அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow தாசீசியஸ் நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 3 of 8

கானா பிரபா: மஹாகவியினுடைய கோடை மற்றும் புதியதொரு வீடு போன்ற நாடகங்களை, அதாவது அந்தப் பிரதிகளை நாடக  வடிவமாக்கியிருக்கின்றீர்கள் நீங்கள். அப்படி நாடக  வடிவமாக்கும்பொழுது அதிலே எவ்விதமான மாற்றங்கள்  செய்யப்பட்டன அல்லது எவ்வாறு நீங்கள் மேடையேற்றத்திற்கு  கொண்டுசென்றீர்கள்?

தாசீசியஸ்: கோடை, வானொலிக்கென்று மஹாகவி எழுதிய நாடகம்.  அந்த நாடகத்தை நான் தயாரிப்பதற்காக எடுத்தபொழுது மஹாகவி  மன்னாரில் மாவட்ட காணி அதிகாரியாக  பணியாற்றிக்கொண்டிருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில்  அவ்வளவாகத் தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. என்றாலும், அந்த  நாடக்தைத் தயாரிக்க முற்பட்டபொழுது அதில் எந்தவிதமான  மாற்றத்தையும் கொண்டுவர நான் விரும்பவில்லை. காரணம்  மஹாகவி ஒரு பெரிய கவிஞன். அந்தக் கவிஞனுடைய கவிதையை  நான் ஊறுபடாத வகையில் தயாரிக்கவேண்டும். ஆதலால்  கோடையை நான் தயாரிக்கப் போகின்றேன் என்று அவருக்குக் ஒரு  கடிதம் எழுதினேன்.  அவர் சொன்னார் 'சரி, நீங்கள் தயாரிக்கத்  தொடங்குங்கள். தயாரிப்பின் நடுவில் நான் வந்து பார்க்கின்றேன்.  அதுவரையும் நான் வரவில்லை. ஏனென்றால், இதைத் தயாரிக்க  முற்பட்டவர்கள் பலர் இடையிலே கைவிட்டுவிட்டார்கள். நீங்கள்  நாலாவதோ ஐந்தாவதோ ஆள்' என்று எனக்குக் கூறியிருந்தார்.  நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால், அதை மிகக் கவனமாக எடுத்து மேடைப்படுத்தினேனேயொழிய அதில் நான் எந்தவொரு  மாற்றத்தையும் செய்யவில்லை. எழுத்தில் எந்தவிதமான  மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், நான் அந்த நாடகத்தைத்  தயாரிப்பதற்கு ஆறு மாதங்கள் ஆயின.

