அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தடைகள் அற்ற வெளி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்.  
Monday, 09 July 2007

'பரதேசிகளின் பாடல்கள்' என்ற கவிதைத் தொகுப்புச் சார்ந்து திரு.கருணாகரன், திரு. க.வாசுதேவன் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி எனது புரிதல்களின் அடிப்படையில் சில குறிப்புகள்.

01.முகமற்ற கவிஞர்களின் கவிதைகள் - கருணாகரன்

02.கருணாகரனுக்கு எதிர்வினை - வாசுதேவன்

03.வாசுதேவனுக்கு பதில் - கருணாகரன்

புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழநேர்ந்த தேசங்களில் நிலையான இருப்பைக் கொண்டிருந்தாலும் தாயக நினைவுகளிலேயே பெரும்பான்மையோர் வாழ்கின்றனர். ஒருவரையொருவர் சநதிக்கும்போது சுகமா என்ற நலன் விசாரிப்பின்பின் 'என்னவாம்' என்ற மறுகேள்வி சுட்டுவது புலம்பெயர் வாழ்வின் புதினங்கள் பற்றியதல்ல. தாயகச் செய்திகள் பற்றிய வினவலே அது. சிலர் நாடுவிட்டு நாடுநாடாக அலைகிறார்கள். ஒரு நாட்டில் நிரந்தர வதிவிடம் மறுக்கப்படும் பொழுது இன்னொரு நாட்டிற்கும், அங்கும் அனுமதி மறுக்கப்படும்பொழுது வேறொரு நாட்டிற்கும் அலைவது நிரந்தரமாக ஒரு இடத்தில் நிலைத்திருக்கத்தான். இந்த நிலைத்திருத்தல்தான் தாயக உறவுகளின் வாழ்வுசார் நெருக்கடிகளை இலகுவாக்கும். இந்த நாடோடித்தனத்தில் 'அலைதல்' என்ற அம்சம் பொருந்துகிறதே தவிர மேற்குலக நாடோடிகளின், ஜிப்சிகளின் வாழ்வுசார்ந்த அலைதல் அம்சம் அல்ல. வெறும் நாடோடி, பரதேசி ஆகிய சொல்லை புலம்பெயர் தமிழ் சமூக வாழ்வின் சாரம் சாராது மேற்குலகின் தன்மைகளுக்குப் பொருத்துதல் பொருத்தமற்றதும் தவறான அணுகுமுறையுமாகும்.

பரதேசிகளின் பாடல்களில் "ஜிபசிகளின் கலவையான பரதேசிகளை எதிர்பார்த்து மேற்கின் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதலை" எதிர்பார்த்ததால்தான் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கு அப்பால் முரண்கொண்ட நீண்ட விளக்கத்தினை கருணாகரன் முன்வைக்க நேரிட்டது.

தமிழ்ச்சூழலில் நாடுவிட்டு நாடுபோனவர்களை பரதேசம் போனவர்கள் எனக்குறித்தலும் உண்டு. பரதேசம் போனவர்கள் பரதேசிகள்தானே. 'பரதேசியாய் திரிகிறான்' என்ற தாயக மொழிவழக்கை வாழ்வுசார் அர்த்தத்துடன் புரிந்து கொள்ளல் வேண்டும். "பரதேசம் போனவர்கள் நாட்டைவிட்டுப் போனவர்கள் அந்நியர்கள் என்னும் அர்த்தப்படுத்தல்களே பரதேசிகள் என்னும் சொல்லிற்கு இன்றைய நிலையில் பொருத்தமானதாகும்" என வாசுதேவன் சரியாகவே குறிப்பிட்டுள்ளார். அதைக் கவனத்தில் கொள்ளாது மீண்டும் தனது வரையறைகளை அப்படியே முன்வைத்தல் என்பது கருணாகரனுக்கு எந்த நியாயத்தையும் வழங்கிவிடப்போவதில்லை. மேற்குலகின் பொருத்தமற்ற மதிப்பீடுகளை ஆசியம் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மேற்கின் மதிப்பீடுகள் சார்ந்து ஆசியத்தை நோக்குதல் பொருத்தப்பாடானதல்ல.

"தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றனர். வலியை நம் முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இப்பரதேசிகள் முனைகின்றனர்" என்ற கருணாகரனின் வார்த்தைகளுக்கு'இருப்பவர்கள் - போனவர்கள்' என்ற வகையில் எப்படி அர்த்தம் காணமுடிந்தது. ஒரு படைப்பு பலவேறு மனநிலைகளை படிப்பவர் மனத்தில் இறக்கிவிடத்தான், முகத்தில் அறைந்துவிடத்தான் முனைகின்றது. இது படைப்பு வாசக மனநிலை என்ற வகையில்தான் அர்த்தம் காணப்பட வேண்டும். இருப்பவர்கள் போனவர்கள் எனும் வகையில் அல்ல.

கருணாகரன் 'பரதேசிகளின் பாடல்கள்' கவிதைகள் பற்றி அதிகம் கூறாதுவிடினும் வாசுதேவனுக்கான பதிலில் புலம்பெயர் இலக்கியம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்படிருக்கும் பிரதான புள்ளி அதன் அடுத்த நிலையைக் காணவேண்டும் என்பதும் வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தின் சாயலைக் கடந்து பரதேசிகளின் பாடல் வரவில்லை என்பதுமே"
'புலம்பெயர் இலக்கியம்' பல்வேறு தேசங்களின் இணைவு கொண்டது. இப்பெரும் தளத்தில் அந்தந்த நாடுகள் சார்ந்த படைப்புக்களைக் கருத்தில்கொண்டே புலம்பெயர் இலக்கியத்தினை மதிப்பீடு செய்ய முடியும். இதுவொரு விவாதக்களத்தில் விமர்சனம், ஆய்வுகள் என்பவைகள் மூலம் முன்வைக்கக் கூடியதே தவிர ஒற்றைவரித் தகவல்களால் அல்ல.

வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தின் ஒரே சாயலினை சுழற்சிமுறை புலம்பெயர் வாழ்வுசார்ந்த பின்னணியிலேயே புரிந்து கொள்ள முடியும். தலைமுறை தலைமுறையாக புலம்பெயர்த்ல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் நிகழும். முதல் தசாப்தங்களில் பெயர்கின்றவர்கள் சந்தித்த, எதிர்கொணட் நிலைகள், உருவாக்கிய மனோபாவங்கள் ஆகியவற்றை இரண்டாம், மூன்றாம் தசாப்தங்களில் பெயர்ந்தவர்களும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனிப் பெயரப்போகின்றவர்கள் எதிர்கொள்ளும் மனோநிலையும் இதுவாகத்தான் இருக்கப்போகின்றது. ஒவ்வொரு தசாப்தத்தை சேர்ந்தவர்களும் தமக்கான துயரத்தை வெளிப்படுத்தவே முனைகிறார்கள். இந்நிலை இங்கு பலராலும் உணரப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் இலக்கியம் புலம்பல் இலக்கியம், தாயக ஏக்கத்தினை தாண்டி செல்லவேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் முதலாம் இரண்டாம் தசாப்தப் படைப்பாளிகள் வேரிழந்த மனநிலைதாண்டி தம் சூழலின் யதார்த்தத்தை வெளிடுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

பொதுவாக புலம்பெயர்ந்து வாழும் எல்லா படைப்பாளிகளும் தாயக நினைவுகளையே தம் படைப்பில் கொண்டுள்ளனர். பிரான்சில் வாழும் 'மிலான் குண்டாராவின்' படைப்புகள் செக்நாட்டு வாழ்வு முறையையே கொண்டுள்ளது. இலண்டனில் வாழ்கின்ற 'என்குகி'  (Ngugi)                 ரமேஸ் குணசேகரா போன்றவர்களின் கதைக்களம் நைஜீரியாவாகவும் சிறீலங்காவாகவும் தான் இருக்கிறது. அதிகம் ஏன் என்.சிவானந்தனது 'நினைவுகள் மரணிக்கின்றபோது' நாவல் தாயக நினைவுகள் பற்றித்தான் பேசுகிறது. இப்படி அநேக வேற்று மொழிப் படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிடமுடியும்.

