அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நினைவுப்பெருக்கு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Wednesday, 18 July 2007

செம்பியன் செல்வன்   
 
01.
இடியப்பம், சுண்டல், வடை, அப்பம் இல்லையென்றால் அப்பம், சுண்டல், இடியப்பம், இட்லி அல்லது பிட்டு, சுண்டல், வடை, தோசை இப்படி நான்கைந்து உணவுகளை   ஒரு காலை நேரச்சாப்பாடாகக் கொள்ளும் மனிதர் எனக்கு நண்பராக இருந்தார்.
 
அவருடைய காலை நேரச்சாப்பாடு தினமும் இப்படித்தானிருக்கும். இந்தமாதிரி நான்கைந்து வகைகளை ஒரேநேரத்தில் காலைச் சாப்பாடாக எடுத்துக்கொள்ளும் அவருடைய சாப்பாட்டு முறை எனக்கு இப்போதும் வியப்பாகவே இருக்கிறது.
 
இவ்வளவையும் ஒரு காலைச்சாப்பாடாகக் கொள்ளும் அவர் மற்ற இரண்டு வேளையும் எதையெல்லாம்; எப்படிச்சாப்பிடுவார் என்று நீங்கள் கேட்கக்கூடும். அவர் பெரிய சாப்பாட்டு ராமனாகத்தானிருப்பார் என்று நீங்கள் எண்ணவும் கூடும்.
 
அவர் அப்படி ஒன்றும் பெரிய சாப்பாட்டு ராமனல்ல. ஆனால் சாப்பாட்டுப் பிரியர். விதவிதமாகச் சாப்பிடுவதில் தீராத ஆசை கொண்டவர். அதிலும் சாலைச்சாப்பாட்டில் அவர் சிறு பிள்ளையைப்போல பெரும் ஆசையுடையவராகவே இருந்தார்.
 
அதற்காக அவர் அதிகம் சாப்பிடுவார் என்றில்லை. ஒரு அடை பிட்டு, இரண்டு தோசை, ஒரு சிறிய கிண்ணம் சுண்டல், ஒரு வடை இப்படி ஒவ்வொரு வகையிலும் எடுத்துக்கொள்வார்.
 
சாப்பிட்டு முடிந்தவுடன் ஒரு கப் பால் குடிப்பார்.
 
"காலையில் என்ன சாப்பிட்டீர்கள்" என்று அவரிடம் யாராவது கேட்டால் அவர் என்ன பதிலைச் சொல்வார் என்று பல தடவை யோசித்திருக்கிறேன்.
 
அவருடைய இந்த ஆசைக்கு எந்த வீட்டிலாவது அப்படிச்சமைத்துப்போட முடியுமா. அதுவும் தினமும் ஐந்து ஆறு வகைகளை.
 
அதனால்  தனக்கேற்றமாதிரி கடையில்தான் காலைச்சாப்பாட்டை வைத்துக் கொண்டார். அதுதான் அவருடைய சாப்பாட்டு முறைக்குத் தோதாகவும் இருந்தது. அதுக்கேற்றமாதிரி அவருக்கு சொக்கன் கடையும் வாய்த்தது.
 
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் வடக்கு வீதியில் இருந்தது சொக்கன் கடை. இப்போதும் அது அங்கேதானிருக்கிறது.
 
சொக்கன் கடையில் மூன்று விசயங்களுண்டு. ஒன்று தரமான தேநீர். அதற்கென்றே தனிச்சுவையிருக்கிறது. அது தேநீராக (பிளேன்ரீ) இருக்கலாம். அல்லது பால் தேநீராக இருக்கலாம். சுத்தமான பாலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதற்கென்று தனி ருசியுண்டு.
 
அடுத்தது தரமான சாப்பாடு. அதுவும் சிற்றுண்டிகள். தோசை, இட்லி, பிட்டு, இடியப்பம், அப்பம், வடை, சுண்டல் அல்லது கௌபி எல்லாம் மிகத்தரமாகவே இருக்கும்.
 
மூன்றாவது சொக்கன் கடையின் பகோடாவும் வாழைப்பழமும். ஆகக்குறைந்தது மூன்று நான்கு வகைகளில் ஒரே தரத்தில் பகோடா கிடைக்கும். கடைக்கு வரும் ஆட்கள் பகோடாப் பொதியில்லாமல் படியிறங்குவது அபூர்வம்.
 