மூன்றாவது மாதத்தில் மஹாகவி வந்து பார்த்தார். பிரதியின்படி ஒரு  நாள் காலை தொடங்கி மறுநாள் காலை முடிவடையும் அந்த  நாடகத்தில் எங்கள் மேடை முயற்சி பற்றி அவருக்கும் சில  ஐயப்பாடுகள் இருந்தன. ஏனென்றால் நான் கவிதையைக் கையாண்ட  விதம். ஆனால், ஒரு அரைமணி நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  எமது கையாளல் முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அந்த  நாடகத்தை நாங்கள் மேடை ஏற்றிய பொழுது ஒரு காத்திரமான  பார்வையாளர்கள் அங்கே வந்திருந்தார்கள். கவிதை நாடகம்  என்றபடியால் கவிஞர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாடகம்  முடிந்த பிற்பாடு சில வினாக்களை அவர்கள் என்னிடம்  தொடுத்தார்கள். கைலாசபதி கூட அங்கேயிருந்தார். என்னுடைய  வளர்ச்சிக்கு கைலாசபதியின் உறவு ஒரு பெரிய பங்களிப்பு என்றே  நான் கூறுவேன். அவர் முன்னிலையில் பல கவிஞர்கள் பேசும்போது  கேட்டார்கள். நீங்கள் கவிதையை ஊறுபடுத்திவிட்டீர்கள். கவிதை  கவிதையாக வரவில்லை. அதாவது நாடகம் தொடங்குவதே  இப்படித்தான்: 'தம்பி எழும்பு தலையைப் பார். பற்றையாய் செம்பட்டை பற்றிக்கிடக்கு. போய்ச்சீவையா, கொப்பர் வெளிக்கெழுந்து போன  பொழுது முதல் இப்படியே சும்மா இதையேன் அடிக்கிறாய்."  என்றுதான் தொடங்குகின்றது. அந்த நாடகக்தில் நான் பழக்கியிருந்த  முதல் கூற்று பேச்சோசையில் இப்படித்தான் அமைந்திருந்தது.  ஆனால் அதைக் கவிதையில் சொல்வதாகயிருந்தால்  வேறுவிதமாகத்தான் சொல்லவேண்டும். முழுக்க முழுக்க அகவலில்  எழுதப்பட்ட நாடகம் அது. அதை நாங்கள் கவிதையாகப் பேசுவதாக  இருந்தால் பேச்சோட்டம் குறைந்துவிடும். நாடகம் என்பது ஓர்  இலக்கண, இலக்கிய இரைச்சலாக இருந்தால் அந்த நாடகத்தைப்  பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதோடு யாழ்ப்பாணப் பேச்சு,  பேச்சுவழக்கு ஒரு செப்பநோக்கு. அது அகவலிலேதான் அமைந்து  இருக்கிறது. ஆகவேதான் நீங்கள் எங்கே எடுத்துப் பார்த்தாலும்  யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு அப்படியே இருப்பதை நீங்கள் காணலாம்.  அந்த அழகை நாங்கள் நாடகம் என்ற பெயரால், அல்லது  நவீனத்துவம் என்ற பெயரால் அல்லது கவிதையென்ற பெயரால்  கெடுக்க முடியாது. அதாவது கவிதை, இணைந்தோடியிருக்கிற  ஓசைதான் பேச்சு. அதை நாங்கள் மறந்து விடுகின்றோம்.  படிச்சவுடனே நாங்கள் நினைக்கின்றோம் அதற்கென்று ஒரு அழகைக் கொடுக்கவேண்டும். அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று. சாமி  எங்களுடைய மனதிலதான் இருக்கிறார். சமயம் எங்களுடைய  வாழ்க்கையிலதான் இருக்குது. அது போன்று கோயில்களுக்குள்ள  நாங்கள் குட்டி குட்டி சடங்குகளோட ஒட்டினவுடனே அது ஒரு  பிரமிப்பைத்தான் தருது. அது அன்பை அல்லது நேசத்தைத்  தரவில்லை. அப்பிடித்தான் நான் பார்க்கிறன். ஆனபடியால் நான் அதை அப்படியே தரலாம் என்று நினைத்தேன். அங்கு பல கவிஞர்கள்  அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்ப  கைலாசபதியவர்கள் கேட்டார். தம்பி ஒரு உதாரணம் சொல்லடா நீ  ஆங்கிலத்திலும் கற்றுவந்தனி அப்படியென்று. நான் உடனடியாக  சேக்ஸ்பியரில் இருந்து ஒரு உதாரணத்தைச் சொன்னேன். எப்படி  லோறன்ஸ் ஒலிவியர் என்கிற அந்த நாடக வல்லுனர், பெரும் நடிகர்  சேக்ஸ்பியரின் வசனத்தை எவ்வாறு சாதாரண மொழியாக அதை  மாற்றி அமைத்தார் என்று. உதாரணமாக அது முன்பெல்லாம் To be  or not to be   என்ற மாதிரிக் கேட்டார். ஆனால் அவர் வந்து அதை  உடனடியாய் இப்படி மாற்றினார். சாதாரணமாக அங்க கவிதையில்  இருக்கிற எழுத்து கூறுபடவில்லை. அது பேச்சோசையாக மாறியது.  இலக்கணச்சிதைவு இல்லை. சொற்சிதைவு இல்லை. எழுத்துச் சிதைவு இல்லை. நாடகம் அப்படித்தான் வரவேணும். நாடு, அகம் இரண்டும்  சேர்ந்தது நாடகம் என்பார் பேராசிரியர் வித்தியானந்தன். உள்ளதை  அப்படியே பிரதிபலிப்பது. அதன் உள்ளத்தை அப்படியே பிரதிபலிப்பது.  அதுதான் நாடக வசனமாய் இருக்கவேண்டும். எங்களுடைய கோடை  வெற்றியாக அமைந்தது. அதுவே உடனடியாக இளைய பல  கவிஞர்கள் கவிதை நாடகங்களை எழுதுவதற்கு ஒரு  தூண்டுகோலாகவும் அமைந்தது.