புலம்பெயர் களத்தின் அனுபவங்களின் குவியல் அளவிற்கு அவை படைப்பாக முன்வைக்கப்படவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும். இதற்கான புறநிலைக் காரணங்கள் ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர் சுமந்துள்ள சுமைகளையும் பொறுத்தது. தவிரவும் தமிழ் மனோபாவம் சில அனுபவங்களை வெளிப்படுத்த மனத்தடையை விதித்துக் கொண்டே இருக்கிறது. இதற்குமப்பால் சில படைப்பாளிகள் தமது அனுபவ வெளிப்பாட்டிறகாக புதியபுதிய களங்களைத்  திறந்துகொண்டேயிருக்கிறார்கள். அவை தரம், தரமின்மை என்பதற்கும் அப்பால் தாய்மண் சுவறாத படைப்புக்களுக்கான சவால். கருணாகரன் குறிப்பிடும் 'நாங்கள் ஜேர்மனிக்குப் போகப் போகிறோம்' என தம் பெற்றோருக்குச் சொன்ன தலைமுறைகள் சார்ந்ததுதான்.ஆயினும் இவை நிலைப்பதற்கான சாத்தியங்கள் அருந்தலாகவே தென்படுகிறது. மேற்கத்தைய கலாச்சாரச் சூழல், தம் கலாச்சாரச் சூழலில் முட்டி மோதி ஏற்படுத்தும் உடைவுகளை வெளிப்படுத்திய அளவிற்கு சல்மான் ருஷ்ரி, கனீவ் குருசி போன்றவர்கள் தாய்மண் சுவறாத படைப்புக்களை அளித்ததில்லையே! காலம் தான் இதற்கான பதிலை வழங்கும்.

"பரதேசிகளின் பாடல் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இத்தொகுப்பிற்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கிய தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவராத புதிய பொருட்பரப்பு உண்டென்றுதானே அர்த்தம்" என்பன போன்று பலவற்றை தானாக வலிந்து அர்த்தப்படுத்திக் கொள்வதை கருணாகரன் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கவிதைத் தொகுப்பின் முக்கியத்துவம் இதன் தரம், தரமின்மை என்பவற்றிற்கு அப்பால் இதன் படைப்பாளிக்ள் பெயரற்று இருப்பதுதான். எவ்வகையில் எவ்வாறு தம் பெயரை முதன்மைப்படுத்தலாம், எந்தப் பின்னணியில் வாளைச் சுழற்றினால் ஒளிவீசும், மார்க்சியத்திற்கு மாக்சிய முகம், பின்நவீனத்திற்கு, தலியத்தியத்திற்கு, பெண்ணியத்திற்கு என அதனதன் முகங்களென ஒளிவட்டத்துள் தலையை திணித்துக்கொள்ளும் புலம்பெயர் இலக்கியச் சூழலில் படைப்பை மட்டும் அளித்துவிட்டு 'தான்' விலகிச் சென்ற இத்தொகுப்பு குறிப்பிடக்கூடியதுதான்.

ஒரு படைப்பை படைப்பாக அணுகுவதற்கு முன் படைத்தவரை வைத்து படைப்பை அணுகும் மனநிலைக்கு இது ஒரு சவால்தான். படைப்பிற்கும் வாசகருக்குமான ஒர தனித்த வெளியை - தடைகளற்ற வெளியை - இது அளிக்கிறது. இந்த தடைகளற்ற வெளியை சில சங்ககால பாடல்களும் நாட்டார் பாடல்களும் நமக்கு அளித்திருந்தன். நவீன இலக்கியப் பரப்பில் அந்த வெளியை பரதேசிகளின் பாடல்கள் அளிக்கின்றன.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


     இதுவரை:  24782974 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5865 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com