யாழ்ப்பாணத்தில் சொக்கன் கடைப் பகோடா அந்தளவுக்குப் பிரபலமாகியிருந்தது. அதேமாதிரி யாழ்ப்பாணத்தின் அத்தனைவகை வாழைப்பழத்தையும் சொக்கன் கடையில் வாங்கலாம்.   புகை அடித்தோ போறணையில் போட்டோ பழுக்க வைக்கும் வழக்கமெல்லாம் கிடையாது.
 
நன்றாக முற்றிக்கனிந்த பழங்கள். பெரிய பழங்கள். தொட்டால் விழக்கூடிய கனிவுடனிருக்கும் பழங்கள். சில பருவங்களில்   கொடிமுந்திரிப் பழங்களும் கிடைக்கும்.
 
இப்படியெல்லாம் பொருந்தியிருக்கிற கடையைத்தான் நண்பர் தன்னுடைய காலைச்சாப்பாட்டுக்குத் தெரிவு செய்திருந்தார். அவருடைய தேர்வு மிகப்பொருத்தமாகவே இருந்தது.
 
சொக்கன் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமுண்டு. தேடிவரும் கூட்டம். சிறிய கடை. அதிலும்; பரபரப்பான இடத்திலல்லாமல் ஒரு ஓரமாக ஒதுக்குப்புறத்தில் இருந்தபோதும் தேடிவரும் வாடிக்கையாளர்.
 
அந்தக்கடையில் அதிகபட்சம் ஐந்து மேசைகள் மட்டுமுண்டு. ஒரே நேரத்தில் இருபது பேர் இருந்து சாப்பிடலாம். ஆனால் முப்பது முப்பந்தைந்து பேருக்கு மேல் கூட்டம் எப்பவுமிருக்கும். காலைக்கும் மதியத்துக்குமிடைப்பட்ட நேரத்தில் மட்டும் கூட்டம் குறைந்திருக்கும்.
 
சொக்கன் கடையில் மாமிசம் எல்லாம் கிடையாது. அது சைவைக்கடை. கைலாச பிள்ளையார் கோவில் வீதியில் கடை இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சொக்கனுக்குச் சைவக்கடை வைத்திருப்பதில்தான் அதிக விருப்பமாக இருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் சைவக்கடைகளுக்குக் கூச்சமில்லாமல் வாடிக்கையாளர்கள் செல்வார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். சைவக்கடையில் சுத்தம்; கூடுதலாக இருக்கும் என்ற அதீத நம்பிக்கை இன்னொரு காரணமாக இருக்கலாம்.
 
எப்படியோ சொக்கன் கடையில் தன்னுடைய காலைச்சாப்பாட்டை வழமையாக்கியிருந்தார் நண்பர். அவர் கடைக்கு வந்தால் "இன்றைக்கு என்ன" என்று மட்டும் கேட்பான் கடைப்பையன்.
 
அவர் பட்டியலைச் சொல்வார். காலைச்சாப்பாட்டில் ஒரு பட்டியலே வைத்திருக்கும் அளவுக்கு அவருடைய சாப்பாட்டு முறை இருந்ததைப் பாருங்கள். கணக்குக் கொப்பியுண்டு. மாதம் முடியக்காசு கொடுப்பார்.
 
கடையில் இதெல்லாம் அவருக்கு  தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன. கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களிடமும் அவர் ஒரு நூதனப் பழக்கமுள்ளவராக அறிமுகமாகியிருந்தார்.
 
எனக்கு அவர் அறிமுகமாகியிருந்த காலத்தில் ஒரு நாள் அவருடன் சொக்கன் கடைக்குப்   போயிருந்தேன். அவர் சாப்பிடும் முறையைப் பார்த்த பின் "ஏன் இப்படி ஒரு விருப்பம்" என்று கேட்டேன்.
 
"காசைக் கொடுத்துச் சாப்பிடுகிறோம் அதில்  விரும்பியதைச் சாப்பிடுவதுதானே" என்று சாதாரணமாகச் சொன்னார். ஆனால் அதுவல்ல அப்படி அவர் சாப்பிட்டதற்குக் காரணம் என்று எனக்குப் பிறகு ஒரு நாள் சொன்னார்.
 
