அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விடுதலையின் விரிதளங்கள் - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி  
Tuesday, 17 July 2007

விடுதலையின் விரிதளங்களும்,
வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 05

01.

நான் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதரின் வழி பூக்கோவை  கிரமமாக உள்வாங்கியவன் என்ற அடிப்படையில் நான் முன்வைக்க  இருக்கும் தத்துவம் முழுமையானதா, ஒரு கோட்பாட்டியலைப்  பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதையெல்லாம்  தீர்மானிக்கவேண்டியவர்கள் நீங்களே.... அதை நிராகரிப்பதற்கான  எல்லா உரிமைகளையும் நான் உங்களுக்கு முன்கூட்டியே  வழங்கிவிடுகிறேன்.

இது தத்துவார்த்த ரீதியான கோட்பாட்டுரீதியான ஒரு முற்போக்கான  ஈழத்தமிழ்ச் சமுகத்தைக் கனவு கண்டு "விடுதலை" என்ற  நூலைப்படைத்த அன்ரன்பாலசிங்கம் என்ற மகத்தான மனிதரின்  முற்றுப் பெறாத உரையாடலை நீடிக்கும் என்பதுடன் அவர்கண்ட  கனவுக்கு ஒரு வடிவத்தையும் கொடுத்திருக்கிறது என்பது  என்னளவில் பெருமிதம்தான்.

ஒரு தத்துவம் - கோட்பாடு - சிந்தனை என்பதன் அடிப்படையை நாம்  கவனமாக உற்று நோக்கி  உள்வாங்கினால் சில உண்மைகள்  தெரியவரும். ஒரு புதிய தத்துவம், ஏற்கனவே உள்ள ஒரு வடிவத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிதைப்பதனூடாகவோ  அல்லது அதை முற்று முழுதாக நிராகரிப்பதனூடாகவோதான்  தோற்றம் பெறுகின்றது.

ஆகவே அந்தப் புதிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு - கிரகிப்பதற்கு அந்தத் தத்துவத்தை மட்டும் கற்பதனூடாகவோ -  உள்வாங்குவதனூடாகவோ  நாம் ஒரு முழுமையை  எய்த முடியாது. எனவே பரந்துபட்ட அறிவும் வாசிப்பும் கற்கையும் நமக்குத்  தேவைப்படுகிறது. அதாவது நாம் தேடும் கோட்பாட்டின் - தத்துவத்தின் சிதைந்த மூலம் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. நாம்  அதைத்தேடும் போது அது வேறு ஒரு கோட்பாட்டின் - தத்துவத்தின் சிதைவாய் எமக்கு அறிமுகமாகிறது. அதிலிருந்து இன்னொன்று........

ஒரு சங்கிலித் தொடராய்- ஒரு சிக்கலான வலைப்பின்னலாய் எமது  தேடல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. என்றுமே நாம் ஒரு  முடிவைக்கண்டடைய முடியாது என்ற பேருண்மை எமக்கு  இறுதியில் தெரிய வரும். முடிவில் அது ஒரு பிரபஞ்ச உலகமாய்  எமக்குக் காட்சியளிக்கிறது. அதுதான் தத்துவ உலகத்தின்  சூக்குமமும்கூட.

முடிவை எய்தாத இந்த தேடல்தான் ஒரு மனிதனை  முழுமையாக்குகிறது- மீண்டும் மீண்டும் அவனைப்  புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. மனிதன் என்னும் பூகோளப்  பிராணியின் பூவுலக இருப்பே இத் தேடலில்தான்  மையங்கொண்டுள்ளது. தேடுவதற்கு ஒன்றும் இல்லாத போது நாம்  சடங்களாகிவிடுகிறோம். வாழ்வின் அர்த்தத்தை  இழந்தவர்களாகிவிடுகிறோம். மனித இருப்பையும் மனித வாழ்வையும் அர்த்தப்படுத்துவதே இத்தகைய தேடல்தான்.

மனித வாழ்வின் இந்தப் பேருண்மையை ஒரு மனிதன்  உணரும்போது அவன் முழுமையடைகிறான். அந்த மனிதன்  சார்ந்திருக்கும் இனக்குழுமத்தின் குறிப்பிட்ட விழுக்காடு சதவிகித  மனிதர்கள் இந்தப் பேருண்மையை உணரும்போது அந்த இனமே  முழுமையானதாக முற்போக்கானதாக மாறிவிடுகிறது.

உலக தத்துவமேதைகள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள்  மனித இனம் குறித்துக் கண்ட கனவு இதுதான். இதன் வழி தழுவி  ஈழத்தமிழ்ச் சமுகம் குறித்து அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர்  கண்ட கனவின் வடிவம்தான் "விடுதலை"யாக நம்முன் கிடக்கிறது.

ஒரு போராடும் இனத்திற்குரிய முற்போக்குச் சிந்தனைகளோ  தத்துவதரிசனங்களோ  எமக்கில்லை என்பது கசப்பான நிதர்சனம்.  அதை எமது இனத்திற்குள் விதைக்கும் ஒரு கனவை அவர்  கண்டிருப்பதை "விடுதலை"யுடன் நெருக்கமாக உரையாடியவர்கள்  குறைந்தளவிலேனும் உணரமுடியும்.
அவர் "à®…" எழுதித் தொடக்கிவைத்திருக்கிறார். மிகுதியை நாம்  ஒவ்வொருவரும் எழுதிச்செல்ல வேண்டும் - எடுத்துச்  செல்லவேண்டும். முற்றுப்பெறாத அந்த உரையாடலைத்  தொடருவோம்.....

