அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 2 of 8

கானா பிரபா: இதே வேளை ஈழத்திலே ஒரு மரபு ரீதியான ஒரு  நாடகக் கலாசாரம் வளர்ந்து கொண்டிருந்த வேளையிலே நவீன  நாடகங்களைத் தேடிப்போய், அவற்றை உள்வாங்கி மேடையேற்ற  வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

தாசீசியஸ்:  குறிப்பாக அதைப்பற்றிப் பேசுவதானால் நாடகத்துக்கென்று ஒரு மரியாதை அன்று இருக்கவில்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் ஆங்கில நாடகம் என்றால் அதற்கு ஒரு மரியாதை இருந்தது.  ஏனென்றால், அந்தக்காலம் ஆங்கிலச் சூழல்தானே. ஆகவே அந்த  ஆங்கில நாடகங்களில் ஈடுபடும் பொழுது அதில் ஒரு  ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பயிற்சிமுறை அங்கு இருந்தது. அதை  எங்களுடைய தமிழ் நாடகங்களில் புகுத்தவேண்டும் என்று நான்  கருதினேன். ஆனால், எல்லாவற்றையும் மிஞ்சி எங்களுடைய  நாட்டுக்கூத்துக்கள், அவற்றுள் உள்ள செழுமை, அது  உடைக்கமுடியாத ஒரு அழகைக்காட்டியது. ஆனால், நான்  வளர்ந்துகொண்டிருக்கும்போது, முழு இரவு நாடகங்களைக் காணத்  தொடர்ந்து எவ்வளவு காலம் மக்கள் வருவார்கள் என்ற ஐயம்  என்னுள் எழுந்தது. ஆகவே, அவற்றைச் சுருக்கவேண்டும் என்று நான் எண்ணியபொழுது சின்னச் சின்னக் காட்சிகளாக அமைக்கவேண்டும்  என்று விரும்பிய பொழுது, பேராசிரியர் சரத் சந்திர என்ற சிங்கள  நாடகாசிரியரும், தமிழ்ப் பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன்  அவர்களும் நாட்டுக்கூத்துக்களை ஒரு புதுமெருகோடு தரத்  தொடங்கியிருந்தார்கள். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட நேரடி  அறிமுகம், அவர்களுடைய ஆதரவு, நட்பு இவைகளெல்லாம்  என்னுடைய முயற்சியில் என்னை ஊக்கப்படுத்தின.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது. அங்கே  Dramsoc என்ற ஆங்கில நாடகக்குழு ஒன்று இருந்தது. பேராசிரியர்  அஷ்லி ஹல்ப்பே ஆதரவில் அது இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே  சென்று உடனடியாக அதில் இணைந்துகொண்டேன். பேராசிரியர்  வித்தியானந்தன், அந்த அமைப்பில் - Dramsocஇல் - நான் நன்றாகப்  பயிலவேண்டும் என்பதில் மிக அக்கறையாக இருந்தார். அவர் தமிழ்  நாடகங்களை, தமிழ் நாட்டுக்கூத்து முயற்சிகளைத் தொடங்கியபோது  நான் அதிலும் இணைந்துகொள்ளவே விரும்பினேன்.

ஆனால், அவர் என்னைக் கண்டதும் கூப்பிட்டு, 'கிளம்பு, ஓடு, இங்க  இருக்காத, Dramsocஇல் போய் இரு. ஏன் என்றால், நீ இங்கையும்  வந்து அங்கையும் வந்தால் படிப்பைக் கைவிட்டு விடுவாய், ஆகவே,  அதை அங்கே நேர்த்தியாகக் கற்றுக்கொள். பின்னொரு காலத்திலே நீ தமிழ் நாடகங்களில் ஈடுபடலாம்' என்றார். அந்த நேரம் அவர் எனக்கு  வழிகாட்டி, படிப்பிலும் நாடகத்திலும் ஈடுபடத் தூண்டியது என்  வாழ்நாள் முழுவதும் அப்படியானதொரு கொள்கையை  நாடகத்துக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகக் கடமைக்கும்  பிரித்துப் பிரித்து ஒதுக்கக்கூடியதாக இருந்தது.