அவர் தன்னுடைய இளவயதிலேயே தாயை இழந்து விட்டார். அவருடைய பாட்டிதான் அவரை வளர்த்தார். பாட்டி தன் பேரனுக்கு செல்லமாக காசு கொடுத்து பள்ளிக்கு அனுப்பியபோது இப்படியொரு சாப்பாட்டுத் தெரிவை அவர் உருவாக்கிக்கொண்டார்.
 
தன்னுடைய சாப்பாட்டு விருப்பங்களைப்பற்றியும் தேர்வு முறைகளைப்பற்றியும் அவர் விவரமாகச் சொன்னார். தன்னுடைய இளப்பிராயத்தின் அந்தரிப்பு நிலைபற்றியும் சொன்னார். அதிலெல்லாம் அவருக்கு வருத்தமோ துக்கமோ இருந்ததாக உணர முடியவில்லை. எந்த உணர்ச்சியுமற்று அவர் அதையெல்லாம் சொல்வார். ஆனால் அவருக்கு அவருடைய பாட்டியின் மீதும் அவருடைய அண்ணாவின் மீதும் அளவற்ற அன்பிருந்தது.
 
இப்படிப் பிறகும் பல வேளைகளில் தன்னுடைய வாழ்வொழுங்கு, நோக்கங்கள், தன்னுடைய விருப்பங்கள், தான்செய்தவை, செய்யவிரும்புபவை, நிறைவேற வேண்டிய ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்.
 
அவர் எதையும் மறைத்துப் பேசாதவர். அப்படிப்பேசத் தெரியாதவர். முன்னறிமுகமில்லாத ஆட்கள் யாரோடும் உடனடியாகவே அவர் நன்றாகப் பரிச்சயமானவரைப் போலப் பழகுவார். அவர்கள் யார், எவர், எப்படியானவர் என்றெல்லாம் பார்க்காமலே தாராளமாகக் கதைக்கத்தொடங்கி விடுவார். இதுதான் செம்பியன் செல்வன்.
 
02.
செம்பியன் செல்வனுடன் நான் அறிமுகமானதும் அப்படித்தான். எண்பதுகளின் முற்பகுதி. அப்போது தலைமறைவு வாழ்க்கையில் என் அடையாளத்தை மறைத்துத்திரிந்தேன். ஆனால் படைப்பாளிகளைச் சந்திப்பதில் பெரும் ஈடுபாடு. அவர்களுடன் பேசுவதில், அவர்களைப்பார்ப்பதில் எல்லாம் ஒருவிதமான கவர்ச்சியும் விருப்பமுமிருந்தது. ஆனால் என்னுடைய நிலைமையில் இந்த விருப்பத்தை முழுதாக நிறைவேற்ற முடியாது.
 
சந்திப்போரிடம் என்னுடைய விவரங்களை என்னுடையதும் அவர்களுடையதுமான பாதுகாப்புக்காக மாற்றியே சொல்லியிருந்தேன். அதேவேளை அதிகம் பேரைச் சந்திப்பதையும் தவிர்த்திருந்தேன். அப்படிச் சந்தித்த சிலரில் செம்பியன் செல்வனும் ஒருவர்.
 
செம்பியனிடமும் என்னைப்பற்றிய வேறுவிதமான தகவல்களையே சொல்லியிருந்தேன்.
 
ஒரு மதியநேரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த இயக்கச்சி மணியத்தின் புத்தகக்கடையில்தான் செம்பியனுடன் முதன்முதலில் பேசினேன். மணியம்தான் அறிமுகப்படுத்திவைத்தார்.
 
அப்போது நான் சில கவிதைகளை மல்லிகையில் எழுதியிருந்தேன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் செம்பியனிடம் சொல்லவில்லை. அவரிடம் எப்படிச் சொல்லமுடியும். நான்தானே என்னுடைய பெயரையே வேறாக மாற்றி வைத்திருக்கிறேன். கவிதைகளை   சொந்தப்பெயரில் எழுதிவந்தேன். ஆனால் பெரிய அறிமுகமெல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் அந்தப்பேச்சை எடுக்கவே முடியாது.
 
பொதுவாக வாசிப்பில் ஈடுபாடு உண்டு என்று சொன்னேன். எந்தமாதிரியான புத்தகங்களை வாசிக்கிறீங்கள் என்று கேட்டார். புரட்சி, விடுதலைப்போராட்டம் சார்ந்த புத்தகங்களையே அப்போது அதிகமாக வாசித்தேன். அதிகமாக என்ன முழுமையாக அவற்றையே வாசித்தேன். அதுதானே என்னுடைய வேலையாகவும் விருப்பமாகவும் இருந்தது.
 
