அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 13 June 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 36 arrow விடுதலையின் விரிதளங்கள் - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விடுதலையின் விரிதளங்கள் - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி  
Saturday, 16 June 2007

விடுதலையின் விரிதளங்களும்,
வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 03

வாசிப்பில், வாசகனுக்கும் அந்த நூலைப் படைத்த படைப்பாளிக்கும்  மத்தியில் ஒரு விசித்திரமான உறவு நிகழ்கிறது. அகவயமான ஒரு  சங்கமம் நிகழ்கிறது. படைப்பாளியின் எழுத்துலகில், அவனது  கருத்துலகில், அவனது அனுபவக் களத்தில் பிரவேசிக்கும் வாசகன்  படைப்பாளியுடன் இணைந்து ஒரு தேடுதலை நடத்துகிறான். ஒரு  விசாரணையை நடத்துகிறான். அந்தத் தேடுதலில், அந்த  விசாரணையில், படைப்பாளியின் தரிசனத்தை வாசகன் தரிசித்துக்  கொள்கிறான். அவனது பார்வை இவனைப் பற்றிக் கொள்கிறது.  கருத்துக்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் விந்தை நிகழ்கிறது.
-"விடுதலை" யில் அன்ரன் பாலசிங்கம் (பக்கம் 86, 87)

01.

எனது நீண்ட சுய வரலாற்று நூலில் மிக எளிமையான முறையில்  எழுதப்பட்டுள்ள பகுதி அன்ரன் பாலசிங்கம் அவர்களது "விடுதலை"  நூல் குறித்த எனது அனுபவப் பகிர்வுகள்தான். மனித வாழ்வு பற்றிய,  மனிதவிடுதலை பற்றிய, மனித வரலாறு பற்றிய மிகவும் கனமான,  பூடகமான, சிக்கலான விடயங்களை ஒரு வித சிக்கலான  மொழியிலேயே உலக வரலாற்றாளர்களும் கோட்பாட்டாளர்களும்  எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். சாதாரண மனித மனத்தை அவற்றுடன் நெருங்கவிடாமல் தடுப்பதே இத்தகைய மொழிதான்.  ஆனால் "விடுதலையில்" அன்ரன் பாலசிங்கம் அதை  எளிமைப்படுத்தியிருக்கிற அழகு குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய  ஒன்று. தமிழ்ச்சூழலில் அதன் முக்கியத்துவம் உணரப்படுவதும்  இதையொட்டித்தான்.

யாரேனும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி  மனதை ஒருநிலைப்படுத்தி  விடுதலையை வாசிப்புக்குட்படுத்தினால் மிகச்சுலபமாக விடுதலை  பேசும் தத்துவ உலகத்தைத் தரிசிக்கலாம்.

எனது தத்துவங்கள், இலக்கியங்கள் தொடர்பான அறிமுகத்திற்கு ஒரு சிறிய வரலாறு இருக்கிறது. 1998 இன் முற்பகுதி இங்கிலாந்தின்  மன்செஸ்ரர் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் ((micro biology)  பீடத்தில் சேர்ந்திருந்தேன். அந்த வருடத்தின் இறுதியிலேயே விதி  வேறு விதமாக விளையாடி பாரிஸ் நகரத்திற்குத்  தூக்கியெறியப்பட்டது வேறு ஒரு தனிக்கதை. இப்போது மட்டும்  என்னவாம் எந்த நேரத்திலும் பாரிஸ் நகரிலிருந்து உங்கள்  நகரங்களில் ஏதேனும் ஒன்றில் வந்து விழுவதற்கான எல்லா  அறிகுறிகளும் தென்படுகின்றன. கவனம், ஏனெனில் எனது மனைவி  அடிக்கடி சொல்வாள் " அப்பா, நீங்கள் ஒரு இனிமையான இம்சை"  என்று.

எனது முழுத் தெரிவும் விருப்பும்  எனது சொந்த ஊர்தான். ஆனால்  சிலரது செய்கைகள் எனது ஊரையே எனக்கு அடையாளம்  தெரியாததாக்கி விட்டது.  அது முன்பின் தெரியாத ஒன்று போலவும்  குழப்பங்கள் நிறைந்த பொருளற்ற ஒரு சூனியமாகவும் ஊர் பற்றிய  எனது புரிதல் மாறியிருக்கிறது.