இது போராடும் இனம் என்ற அடிப்படையில்  விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியும்கூட. எனது சுயவரலாற்றில்  "விடுதலை"யை நான் இணைத்திருப்பதற்குக் காரணம் அது எனது  வாழ்வின் புதிரான விடயங்களுக்கான பதிலை தன்னளவில்  முன்வைக்கிறதென்பதனால் மட்டுமல்ல ஒரு வகையில் நான் வாழும் சம காலத்தின் தனி மனிதன் தொடங்கி சமூகம் வரையிலான  பிரச்சினைகளுக்கும் - புதிர்களுக்கும் தன்னகத்தே பதிலை  கொண்டுள்ளதென்பதனாலும்தான். 

வரலாறு என்பது ஒருகட்டத்தில் தனிமனித வரலாறாகவும் பிறிதொரு  கட்டத்தில் சமுதாயத்தின் வரலாறே தனிமனிதனது வரலாறாகவும்  இருக்கிறது. வரலாறு என்பதற்கு சிக்கலான விளக்கங்களும் பல  பரிமாணங்களும் தத்துவாசிரியர்களால் கொடுக்கப்படுகின்றன.   இதைத்தான் பிரபல ஜேர்மனிய தத்துவஅறிஞர் கேகலின் இயங்கியல்  தத்துவம் பேசுகிறது. எனவே எனது வாழ்வையும் "விடுதலை"யின்  தத்துவங்களையும் பொருத்திப்பார்த்து அலசும் எனது  சுயவரலாற்றைப் புரிந்து கொள்வதென்பது ஒரு வகையில் நீங்கள்  உங்களையே புரிதல் என்பதாக இருக்கிறது. இது ஒரு வகையில்  ஈழத்தமிழினத்தின் ஒரு கட்ட வரலாறாகவும் இருக்கிறது. குறிப்பாக  போராடும் இனம் என்ற வகையில் "வரலாறு" என்பதற்கான ஒரு  மாறுபட்ட தத்துவார்த்த விளக்கம் ஒன்றையும் பெற்றுக்கொள்ளலாம்  என நம்புகிறேன்.

அதாவது நான் ஒரு குறியீடு மட்டுமே. ஒரு ஈழத்தமிழ் உயிரி சம  காலத்தில் எதிர்கொள்ளும் சமூக வாழ்வியற் பிரச்சினைகளைத்தான்  நான் எனது தனி வரலாறாக முன்வைக்கிறேன். அது உங்களது  வரலாறும்கூட.

இதன் ஒட்டுமொத்த - முழுமையான புரிதலுக்கு முதலில் நாம்  "விடுதலையை" ஒரு பொதுத்தளத்தில் வைத்து புரிந்துகொள்ள  முயற்சிக்கவேண்டும்.
எனவே நாம் "விடுதலை"க்குள் நுழைவோம்.

02.

முதலில் "விடுதலை" பேசும் தத்துவங்களையும்  தத்துவாசிரியர்களையும் மேலோட்டமாகப் பார்ப்போம்.

ஹீசேளின் உணர்வாய்வுத் தத்துவம் (Husserl's Phenomenological  Philosophy) கைடேகரின் இருப்பியம் (Heidegger's Existentialism)  ஹேகலின் இயங்கியல் ( Hegal's Dialectics) பிராய்டின் மனப்பகுப்பாய்வு ( Freud's Phycho Anlysis) மாக்சின் வரலாற்றுப் பொருளியம் (Marx's  Historical Materialism) ஆகியவை இவற்றுள்  முக்கியமானவை.

இது தவிர்ந்து பல்துறை விற்பன்னர்களான மிசேல் பூக்கோ, ழான்  போல் சர்த்தர் ஆகியோரும் "விடுதலை"யில் மிகப் பிரதான  பாத்திரத்தை வகிக்கிறார்கள். மேலும் அல்தூசர், நீட்சே, அல்பேட்  காம்யு, நோம் சோம்ஸ்கி, பிரான்சுவா புக்குயாமா, சாமுவேல்  ஹன்டிங்ரன் பற்றிய சிறிய ஆனால் செறிவான ஆழமான தரிசனம்  விடுதலையில் கிடக்கிறது.  மற்றும் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தியுடன்  யுங் சாங் பற்றிய இரு கட்டுரைகளும் இடம் பிடித்துள்ளன.
விடுதலை பேசும் தத்துவ உலகம் இதுதான். இந்த பூடக உலகத்தை  அன்ரன் பாலசிங்கம் பிரித்துத் தொகுத்துள்ள அமைப்பியல்பாங்கு  குறிப்பிட்டுப் பாராட்டப்டவேண்டிய ஒன்று.

"மனிதனைத்தேடும் மனிதன்" என்ற  சற்றே பூடகமான ஆனால்  தெளிவான கட்டுரை ஒன்றுடன் தொடங்கும் "விடுதலை"யின்  பயணம், "மனிதத்துவம்: சார்த்தர் பற்றிய அறிமுகம்" என்ற இருப்பிய  தரிசனத்துடன் ஒரு முற்றுப்பெறாத ஒரு உரையாடலாக முடிவுக்கு   வருகிறது.

சிக்மண்ட் பிராய்ட்டின் உளப்பகுப்பாய்வில் ஆரம்பித்து நகரும்  "விடுதலை"யின் இயக்கத்தை சார்த்தரின் மனிதத்துவ, இருப்பிய  தத்துவத்தில் கொண்டே நிறுத்தியிருக்கும் அன்ரன் பாலசிங்கத்தின்  இந்த உத்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கனவே தத்துவ  உலகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்தப் பாராட்டின் பொருள்  புரியும்.