ரஸ்யப்புத்தகங்கள், வியட்நாம், கியூபா, சீனா ஆகிய விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகள் மற்றும் அந்த நாடுகளின் இலக்கியம் போன்றவைதான் கூடுதலான வாசிப்புக்குரியவை. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் வங்கம் மற்றும் தெலுங்கானா போராட்டம் பற்றி வந்த வெளியீடுகளையும் படித்திருந்தேன்.
 
ஆனால் இப்போது அவை எதைப்பற்றியும் சொல்ல முடியாது. அப்படிச்சொல்வது பாதுகாப்பில்லாதது. எனவே அதையும் மறைத்து வேறுபுத்தகங்களாகச் சொன்னேன். ஆனால் அவற்றையும் நான் வாசித்திருந்தேன். என்றபடியால் அவற்றைப்பற்றி தாராளமாக அவருடன் என்னால் பேச முடிந்தது.
 
தமிழில் எனக்கு யாரை எல்லாம் பிடிக்கும் என்றுகேட்டார். புதுமைப்பித்தன் தொடக்கம் உமாவரதராஜன் வரையான ஒரு பட்டியலைச் சொன்னேன். அதில் அவருக்கு சற்றுத்திருப்தி இருந்தது. 'பரவாயில்லை' என்றார்.
 
"ஏன் அதைவிட இப்போது, நாட்டிலிருக்கிற சூழலுக்கேற்றமாதிரி  வாசிக்கவேண்டிய வேறு புத்தகங்களும் இருக்கே. அதை இப்போது கட்டாயம் வாசிக்க வேண்டும்" என்றார்.  அவர் சொன்னது நான் ஏற்கனவே முழுதாக வாசித்துக்கொண்டிருந்த விடுதலைப்   போராட்டம் சார்ந்த புத்தகங்களையே.
 
நான் "படிக்கலாம்" என்றேன். அந்தப்புத்தகங்கள் தன்னிடமும் இருக்கிறது. வேண்டுமானால் தரலாம் என்றார்.
 
நான் அவருடன் அதிகம் அறிமுகமில்லாத ஆள். அன்றுதான் சந்தித்திருக்கிறேன். ஒரு பதினைந்து நிமிடநேர உரையாடல்தான் நடந்திருக்கும். அதற்குள் தன்னுடைய புத்தகங்களை இரவல்தர அவர் துணிந்து விட்டார்.
 
மற்றவர்களின் புத்தகங்களை மடக்குவதில் கெட்டிக்காரர்களாக இருந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் செம்பியன் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராகத் தெரிந்தார்.
 
தேவையென்றால் பிறகு வருகிறேன் என்று சொல்லி அவருடைய முகவரியை வாங்கிக்கொண்டேன். ஆனால் அவருடைய வீட்டை எனக்கு முன்பே தெரியும். அதை நான் காட்டிக்கொள்ளவில்லை.
 
அப்போது நான் நல்லூர் மூத்த வினாயகர் கோவிலுக்கு முன்னாலுள்ள வீட்டில் இருந்தேன். அந்த இடத்தையும் அவருக்குச் சொல்லமுடியாது. சொக்கன் கடை நானிருந்த இடத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் இடையில் இருந்தது. வேண்டுமானால் அவரோ நானோ ஒரு பத்து நிமிட நடையில் கடைக்கு வந்துவிடலாம். ஆனால் அப்போது அப்படியொரு ஏற்பாட்டைச் செய்யவில்லை.
 
அவர் நான் சந்தித்த அந்தப்பதினைந்து நிமிசத்திலும் நிறைய விசயங்களைப்பற்றிப் பேசினார். தேநீர் குடிக்க பக்கத்திலிருந்த கடைக்கு அழைத்துப்போனார். அவருக்கு இளவயதில் ஒரு வாசகன் கிடைத்து விட்ட சந்தோசம். அதிலும் அந்த வாசகனை அப்போதிருந்த சூழலுக்கேற்ற மாதிரி போராட்டம் சார்ந்த வாசிப்பு உலகத்துடன் இணைத்துவிட வேண்டுமென்று விரும்பினார். படு உற்சாகமாக இருந்தார். அவர் அந்தப் புத்தகங்களைப் பற்றியே அந்தச்சந்திப்பிலும் அதன் பிறகான சந்திப்புகளிலும் பேசினார்.
 