ஊரிலிருந்து நேரடியாக வந்தவுடனேயே  மன்செஸ்ரர்  பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த படியால் அங்கு ஆங்கிலத்தில்  கல்வியைத் தொடர்வதில் ஒரு வித அச்சம் மனதில் எழுந்திருந்தது.  எனது "மீடியம் சைஸ்" ஆங்கில அறிவுதான் இவ்வச்சத்திற்குக்  காரணம். போதாதற்கு எனது ஒரு பேராசிரியர் ஐரிஸ்காரர்.  ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே இவர் வகுப்புக்குள் நுழையும்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில்  "வந்துட்டான்யா!" என்று கோரஸாகக் குரல் கொடுப்பார்கள்.  அந்தளவிற்கு அவரது ஆங்கிலம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்  தொங்கும். எனது நிலையைக் கேட்கவா வேண்டும்!

எனவே ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எனது பல்கலைக்கழக  விடுதித் தோழன் ஒருவனுடன் ஆங்கில அறிவை விருத்தி செய்வது  குறித்து உரையாடியபோது கிடைத்ததுதான் எனது உலக தத்துவ  இலக்கிய அறிமுகங்கள்.

ஒரு நாள் அவன் ஒரு  புத்தகத்தை தந்து இதைப்படி என்றான்.  ஆர்வத்துடன் வாங்கி படித்தேன், மன்னிக்கவும் பார்த்தேன். ஏனெனில்  ஒரு பந்தியைக்கூட ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. வசனங்கள்  உடைந்தும் முறிந்தும் ஆங்காங்கு தொங்கின. நான்  அதிமேதாவித்தனமாக "ஆங்கிலத்தில் போதிய அறிவில்லாதவர்  எழுதியதோ" என்று கேட்டேன்.

அவன் மன்செஸ்ரர் நகரமே அதிரும்படி விழுந்து விழுந்து சிரித்தான்.  இறுதியில் அவன் கூறினான்.    "உன்னிடம் இதை எதிர்பார்த்துத்தான்  அதைத் தந்தேன். நீ என்னை ஏமாற்றவில்லை". எனக்கு  தூக்கிவாரிப்போட்டது. திருப்பி மீண்டும் வாசித்தேன். எனக்கு  புத்தகத்திலிருந்து மீண்டும் கிடைத்தது  அதே அனுபவம்தான். 

எனது நிலையை உணர்ந்து அவன் கூறினான் "உன் கையிலுள்ளது  1992 ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற கப்ரியேல்  கார்ஸியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marghez)என்ற எழுத்தாளர்  எழுதிய "one hundred years of solitude" என்பது உனக்குத்  தெரியுமா?"

எனக்கு ஆச்சர்யம் பிடிபடவில்லை. இது என்ன கோமாளித்தனமாக  இருக்கிறது என்ற நினைப்புடன் அந்த வார விடுமுறையில் அந்த  நூலுடன் கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நிகழ்த்தினேன். ஆனால்  கிடைத்தது ஏமாற்றம்தான். ஆனால் அதை வாசிக்கும் ஒவ்வொரு  தருணத்திலும் ஏதோ ஒரு மாயத்தன்மையை மனதில் உணர்ந்தேன்.

"விடுதலை"யைத் தரிசித்ததன் பின்னாளில்தான் உணர்ந்து  கொண்டேன் மிகையதார்த்தம் (magical realism) என்னும் கனவாக,  புனைவாக, மயங்க எத்தனிக்கும் ஒரு கொடுரமான யதார்த்தத்தை  திரிபுகளற்று யாவும் ஒரு காலத்தில் மறுக்க இயலாத கற்பனையுடன் அதேசமயம் பரவசத்துடன் முன்வைக்கும் எழுத்துக்கள் அவை  என்று.

இன்று எனது வாழ்க்கையே இத்தகைய மிகையதார்த்தம் சார்ந்துதான்  இயங்குகிறது. நினைவுகளுடன் வாழும் கலை அது. கனவுகளையும்  கற்பனைகளையும் நிறைவேறாத ஆசைகளையும் மனதில் வடித்து  அதற்கு உயிர் கொடுத்து உருக்கொடுத்து வாழும் ஒரு பரவசநிலை  அது. ஞானிகளுக்கும் துறவிகளுக்குமே சாத்தியமான ஒரு நிலையை  சாதாரண மனித மனம் வரை நகர்த்தும் படைப்பிலக்கியம் அது.

