அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow நன்றிக் கடன்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நன்றிக் கடன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வ. கீதா  
Wednesday, 04 July 2007

ஈழத் தமிழ்ப் பெண்களின் கவிதைகளை நாம் முதன்முதலாக  1980களின் இறுதி ஆண்டுகளில் அறிந்தோம். ஈழத் தமிழர்களின்  தேசிய இனப் பிரச்சனையும் போராட்டமும் தமிழகத்தின்  தெருக்கள்வரை நீண்டிருந்த காலம் அது. தமிழ் நாட்டு இளஞர்களின்,  இளம் பெண்களின், மனத்தையும் அறிவையும் ஆட்கொண்ட அந்த  போராட்டக் காலம் அவர்களது அரசியல் ஓர்மையை கட்டமைத்தது.  அவர்களில் பலரின் சமுதாய அக்கறையும் கரிசனமும் வளரக்  காரணமாயிருந்தது. குறிப்பாக, அச்சமயம் தமிழ்ச்சூழலில் ஆங்காங்கே  துளிர் விடத் தொடங்கியிருந்த பெண்ணிய வெளிபாடுகளுக்கும்  உணர்வுகளுக்கும் ஈழநிகழ்வுகள் உரம் சேர்த்தன. 'சொல்லாத  செய்திகள்' (1986) அது வெளிவந்த காலத்தில் ஆவலாகப்  படிக்கப்பட்டது. பரவலாகப் பேசப்பட்டது. பல பெண்ணிய மேடைகளில் சிவரமணியின் கம்பீரமான. காத்திரமான கவிதைமொழி  எடுத்தாளப்பட்டது. அன்று பெண்ணிய உணர்வுகளை பொதுவில்  வைக்க துணிந்த பல பெண்களுக்கு, அத்தொகுதி புதிய  மொழியொன்றை ஈன்றளித்தது. அவர்கள் தங்களுக்குரியதாக  உணர்ந்த சொற்களை வல்லமையுடன் ஆளும் துணிவை வழங்கியது.   

ஆனால், 'சொல்லாத செய்திகள்' காட்டிய புதிய கற்பனையும்  கவித்துவமும் தமிழ் நாட்டில் அன்று கவிதைகள் எழுதிக்  கொண்டிருந்த பெண்களின் எழுத்துக்களைப் பாதித்ததாகக் கொள்ள  முடியாது. ஈழ நிகழ்வுகளின் வரலாற்று கனத்தை பக்குவமாக  உணர்ந்து அவற்றைத் தமது சூழலுக்குரிய வகையில்  பொருள்படுத்திக் கொள்ள யாரும் முனைந்ததாகத் தெரியவில்லை.  அத்தகையதொரு முயற்சியை தேவையானதாகக் கவிஞர்கள்  உணர்ந்ததாகவும் அறியமுடியவில்லை. அன்றும் சரி, இன்றும் சரி,  தமிழ் நாட்டுப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் துலங்கும்  சுயமும், இருப்பும் அவற்றை விரட்டும் அல்லது அமைதி கொள்ளச்  செய்யும் தேடல்களும் வரலாறுபாற்பட்டவையாக இருப்பதில்லை.  அதிகபட்சமாக, புறவுலகமான அகவுலக அகழ்வாராய்ச்சிக்கான  களமாக, பின்னணியாக மட்டுமே விளங்குகிறது. கவிதை படைக்கும்  சுயமும், அச்சுயம் காண விழையும் பெண்ணிய வெளிபாடுகளும்  பெண்ணுடல், மனம், அவற்றின் அனுபவங்கள். அவ்வுடல் சுவைக்கும்  அல்லது வெறுப்புற்று ஒதுக்கும் கிளர்ச்சிகள், மனம் விரும்பும்,  அல்லது ஒதுக்கும் உணர்வுகள் ஆகியவற்றை மையமிட்ட  கற்பனையையே நமக்குக் காட்டுகின்றன. இந்த கற்பனையை பிடித்து  நிறுத்தி வரலாற்றுக்கும் பொது வாழ்வுக்கும் அதனை  முகங்கொடுக்கச் செய்யவல்ல பெண்ணிய தர்க்கநியாயங்கள் இங்கு  ஆரவார அரசியலாகக் கருதப்படுவதாலும், அத்தகைய நியாயங்கள  பேசும் பெண்ணிய அமைப்புகள் தமிழ்க் கவிதையுலகை தமது  அக்கறைகளுக்கு அந்நியமானவையாக உணர்வதாலும் தமிழ்நாட்டுப்  பெண் கவிஞர்களின் படைப்புகள் தன்வயப்பட்ட வெளிபாடுகளாக  எஞ்சிவிடுகின்றன.  