ஏற்கனவே ஓரளவு தத்துவ பரிச்சயங்கள் இருந்தும் ஆனால் வாழ்வு  குறித்து நம்பிக்கையிழந்தவனாக, மனித வாழ்வு குறித்த ஆதாரமான  கேள்விகளுக்கு பதில் தேடியவனாக எந்தப் பாதையும் தெரியாமல்  வழியும் புரியாமல் திருவிழாவில் காணாமல்போன குழந்தைமாதிரி  திகைத்து நின்ற என்னை, ஒழுங்கற்றும் கட்டற்றும் இருந்த  மனிதர்கள் குறித்த எனது விசாரணையை ஒரு ஒழுங்குக்குள்  கொண்டுவந்ததன் வழிதான் "விடுதலை" என்னளவில்  முக்கியத்துவமாகிறது.
அதுதான் மேற்குறித்த பாராட்டும். ஏனெனில்  தத்துவ உலகத்தை  தரிசிக்க முற்படும் ஒருவருக்கு, அதை எங்கிருந்து  தொடங்குவதென்பதுதான் முதற் பிரச்சினையே!

ஆனால் "விடுதலை" இதை மிகச் சுலபமாகத் தாண்டி தன்னை  நெருங்கும் வாசகனை  ஒரு தாயைப்போல் ஆரத்தழுவி  அணைத்துச்செல்கிறது.

இதனூடாக "விடுதலை" தன் முதல் வெற்றியை அதன்  வடிவ ஒழுங்கிலேயே மிக எளிதாகச் சாதித்துவிடுகிறது.


03.

அன்ரன் பாலசிங்கம் காட்டும் வழியிலேயே நாம் அந்த தத்துவ  உலகத்தைத் தரிசிப்போம். சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud)  விடுதலை பேசும் முதல் தத்துவ அறிஞர். விடுதலையில் இவரது  உளப்பகுப்பாய்வு (Psychoanalysisp) தத்துவம் ஏன் முதல்  பேசப்படுகின்றதென்பதை நாம் முதலில் கவனிப்போம்.

"மனிதன் என்பவன் இயற்கையின் குழந்தை. இயற்கை என்ற  மாபெரும் கலைஞனால் படைக்கப்பட்ட ஒரு கலை வடிவம் - உயிர்  வடிவம். இயற்கையின் கருவகத்துடன் மனிதனின் தொப்புள்கொடி  பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஒரு புறம், இயற்கையின் மடியில்  வேர் பதிந்து நிற்பவனாகவும், மறுபுறம் சமூகப்பிறவியாகவும்,  சமூக வாழ்வியக்கத்தில் உருவாக்கம் பெறுபவனாகவும், இருமுகப்  பரிமாணத்தில் மனிதவாழ்வு அமைகிறது." என்று அன்ரன் பாலசிங்கம் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வரையறை செய்கிறார்.  தொடர்ந்து மனிதனை உணர்சிமயமானவன் என்றும்  இயல்புணர்ச்சிகள் ((Instincts) மனிதனை ஆட்டிப்படைப்பதாகவும்  குறிப்பிடுகிறார்.
இதன் மையமாக "பாலுணர்ச்சி" இருப்பதாகவும் அது ஒரு ஜீவ  சக்தியாக  எல்லா உயிரினங்களையும் இயங்கவைப்பதாகவும் -  உயிர்களை மீளாக்கம் செய்வதாகவும், அது படைத்தலின் தவிர்க்க  முடியாத நியதி என்றும் தொடர்கிறார்.

இதைத்தான் உளவியல்மேதையான சிக்மண்ட் பிராய்ட் Libido, Life  force, Eros  என்று விபரிக்க முனைந்ததை சுட்டியும் காட்டுகிறார்.

இதனூடாக பாலியல் உணர்வுகளை மையமாகக் கொண்டு  மனிதனையும் மனிதவாழ்வையும் விசாரணை செய்த சிக்மண்ட்  பிராய்டின் உளப்பகுப்பாய்வு தத்துவத்தை அன்ரன் பாலசிங்கம்  அறிமுகம் செய்ய முயல்கிறார்.

மனித வாழ்வை விசாரணை செய்வதற்கு எத்தனையோ தத்துவங்கள்  இருக்கும்போது ஏன் ஒரு பாலியல் தத்துவத்தை அன்ரன் பாலசிங்கம் முதன்மையானதாகக் கையிலெடுத்திருக்கிறார் என்ற கேள்வி  உங்களில் பலருக்குத் தோன்றலாம்.

ஏனெனில் நாம் பாலியல் எச்சங்கள்தான். பாலுணர்வு இல்லாமல்  நாமில்லை - மனித இனமே இல்லை. உயிரினங்களின்  தோற்றமூலமே இதுதான்.

மனிதனின் தோற்றம், வாழ்வு பற்றிப் பேசும் விஞ்ஞானங்கள்  மட்டுமல்ல மதங்கள் வழி பரவிய புராணங்கள், ஐதீகங்களும் பாலியல் கதைகளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. ஆதாம் - ஏவாள்  கதையிலிருந்து சிவன் - சக்தி கதைகள் வரை மதம் கடந்து இது  பரவிக்கிடக்கிறது.
ஆனால் விசித்திரமாக இந்த மதங்கள் பாலுணர்வை ஒரு  குற்றமாகவும் அதிலிருந்து மனிதர்களை மீட்பதாகவும்  சொல்லிக்கொண்டு முரணாக தமது மதங்களினூடாக நேரடியாகவும்  மறைமுகமாகவும் அதை ஒரு கேளிக்கையாகவும்  முன்வைக்கின்றன.