அடுத்தது புதியதொரு வீடு பற்றிக் கேட்டீர்கள். புதியதொரு வீடு  எழுதும் போது  அங்கே மஹாகவி முதலில் வெறும் உரையாடலை  மட்டும்தான் எழுதியிருந்தார். அந்த உரையாடலை நாங்கள் தனியே  கடற்கரை பகைப்புலத்தில் மட்டுமல்ல எந்த பகைப்புலத்திலும்  வைத்து பார்க்கக்கூடிய நாடகமாக அது இருந்தது. ஆனால் மீனவ  கிரமத்துச் சூழலை வைத்து அவர் எழுதியிருந்ததால், அந்த மீனவச்  சூழலை அழகாக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நான் பல  தடவை நான் அவரிடம் சென்று அவரோட உட்கார்ந்து உரையாடி  இருக்கிறேன். புதியதொரு வீடு தயாரிக்கும் பொழுது அவர் உதவி  அரசாங்க அதிபராக மட்டக்களப்பில் இருந்தார். அதற்காக நான்  இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டியிருந்தது. அவரும்  என்னிடம் இரண்டு மூன்று தடவைகள் வந்தார். அந்த நாடகத்தை  கொஞ்சம் நீட்டியெழுதி, அவரிடம் நான் பேசிவிட்டு வந்துவிட்டால்  அடுத்த வாரமே அவருடைய எழுத்துக்கள் என்னிடம் வந்துவிடும்.  ஆனபடியால் இரண்டு நாடகங்களிலும்  ஒரு சொல்லைக்கூட  மாத்தவில்லை. எல்லாமே மகாகவியினுடையவை. புதியதொரு வீடு  தயாரித்து முடித்ததன் பின்னர் சில விமர்சகர்கள் ஒரு துன்பம்  தரக்கூடியதொன்றைக் கூறினார்கள். அதாவது இந்த நாடகத்தின்  வெற்றிக்கு பாதிப் பங்கு மஹாகவிக்கென்றால் பாதி பங்கு  தார்சீசியசுக்கென்று. அவருடைய உட்புகுத்தல்கள் வெற்றியை  கொண்டு வந்தது என்று. நான் அதில் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு  நாடகாசிரியன் ஒரு கதாசிரியனைப் படிக்காமல் அவனுடைய  ஆத்மாவை உணராமல் எதையும் செய்ய இயலாது. நான் அவனுடைய ஆத்துமாவைப் புரிந்து கொண்டு எழுத்துருவில் உள்ள  உயிரோட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வடிவம்  கொடுத்தேன் அவ்வளவுதான். அதைத்தான் ஒரு நாடக நெறியாளன்  செய்யலாம் செய்ய வேண்டும். ஒரு நாடக ஆசிரியனுடைய  மூலத்தில் அவனுடைய பிரதியில் கை வைக்கும்போது அது ஒரு  அடக்குமுறை என்றுதான் எனக்குப் படுகின்றது. அதே நேரத்தில் ஒரு  நெறியாளனுக்கு திறமையில்லை என்பதையும் காட்டுகின்றது.  ஆனபடியால் அந்த இரண்டு நாடகங்களும் என்னுடைய தனிப்பட்ட  வளர்ச்சிக்கு ஒரு பெரிய படிக்கல்லாக அமைந்தது. அதே நேரத்தில்  எனக்கு நிறையக் கற்றும் தந்தது. சொற்செறிவாக, அர்த்தமுள்ளதாக  நாடகங்களை இயக்குவதற்கும், என்னுடைய வாழ்நாள் முழுவதும்  நாடகங்களில் நான் கவனமாக இருப்பதற்கும் எனக்கு உதவி  புரிந்தவை இந்த இரண்டு நாடகங்கள், என்றுதான் நான் கூறுவேன்.  நவீனத்துவம் எனும் பொழுது அதாவது ஒரு பார்வையாளனுக்கு  அவனது கவனத்தைக் குறைக்கும் வகையில் அல்லது குலைக்கும்  வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நவீனத்துவம். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் புதிதாக எதனையும்  வானத்தில் இருந்து கொண்டு வருவதில்லை. நேர்த்தியாக, சத்தியமாக மன சுத்தத்தோடு அதைச் செய்யும் போது அது நவீனத்துவம்  பெறுகிறது. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.



மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 04:47
TamilNet
HASH(0x56428e0941b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 04:51


புதினம்
Sat, 20 Apr 2024 04:51
















     இதுவரை:  24784471 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5159 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com