ஈழ வரலாற்று அனுபவங்கள்பாற்பட்டு விளைந்துள்ள கவிதைகள்  வேறுவகையானவை. தனிமனித ஆசை. மோகம், ஏக்கம். பரிதவிப்பு  ஆகியன இக்கவிதைகளில் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ள  போதிலும், அவற்றை பேசும் தன்னிலையானது அகவுலகத்துள்  தன்னை இழக்க முற்படுவதில்லை. வெளியுலகத்துடனான தனது  உறவை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்கிறது, ஆராய்கிறது. தனது இருப்புக்குரிய வரலாற்று அடையாளத்தை,  கற்பனைக்குரிய சமுதாய உள்ளீட்டை திரும்பவும் திரும்பவும் அறிய முயற்சி செய்கிறது. 'சொல்லாத செய்திகள்' இத்தகைய தேடலை துவங்கி வைத்ததுடன்  வருங்கால கவிஞர்களுக்கு ஆதர்சமாயும் விளங்கியது. இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதைகள் காலத்தின் குறியீடுகளாக மட்டுமின்றி ஈழப் பெண் கவிஞர்களுக்குரிய முதுசமாகவும் இன்று உள்ளது.

அந்த முதுசமானது ஈழப்பெண் கவிஞர்களுக்குரிய தாய்வழி சீதனமாக மட்டும் இருக்கவில்லை. தமிழ்ப் பேசும் உலகில் வழங்கும்  கவிதைமரபு அறியாத புதியதொரு யாப்பையும் அது தாங்கி வந்தது.  காதலும், கற்பும், உடலழகும், தாம்பத்தியமும், வீட்டுழைப்பும்,  தாய்மையும் பெண்ணுக்குரித்தான பிரத்யேக அனுபவங்களாகக்  கருதப்பட்ட ஒரு பண்பாட்டில் காலம் ஏற்படுத்திய உடைப்புகளை  'சொல்லாத செய்திகள்' படம்பிடித்துக் காட்டியது. ஈழ விடுதலைப்  போராட்டக் காலமும் வெளியும் ஈழப் பெண்களின் இருப்பைத்  தலகீழாகப் புரட்டிப் போட்டிருந்த கதையைச் சொன்னதுடன்,  அக்கதைக்கு புதிய திருப்பங்களை வழங்கி, எதிர்பாராத  திசைமார்க்கங்களில் அதைக் கொண்டு சென்றது. இத்தொகுப்பு  சொன்ன கதையில் வெளிபட்ட மெய்மை, 'பெண்மை' என்பதற்கான  இலக்கணத்தை ஊடறுத்து வெளிப்பட்டது,

அந்த மெய்மையின் பிம்பங்களாக விளங்கிய பெண்களோ...

