அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Tuesday, 10 July 2007

அழுது கொண்டிருக்கும் பள்ளிக்கூடச் சுவர்கள்..

1.

அவனது வெறித்த விழிகள் நிலைகுத்தி இருந்தன. கண்கள் இமைக்கவேயில்லை. அவனது அருகில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்த வைத்திய சாலையின் வேகமும் பயமும் அவசரமும் தொற்றாமல் அவன் இலைகளற்ற  மரத்தின் கிளையைப்போல நின்றான். பதட்டமும், அவலமும் பாதிக்கவேயில்லை இந்த மனிதனை…..

நான் எரிச்சலுற்று அவனைக் கடந்து போகநினைத்தேன். நந்தி மாதிரி குறுக்கே நிக்கிறான்.
யாரும் பரபரப்பிற்கிடையில் அவனை விலகச்சொல்லும் அவகாசம் கூட இல்லாது ஓடிக்கொண்கொண்டிருந்தனர். நான் அவனைக்கடக்கையில் அருகே பார்த்தேன். கீழே ஓ……… எனது வார்த்தைகள் தட்டையானது. வார்த்தைகளின் மௌனம் மீறிய ஒரு சிந்தனையின்  மௌனத்தில் என்னைத் தள்ளியது. குடல் வெளியில தள்ளியபடி ஒரு பிள்ளை அவன்காலடியில் அவனது தங்கச்சியாயிருக்கலாம். தலை புரண்டு கிடந்தது நான் அருகே போனேன். குருதி வழிந்த வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தாள். விரிக்கப்பட்ட ஒரு துணியை உடல் விலகி வெகுநேரமாகிவிட்டிருந்தது.  கடைசிக் கணங்களின் புன்னகை அவளது முகத்தில் உறைந்து போய்க்கிடந்தது. என்னை யாரோ நெரிப்பது போலிருந்தது … அந்த புன்னகையின் கேள்விகள் என்னால் ஜீரணிக்கமுடியாதவையாயிருந்தன. தவிர்க்கமுடியாததாயும் கூட இருந்தது. அவளிடம் உறைந்துபோய்க்கிடக்கும் புன்னகையிடம் இருந்து கேள்விகள் மிதந்து வந்துகொண்டேயிருக்கிறதாய் பட்டது. நான் அவ்விடத்திலிருந்து போகவேண்டும்  என நினைத்தேன். மறுபடியும் அவனைப் பார்த்தேன். அவனைத் தூணோடு சேர்த்து செதுக்கியது மாதிரி நின்றுகொண்டிருந்தான். அவன் ஒரு சிந்தனை மௌனி. அவனுக்குள் எதுவுமே ஓடிக்கொண்டிருக்கவில்லை.

நான் அவனையும் அவளையும் மாறிமாறிப்பார்த்தேன். நானும் ஏன் அங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று புரியவேயில்லை. நான் அவளுக்கு யாருமில்லை… அண்ணனா தம்பியா மாமனா மச்சானா யாருமில்லை…எனக்கே நெஞ்சடைத்தது. வைத்தியசாலையில் மரணத்தின் வாசனை விரவியிருந்தது. மரணம் குப்பை எரிகையில் கிளம்புகிற புகையைப்போல் எங்குமிருந்தது. அடுத்தடுத்த கணங்களில் நிகழ்ந்து கொண்டிருந்தது. எனது வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்தன. நான் அவனை அண்ணை அண்ணை... என்று கூப்பிட நினைத்தேன்.. வாயை பலம் கொண்டசைத்தேன் வெறும் காத்துதான் வந்தது. திடீரென்று ஒரு முடிவற்ற கிணறொன்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போன்ற அவஸ்தை தரை தட்டாமல் கூகூகூ.. என்று விழுந்து கொண்டேயிருந்தேன் அந்தரமாய் இருந்தது. வைத்தியசாலையின் மனிதர்கள் உறைந்து போனார்கள். என்னால் நிற்க முடியவில்லை. அந்தச் சூழலை சகித்துக்கொள்ளவும் முடியவில்லை. அந்த இடத்தை விட்டு ஒட வேண்டும் போல இருந்தது ஒடினேன். கால்கள் தரையில் பாவவேயில்லை……

எங்கும் ஒரே கூக்குரலாய் இருந்தது. யாரையும் பொருட்படுத்தாது வாகனங்கள் வந்து கொண்டேயிருந்தன… முடிவில்லாமல் போனது.. குவியல் குவியலாக பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன. யார்யாருடைய அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோ இலக்கற்று அந்தப் பிணக்குவியல்களிற்குள் அலைந்தார்கள். எல்லா உடல்களையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தார்கள். என்னுடைய பிள்ளையாய் இருக்ககூடாது என்ற நப்பாசையில் ஓடினார்கள். அழுகையும் கூக்குரலும் நிரம்பியிருந்தது அந்த ஆஸ்பத்திரியின் மைதானம்….