மதங்கள் மட்டுமல்ல அறத்தைபோதிக்கும், பண்பாட்டை ஆராதிக்கும்  நிறுவனங்களும் அவை சார்ந்த தனிமனிதர்களும் ஏன் அறிவுலகங்கள் கூட பாலுணர்வை ஆராய்வதில்லை. மாறாக பாலுணர்வு சார்ந்து  உருவாகும் புதிரை இறுக்குவதிலும் பூடகப்படுத்துவதிலும் அதைக்  கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலுமே  தமது செயற்பாட்டை  வரையறுத்துள்ளார்கள்.

இந்த வகையைச் சாராமல் பாலுணர்வை ஆராயமுடியும் என்பதையும் இதனூடாக மனித வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை கற்பிக்கமுடியும்  என்பதையுமே சில தத்துவவாதிகள் வலியுறுத்துகின்றனர். அதன் வழி சில தத்துவங்களையும் உருவாக்கியுள்ளனர். அத்தகைய ஒன்றுதான்  சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுத் தத்துவம். ப்ராய்ட மிக  முக்கியமான தத்துவ அறிஞர் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

இவரது உளப்பகுப்பாய்வுத்தத்துவம்  மனித மனத்தின் ஆழத்திற்குள்  இருந்து தோண்டியெடுக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல.  சாதாரண விழிப்பு நிலை மனத்திற்கும் (Consciousness) நினைவற்ற  நிலையில் இருக்கும் நனவிலி மனம் (Unconscious Mind) என்ற மனித  மனத்தின் அகவுலகம் ஒன்றின் அடிப்படையிலிருந்தே பிராய்டின் இத்  தத்துவம் கட்டியெழுப்பப்படுகிறது.

பிராய்டின் இந்த நனவிலி மனத்தைப் பேசும்  பகுப்பாய்வுத் தத்துவம்  பற்றி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. "அவரது  உளப் பகுப்பியல் கண்டுபிடிப்பில், அடிமனத்தின் ஆழத்தில் ஒரு  எரிமலை இருந்தது. உணர்ச்சிகளின் நெருப்பலைகளாக அது எரிந்து  கொண்டிருந்தது. அடக்கப்பட்ட ஆசைகளின் அக்கினி நாக்குகள்  நர்த்தனமாட அது குமுறிக்கொண்டிருந்தது. பிராய்டின் ஆழ்மனமானது  கொதிக்கும் உணர்ச்சிகளின் கொப்பறை" என்று மிக எளிமையான  சொற்களில் சிறப்பாக வரையறை செய்கிறார் பாலசிங்கம்.

ஆனால் நனவு மனமானது பண்பாட்டு உலகத்தால்  வனையப்பெற்றதாகவும், நியமங்களிற்கும் ஒழுங்குகளிற்கும்  கட்டுப்பட்டு இயல்புணர்ச்சிகளை தணிக்கை செய்து ஒடுக்கி  விடுவதாகவும் குறிப்பிடும் பாலசிங்கம் தொடர்ந்து இந்த ஆசைகள்  தஞ்சமடையும் இடமே இந்த நனவிலி மனம் என்கிறார். அங்கு அவை தணிந்து அணைந்து போகாமல் சீறறம் கொண்ட பாம்புகளாக சீறி  எழுவதாகவும் எப்படியாவது எந்த வழியிலாவது எந்த  வடிவத்திலாவது
வெளியேற சதா விழைந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயம். சிக்மண்ட் ப்ராய்ட்  தொடர்பாகவும் அவரது உளப்பகுப்பாய்வுத் தத்துவம் தொடர்பாகவும்  ஒரு தனிநூல் எழுதும் நோக்கில் அவரையும் அவரது  தத்துவத்தையும் ஆழமாகவே கற்று வருகிறேன். ப்ராய்ட் மட்டுமல்ல  பிரபல பிராய்டிய சிந்தனையாளரான லக்கான் மற்றும் குஸ்தாவ் யுங் எழுதிய நூல்களையும் அகராதிகளையும் அருகருகே அடுக்கிவைத்து  ஒரு பெரும் யுத்தத்தையே நடத்தி வருகிறேன். ஆனால் இது குறித்த  உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும்,  நூல்களது பருமனும் தடிப்புமே ஆளைத்தடுமாறச்  செய்துவிடுகின்றன. அனேகமான நூல்கள் எனக்கு பல தடவை  தலையணைகளாக மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. நூலின் உள்ளே  நுழையவே முடிவதில்லை. தெரியாத்தனமாக எனது பல்கலைக்கழக  பேராசிரியர் ஒருவரிடம் இது குறித்த நூல்களைக் கேட்டிருந்தேன்.  விளைவு, அவர் எனக்குத் தொடர்ச்சியாக "தலையணைகளை"  வழங்கியபடியே இருக்கிறார்.

Unconscious Mind க்கு பக்கம்பக்கமா விளக்கங்கள் அவற்றுள்  இருக்கிறதேயொழிய ஆனால் ஒருவரால் அதைப்புரிந்து  கொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இந்த Unconscious Mind பற்றிய ஆழமான புரிதலை எனக்கு  ஏற்படுத்தியவர் என்ற பெருமை அன்ரன் பாலசிங்கத்தையே சாரும்.
இப்போது ப்ரய்ட், லக்கான், குஸ்தாவ் யுங் எல்லாம் அன்ரன்  பாலசிங்கம் வழி எனக்குச் சொந்தக்காரர்களாகி விட்டார்கள்.