'உப்பும் புளியுமே' பிரச்சனைகளாயிருந்த வாழ்வினைத் துறந்து  போரில் காணாமல் போன, மாய்ந்த பிள்ளைகளின் விதியை  முன்னிறுத்தி நீதி தேட பல தாய்மார்கள் வீதிக்கு வந்தார்கள்.  போராடினார்கள். 'சரிகை சேலைக்கும். கண்ணிறைந்த காதலர்க்கும்'  காத்திருந்த காலத்தை 'வெட்கம் கெட்டதென' உணர்ந்த இளம்  பெண்கள் புதிய. சுதந்திரமான வாழ்வைப் பற்றிக் கனவு காண  முற்பட்டார்கள். காதலித்தாலும் கூட அக்காதலில் சமத்துவத்தையும்  பொறுப்பையும் அறிய விழைந்த பெண்கள் 'பறவைகள் போலவும்  பூக்களைப் போலவும் இயல்பாய் மனிதர் இருக்கும் நாளில்' மட்டுமே  நெஞ்சில் நிறைந்த காதலர் தம்மை அணுகலாம் என  முழங்கினார்கள். கற்பு எனும் சொல்லால் பழிக்கப்பட்டு, சுயம்  மறுக்கப்பட்ட பெண்கள் அக்கற்பினை களவாடியதாக நினத்து  ஆணவத்துடன் திரிந்த அந்நிய ராணுவத்தானை மட்டும் ஏசவில்லை,  பெண்களை மதித்தறியாத தம் இனத்தானையும்  சாடினார்கள்.  அத்தகைய சாடலினுடாக தமது இருப்பை நிலைநிறுத்திக்  கொண்டார்கள்.

எனக்கப் புரியவில்லை
அந்நியன் ஆத்திரத்தில்
அடக்குமுறையின் வடிவில் நடந்து கொண்டான்
ஆனால் ... இவனோ ...
காமனாய் ... கயவனாய் ...
இவனை என்ன செய்யலாம்?

கற்புக்காய் கண்ணீர் வடிக்க
நான் ஒன்றும் கண்ணகியல்ல
மானத்தை நினத்து நிற்க
நான் ஒன்றும் இழக்கவில்லை
தற்கொலையில் உயிரைமாய்க்க
நான் ஒன்றும் கோழையில்லை.

கோபமும் ஆவேசமும் மட்டும் ஈழப் பெண்களுக்கு  விட்டுவைக்கப்படவில்லை. போர்க்காலம் தந்த நெருக்கடியில்  பறிபோன இடங்கள். காட்சிகள். நினைவுகள் ஆகியவற்றைப் பதிவு  செய்யும் அவலக் கடமையை ஏற்ற கவிஞர்கள் 'காலைச்  செம்மையை ரசிப்பதை மறந்து' 'நேற்று வரையும் அமைதியான  காலைப் பொழுது' என்ற கோர உண்மையை உலகுக்கு அறிவிக்க  வேண்டியவரானார்கள். பறிபோன காலத்துக்கு சாட்சி சொல்ல நேர்ந்த  அவர்களுக்கு வேறொரு பணியும் காத்திருந்தது. போர் தொலைத்த,  பாதித்த, காத்திருக்கச் செய்த உறவுகளின் உன்னதத்தை மட்டுமின்றி  அவற்றின் நிலையற்ற தன்மயயும் இவர்கள் எழுத வந்தனர். பிரிவை  அற்புதமாகப் பாடும் இவ்வரிகள்..

உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக
நம்பிக்கைத் தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி

எப்பொழுது என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம் இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக் குருவிகள
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது

ஆற்றாமையால் துயருற்ற போதிலும், காதலித்த அந்த நாட்களை  இன்ப நினவுகளாக மட்டுமின்றி தற்கால சுயயெழுச்சியின் தேவையை உணர்த்தும் கசப்பான கேள்விகளாகவும் பெண் கவிஞர்கள் எதிர்  கொள்ள வேண்டியிருந்தது. அன்று பேசப்பட்ட பேச்சு தன்னுடையதாக இருக்கவில்லை. தனது மௌனத்தையும் தனது காதலன் அவனது  பேச்சால் மறைத்திருந்தான். பிறகு, அவன் மௌனம் காத்து  மேற்கொண்ட நிராகரிப்பும் அவனயே வெற்றியடையச் செய்தன  என்பதை சோகமும் விரக்தியும் மேலிட எழுதிய எழுத்தில் புது  சுயவுணர்வையும் ஒர்மையையும் கவிஞர்கள் உணர்ந்தனர். 'கனல்  வாய்ப்பிழந்து புழுதி பறக்கின்ற மைதான வெளி முழுதும் தீ மிதித்து  நடக்க' வேண்டியபோதிலும் அவ்விதியை பாடும் பாங்கையும்  கம்பீரத்தையும் பெண்களால் கைகொள்ள முடிந்தது.