இதுவா அதுவா மற்றதாயிருக்குமோ என்று ஒவ்வொரு உடலும் புரட்டிப்பார்க்கப்பட்டது. சிதறிப்போன உடல்களை எங்கிருந்து கண்டு பிடிப்பது. உடல்களே இல்லாத மரணமும் நிகழ்ந்தது. அத்தனையும் பள்ளிக் கூடப்பிள்ளைகள் விடலைகள் எந்தவிதமான அரசியல் விருப்புவெறுப்பும் அற்றவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசினார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். வேறென்ன பாவம் செய்தார்கள் மரணம் சுவடுகளற்று நிகழ்த்திப்போயிருந்த கொடுரம் அது.

சில மணிநேரங்களுக்கு முன்னர் நிறைய நம்பிக்கைகளோடு இருந்தவர்கள் மரணத்தை நினைத்திருக்கவே மாட்டார்கள். ஏன் நினைக்கிறார்கள் யாராவது விடிய எழும்பினவுடன் மரணத்தையா நினைக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது அன்றைக்கு பிற்நதநாளாய் இருக்கலாம். துயர் நினைவுகளைத் தாங்கியபடி எழுந்திருக்கிற வயதா? எல்லாம் விடலைகள் கனவுகள் கொழுந்து விட்டெரியும் வயசுதானே அவர்களுக்கு...

அவர்கள் ஏன் மரணத்தை நினைக்கப்போகிறார்கள். இப்போது உயிரற்ற உடல்களின் குவியல்களுள் கனவுகளற்று கிடக்கிறார்கள். அவர்களது கனவுகளையும் உயிர்களையும் கிபிர்க்குண்டுகள் கொண்டு போயின…

2.
நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம் புத்தகத்தில் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. எதற்கு அவர்கள் இதனைக் கண்டு பிடித்தார்கள். எங்கள் மீது குண்டுபோடவா? எத்தனை விதம்விதமான விமானங்களின் குண்டுவீசும் திறன்களை சமாளித்து வந்திருக்கிறோம். அவ்ரோ, புக்காரா, சுப்பர்சொனிக், கிபிர் இப்படி விமானங்களை பறக்கும் ஒரு அதிசய கொடுரமிருகம் போலவே  அறிந்திருக்கிறோம். எனது பிள்ளைப்பருவங்களிலே நான் மிகமுக்கியமாக பயப்படுகிற இரண்டு விசயங்கள் ஒன்று ஆவிகள் மற்றது கிபிர்.

ஆவிகள் நாவல் மரத்தமடியில் மத்தியானம் 12மணிக்குப்போனாலோ அல்லது இரவு 6மணிக்கு மேல் எந்தக்கணத்திலுமோ தாக்ககூடியவையாயிருந்தன எனது எண்ணங்களில். ஆனால் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவைதான் ஆவிகளைவிடவும் கொடுமையானவையாக இருந்தன. கற்பனைப்பரப்பிற்கு வெளியிலும் துன்பம் விளைவிப்பவையாக இருந்தன.

எந்த நேரத்திலும். விமானத்தின் ஓசை மரணத்தின் குரல் போல கிராமத்தினூடே பரவும், தொற்றிக்கொள்ளும் பரபரப்பினிடையயே பதுங்கித் தொலைப்போம். உயரின் துடிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்ட கணங்கள் அவை. முன்பெல்லாம் விமானங்கள் வருகின்ற ஒரு இரைச்சல் முன்னதாகவே வந்து விடும் அதாவது ஒலியைவிட வேகம் குறைந்த விமானங்கள் அவை. எமக்கு அவகாசம் நிறைய இருக்கும் பதுங்கிக்கொள்வதற்கு.

பிறகு மிகை ஒலி விமானங்கள் வந்தன. அவை எந்தவிதமான அவகாசத்தையும் எமக்கு தருவதேயில்லை. மரணபயம் அறிவிக்கப்படாமல் வந்தது. சாவுக்குத் தயாராவதற்கான அவகாசத்தைக்கூட அவை எங்களிற்கு வழங்கவில்லை.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. சுப்பசொனிக் விமானங்கள் கிளிநொச்சியில் முதல் முதல் தாக்குதல் நடத்திய நாள். எங்கள் வீட்டுக்கு மேல்தானே குண்டு விழுந்தது. முதல் குண்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் விழுந்தது. வெடித்தபிறகுதான் சத்தமே கேட்டது. வித்தியாசமான உறுமலாக இருந்தது.

நானும் தங்கச்சியும் கொண்டல் மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தோம். வீரிட்டலறியபடி எழுந்தோடிய திடுக்கிடும் கணங்கள் இப்போது வரைக்கும் திகிலூட்டும். வாழ்வின் முக்கியமான சில உணர்ச்சிகள் அப்படியே உறைந்து மனதின் மீட்கக்கூடிய தடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். பிறகு ஏதேதோ திடுக்கிடும் தருணங்களில் ஒரு மௌன இடைவெளியை மனதில் உருவாக்கி தம்மை பிரதியீடு செய்து கொள்ளும்.

