எங்களைப்போல் எத்தனைபேரோ? பொழுதுசாயும் நேரம் வேலையை  முடித்துக்கொண்டு வாய்க்காலில் குளிக்கப் போவோம்.
பகல் முழுக்க வேலை செய்ததால் தேகம் வேர்த்து  பிசுபிசுவென்றிருக்கும்.
நீர் ஓடுகின்ற வாய்க்காலில் நீட்டி நிமிர்ந்து படுக்கின்றசுகமே தனி.  உடம்பின் அலுப்பை ஒரு நொடியில் போக்கிவிடும் மருந்தைப்  போன்றது.
முத்தையன் கட்டு வாய்க்கால் சீமென்ரினால் அமைக்கப்பட்டிருக்கும். நீர் தங்குதடையில்லாமல் வீச்சோடு பாய்ந்து வரும். உயரத்தில்  இருந்து வரும் நீர்பள்ளத்தில் இறங்குமிடங்களில் படிகள்  அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப்படிகளில் விழுந்து நீர் மேலெழும் அந்தப்படியோரம் தலையை  வைத்துக் குளிக்கும் போது இன்பம்கோடிபெறும்.
இதனை வார்த்தைகளில் எழுதமுடியாது. அந்தச்சுகத்தை  அனுபவித்தால்தான் தெரியும்.
சுணையில் அரித்து எரியும் உடலுக்கு இந்த வாய்க்கால் குளிப்பு   அற்புதம்.
அன்று குளிக்கும்போதே அந்த வாசனை மூக்கைத்துழைத்தது.  நெய்வாசம்போல் என்னவோ செய்தது.
குளித்து குடிலுக்கு வந்தபோதுதான் ஒரு அனுபவசாலி சொன்னார்  ஆரோ குழுமாடு வெடிவைச்சு வாட்டிறாங்கள். மூக்கைத்துழைக்கிது.  நல்ல நெய்ச்ச மாடுபோல அதுதான்  இந்த வாசம்.
அதன்பிறகு மாட்டிறச்சி சாப்பிடாதவர்கள், சுரந்த எச்சிலை  காறித்துப்பினார்கள் நான்மட்டும் இழுத்து விழுங்கிக்கொண்டேன்.  இன்று கூட அந்த வாசம் நினைக்கும்தோறும் எச்சிலை  சுரக்கவைக்கிறது.
பெரும்பாலும் காட்டோரக் கிராமங்களில் வாழும் சிலர் இதனைத்  தொழிலாக மேற்கொள்வார்கள். பட்டிமாடுகளை காடுகளில்  மேயவிட்டு குழுவன்களை அணைத்து வீடுவரை கொண்டு  வருவார்கள்.
காலப்போக்கில் இக்குழுவன்கள் சாந்த மடைந்து மற்றைய மாடுகள்  போல் வயல் வேலைகளுக்குப் பயன்படும்.
இயல்பாகவே குழுவன்கள் மிரட்சியும், அவதானமும் நிறைந்தவை.
சின்னச்சத்தத்தையும் உடன்செவி மடுக்கும் சக்தி வாய்ந்தவை.  அத்தோடு காற்றில் மிதந்து வரும் ஆபத்தான மனித, மிருக  வாடைகளைச் சுவடு பிடிக்கும் தன்மை பெற்றவை.
மாடுகள் வரும் வழியில் சுருக்குத்தடம் வைத்துப் பிடிப்பதும்,  அதர்பார்த்து மரங்களில் ஏறியிருந்து கழுத்தில் கயிறு எறிந்து  பிடிப்பதும் சிலரின் திறமையைப் பொறுத்தது.
ஆபத்தான இந்த நிகழ்வுகளால் மாடு வயிற்றைக் கிழித்து  இறந்தவர்கள் எத்தனைபேர்.
இதற்காகப்பாவிக்கப்படும் தோல்கயிறு பற்றிய செய்தியை எழுத்தாளர் பாலமனோகரன் வட்டம்பூ நாவலில் சுவையாக எழுதுகின்றார்.  இத்தொழிலைச் செய்பவர்களுக்கு குழுவன் கந்தையர், குழுவன்  செல்லர் என்ற பட்டப்பெயர்கள் நிலவியதை நானறிவேன்.
இவர்கள் இன்று உயிரோடு வாழுகின்றார்களோ தெரியாது.
அவர்களின் பட்டப்பெயர்கள் இன்றும் வாழுகின்றது.