சித்ரலேகா மௌனகுரு 'சொல்லாத செய்திகள்' தொகுப்புக்கு எழுதிய  முன்னுரையில் தெரிவித்தது போல. "இந்தக் காலக்கட்டத்தில் தமது  அந்தஸ்து, சமூகம்,  தம்மை நோக்கும் முறைமை, பெண் உடலியல்  அம்சம் ஒன்றினால் தமது வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்படுவது  ஆகியவற்றைப் பற்றி விமர்சிக்கப்" பெண்கள் தலைப்பட்டிருந்தனர்.

1980களின் இறுதி ஆண்டுகளிலும் 1990க்குப் பிறகும் நிலமை  வேறுமாதிரியானது. இந்திய ராணுவம் அமைதி காப்பதன் பெயரில்  ஈழ மக்களை, குறிப்பாக பெண்களை, சொல்லொணா துயரத்தில்  ஆழ்த்தியது. இலங்கை அரசு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை  அங்கீகரிக்க மறுத்ததை அடுத்து மேலும் பலர் போராளிகள் ஆயினர்.  ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆயுதம் தரிக்க முன்வந்தனர்.  பெண்கள் புலிப் போராளிகளானர்கள். 'உப்புக் காற்றின் ஈரத்தில்  கண்ணீர்த் துளிகள் மோதிச் செல்ல தணல் பூத்துக் கிடக்கும் மயான  வெளிப்பரப்பில்' குடியிருக்க சபிக்கப்பட்ட உயிர்களை மீட்க அவர்கள்  போர் புரியவும் மரணிக்கவும் துணிந்தனர். சிங்கள் ராணுவத்தை  சாக்குழித் தோண்டி புதைக்க அவர்கள் சூளுரைத்தனர். உயிர் ஈனும்  ஆற்றலுடயோர் சாவை அரவணித்து ஏற்றது காலத்தின்  கட்டாயமாகவும் முரணாகவும் அமைந்தது.

மறுபுறமோ விடுதலைப் போராட்டத்தின் தார்மீக பண்பில் விரிசல்கள்  ஏற்பட்டிருந்ததை யாராலும் அங்கீரிக்காமல் இருக்க முடியவில்லை.  போராளிகளுக்கிடையே சண்டைகள் மலிந்தன. மாறுபட்ட அரசியல்  கருத்துடையோரை கொல்லவும் பலர் தயங்கவில்லை.  சிவரமணி  போன்றவர்கள் விடுதலை வீரர்களின் இலட்சியத்தை ஏற்கனவே  விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். 'விலங்கொடு கூடிய விடுதலை  மட்டும் வேண்டவே வேண்டாம்' என்று அவர் ஆணித்தரமாக  குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சனைகள் போக, வேறுவிதமான  பிணக்குகளும் ஈழத்தமிழ்ச் சமுதாயத்தை அலைக்கழித்தன. தமிழ்ப்  பேசும் இஸ்லாமியர்களை விடுதலைப் புலிகள் யாழ்பகுதியிலிருந்து  நாடு கடத்தியதுடன், அம்மக்கள் பள்ளிவாசலில் கூடியிருந்த போது  அவர்களை நோக்கி சுட்டதில் பலர் உயிரிழந்தனர். தமிழ்ப் பேசும்  இஸ்லாமியர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ  வேண்டியவரானார்கள். போராட்டம் உயிர்களையும் மண்ணையும்  சேதாரப்படுத்த, ஈழச் சமுதாயம் நாடு கடந்து, புலம் பெயர்ந்து, வேறு  வேறு கண்டங்களில் அந்நிய வானங்களின் கீழ் தன் வாழ்க்கையை  தேடி அலைந்தது. மண்ண விட்டு நீங்கிய சோகமும், எதிர்காலத்தை  எண்ணி பயமும், மாறுபட்ட சூழலில் வாழ்க்கையை அமைத்துக்  கொள்ள வேண்டிய கட்டாயமும் ஈழ மக்களை, குறிப்பாக, பெண்களை  வெகுவாகவே பாதித்தன.