மேற்படி  ஆழ்மனத்தின் கொந்தளிப்பே கனவுக்காட்சிகளாக  கட்டவிழ்வதாகவும் அதன் கதவுகளைத் திறந்துகொண்டே  ஆழ்மனவுலகைப்  ப்ராய்ட் தரிசித்ததாகவும் பாலசிங்கம்  குறிப்பிடுகிறாhர்.

உணர்ச்சிகள் ஆசைகளாக அடிமனத்திலிருந்து வெளியேற  விழைவதும் அவை நனவு மனத்தில் மறுக்கப்படுவதும்,  மறுக்கப்பபட்ட ஆசைகள் முகமூடிகள் அணிந்து, வேடங்கள் பூண்டு  வேறு வழிகளில் வெளிப்பாடு காண விழைவதும், அதனால் எழும்  நெருக்குவாரங்களும், முரண்பாடுகளும் உளச்சிக்கல்களாகவும் ,  மனக்கோளாறுகளாகவும், ஆளுமைச்சிதைவுகளாகவும் விபரீதத்  தோற்றம் கொள்வதாகவும் உளப்பகுப்பாய்வின் நீட்சியை திறம்பட  விபரிக்கிறாhர் பாலசிங்கம்.

பிராய்டின் இத்தத்துவம் ஆழ்மனத்து அசைவியக்கத்துடன்  நின்றுவிடாமல் மனிதனின் கலை பண்பாட்டு உலகத்திற்கும், மனித  நாகரிகத்தின் தோற்றத்திற்கும் விசித்திரமான விளக்கங்களைக்  கொடுக்க முனைவதாகக் குறிப்பிடும் பாலசிங்கம் ஆழ்மனத்தில்  முடங்கிக் கிடக்கும் ஆசைகள் கனவுலகத்தை சிருஸ்டித்து  வெளிப்பாடு காண விளைவது போல், நனவு மனமும் விழிப்பு  நிலையில், கற்பனா உலகில் பிரவேசிக்கிறது. கற்பனை வடிவில்  மனிதன் விழித்துக்கொண்டு காணும் கனவுகள் புராணங்களாகக்,  காவியங்களாக, இலக்கியங்களாக கலைவடிவம் பெறுவதாகவும்,  மனிதனின் அடக்கப்பட்ட பாலுணர்வு ஆசைகள் இன்பநுகர்ச்சி என்ற  அதன் இயல்பான இலக்கிலிருந்து விடுபட்டு, கலாசிருஸ்டிப்பு என்ற  உன்னத வெளிப்பாடாக உயர் நிலைமாற்றம் (Sublimation)  பெறுவதாகவும் விபரிக்கிறார்.

ஆதாம்-ஏவாள், சிவன்-சக்தி கதைகள் இ;ப்படித்தான் உருவாகியது  போலும்.


04.

இந்த இடத்தில்தான் "விடுதலையும்" சிக்மண்ட் ப்ராய்டும்  தனிமனிதனான என்னுடன் இடைவெட்டும் மையம் ஒன்று  உருவாகிறது. எனது சுயவரலாற்று நூலில் இந்த Sublimation குறித்து  எழுதியிருக்கிறேன் என்பதை விட பிரித்து மேய்ந்து  வைத்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். அது குறித்து  இங்கு தொடர்ந்து எழுதுவது வெளியீட்டாளர்களுக்கு சங்கடத்தைத்  தரலாம் என்ற வகையில் தவிர்த்துக்கொள்கிறேன். ஏனெனில்  ஈழத்தமிழ் வாசகப்பரப்பிற்கு அந்த எழுத்துக்கள் பீதியையும்  கிலியையும் ஏற்படுத்தக்கூடியவை. தமிழகப் பரப்பில் ஓரளவிற்கு  அந்த எழுத்துக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. 

பாலியல்உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவமாறுபாடுகள்,  பாலியல் பதிலீடுகள் குறித்து தர்க்கமான ஆய்வு முறைமை  ஒன்றையே நான் என்நூலில் முயன்று பார்த்துள்ளேன். ஏனெனில்  ஈழத்தமிழ்ச் சூழலில் பாலியல் அளவிற்கதிகமாகவே  பூடகப்படுத்தப்பட்டுள்ளதும் அதே சமயம் குற்றங்களின் மூலமாய்  அது இருக்கின்றதென்பதனாலும் இந்த ஆய்வை செய்துள்ளேன்.

பெண்ணுடலை வெறுத்த பட்டினத்தாரிலிருந்து பெண்ணுடலைப்  போகப்பொருளாக்கிய மார்க்கே து சாட் வரை இதை நீட்டியுள்ளேன்.  ஏனெனில் எல்லாமே பாலுணர்வை ஆணாதிக்கப் பரப்பில் வைத்தே  விளங்கப்படுத்த முற்படுகின்றன. ஆனால் பெண்ணியம் சாhந்து  பெண்ணுடல் சார்ந்து ஒரு பார்வையை நான் பதிவு செய்திருக்கிறேன்.
 
இந்த இடத்தில் மார்க்கே து சாட் (Marquis de Sade) பற்றி ஒரு சிறு  குறிப்பு. "சாடிசம்" என்று சொல்லே இவரிலிருந்துதான் பிறந்தது.  வன்கலவி, பாலியல் சித்திரவதை, கொலை என்று தனது  எழுத்துக்களை மட்டுமல்ல அதைத் தனது வாழ்வியல் நெறியாகவே  கடைப்பிடித்தவர்.