ஏன் நான் பாரிஸ் நகரின் கோடைச் சூரியனை  குளிர்காலத் தேவைக்காக பிடித்து என் அறையில் அடைத்து  வைத்திருப்பதும், என்னிடம் கார் இல்லாத காரணத்தால் பாரிஸ்  நகரின் தெருக்களில் படகோட்டித் திரிவதும் என்ன வகையானது  என்று நீங்கள் நினைக்கிறீர்கள். (இரகசியமாகச் எனக்கு மட்டும்  சொல்லுங்கள் பைத்தியம் என்றுதானே....) இதுதான் magical realism.

1998 இல் என்னவென்றே புரியாத ஒன்றை தனது "விடுதலை" நூலை வாசிக்க வைத்ததனூடாக அதன் பல கனபரிமாணங்களையும்  உணரவைத்தது மட்டுமல்லாமல் அத்தகைய எழுத்தை என்னை எழுத வைத்தவரும் அன்ரன்பாலசிங்கம் அவர்கள்.

அத்துடன் மிக மிக முக்கியமான விடயம் என்னவெனில் உலக  தத்துவ நூல்கள் பெரும்பாலானவை மொழிபெயர்ப்பில் எமக்குக்  கிடைக்காது. கிடைத்தாலும் அந்த மொழிபெயர்ப்புகளில் நேர்மை  இருக்காது. ஏனெனில் பெரும்பாலான தத்துவ நூல்களின் முலம்  பிரெஞ்சு, ஸ்பானிய, ருஸ்ய, டொச் மொழிகளில்த்தான்  எழுதப்பட்டுள்ளன. அவை பின்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பின்பு தமிழுக்கு வரும் போது அவரவர்களின் அரசியல் சார்ந்து  மூலம் சிதைந்து விடும் அபாயம் இருக்கிறது. அத்தோடு மிக  முக்கியமானது சரியான விளக்கமோ விபரணமோ  செய்யப்படுவதில்லை. படித்தால் படி, இல்லாவிட்டால் போ என்ற  அசட்டுத்தனமும் மமதையும்தான் தென்படுகின்றன.

மொழிபெயர்ப்பு என்பதே அரசியல்தான் என்று சொல்லப்படும் ஒரு  சூழலில் நாம் வாழ்கிறோம். உதாரணத்திற்கு இருபதாம் நூற்றாண்டின்  மாபெரும் கவிஞர் எனப்போற்றப்படும் பப்லோ நெருடா (Pablo  Neruda) வின் ஒரு கவிதைக்கு தமிழிலேயே எனக்குத் தெரிந்து  குறைந்தது 20 மொழிபெயர்ப்புக்கள் இருக்கின்றன. போதாதற்கு நான்  வேறு எனது மனைவி எனது அவள் மீதான அன்பையும் காதலையும் சந்தேகித்தபோது "ரஜி நான் உன்னைக் கைவிடவும் இல்லை,  பிரியவும் இல்லை" என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்து அவளுக்கு  அனுப்பினேன்.

இங்கு எனது அன்பை வெளிப்படுத்த எனக்கு பப்லோ நெருடா  தேவைப்பட்டிருக்கிறார். இதுதான் அரசியல்.

எனக்குத் தெரிந்த வரையில் தமிழ்ச்சூழலில் இத்தகைய குழப்பங்கள்  இல்லாமல் மூல நூல்களாயினும் மொழிபெயர்ப்பு நூல்களாயினும்  அவற்றை நெருங்கும் முறைகளையும் உள்வாங்கும் கலைகளையும்  தெளிவாக முன்வைத்த முதல் தமிழ்த்தத்துவ நூல் என்ற  பெருமையை "விடுதலை" எதவித அலட்டலுமின்றித் தட்டிச்  செல்கிறது.

அத்துடன் எல்லா நூல்களிற்கும் ஒரு மூல நூலாய் - அகராதியாய்  விளங்கும் ஒரு தனிப் பண்பை "விடுதலை" தன்னகத்தே  கொண்டுள்ளதை அதை நெருங்கிச் செல்லும் ஒவ்வொருவரும்  தெளிவாய் உணர்வார்கள்.

எனது சுயவரலாற்று நூலில் அதிகம் அடிபடும் பெயர்கள் இரண்டு  ஒன்று ழான் போல் சார்த்தர் அடுத்தது மிசேல் பூக்கோ. இவர்களை  புரிவதென்பது ஒரு புறம் இருக்கட்டும் இருவரது நூல்களையும்  படிப்பதென்பதே ஒரு தனிக்கலைதான். அந்தளவிற்கு சிக்கலான  மொழி நடையில் எழுதுபவர்கள். இவர்களது பெரும்பாலான  நூல்களை வைத்துத் தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு "விடுதலையில்" அன்ரன் பாலசிங்கம் இவர்களைப் பற்றி முன்வைத்திருக்கும்  அறிமுகம் - அது அறிமுகம் அல்ல ஒரு பெரிய சுரங்கப் பாதையைத் திறப்பதற்கான திறவுகோல் அது.

