அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கலாவண்ணன் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கலாவண்ணன்  
Tuesday, 05 June 2007

01.


உள்ளழிதல்
 
என்னருகில்
ஆசைகள் அவிழ
விரிந்து கிடந்தாள் அழகி
உணர்ச்சிகளால்
சிவப்பேறிய
அவளின் விழிகளிலிருந்து
தீ வழிந்தது.
நெருப்பை அணைத்தலுக்கான
எந்தக் கருவியுமற்ற
நிராயுதபாணியாய்
அருகிருந்தேன் நான்
நிரந்தரமாய்
விடைபெறுமுன்
சிறு கேவலுடன் விசும்பும்
ஒரு ஆத்மாவின்
அந்தரிப்பாய்
அவள் விழிகள் யாசிக்கின்றன
என்னோடுடனான
நெருக்கத்தை

தோழியே
திசை யெட்டும் படர்ந்திருந்த
சிந்தனைகள்
பலாத்காரமாய் அறுக்கப்பட்டு
ஓரிடத்தில்
குவிக்கப்பட்டுள்ளன
இனிமேல்
அவை செல்ல வேண்டிய
பாதையும்
தூரமும் நம்முன்
வரைபடமாய் வைக்கப்பட்டுள்ளது.
அவை சுட்டும் திசைவழி
நீ செல்ல வேண்டும்.
யாரேனும் ஒருவர்
சென்றே ஆக வேண்டும்.
இல்லை-நான் செல்ல வேண்டும்.
யாரேனும் ஒருவர்
சென்றே ஆக வேண்டும்.
அது வரை
உன் புன்னகை
மயக்கும் பார்வை,
என் அருகாமை என்பவற்றை
தவிர்த்துக் கொள்
 
ஒரு மழையில் நனைந்த
தீப்பெட்டியின்
எந்த மூலையிலிருந்தும்
ஒரு போதும்
தோன்றாது நெருப்பு.

 

 

02.


புரிதல் பற்றிய தவறுகள்
 
 
உன் மீதான என்
உயிர்ப்பான காதலை
எப்போதும் நீ
தவறாகவே புரிந்து கொண்டுள்ளாய்
உன்னை அணுகுதல் பற்றிய
என் ஒவ்வொரு முயற்சிக்கும்
நீ கற்பித்த
அர்த்தங்களும் தவறானவை
 
உண்மையான காதலை 
உறுதிப்படுத்த
என்னிடமிருந்து
எந்த ஆதாரத்தை நீ
எதிர்பார்க்கிறாய்
எங்கிருந்து தொடங்கினாலும்
முடிவில்
உன்னிடமே வந்து நீளும்
நினைவுகளை
நான் என்ன செய்யலாம்
நீயே சொல்
 
அவ்வப்போது
நான் கண்ட கனாக்களையும்
வர்ணங்களையும்
எப்ப்டி நிரற்படுத்தலாம்
 
அழகிய நிறத்தில்
நீ கேட்கும் நிறமற்ற பூவை
நான் எங்கு பெறலாம்
என்னைப்புரிந்து கொள்வதற்கான
உன் வினாக்களின்
தவறுகளை
நீயே தெரிந்து கொள்ளும்
ஒரு பொழுதில்
நான் மீண்டும் வருவேன்
உன்னிடம்.
 
 
 03.


பிரிவு வலி உணர்தல்
 
 
பிரிவு வலியில் தவித்தல்
பற்றி
நீ என்ன அறிந்திருக்கிறாய்
புலரும் பொழுதில்
ஒரு மல்லிகையின் வாசம்
சுமந்து வரும் இளந்தென்றலையும்
விழுங்க முடியாதபடி
தொண்டையில் சிககும்
விரக தாபம் பற்றி
உனக்கு என்ன தெரியம்
நீ அவ்வப்போது
சிந்திச்சென்ற
புன்னகைப் பூக்களின்
நிறங்களுடனும்
வாசனைகளுடனும்
எப்படித்தான் நான்
காலவெளி கடத்துவது.
 
கடலோர மணற்பரப்பில்
அந்திப்பொழுதொன்றில்
பிணைக்கப்பட்டிருந்த
நம் கைகளை
மேலும் இறுக்கியபடி
உன் உதட்டோரம் நீ பரப்பிய
செந்நிறப் பூக்களில்
ஆயிரம் வண்டுகளாய் மூழ்கிய
என் விழிச்சிறகுகளை
நான் எங்குலர்த்துவது
 
அந்தப் பொழுதில்
நீ விட்டுச் சென்ற
நினைவுகளின் சிதறல்களை
ஒவ்வொன்றாய்ச் சேகரித்து
எப்படி நான் அசை போடுவது
 
உன் விழிகள் பேசிய 
சத்தமற்ற ஒலிக்குறிப்புகளால்
உருவாக்கப்பட்ட உருவமற்ற கவிதைகளை
எப்படி நான்
வாசிப்புக்குள்ளாக்கலாம்
உன் உதடு பேசாத மொழிகளுக்கு
கற்பனையில் உருக்கொடுத்து
பல வர்ணங்கள் தடவி
வான வெளியில்
பறக்க விட்டுள்ளேன்
என் பற்றிய
அந்த நாள் ஞாபகங்களில்
ஒன்றேனும்
எப்போதாவது
உனக்கு  நினைவில் வந்தால்
சற்றே தலை நிமிர்த்திப் பார்
 
மறைதலுக்கும்
ஒளிர்தலுக்குமிடையில்
என்னைப்போலவே
அலமந்து கொண்டிருக்கும்
வானவில்.

 

 

04.

கனவுகளின் தரிப்பிடம்
 
 
கனவுக்குள்
நாற்றமெடுத்து எரிகிறது
உன் கரிய நெடுங்கூந்தல்
இப்போதும் மூக்கைக் கரிக்கிறது
உன் விருப்புக்குரிய
ஆடையின்
தீய்ந்த நெடி
உன் மார்பு கிழிந்தொழுகிய
சிவப்பு உதிரத்தால்
நனைந்து போயுள்ளது
நமது கட்டில்
எங்கோ காற்றிழுத்துச் செல்லும்
உன் நினைவுகளோடு
பயங்கரமாய்
மோதுகின்றன
மரங்களின் தலைகள்
அப்போதும் வாயடைத்து நிற்கிறது
மௌனம்
இப்படித்தான்
எங்கள் கனவுகள் கூட
அலைகின்றன
தமக்கென ஒரு இருப்பிடமற்று..
 
 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24771970 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1584 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com