ஒரு நாள் எதேச்சையாக பல்கலைக்கழக நூலகத்தில் நேரத்தை  செலவிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கட்டுரை வாசிக்கக்கிடைத்தது.  அது யார் எழுதியது என்று முதலில் தெரியவில்லை. Marquis de Sade   இன் எழுத்துக்கள் தடைசெய்யப்படுவதை எதிர்த்து எழுதப்பட்ட மிக  ஆழமான கட்டுரை அது.

பின்பு ஒரு நாள் எனது விரிவுரையாளர் எதேச்சையாக குறிப்பிட்ட  தகவல் ஒன்றின் மூலம்தான் தெரியவந்தது அது பிரபல  இருத்தலியல்வாதியும் பெண்ணிய சிந்தனையாளருமான சிமோன் தி  பொவா எழுதியது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஒரு  பெண்ணிய சிந்தனையாளரால் எந்த வகையில் மார்கே து சாட்டை  கொண்டாடமுடியும். அதன் பிறகு விரிவாக ஆராய்ந்தபோது வேறு  ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

தடைசெய்யப்பட்டிருந்த அவரது "The 120 days of Sodom"  என்ற நூலை மீண்டும் பதிப்பித்ததே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பிரபல உளவியற்  சிகிச்சையாளரான டாக்டர் இவான் பிளோக் என்பது. அத்துடன் பின்  அமைப்பியல் உளவியலாளரான லக்கான் சேட்டின் "The philosophy in  bedroom" நாவலை தலையில் வைத்துக் கொண்டாடும் கதையும்.  போதாதற்க மிசேல் பூக்கோ, ரோலண்ட் பார்த் போன்றவர்களும்  தத்தமது பாhர்வை சார்ந்து சேட்டை சில நிபந்தனைகளுடன்  ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஈழத்தமிழ்ச்சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாத மனிதராக  marquis de sade  இருந்தபோதிலும் நான் அவரை என்நூலில் ஆய்வு  செய்திருப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று இயற்கை - மனிதன்-  அறம் (Nature- Human -Ethics) என்னும் தத்துவ உரையாடலில் மிக  முக்கியமான பங்களிப்பை இவர் செய்துள்ளதாக நான் கருதுவதால்.  இரண்டு  ஒரு தத்துவத்தை (தத்துவம் என்றில்லை எதுவுமே..)  முழுமையாக ஆராயாமல் அதை நிராகரிப்பதென்பதுடன் நான்  என்றுமே முரண்படுகிறபடியால். இந்த ஆய்வுகள்   'விடுதலை"யினூடாக பாலசிங்கம் விட்டுச்சென்ற நிரப்பப்படாத  பக்கங்களை இட்டுநிரப்புவதாக நான் நம்புகிறேன். Simone de Beauvoir,  Edward Said,  Jacques Derrida,  Roland Barthes  என்று விடுதலையின்  நீட்சியை எழுதிச் சென்றுள்ளேன்.

அதிர்ச்சி அடையாதீர்கள் எனது நூலின் முடிவில் நான் சிக்மண்ட்  பிராய்டையே அவரது "உளப்பகுப்பாய்வத் தத்துவத்தை"  தூக்கிக்கொண்டு வெளியேறச் சொல்லியிருக்கிறேன்.

ஏனெனில் போராடும் ஒரு இனக்குழுமத்தில் பாலியல் விதிகளின்  அளவீடு வரையறை செய்யப்படவேண்டியதாக இருக்கிறது. மிசேல்  பூக்கோ சிரிப்பது கேட்கிறது. தன்னைப்போற்றி நுண்ணதிகாரங்களைப்  பற்றி விரிவாகப் பேசிய "பரணி கிருஸ்ணரஜனி"யா இந்த  அதிகாரத்தை போதிப்பது...

பூக்கோ தயவு செய்து கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான்குறிப்பிட்ட பின்வரும் பந்தியைப் படியுங்கள்... "ஒரு தத்துவம் - கோட்பாடு -  சிந்தனை என்பதன் அடிப்படையை நாம் கவனமாக உற்று நோக்கி   உள்வாங்கினால் சில உண்மைகள் தெரியவரும். ஒரு புதிய தத்துவம், ஏற்கனவே உள்ள ஒரு வடிவத்தை பகுதியாகவோ அல்லது  முழுமையாகவோ சிதைப்பதனூடாகவோ அல்லது அதை முற்று  முழுதாக நிராகரிப்பதனூடாகவோதான் தோற்றம் பெறுகின்றது."

என்னளவில் என்றுமே நான் உங்களின் சிஸ்யன்தான். ஆனால்  போராடும் இனம் என்னும் போது உங்களைக் கொஞ்சமாகவும்  சிக்மண்ட் பிராய்டை சற்று அதிகமாகவும் சிதைக்க வேண்டியுள்ளது.  உங்களுக்குத் தெரியாததா பூக்கோ!

ஒரு புதிய தத்துவத்தின் அடிப்படையே இதுதானே....


05.

அத்துடன் ஒரு தத்துவத்தை - கோட்பாட்டை அப்படியே நாம்  பிரயோகித்துப் (apply) பார்க்கமுடியாது. ஏனெனில் பெரும்பாலான  தத்துவங்கள் மேலைத்தேய சூழலிலிருந்தே தோற்றம் பெற்றவை.  அத்துடன் மேற்கிலேயே பல தத்துவங்கள் இன்று  கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. எனவே கீழைத் தேசங்களில் அதன்  பிரயோகம் வேறுபடுகிறது. அதுவும் விடுதலை வேண்டிப் போராடும்  நாடுகளில் நிலமை தலைகீழ்தான். இதை விரிவாக ஆராய்வதற்கு   சிக்மண்ட் ப்பராய்ட்டின் "உளப்பகுப்பாய்வுத் தத்துவம்" குறித்து  அன்ரன்பாலசிங்கம் குறிப்பிடும் வேறு சில முக்கிய பகுதிகளைப்  பார்ப்போம்.