இப்போது நேரடி வாசிப்பு முடிந்து ழான் போல் சார்த்தரையும் மிசேல்  பூக்கோவையும் இடமிருந்து வலமாக வாசிப்பதற்கு முயன்று  கொண்டிருக்கிறேன். நன்றி அன்ரன் பாலசிங்கம்.

எனது தனி மனித அவலத்தினூடாக எனக்கு ஈழத்தமிழ்ச் சூழலில்  உளவியல், பண்பாடு, பெண்ணியம், விடுதலை சார்ந்த சில அறவியற்  கேள்விகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. என் தனி மனிதன்  ஒருவனின் கேள்விகள் எப்படி ஒரு இனத்தின் கேள்விகளாக  மாறுகின்றன - இருக்கின்றன  என்பதையே எனது சுய வரலாற்று  நூலினூடாக உரத்துப் பேசவிழைகிறேன். இவை ஒரு வகையில்  ஈழத்தமிழ்ச் சமுகம் தேடி அலையும் தார்மீகக் கேள்விகளாகவும்  இருக்கின்றன என்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.

இந்தக் கேள்விகளினூடாகவும் அதற்கான விடைகளினூடாகவும்  கிடைக்கப்போவது என் தனிமனித  விடுதலை அல்ல ஒட்டுமொத்த  ஈழத்தமிழ் சமூகத்தின் இருப்பும் அடையாளமும் விடுதலையுமாகும்.

ஒரு இனக்குழுமத்தின் வாழ்வியலின் இயங்கியல் போக்கில்  அடிநாதமாக விளங்குபவை அக்குழுமம் சார்ந்த உளவியலும்  பண்பாடும். இவை கேள்விக்குள்ளாகும் போது அந்த இனத்தின்-  சமுகத்தின் நேரியக்கம் எதிர்த்திசையில் பயணித்து ஒரு தளம்பலை  சந்திக்க நேரிடும். விளைவாக அதன் அசைவியக்கம் இறுகி  இயக்கமற்று முடிவில் ஒரு "தற்கொலை"யை நோக்கி தன்னைத்  தயார்ப்படுத்த தொடங்குகிறது. அத்தோடு அந்த இனம் உலக  வாழ்வியல் வரைபடத்திலிருந்து தொலைந்தும் விடுகிறது.

சாதாரண இனக்குழுமத்திற்கே இத்தகைய நிலை என்றால்,  போராடும் இனம் ஒன்றின் உளவியலும் பண்பாடும் சிதைவுறத் தொடங்குவது  எத்தகைய விளைவுகளை அந்த இனத்திற்கும் அதன்  போராட்டத்திற்கும் கொடுக்கும் என்பதை உய்ந்துணர  முடிகிறதல்லவா!

02.
அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பெண் உளவியலில்  (women psycology) ஆய்வை மேற்கொண்டிருக்கும் பிரேசில் நாட்டைச்  சேர்ந்த என் சக பல்கலைக்கழகத் தோழி ஒருத்தி ஜப்பானிய  எழுத்தாளரான கோபோ அபே ((kobo abe) யின் "friends" என்ற நாடகம் பற்றி குறிப்பிட்டு கிட்டத்தட்ட என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியை  பிரதிபலிப்பதாகத் தான் உணர்வதாகக் தெரிவித்தாள். அந்த  நாடகத்தின் மையக்கரு இதுதான்.

முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டிற்குள் எதுவித  முன்னறிவித்தலுமின்றி புகுந்து கொள்ளும் ஒரு குடும்பம் அவரைக்  கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டி வைத்துத் துன்புறுத்தி முடிவில்  அவரைக் கொலை செய்து விட்டு அதைப்பற்றிய எதுவித  குற்றவுணர்வுமின்றி அவரது வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வதுதான் கதை.