வட்டம்பூ நாவலில் தோற்றம்பெறும் கதாநாயகன் சிங்கராயர்  காயம்பட்டு வேதனையில் துடித்தபோதும், எப்படியும் உவரை  அடக்காமல் விடமாட்டேன் என்று சபதம்போடும் இடங்களில்  கிராமத்தின் வைரம் பாய்ந்த கதாபாத்திரத்தின் தோற்றத்தையும்,  ஓர்மத்தையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
அவரது வீட்டின் முற்றத்தில் வெண்ணுரை தள்ளிய  கள்ளுப்பானையிலிருந்து சிரட்டையில் வார்த்த கள்ளில் பாதியைக்  குடித்து விட்டு மணலில் சிரட்டையை விழாதபடி புதைத்துவிட்டு,  நெடுங்காம்புப் புகையிலையைச் சுருட்டி கள்குடித்த வாய்க்கு இதமாக இழுத்துப் புகைவிட்டு எக்காளமிட்டுச் சிரிக்கும் சிங்கராயரின்  காட்சியை நான் எப்போதும் நினைத்துப்பார்ப்பதுண்டு.
நிலா முற்றம், கள்ளுப்பானை குழுமாடுகள் பற்றிய திகிலூட்டும்  செய்திகள் இவைபற்றி கதைத்துக்கொண்டிருக்கும்போதுதான்,  குணசேகரா பயத்தில் நடுங்கி கலட்டியனைப் பிடிப்பதை பேசாமல்  விட்டு விடுங்கள். என்று சிங்கராயரைப் பார்த்துக் கேட்கின்றான்.
அந்த இடத்தில்தான் சிங்கராயர் இந்தச்சிரிப்பை வழங்குகின்றார்.  படக்காட்சிபோல் கண்களில் தெரிகிறது இந்தச்செய்தி.
இப்படியான சம்பவங்களை கிராமங்களில் மாத்திரமதான் காணலாம்.  கலட்டியன் தொடையில் கிழித்துவிட, காயம் பட்ட சிங்கராயரைத்  தூக்கிக்கொண்டு வரும் இடத்தில் செய்தியறிந்த செல்லம்மா ஆச்சி  பதறித்துடித்து அழும்காட்சியில். அவள் பயந்து புத்தி பேதலித்து  விடும் என்பதற்காகப் பொத்தடிவாயை என்று சிங்கராயர் அடக்குகின்ற காட்சி அருமையிலும் அருமை.
ஆசிரியர் காதல் இளம் ஜோடிகளாக சேனாதி, நந்தா என்ற  பாத்திரங்களைப் படைத்திருக்கின்றார்.
காதல் உணர்வுகளால் அவர்கள் படும் இன்பவேதனைகள், கதையைச்  சோர்வில்லாமல் நகர்த்திச் செல்கின்றது.
“நந்தா என்னிலா“ என்ற சினிமாப்பாடல் காதலியின் பெயரோடு  ஒட்டியிருப்பதால் பலஇடங்களில் இதயத்தை வருடிச்செல்கிறது  நந்தாவும் சேனாதியும் ஆற்றில் இறங்கி இறால் பிடிக்கின்ற இடத்தில் மாடு மிதித்த பள்ளங்களில் இறால் அதிகமாகப் பதுங்கியிருக்கும்.  என்ற் செய்தியையும் சொல்லத்தவறவில்லை.
இந்த இடத்தில்அவரது நிதானத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.  கதைப்பாத்திரங்களோடு எங்களையும் அழைத்துச்செல்லும் திறமை  அவரது எழுத்து வடிவத்திற்கு உண்டு.
இந்த இடத்தில் எப்போதும் எங்கள் ஊரில் நடந்த சம்பவங்கள்  ஞாபகத்திற்கு வருவதுண்டு.
பாடசாலையில் படிக்கின்ற காலம்.
எங்கள் ஊர் ஆற்றில் வத்தையடியென்கின்ற இடமுண்டு.  இதன்கரையோரம் ஒரு நாவல் மரம் நிற்கிறது.
இதன் சில கிளைகள்  ஆற்றை நோக்கிப்படர்ந்திருக்கும்.
இதன் பழங்கள் தேன்போல  இனிமையானனவை.
மரத்தில் ஏறிப்பழங்களைச் சாப்பிட்டு விட்டு. ஆற்றில் குதித்துக்  குளிப்பதுண்டு.
குளிக்கின்ற வேளையில் நீரின் அடியில் படர்ந்திருக்கும்  பச்சைப்பாசிக்குள் கால்கள் புதையும்போது தடிபோல மிதிபடும்.  மிதிபடும் சாயல் ஊர்வதுபோல் இருக்கும்.
அப்படியே மிதித்தபடி கையைவிட்டுப் பிடிப்பதுண்டு.