மணியத்தின் கடையிலும் அப்போது அந்தப் புத்தகங்கள்தான் அதிகளவில் இருந்தன.
 
இப்படித்தானிருந்தார் செம்பியன் செல்வன். யாருக்கும் எதையும் தூக்கிக் கொடுத்துவிடுவார். அவை திரும்பிவருமா என்றெல்லாம் கொஞ்சம் கூட அக்கறைப்படமாட்டார்.
 
அவரிடம் எழுத்து, யாத்ரா, கொல்லிப்பாவை மறுமலர்ச்சி, கலைச்செல்வி, அவர் செங்கை ஆழியானோடு சேர்ந்து வெளியிட்ட விவேகி போன்ற பழைய   இதழ்களையெல்லாம் வாங்கிப் படித்திருக்கிறேன்.
 

03.
செம்பியனுக்கு ஊர் சுற்றுவதில் பெரும் விருப்பமுண்டு. ஆனால் அவர் பார்த்த வேலையில் அதற்கு இடமில்லை. அவர் பள்ளியில் படிப்பித்துக்கொண்டார். பள்ளிக்கு விடுமுறை எடுத்தால் அதனால் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அது பெரும்பிழையான காரியம். தனக்கு வேறு வேலை கிடைத்திருக்கக்கூடாதா என்று என்னிடமே அவர் சொல்லியிருக்கிறார். "ஏன் வேற வேலையை நீங்கள் தேடியிருக்கலாமே" என்று கேட்டேன். "எல்லா வேலையும் பழகினால் அடிப்படையில் ஓன்றுதான்" என்றார். அதுவும் ஒரு வகையில் சரியென்றே பட்டது. அப்படியென்றால் எதுக்காக தனக்கு வேறு வேலை கிடைத்திருக்கக்கூடாது என்றார். அதற்கான பதில் எனக்குத் தெரியவேயில்லை.  
 
ஆனால் செம்பியனுக்கு தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் செங்குந்தா என்ற பள்ளியில் முதல்வர் பதவி கிடைத்தது. அதை அவர் விரும்பவேயில்லை. தன்னுடைய நிம்மதியைத் தின்னுகிறதுக்குத்தான் இந்த உத்தியோகம் கிடைத்திருக்கிறது என்று பெருந்துக்கத்தோடு சொன்னார். அப்போது அவருடைய விருப்பத்துக்கேற்றமாதிரி, அவர் அந்தப்பள்ளியில் பொறுப்பை எடுத்து நடத்தமுடியாதபடி யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது.
 
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது செம்பியனும் நன்றாக வாடித்தானிருந்தார். அந்த நாட்களில் அவர் தன்னை மிகவும் ஒடுக்கியிருந்தார். அதிலும் அவர் தன்னுடைய அடையாளத்தைத் தொலைத்தமாதிரி பேசாமலே இருந்தார். அவரைப்பார்த்தபோது   எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் தாங்கமுடியாததாகவுமிருந்தது. ஆனால்  அப்போது எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நாட்களில் அந்த நெருக்கடிகளிலும் எப்படியோ சந்தித்துக்கொள்வோம். அவர் அந்த இறுக்கத்திலிருந்தும் எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்தும் விடுபட நீண்ட நாட்களாயிற்று. ஆனால் அப்போதும் அவரிடமிருந்த ஒருவகையான விட்டேத்தித்தனம் அவரை விட்டுப்போகவில்லை.
 
ஒரு வகையில் செம்பியன் அப்படி நடந்து கொள்வதெல்லாம் தவிர்க்க முடியாதென்றும் சரியென்றும் பட்டது. அவருடன் தொடர்ந்து பழகியபோது அவரின்மேல் ஒருவகையான பிடிப்பு ஏற்பட்டது.   அவர் ஒரு தனிரகமானவராகத் தெரிந்தார்.
 
முன்பு அவருடன் பல தடவை சொக்கன் கடைக்குப்போயிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவரை நான்   சொக்கன் கடையில் சந்தித்து மிருக்கிறேன்.
 