இப்படித்தான் எனக்குச் சொந்தமான, எனது அதி நேசிப்புக்குரிய, எனது வாழ்வையே அர்த்தப்படுத்திக் கொண்டிருந்த  "உயிரி" ஒன்றை  யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஒரு உளவளத்துணை நிலைய  நிர்வாகத்தினரும்,  அங்கு கடமையாற்றிய உளவியற் பேராசிரியர்  ஒருவரும், அவரது உறவினர்களும் சேர்ந்து கையகப்படுத்திக்  கொண்டார்கள்.

அவர்கள் ஒரு உண்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை........  அவர்கள் கையகப்படுத்தியது வெறும் சடம் மட்டுமே. அதன் உயிர்  என் ஆன்மாவோடு இரண்டறக் கலந்து என் வாழ்வின்  பேருண்மையாகவும் பெருவெளிச்சமாகவும் என்னைத் தொடர்ந்து  இயக்கிக் கொண்டிருப்பதையும் யாராலும் அதை என்னிலிருந்து  வேறுபடுத்திப் பிரிக்க முடியாதென்பதையும்....

எனது மன உளைச்சலினதும் மனப் பிறழ்வினதும் பெரும் பகுதியை  அவர்களே ஆக்கிரமித்து நிற்கிறார்கள். என்னை மனப்பிறழ்வின்  விளிம்புக்குத் தள்ளிவிட்டு அது குறித்த குற்றவுணர்ச்சி எதுவுமின்றி  திரிகிறார்கள் அவர்கள்.  கோபே அபேயின் நாடகத்துடன் இதை  ஒப்பிட்டு வைத்துப் பார்த்த எனது தோழியின் அவதானம் சிறப்பான  கவனிப்புக்குரியது.

ஒரு செய்தியாகவேனும்  அதை எனக்குத் தெரியப்படுத்தாத  அவர்களின் உளவியலை என்னவென்று சொல்வது...

அந்த "உயிரிக்கு" சமுகத்தில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து  வாங்கிக் கொடுத்திருக்கும் "பட்டம்"; எழுத்தில் பதிவு செய்ய  முடியாதது. ஒரு பொருளை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.  ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த வழி சமுக நியதிகளிற்கும்  பண்பாட்டிற்கும் எதிரானது, சட்ட விதிகளுக்கு முரணானது என்பதுடன் மனித அறங்களிற்கும் விழுமியங்களிற்கும்  அப்பாற்பட்டது  என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அது ஒரு இனத்தின்  பிரச்சினையாக பரிமாணம் அடையும் இடமும் அதுதான்.

ஒரு உளவியல் நிறுவனத்திடமிருந்தும் ஒரு உளவியற்  பேராசிரியரிடமிருந்தும் அவரது குடும்பத்தினரிடமிருந்தும்  இதை  நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் யாருமே எதிர்பார்க்க முடியாதது.

சமூகத்தில் அத்துமீறல்களும் அதிகார வலைப்பின்னல்களும்  எங்கிருந்தெல்லாம் தோற்றம் கொள்கின்றன பார்த்தீர்களா? சமூகத்தில் இத்தகைய அதிகார மையங்களை கட்டுடைக்க வேண்டிய ஒரு  உளவியல் நிறுவனமே அதைக் கட்டவிழ்த்துவிடும் அவலம்  ஈழத்தமிழ்ச் சூழலில்தான் சாத்தியம். உலகில் வேறு எந்த  இனத்திற்கும் இத்தகைய அவலம் நேராது.

எனது சுயவரலாற்று நூலின் மையமே இந்தப்புள்ளியில் இருந்துதான்  தொடங்குகிறது. ஈழத்தமிழ்ச் சூழலில் "விடுதலை"யின் முக்கியத்துவம் உணரப்படும் இடமும் இதுதான்.

அதிகாரம், வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற ஆதிக்கப்  பெருங்கதையாடல்களினால் அவர்களது "உளவியல்"  கட்டமைக்கப்பட்டிருப்பதை அவர்களை நெருங்கிச் செல்லும்  யாராலும் மிக இலகுவாக உணரமுடியும்.

உளவியல் என்ற மையப்புள்ளியுடன் என்றுமே சந்திக்க முடியாதவை  - கூடாதவை மேற்குறிப்பிட்ட கருத்துருவாக்கங்கள். ஆனால்  இவர்களது "உளவியல்"  அந்த சூழலுடன் இரண்டறக் கலந்து  உறவாடிக் கருத்தரித்திருக்கிறது இந்தப் பேரவலம்.