பெரிய கறுத்த இறால்.
இரண்டு மூன்று துண்டாக வெட்டித்தான் கறிக்குள் போடமுடியும்.  அந்த அளவிற்குப் பெரிய இ;றால்கள்.
இது எங்களுக்கு ஒரு விளையாட்டு.
பாடசாலைவிட்டதும், வீட்டிற்குப் போகாமல் நேரே ஆற்றங்கரைக்குப்  போய்விடுவோம்.
நீரில் குதித்து விளையாடுவதும், இறால் பிடிப்பதும் எங்கள் பொழுது  போக்காக அந்தநேரத்தில் அமைந்திருந்தது.
இதற்காக பலதடவைகள் அம்மாவிடம் அடியும்  வாங்கியிருக்கின்றேன்.
எங்கள் வயதுக்கும், பருமனுக்கும் அந்தநேரத்தில் ஆற்றங்கரை  ஆழமானது, அபாயம் நிறைந்தது.
வளம் நிறைந்த இந்தச்செல்வம் வத்தையடி ஆற்றங்கரையில் அந்த  நேரத்தில் குவிந்து கிடந்தது.
அந்த வேளையில் இறாலுக்குப் பெரிதளவில் விலை கிடக்கவில்லை.  சந்தைப்படுத்த வகையற்ற நிலையில் மீனவர்கள் கஸ்ரப்பட்டார்கள்.  பிடிக்கின்ற இறாலை அநியாய விலைக்கு வாங்கவே வியாபாரிகள்  போட்டி போட்டனர்.
மூன்று நாட்களுக்கு மேல் கொள்வனவு செய்ய யாரும் இல்லாமல்  இறால் கிடங்கில் நிறைந்து வழிந்ததை நான்பார்த்திருக்கிறேன்.
வளம் நிறைந்த அந்தக்காலத்தில் தொழிலாளர் மனம் நிறைய  வருமானம் கிடைக்கவில்லை.
ஒருகாலத்தில் தேவைக்கு மட்டுமென்ற நிலையிருந்திருக்கலாம்.  நந்திக்கடல், நாயாறு, சாலை, கொக்கிளாய்  போன்ற ஆறுகள் இறால்  வளம் மிக்கவை. இவை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  வளம்சேர்ப்பவை.
வட்டம்பூ கதையில் வரும் ஆண்டாங்குளம் ஆற்றுத்தொடுவாய்  நாயாறு கடலோடு தொடர்புடையது.
நந்தாவும்,சேனாதியும் இறால் பிடித்தகாட்சியோடு நானும் எனது  பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டேன்.
ஒவ்வொரு சம்பவத்தையும் அனுபவித்து எழுதுகின்ற எழுத்து வடிவம் என்னையும் இணைக்கவைத்ததில் ஆச்சரியமில்லை.
கேப்பையன், மாதாளையென்று மாடுகளுக்கு வைக்கும் பெயர்கள்  வன்னியில் பழமை வாய்ந்தவை. 
நாங்களும் ஒருகாலத்தில் நிறைய எருமைமாடுகள் வளர்த்தோம்.  மாதாளை, ஈஸ்வரியென்று எங்களுக்கும் எருமைகள் நின்றன.
இந்த எருமைகள் மிகவும் சாதுவானவை. நாங்கள் முதுகில் ஏறிச்  சவாரி செய்யமளவிற்குப் பழக்கமானவை.
எங்கள் வீட்டிற்குப் பின்னால் மாட்டுப் பட்டி இருந்தது.
காலையில் சாணம் அள்ளி பட்டியைத் துப்பரவாக்குவது நாளாந்த  வேலை.
பால்கறந்து முடிய பலமணிநேரம் பிடிக்கும். கறந்த  பாலைக்குடிப்பதற்கு எடுத்ததுபோக எஞ்சியதை பெரிய, பெரிய  சட்டிகளில் காய்ச்சி உறைபோட்டு வைப்பதுண்டு..
எருமைப்பால் பசும் பாலைவிட இனிமையானது. தடிப்பானது.  விடியப்புறம் அம்மா எழுந்து, உறைந்திருக்கும் தயிரின் ஆடையைத்  தனியாக எடுத்து பானையில் போட்டு மத்தினால் கடைந்து  வெண்ணெய் எடுப்பா.
இது  அவவுக்கு நாளாந்த வேலை.
இந்த வெண்ணையைச் சேர்த்து வைத்து நெய்யாக  உருக்கியெடுப்பார்கள்.
உறைந்திருக்கும் ஆடையைக் களவாகத் திருடிச்சாப்பிடுவதில்,  எனக்கும் தம்பிக்கும், அடிபிடி வரும்.