எல்லாம் அது எல்லாவற்றிலும் அது. எல்லாவற்றையும் அசைப்பது  அது. அதுவின்றி எதுவுமில்லை என்ற வகையில் பிராய்டின்  உளப்பகுப்பியல் பாலுணர்ச்சிக்கு அலாதியான முக்கியத்துவம்  கொhடுத்து, அதன் மையத்திலிருந்தே மனித மனம், மனித வாழ்வு,  மனிதப் பண்பாடு என சகலவற்றிற்கும்.
விளக்கமும் அளிக்க முற்படுவதாகக் குறிப்பிடும் பாலசிங்கம் இந்த  உளவியல் தத்துவம் மனிதனை ஆசையின் பிராணியாக, இன்பத்தின்  பித்தனாக சித்தரிக்க முனைவதாகவும் ஒரு குற்றம் சாட்டும்  தொனியில்  குறிப்பிடுகிறார்.

மனிதன் இயற்கையின் படைப்பு என்பதால் மனித உயிர்வாழ்வு  இயற்கையின் நிர்பந்த சக்திகளுக்கு உட்பட்டிருப்பதால்  இயல்புணர்ச்சிகளாக எழும் பாலெழுச்சியின் அழுத்தத்தையும்  வீச்சையும், மனிதமனதிலும் மனித உறவுகளிலும் அது செலுத்தும்  தாக்கத்தையும் குறைத்து மதிப்பிடமுடியாது என்று கூறும்  பாலசிங்கம் ஆயினும் பாலுணர்ச்சி உந்துதலை மனிதத்தின் சாரமாகக் கற்பித்து மனித வாழ்விற்கும் மனித பண்பாட்டு வரலாற்றிற்கும்  ஒருமுகப் பரிமாணத்தில் விளக்கம் அளித்துவிட முடியாhது என்று  பிராய்டின் உளப்பகுப்பாய்வை  சாடவும் தொடங்குகிறார்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய பதிவு. "விடுதலை" யில் அன்ரன்  பாலசிங்கம் எந்த இடத்திலும் தன்னை ஒரு போராடும் இனத்தின்  பிரதிநிதியாக முன்னிறுத்தவில்லை. ஆனால் பல இடங்களில் கூர்ந்து  கவனித்தால் அவரது போராட்டத்தின் பங்கை அவதானிக்கலாம்.  அத்தகைய ஒரு இடம்தான் இது.

ப்ராய்ட், உணர்ச்சிமயமான மனிதனைக் கண்டார். மனிதன்  இயற்கையோடு ஒன்றியிருப்பதைப் பார்த்தார். மனிதனின் பரிணாம  வேர் இயற்கையில் புதைந்து கிடப்பதை அவதானித்தார் என்னும்  பாலசிங்கம் ஆயினும் அந்தக் கண்டுபிடிப்பை நம்பமுடியாத  கற்பனாவாத எல்லைகள் வரை வரிவுபடுத்தி மிகைப்படுத்திவிட்டார்  என்பதுடன் பிராய்டடின் தேடுதல் மனிதனின் முழுமையான  முகத்தைக் காட்டவில்லை என்றும் மனிதனை ஒரு  சமூகப்பிறவியாக, சமூக உறவுகளால் பிணைக்கப்பட்டு , சமூக  வாழ்வியக்கத்தால் உருவாக்கப்படுபவனாக அவர் பார்க்கவில்லை  என்றும் தனது முடிவை அறிவிக்கிறாhர் பாலசிங்கம்.

பாலுணர்வை மையமாக வைத்து ப்ராய்ட் சித்தரித்துக்காட்டும் ஆசை  உலகத்தின் (Realm of desire) நிர்ப்பந்தங்களைக் காட்டிலும் மனிதனின்  உயிர்வாழ்வை நிர்ணயிக்கும் இன்னொரு உலகமும் இருக்கிறது.  அதுதான் தேவை உலகம் ( ( Realm of needs). அதன் முன் ப்ராய்ட்  தோற்றுப்போனவராகிறார். அதுவும் பசி,பட்டினி, போர், அவலம்,  இடப்பெயர்வு, விடுதலை என்று அல்லலுற்று போராடும் இனம்  ஒன்றின் முன்னால் ப்ராய்ட் மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு பின்  கதவுவெளியே வெளியேறவேண்டியவராகிறார்.

இதுதான் ஒரு தத்துவம் இடம், சூழலுக்கேற்றவகையில்தான் அதன்  பொருத்தப்பாடு சாத்தியம் என்பதை முன்னறிவிக்கிறது. ஆனால்  யாழ்ப்பாணத்தில்  உளவியல் பேசும் சில "அதிமேதாவிகள்" சிக்மண்ட் ப்ராய்டை பொது வெளியில் முன்வைக்க முற்படுகிறார்கள்.  தனிமனிதன் ஒருவனுக்கு எந்தச் சூழலிலும் ப்ராய்டைப்  பொருத்திப்பார்க்கலாம். அது தனிமனித உரிமையும்கூட. அதை  மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசுபவன் நான். ஆனால்  மேற்குறித்த அவலங்களுக்குள்ளாகித் தவிக்கும் ஒரு இனத்திற்கு  ப்ராய்டைக் கொண்டுவந்து பொருத்துவது எவ்வளவு அபத்தம்.