அந்தக்கடையில் அவருடன் பல இலக்கிய நண்பர்கள் அநேமான நாட்களில் இருக்கக் கண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாக்களோ இலக்ககியக்கூட்டமோ நடந்து முடிந்தவுடன் அவர் நேரே சொக்கன் கடைக்கே வருவார். அப்போது   நண்பர் கூட்டமொன்று கடைக்குள் திரளும். எல்லோருக்கும் அவர்தான் உபயம்.
 
கடையினுள்ளேயே விவாதங்கள் தொடங்கிவிடும். சிலபோது முடிவில்லாமலே அந்த விவாதங்கள் தொடர்ந்து நீண்டுமிருக்கின்றன. எப்போதும் கூட்டம் சேருகிற அந்தக்கடையில் இருக்கைகளும்   வசதிகளும் குறைந்த கடையில் அப்படி நீண்ட நேரம் இடத்தை அடைத்துக்கொண்டிருந்தால் கடைக்காரரின் வியாபாரத்துக்கே நட்டம் என்றுகூட அங்கே யோசனை வராது. அவ்வளவுக்குப் பேச்சுச்சுவாரசியம். இலக்கியக்காரன் என்றால் யதார்த்தம் புரியாதவன்தானா என்றே நான் பல தடவை யோசித்திருக்கிறேன்.
 
எழுதும்போது மற்றவர்களின் பொறுப்பின்மைகளைப் பற்றியும் புரிநதுணர்வில்லாத்தனத்தைப் பற்றியும் எழுதிக் குவிக்கிற படைப்பாளிக்குச் சிலவேளை தன்னுடைய குறைபாடுகள் தெரிவதில்லை. யதாரர்த்தத்தைப்பற்றி அதிகம் வலியுறுத்துகிற எழுத்தாளன் தான் யதார்த்தமாக இருக்க முயல்வதில்லை.
 
இந்தக் கூட்டத்தைப் பார்த்து கடைக்காரரும் ஒன்றும் சொல்வதில்லை. சிரமங்களை எப்படியோ அவர் சமாளித்து விடுகிறார். ஒன்று தன்னுடைய வாடிக்கைக்காரர்கள் என்பதாக இருக்கலாம். மற்றது அவருக்குப் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் தொடர்பாக வித்தியாசமான மதிப்பான புரிதல் இருக்கலாம். ஆனால் அவர் எதையும் பேசியதில்லை. அதேவேளை அவர் எல்லோரையும் தெரிந்தும் புரிந்தும் வைத்திருந்தார்.
 
கடைக்குள்ளிருந்த விவாதம் கடை முற்றத்துக்கு வரும். அங்கே நேரம் ஒரு பொருட்டெனக் கருதப்படுவதில்லை. கைலாச பிள்ளையார் கோவில் தெற்கு வீதி மரத்தின் கீழே அது தொடரும். அதிலும் முடியவில்லை என்றால் சைக்கிளை உருட்டிக்கொண்டு நாவலர் வீதி வழியே சென்று அத்தியடியில் உள்ள செம்பியனுடைய வீட்டுக்குப் போகும்.
 
அத்தியடியில்தானிருந்தார் செம்பியன் செல்வன். அங்கிருந்தே அவர் தினமும் சொக்கன் கடைக்கு வந்து போனார்.
 
யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்துக்கு செல்லும் செம்பியனுடைய  நண்பர்கள் அதற்கருகில் அத்தியடியில் இருந்த அவருடைய வீட்டில்தான் தங்களுடைய சைக்கிளை விட்டுச் செல்வார்கள். பயணம் முடிந்து திரும்பி வந்து சைக்கிளை எடுத்துப்போவார்கள்.
 
ரெயினிலிருந்து இறங்கியவுடன் செம்பியன் வீட்டில் தேநீர் குடிப்பார்கள். அப்படியொரு ஏற்பாட்டை அவர் செய்திருந்தாரோ அல்லது அவருடைய மனைவிதான் அதை வழக்கமாக்கியிருந்தாரோ தெரியாது. ஆனால் அது தொடர்ந்தது. இரவல் வாங்கிய புத்தகத்தை மீளக் கொடுப்பார்கள். புதிய புத்தகத்தை வாங்குவார்கள். அதேபோல தாங்கள் புதிதாக வாங்கிவந்த பத்திரிகையையோ இதழையோ புத்தகத்தையோ அவருக்குக்கொடுப்பார்கள்.
 