இந்த அனுபவங்களுக்குரிய உள்ளார்ந்த அவலத்தினூடாக புதிய  கவியாளுமைகள் உருகொண்டன. பிரிவு, ஆற்றாமை முதலியன  நித்திய நிகழ்வுகளாகிப் போன சூழலில், 'காத்திருப்பு எதற்கு?' என்று  கேட்டு 'உதயத்திற்கு சிறிது நேரம்தான் உண்டு' என்று எச்சரித்த  பெண்கள் காதலில் இணைய தமது துணைகளை அழைத்தனர்.  விடுதலைப் போரில் உயிர் மரித்த வீர இளஞர்களின் விதியை அறிய தாய்மார்கள் வீதிகளில் இறங்கிய காலம் போய், இரத்தம் உறைந்து  போன தம்மண்ணை மீட்க இனியும் புதல்வர்களை இழக்கத் தாம்  தயாராக இல்லை என முழங்க வந்தனர். 'புதை குழியும் மணல்  மேடும் என் புதல்வர்களின் சடலங்களால் நிரம்பிய பிறகு இன்னுமா  தாய் நிலம் பிள்ளகளைக் கேட்கிறது?' என சோர்ந்தனர். நாடு கடந்து  வாழப்போன பெண்கள் மண்ணையிழந்த சோகத்தை வார்த்தைகளில்  வடித்த அதே வேளயில் அம்மண்ணின் பத்தாம்பசலித்தனங்களும்  ஆணாதிக்க மனநிலையும் தம்மை தொடர்ந்து துரத்துவதை  அங்கலாய்த்தனர். பல்வேறு இழப்புகளுக்கிடையே ஆணாதிக்கம்  தன்னைப் பத்திரப்படுத்தி வத்திருக்கும் சூட்சுமத்தை எள்ளலுடன் எதிர் கொள்ள முனைந்தனர். வரதட்சணையாகட்டும், கட்டாய  கலியாணமாகட்டும் - இவற்றை விரக்திச் சிரிப்புடன் அணுக வந்தனர். அதே நேரம், அந்நிய சூழல் ஏற்படுத்திக் கொடுத்த புதிய  சுதந்திரத்தையும் ஏற்றனர். தமக்கேற்ற காதலையும் காமத்தையும்  உரிமையுடன் வரித்துக் கொண்டனர்.

ஆனாலும் எல்லா வெளிபாடுகளும் சோகமயமாகவோ தனி மனித  அனுபவங்களாகவோ மட்டும் அறியப்படவில்லை என்பதையும் இங்கு நாம் பதிவு செய்தாக வேண்டும். வரலாறு விடுத்த சவால்களுக்கு ஈடு கொடுக்கவல்ல காத்திரமான சொற்களையும், வல்லமைவாய்ந்த  தொனியையும் கவிஞர்கள் கையாண்டனர். போர் சாதித்த நாசத்தை,  போராட்ட அரசியல் காவு வாங்கிய உயிர்களுக்கு ஏற்பட்ட கதியை  காண்போரைத் திக்குமுக்காட செய்யும் கவிதைக் காட்சிகளாக  அவர்கள் தீட்டினர். ஈழத்தின் ரம்மியமான நீர் நிலைகளில் தவம்  புரியும் கொக்குகளும் இன்னப் பிற பறவைகளும் 'அவற்றிலும்  அதிகமாக விளந்து கிடந்த ... ஊறிப் போன பிணங்களின் வாசனை  முகர்ந்து, சுவை அறிந்து ' கொழுத்துக் கிடக்க, கபறக்கொய்யாக்களோ 'மனித கபாலங்களை ஆளுக்கு ஐந்து ஆறாய் பங்கிட்டுக் கொண்டு...  தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவி கறுத்த விழிகளைத்  திராட்சைகளாய்' உறிஞ்சிக் 'கோயில் தெப்பங்களாய்' மிதக்கும்  கொடுங்கனவை பெண் கவிஞர்கள் தயவுதாட்சணியமின்றி பதிவு  செய்தனர்.