அப்படித்தான் இந்த விமானத்தாக்குதல் பற்றிய திடுக்கிடும் கணங்களும் என்னுள் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மீட்டப்படுகிறது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அன்றைக்கு நானும் எனது முழங்காலில் காயப்பட்டேன். தங்கச்சியையும் இழுத்துக்கொண்டு மாமாவீட்டு பங்கருக்கு ஓடினாப்பிறகுதான் என் கால்களின் சூடான இரத்தம் வழிவதை உணர்ந்தேன். பிறது 3 நாள் கழித்து ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய பிறகு வீடிருந்த  இடத்தில் சுப்பசொனிக் தோண்டியிருந்த பெருங்கிடங்கில் தண்ணீர் ஊறிக்கிடந்தது.

போரின் கொடும் கணங்களில் தாகித்தலையும் போர் வெறியர்களின் தாகம் தீர்த்திருக்குமா அது. எனது காலில் தையல் போட்டபோது அய்யோ என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் என்று நான் அழுத கண்ணீர்தான் நிரம்பியிருப்பதாய் பட்டது எனக்கு. அல்லது உழைத்துக் கட்டிய வீடு கண்முன்னே தகர்ந்து போய்க்கிடப்பதன் தாளாமையினால் அம்மாவின் மனம் அழுத அழுகையா? எது வென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் இப்போதும்…. 


3.
அன்றைக்கு நடந்த விமானத்தாக்குதலுக்குப் பிறகு முல்லைத்தீவில் சில பள்ளிக்கூடங்களில் உயர்தர வகுப்பில் படிக்க ஆட்களே இல்லாமல் போனது. அவர்களது வகுப்பறைச்சுவர்களில் அவர்களது சிரிப்புகள் இன்றைக்கும் எதிரொலிப்பதாய் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சில வாங்குமேசைகளில் வட்டாரிகளால் அவர்கள் எழுதிப்போயிருந்த பெயர்கள் நினைவுச் சின்னங்களாய் மாறிப்போயின.

யாரோ ஓருத்தியின் கவிதைக்கு தேசிய மட்டத்தில் பரிசு கிடைத்திருப்பதாய் அவளது அஞ்சலிக் கவிதை அழுதது. அவளது மரணத்தை அவளுக்கு வழங்கிய ஜனாதிபதியே பரிசையும் அவளுக்கு வழங்கியிருப்பார். ஒரு வேளை அவள் அதை மறுதலித்தும் இருக்கலாம். அன்றைக்கு விரல்கள் தாண்டிய எண்ணிக்கைகளில் நிரம்பிய  கல்லறைகளின்மேல் துளித்துளியாய் வீழ்ந்து மண்கரைத்த கண்ணீர் துளிகளிடமும் வேசமில்லாத சோகம் இருந்தது.

மரணத்தின் வாசனை நுகர்ந்த காயப்பட்ட பெண்பிள்ளைகள் விறைத்துப்போயிருந்தார்கள். ஒரு அப்பா கத்தி அழுகிறார் நான் என்ன செய்யப்போறேன் என்ர பிள்ளைக்கு கையில்லாமப்போச்சே.. இன்னொருத்திக்கு இரண்டு கால்களும் இல்லை வயது பதினேழு செத்துப்போயிருக்கலாம்.. என்கிறாள்.... செத்துப்போயிருக்கலாம் தானோ?...

கீறீச்ச்ச்ச்;…… என்று ஸ்ரெச்சர் தள்ளும் ஒலி வைத்தியசாலையின் சுவர்களில் தெறிக்க. ஐயோ கிபிர் கிபிர் கட்டிலில் இருந்து குதித்து விட முனைகிறாள் ஒருத்தி. வீரிட்லறியபடி கட்டிலில் இருந்து தவறி விழுகிற ஒருத்தியின் காயம் மறுபடியும் இரத்தமாய்ப்போனது. மறுபடியும் சத்திரசிகிச்சை கூடத்துக்கு அழைத்துப்போகிறார்கள்.

நினைவுகளைக் கடப்பதுதான் எப்போதும் இறுக்கமானது. ஓரு வண்டைப்போல மறுபடியும் மறுபடியும் தலையைச் சுற்றியபடியே அலையும் நினைவுகள் குடைந்து கொண்டேயிருக்கின்றன. செத்துப்போனவர்களைவிடவும் தப்பியவர்களின் மனம் உறைநிலையிருந்து பீறிட்டுக்கிளம்புகையில் தாங்கமுடியாதிருக்கிறது. கேள்விகளை விட மௌனங்களில் ஆழம் மனதில் ஊடுருவித் துளைக்கிறது. மரணத்தின் படிக்கட்டுக்களில் ஏறியவர்களின் நாசிகளின் ஏறிக்கிடக்கும் மரணத்தின் வாசனையை எந்தப்பூக்களாலும் விழுங்கிவிடமுடிவதில்லை. நினைவுகளை எப்படிக்கடப்பது….

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


     இதுவரை:  24712230 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5539 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com