மறுநாள் காலை இரவு கண்ணன் வந்து வெண்ணெயைச்  சாப்பிட்டிருக்கிறானாக்கும், கொஞ்சத்தைக் காணவில்லை என்று  அம்மா பகிடியாகக் கூறுவா.
அந்தவாழ்க்கையின் இன்பவடுக்கள், அழகானவை, மகிழ்ச்சியானவை.  அப்போதெல்லாம் வீட்டில் பாலும் தயிருமே மணக்கும்.
இதெல்லாம் ஒருகாலம் என்று, பெருமூச்சு விடத்தோன்றுகிறது.  கதையில் சிங்கராயர் பட்டியில் பால்கறந்து கொண்டிருக்கும்  வேளையில்  சேனாதி வருகின்றான்.
அந்தக்காட்சி எனது இந்த நினைவுகளோடு படமாக விரிந்தது.  காடுகள் ஒரு நாட்டின் வளம் நிறைந்த பிரதேசங்கள்.
இதனையொட்டி அமைந்திருக்கின்ற கிராமங்கள் தனித்துவமானவை.  ஆபத்தானவையும் கூட, இயற்கை எழிலும் இங்கேதான்  விளைந்திருக்கும்.
காட்டு மிருகங்களால் ஆபத்தும் உண்டுதான். இருந்தாலும் அனுபவம்  நிறைந்த கிராம மக்களின் வாழ்க்கை அவர்களின்பால் அசுர  தைரியத்தையும் ஓர்மத்தையும், துணிவையும், ஏற்பத்திவிடுகன்றன.
அந்தச்சூழல் அவர்களைப் பழக்கத்தில் ஆழ்த்தி விடுகின்றது.  எளிமையும், இனிமையும், இறைமையும் கிராமத்து அத்தியாயங்கள்.  இந்த அத்தியாயங்களை அனுபவப்பாதங்களால் நேர்த்தியாக  அளந்திருக்கிறார், பாலமனோகரன்.
அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஆண்டாங்குளம் பிரதேசம், அவர்  வாழ்க்கையோடு இணைந்ததும் ஒரு காரணம்.
இவரின் புகுந்த வீடு இங்கேதான் உள்ளது.
இவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்ததும்  இந்த  வளமான கிராமத்தில்தான்.
தன்உறவுகளோடு இங்கு வாழுகின்ற மக்களையும்  நேசித்திருக்கின்றார்.
ஊர்வன, பறப்பனவற்றின் அழகை ஊன்றிக் கவனித்திருக்கின்றார்.  மலர்ந்து மணம் வீசும் மலர்களோடு பேசியிருக்கின்றார்.
கதையில் வரும் காந்தியென்கின்ற கதாபாத்திரம் விடுதலையின்பால்  வேட்கைகொண்ட இளைஞனைப் பற்றியது.
கதையின் முன்னுரையில் இந்தப்பாத்திரத்தை யார் என  அறிமுகப்படுத்தியுள்ளார்.
காந்தியும் பானுதேவன் ஆசிரியரும் சந்திக்கும் காட்சிகளில்  விடுதலையின் தேவைகள் எத்தகையது என்பதை உணர்ச்சியோடு  கூறுகின்றார்.
இந்தக்கதையை எழுதிவிட்டு இலங்கையில் புத்தகமாக  வெளியிடமுடியாமல் அவர் பட்ட கஸ்ரங்களையும், இதற்காகவே  இந்தியாவுக்குச் சென்று இருபத்தினான்கு மணித்தியாலத்தில் எழுதி  முடித்து, நர்மதா ஆசிரியரின் மனம் நிறைந்த பாராட்டோடு  வெளியேறியதையும், அப்போதும் அவர் ஆசை நிறைவேறாமல்  திரும்பியதையும், ஆசிரியர் தன்னுரையில் தெளிவு  படுத்தியிருக்கிறார்.
வன்னிமண்ணின் இயல்பான செயற்பாடுகள், மாந்தர் தன்வாழ்க்கை  முறை, இவற்றோடு காலத்தின் கட்டாயத்தையும் கதையினூடகத்  தெளிவு படுத்தியிருக்கும், ஆசிரியரின் எழுத்தாற்றல் காலம் கடந்தும் வாழும்.
தொடரும்..


மேலும் சில...
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 00:10
TamilNet
HASH(0x55ba8e07ee70)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 00:10


புதினம்
Fri, 29 Mar 2024 00:10
















     இதுவரை:  24714505 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4667 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com