வன்மமே வாழ்வாகிவிட்ட சூழலில் மானுட அடயாளத்தை சுமையென உணர்ந்தவர் 'மரம் மண் கல்' என சமைந்து போவதை ஏற்றனர்.  தமக்கு படிப்பிக்கப்பட்ட இறைவரிகளும், சைவம் போற்றி வந்த இறை அனுபவங்களும் இரக்கமற்ற தற்கால சூழலில் பொருள்படாமற்  போனதை குறிப்பிட்டனர். 'புல்லாய் புழுவாய் நாய் நரியென எல்லா  மாதிரியும் மாறிமாறி' போனாலும் அருளற்ற வாழ்வே  கதியாகிவிட்டதை சுட்டினர். பல வேடங்கள் தரித்தாலும் 'ஒவ்வொரு  சங்காரத்தின் முடிவிலும் ... அவர்கள் வெல்லும்' அநியாயத்தையும்   தாங்கள் கைவிடப்பட்டவர்களாய் ஆனதயும் பாடினர். இத்தகைய  பாடல் வரிகளில் மரபும் யாப்பும் தருவிக்கப்பட்டன. ஆனால்  அவற்றின் போதாமையே பொருளானது. மரபு என்ன செய்யும், காலம்  காட்டிய விபரீதங்களுக்கு முன்னால் என்று பெருமூச்செறிந்தே  பெண்கள் எழுதினர். 'கோலமிடுவ அம்மா வழியாய் வந்த பழக்கம்'  ஆனாலும் அதை இலகுவாக கைக்கொள்ளமுடியாதபடிக்கு கோலமிட வேண்டிய முற்றத்தில் புற்று புரயோடிக்கிடப்பதை அவர்கள் ஏற்றுக்  கொள்ள வேண்டியிருந்தது. அதை அகற்றினாலும் காலம் வேறு  கோலங்களுக்கே மண்ணைப் பண்படுத்தியிருந்ததுதான் உண்மையாக  ஒளிர்ந்தது - கோலம் போட நினத்தவளின் குருதியே கோலமாகிப்  போக,  மரபு பிறழ்ந்த நிகழ்வே சாத்தியப்பட்டது.

பொதுவாகவே, பெண்களுடைய கவிதைகள் தமக்குரிய யாப்பை  நோக்கிய தேடல்களாகவே இருந்துள்ளன. இக்கூற்று  ஈழக்கவிஞர்களுக்கு மட்டுமின்றி பெண்கவிஞர்கள் அனவருக்குமே  பொருந்தக்கூடியதான். ஆனால் ஈழப் பெண் கவிஞர்களைப்  பொருத்தவரை, அவர்களுக்கு வாய்த்துள்ள பாரம்பரிய யாப்பின்  ஆணாதிக்க பண்புகள புறந்தள்ளுவதென்பது ஒரு புறமிருக்க,  அவர்கள் தேடிய புதிய யாப்புக்கு ஆதாரமாய் விளங்கவல்ல உறவு  நிலகளையும் பண்பாட்டு வாழ்வையும் மிகவும் இக்கட்டான  சூழல்களில் அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