உளவியலை விடுவோம். சரி தவறுகளுக்கும் அப்பால்  சக  மனிதர்களாக இன்னொரு மனிதன் மீது எப்படி இந்த வன்முறையை  இவர்களால் நிகழ்த்த முடிந்திருக்கிறது?

 "நான் யார்?" என்ற எனது தேடலை அடுத்து என்னைத் தொந்தரவு  செய்த பெருங் கேள்வி இதுதான்.

இந்தக் கூட்டு வன்முறைக்குள் சிக்கி எனது ஆழ்மனத்தின்  பெரும்பகுதி அதிர்ந்து முறிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போதிலும் எஞ்சிய சிறு பகுதி மனம், மனித அகவுலகத்தின் இந்தப் புதிரை  கட்டவிழ்த்துப் பார்க்கும் ஆர்வ மிகுதியை மன அடுக்குகளில்  உருவாக்கிக் கொண்டேயிருந்தது.

அததான் இன்று என்னை உங்கள் முன்னிலையில் நிறுத்தியது  மட்டுமல்ல - எனது எதிர்கால வாழ்வின் தேடலாகவும் ஆதாரமாகவும் விரிகிறது. "விடுதலை"யின் விரிதளங்களினூடாக வாழ்வின் புதிரான  முடிச்சுக்களை அவிழ்க்கும் எனது பயணம் தொடர்கிறது.

ஆனால் முன்பு மனிதன் குறித்த இந்த விசாரணையை எங்கிருந்து  தொடங்குவது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. உலகத்  தத்துவங்கள், கோட்பாடுகள் குறித்து எனக்கு ஓரளவிற்குப் பரிச்சயம்  இருந்த போதிலும் "விடுதலை"யைத் தரிசிக்கும்வரை எனது தேடலின் மையம் அவிழ்க்க முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே என்னை  அலைக்கழித்தது.

ஆனால் "விடுதலையில்" அன்ரன் பால சிங்கம் அவர்கள் மனித  வாழ்வு குறித்த  ஆதாரமான கேள்விகளையும் அது குறித்த  விசாரணைகளையும் மெய்த்தேடல், அறிவு சார்ந்த தேடல் என்ற இரு தளங்களிலும் சிக்மண்ட் ப்ராய்டில் தொடங்கி ழான் போல் சார்த்தர்  வரை ஒரு சீராக நகர்த்தியிருக்கிற பாங்கு மனித விடுதலை -  விசாரணை மீதான நேர்மையான அகத்தூண்டலை நிகழ்த்திவிடுகிறது.

இந்த அகத்தூண்டலிலிருந்தே எனது  வாழ்வு சார்ந்த காத்திரமான  தேடல் நகர்கிறது.....

ஒரு உளவியல் நிறுவனத்தால் எப்படி இந்த வன்முறையை நிகழத்த  முடிந்தது என்ற கேள்வி மேலெழும்புகிறதல்லவா? அன்ரன்  பாலசிங்கம் சொல்கிறார் இது அதிகாரத்தின் அரூப கரங்கள் என்று.  பின் நவீனத்தின் பிதாமகன் எனப் போற்றப்படுபவரும் பிரெஞ்சு  தத்துவாசிரியருமான மிசேல் பூக்கோவை முன்வைத்து இத்தகைய  அதிகாரங்களை கட்டவிழ்க்கிறார் பாலசிங்கம்.

(2000 பக்கங்களிற்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்ட எனது  சுயவரலாற்று நூலின்  ஒரு விடயத்தை நானே சுருக்கி சிறிய  அறிமுகம் செய்வதென்பது மனதில் ஒருவித அயர்ச்சியையும்  களைப்பையும்  விதைக்கிறது. எனவே உங்கள் வாசகர் எதிர்  வினைகளைப் பொறுத்தே எனது அடுத்த பாகத்தை அப்படியே  வெளியிடுவதா சுருக்கி வெளியிடுவதா என்ற முடிவு எட்டப்படும்)

கட்டுரையாளரின் தொடர்ப்புக்கு: parani@hotmail.com

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 


மேலும் சில...
விடுதலையின் விரிதளங்கள் - 01
விடுதலையின் விரிதளங்கள் - 02
விடுதலையின் விரிதளங்கள் - 04
விடுதலையின் விரிதளங்கள் - 05
விடுதலையின் விரிதளங்கள் - 06

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 13 Jun 2024 09:09
TamilNet
HASH(0x55d6ee5ad4f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 13 Jun 2024 09:09


புதினம்
Thu, 13 Jun 2024 09:09
     இதுவரை:  25114586 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5696 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com