தமது ஆசைகளைத் துறந்து ஆயிரமாயிரம் இளைஞர்களும்  யுவதிகளும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற பூண்டிருக்கும்  தவத்தின் முன்னால் இந்த"அதிமேதாவிகள்" பேசும் உளவியல்  எத்தகையது.. போரினால் குடும்ப அமைப்புக்கள் குலைந்து  அங்கொன்றும் இங்கொன்றுமாகச்  சிதறி வாழும் ஒரு சூழலில்  "ப்ராய்டின் உளப்பகுப்பாய்வை" நிறுவ முற்படுவது உளவியலா?  இல்லை அரசியலா?

இந்த அவலத்திற்குள்ளாகி  மனப்பிறழ்வடையும் -  மனப்பிறழ்வடைந்து குற்றங்களை நோக்கி நகரும் மக்களை  அதிலிருந்து மீட்பதும் அதனூடாக அந்த இனத்தின் பண்பாட்டைக்  காப்பதும்தானே ஒரு உளவியல் நிறுவனத்தின் பங்காக  இருக்கமுடியும். போர்ச்சூழலில் ஒரு உளவியல் நிறுவனத்தின்  இருப்பைக் கோருவதே மேற்குறித்த அவலம்தானே..!

குற்றங்களை இழைப்பதும் குற்றவாளிகளைத் தொடர்ந்து  பராமரிப்பதும் அதன் வழியே பொதுவெளியில் போராட்டத்திற்கும்  பண்பாட்டிற்கும் எதிரான ஒரு தத்துவத்தை முன்னிறுத்துவதும், ஒரு  இனத்தையே குற்றம் நிறைந்த சமூகமாக மாற்றுவதும்  நிச்சயமாக   உளவியற்பாற்பட்டதாக இருக்க முடியாது. இது ஒரு வகை  அதிகாரத்தின்பாற்பட்டது - தெளிவான அரசியல் வகமைக்குரியது.

ஒரு போராடும் இனக்குழுமத்தில் இதை அனுமதிப்பதும் தொடர்ந்து  வளரவிடுவதும் அந்த இனத்தின் உளவியலையும் பண்பாட்டையும்  மீளாச்சிதைவுக்குள்ளாக்கும் என்பது மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்கள்  எதிர்பார்க்கும் உளவியற் போரின் (psycological war) தீவிர  விளைவையும் இனத்திற்குள் விதைத்து விடுதலையைப்  பின்னடையச்செய்யும்.

ஏற்கனவே இதன் வழி இவர்களை வளரவிட்டதன் விளைவாகத்தான்  இந்த "அதிமேதாவி"களிடமிருந்து   குழந்தைப்போராளிகள் (Child  Soldgers) போhக்குற்றம் (War Crimes) போன்ற அரிய "கருத்துக்கள்"  சர்வதேசத்திற்குக் கிடைத்து ஒரு விடுதலைப்போராட்டம்  "பயங்கரவாதமாகி" அல்லோலகல்லோலப்படுகிறது.

இது உளவியலில் இருந்து பிறக்கவில்லை. தம்மை  அறிவுஜீவித்தனமாகக் கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்ற  மமதையில் இருந்து பிறக்கிறது. இனி இவர்கள்பாடு கொஞ்சம்  கஸ்டம்தான். ஏனெனில் ஈழத்தமிழ்ச் சமூகம் தன்னைக்கொஞ்சம்  கொஞ்சமாக அறிவுஜீவித்தனமாக வளர்க்கத் தொடங்கிவிட்டது.

எதையும் சூழலுக்கு ஏற்றவகையில்தான் பொருத்திப் பார்க்கமுடியும்.   எந்தத் தத்துவமும் அப்படியே பிரயோகிக்கத் தகுதியற்றவை. அதன்  வடிவத்தை சிதைத்து அதற்கேற்பவே பொருத்திப்பார்க்கமுடியும். அந்த வகையில் பாலசிங்கம் குறிப்பிடுவது போல் பிராய்டடின் தேடுதல,  மனிதனின் முழுமையான முகத்தைக் காட்டவில்லை, மனிதனை  ஒரு சமூகப்பிறவியாக, சமூக உறவுகளால் பிணைக்கப்பட்டு , சமூக  வாழ்வியக்கத்தால் உருவாக்கப்படுபவனாக அவர் பார்க்கவில்லை.

அந்த வகையில் பிராய்டின் உளப்பகுப்பாய்வுத்தத்துவம் ஒரு  போராடும் இனத்திற்கு முரணாகவே இருக்கிறது.  வாகரைக்கு,  யாழ்ப்பாணத்திற்கு, காசா (Gaza)விற்கு, டார்பருக்கு ((Darbur)  இத்தத்துவம் பொருந்தாது. ஒரு வேளை அது அடலைட்டுக்கோ,  பாரிசுக்கோ, நியூயோhக்கிற்கோ, லண்டனிற்கோ பொருந்தலாம்.
விரும்புபவர்கள் அங்குபோய் அவற்றைப் பொருத்திப் பார்க்கலாம்.

எனவே ஈழத்தமிழ்ச்சமூகத்திற்கு சிக்மண்ட் ப்ராய்ட் தேவையற்ற  மனிதராகிறார். எல்லாவற்றிலும் பொருத்தமானவர் ஒருவர்  இருக்கிறார். அவர் ழான் போல் சர்த்தர். அவரையும் அவரது தத்துவ  உலகத்தையும் அடுத்தவாரம் தரிசிப்போம்.

கட்டுரையாளரின் தொடர்ப்புக்கு: parani@hotmail.com

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 


     இதுவரை:  25361651 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2712 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com