'சொல்லாத செய்திகள்' தொகுப்பிலே தொடங்கிய இந்த புது வாழ்வை  நோக்கிய பயணம் தமிழ்ச் சமுதாயத்தில் காதலுக்கும் பெண்மைக்கும் கூறப்பட்டுள்ள வியாக்கியானங்களை மறுத்தும் மாற்றியும் எழுதிச்  சென்றுள்ளது. சொல்லாத செய்திகளின் தளம் இன்று விரிந்துள்ளது.  தீரா மோகத்தையும், மோகம் தீர்ந்து களைத்த உறவில் எஞ்சியுள்ள  இடவெளியையும் பாடி அதே நேரத்தில் அரசியல், வரலாறு, உலக  நிகழ்வுகள் முதலியவற்றயும் தமக்குரிய அக்கறைகளாக, தமது  பாலின அடயாளத்துடன் பிரத்யேக உறவு கொண்டவையாக பெண்கள் உணர்ந்து வருகின்றனர். புற உலகில் மன்னம்பேரிகளுக்கும்  கோணேஸ்வரிகளுக்கும் நிகழ்ந்த கொடூரம் ஒவ்வொரு  பெண்ணுடலின் மீம் ஆழத்திணிக்கப்படும் அன்றாட நிகழ்வாக  உள்ளதை எடுத்துரைக்க முற்பட்டுள்ளனர். பெண்மையை  வரையறுக்கும் மாதாந்திர ரத்தப் போக்கும் வாடையும் வரலாற்றின்  மீது படிந்துள்ள குருதிக்கறையை நினைவூட்டும் விபரீதத்தை  கவிதயாக்கப் புறப்பட்டுள்ளனர்.  

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்.

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு, அகமும் புறமும் ஒன்றை மற்றொன்று ஊடுருவியுள்ள  நிலையைப் பதிவு செய்து அரசியலுக்கு நூதன பொருள் வழங்கி  வருகின்றனர். தனிமனித வாழ்க்கையை அரசியல்படுத்தியதுடன்,  அரசியல் முழக்கங்களிலும் சொல்லாடல்களிலும் காணாமல்  போய்விடும் அன்றாட வாழ்வை, அதன் நுணுக்கங்களை,  அவற்றினூடாக துலங்கும் அரையும்குறையுமான மானுடத்தைப்  பரிவுடன் மீட்டெடுத்துள்ளனர். தொலக்காட்சி காட்டும் ஈராக் நாட்டு  கயமைகளைக் கண்டு துணுக்குறும் கண்கள் 'கரும் பிணம் மிதக்கும் சிறு குட்டைகளாய் கலங்க', மேசை மீதுள்ள கோப்பையும் பாண்  துண்டு கிடந்த தட்டும் காலியாய்க் கிடக்கும் விசித்திர முரணைக்  குறித்துப் பேசும் அவசியத்தை பெண்கள் ஏற்றுள்ளனர்.  இத்தகைய  ஏற்றலில் சுய-பச்சாதாபமும் இல்லை. இயலாமையும் இதில்  தொழிற்படுவதில்லை. மாறாக, தாம் வாழ்ந்த வரலாறு பிறவிடங்களில் தொடரும் அவலத்தையும் அதைக் காண நேர்ந்த தமது கையறு  நிலையையும் மிக திறம்பட வெளிபடுத்த துணிந்துள்ளனர். தமது  வாழ்வின் பொருளை தமது அனுபவங்களினூடாக மட்டுமின்றி பிற  வாழ்க்கைகளிலும் அவை ஈனும் பாடங்களிலும் இவர்கள் இன்று  தேடுகின்றனர். 
     ....
இவ்வாறாக பல நிலைகளில் தொடரும் ஈழப் பெண்களின்  கவிதைகளை தமிழ்ப் பேசும் பரந்த உலகத்துக்குரியதாய் ஆக்கும்  இம்முயற்சி ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்துவது  போன்றதாகும். தமிழ்ப் பேசும் மக்களின் நிதர்சனங்களை  சலனப்படுத்தி, பெண்மை, பெண் ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியன  குறித் நமது மரபுகள் சலிக்காமல் முழங்கும் முடிந்த  முடிவுகளாகிவிட்ட செய்திகளைப் புரட்டிப் போட்டு நமது  மனசாட்சிகளை தொடர்ந்து செயல்பட வைக்கும் ஈழ வரலாற்றுக்கும்,  குறிப்பாக அவ்வரலாறு கண்டுள்ள பெண்ணிய சொல்லுக்கும்  வாக்கிற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

08-03-2007

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 25 Apr 2024 01:52
TamilNet
HASH(0x55cafd4a3fc0)
Sri Lanka: English version not available