நான் கொழும்பு வந்தபின் எனக்கு முழுமுதல் வழிகாட்டியான  'ஏர்னஸ்ற் மக்கின் ரைர்' அவர்களிடம் கற்கத்தொடங்கினேன். அவர்  லயனல்வெனற் தியெட்டரில் ஒரு முக்கிய பங்கை வகித்தார். அந்தத்  தியெட்டரின் ஆளுமை முழுவதும் அவரிடம்தான் இருந்தது.  அவருடைய ஆளுமைக்கும் கட்டுப்பட்டேதான் ஆங்கில நாடகம்  அங்கே வளர்ந்தது. அந்த ஆங்கில நாடகப் பயிற்சிகளில்  கற்றவர்கள்தான் சிங்கள நாடகங்களையும் சிறப்பாகச்  செய்யத்தொடங்கினார்கள். இப்படி மக்கின் ரைர் வழியாக சிங்கள,  தமிழ் நாடகங்கள் மேடையேற்றலைக் கற்றுக்கொண்டேன். அவரிடம்  நீண்டகாலம் கற்ற ஒரு மாணவன் நான். அதேபோல இன்று  ஐராங்கினி சேரசிங்ஹ. அவர்களிடமிருந்து உளப்பயிற்சி, உடற்பயிற்சி  நாடகப்பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்க முடிந்தது. இவற்றைக்  கற்றுக்கொண்டிருந்த நான், இந்த நவீன நாடகத்தை எப்படித் தமிழ்ப்  பகுதிக்கு கொண்டுவர முடிந்தது என்பதைக் கூறவேண்டும்,

நான் கொழும்பில் இருந்து ஒவ்வொரு கிறிஸ்மஸ் விடுமுறைக்கும்  வீட்டுக்கு போவது வழக்கம். அப்பொழுது அங்கே, நான் கொழும்பில்  என்னென்ன நாடகங்கள் தயாரித்திருந்தேன். என்னென்ன நாடக  முயற்சியில் ஈடுபட்டேன் என்பது பற்றி என்னுடைய அம்மாவிற்கு  விளக்கமாகக் கூறுவேன். சமையற்கட்டில் இருந்து அம்மாவிற்கு நான் அதைக்கூறிக் கொண்டிருக்கும்பொழுது அம்மா  சமைத்துக்கொண்டிருப்பா. அம்மா ஒரு தடவை கேட்டா, 'சரி, நீ  போடுகிற நாடகங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுகிறவர்களுக்குப்  புரியும். என்னைப் போன்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய  நாடகங்களை எப்போது போடப் போகிறாய்' என்று. அது எனக்கு  சுருக்கென்று தைத்தது. கொழும்பு திரும்பியபின் இதை நான்  ஏர்னஸ்ற் மக்கின் ரைரிடம் கூறினேன். அவர் கேட்டுச் சிரித்துவிட்டு,  பிறகு ஒருநாள்  கூட்டம் ஒன்று வைத்தார். அந்தக் கூட்டத்தில்  சொன்னார்: 'இனிமேல் ஆங்கில நாடகங்களை நான் இங்கே வைத்துக்  கொள்கிறேன். நீங்கள் எல்லாரும் நிறையத் தேர்ச்சி  பெற்றிருக்கிறீர்கள். சிங்களப் பிரிவினர் சிங்கள நாடகங்களைச்  செய்யுங்கள், தமிழ்ப் பிரிவினர் தமிழ் நாடகங்களைச் செய்யுங்கள்.  ஆங்கில நாடகங்களில் உங்கள் பங்களிப்பு எனக்குத்  தேவைப்படும்பொழுது உங்களைக் கூப்பிடுகிறேன்' என்றார்.  அப்போதுதான் முதற் தடவையாக அங்கிருந்து பிரிந்து, தமிழ்  நாடகங்கள் செய்யவேண்டும் என்ற ஒரு தேடலில் ஈடுபட்டேன்.  அப்பொழுது திருகோணமலை வழக்கறிஞர் க.சிவபாலன் அவருடைய  நண்பர் வழக்கறிஞர் சச்சிதானந்தன், முத்துலிங்கம் இப்படியானவர்கள் சேர்ந்து நாங்கள் 'நாடோடிகள்" என்றதொரு அமைப்பை  உருவாக்கினோம். நாடகம் போடுவதற்கு நாடகப் பிரதித் தேடுதலில்  ஈடுபட்டோம். ஒரு நேர்த்தியான நாடகக் கற்கைநெறியோடு நான்  இருந்தபடியால், எங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கத் தகவல் நிலையம், ஜேர்மன் கலாசார நிலையம் இங்கிருந்தெல்லாம்கூட  பயிற்சியாளர்கள் வந்து பயிற்சிகளை அளித்தனர். இவர்கள் மூலம்  நவீன நாடகங்கள் குறிப்பாக ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த  அன்றைய நாடகங்களை கற்கைநெறியோடு முழுமையாகக்  கற்ககூடியதாக இருந்தது. ஒரு துணிச்சல் வந்தது. அதோடு தமிழ்  நாடக முயற்சிகளில் இறங்கினோம். அப்போதுதான் க.சிவபாலன்  போன்றோருடைய துணையோடு நாங்கள் முதலில் 'கோடை'  நாடகத்தைத் தயாரித்தோம்.



     இதுவரை:  24784134 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5071 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com