அங்கே ஒரு குட்டி உரையாடல் தொடங்கும். ஆனால் அது அநேகமாக பெரிதாக முற்றாது. எப்படியோ பேசுவதற்கு அங்கே நிறைய விசயங்களிருந்தன. தாராளமாகக் கதைத்தார்கள். பேசுவதற்காகவே பிறந்ததுபோல செம்பியனிருந்தார். அவரிடம் நிறையச் செய்திகளிருந்தன. வாசித்த புத்தகங்களைப்பற்றி, அவற்றை எழுதிய எழுத்தாளர்களைப்பற்றி, வந்திருக்கும் இதழ்களைப்பற்றி, விமர்சனங்களைப்பற்றி என்று அவர் எதையாவது சொல்வார்.
 
செம்பியன் பெரும் வாசிப்பாளர். அவர் எல்லாவற்றையும் வாசிப்பார். தேர்ந்த வாசிப்பாளர். அதனால் அவர் சினிமா பற்றியும் கதைப்பார். ஓவியத்தைப்பற்றியும் பேசுவார். இசையைப்பற்றியும் உரையாடுவார். கவிதை, சிறுகதை, நாவல், விமரிசனம் என்று எல்லாவற்றையும் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். எல்லாவற்றிலும் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக அவர் இப்படி ஒரு பன்முக நிலையைக் கொண்டிருந்தார்.
 
இதற்குக்காரணம் அவர் இதழ்களின் ஆசிரியப் பொறுப்பிலிருந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்துடன் செம்பியன் ஈழத்துத்திரைப்படமொன்றுக்கு திரைக்கதை வசனத்தையும் எழுதியிருந்தார்.
 

04.
முதலில்  விவேகியிலும் பின்னர் அமிர்தகங்கையிலும் செம்பியன் ஆசிரியராக இருந்தார்.
 
விவேகியில்; அவர் செங்கை ஆழியானோடு இணை ஆசிரியராக இருந்தார். அது அவர்களுடைய இளமைக்காலத்தில் வெளியிடப்பட்டது. அப்போதுள்ள சூழலின்படி விவேகி அதிகம் அரசியல் மயப்பட்டிருக்கவில்லை. ஆனால், அமிர்தகங்கை கூடுதலாக அரசியல் மயப்பட்டிருந்தது. அமிர்தகங்கையின் காலகட்டம் முழுஅளவில் அரசியல் ஆதிக்கம் பெற்றது. அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் ஏறக்குறைய போர் தொடங்கியிருந்தது. அதனால் அது அப்படி வெளிவரவேண்டியிருந்தது. ஆனபோதும் அமிர்தகங்கையை செம்பியன் முற்றுமுழுதான அரசியல் ஏடாக்கவில்லை.
 
அமிர்தகங்கையை இரண்டு கட்டமாகப் பார்க்க வேண்டும். முதலாவது, செம்பியனின் காலகட்டம். அடுத்தது செம்பியனுக்குப்பின்னான காலகட்டம். செம்பியன் தன்னுடைய காலகட்டத்தில் இலக்கியத்துக்கே முன்னுரிமையளித்தார். ஆனாலும் அதற்குள் விவேகியை விடவும் அரசியல் ஆதிக்கமிருந்தது.
 
ஈழத்திலக்கியத்தில் அரசியற் செல்வாக்கு எப்போதும் அதிகமாகவும் தூக்கலாகவுமே இருக்கிறது. பெரும்பாலும் இது ஒரு பொதுக்குணமாகியும் விட்டது. இந்தக்குணத்திற்குள் படைப்பை அதன் பெறுமானத்தோடு அணுகுவதிலேயே ஒவ்வொரு இதழுக்கும் அதன் ஆசிரிய பீடத்துக்கும் நுட்பமும் வேறுபாடுமிருந்தது.
 
செம்பியன் இந்த வேறுபாட்டை நுட்பமாகக் கையாண்டார். அவர் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விடுதலை குறித்து அக்கறையுடையவராக இருந்தபோதும் அந்த அரசியலுக்கு இயைபாகவும் அதேவேளை அதனை படைப்புக்குச் சேதாரமில்லாமல் இணைப்பதிலும் ஆற்றலோடும் திறனோடும்   நுட்பத்தைக் கையாண்டார். அமிர்தகங்கையில் செம்பியன் செல்வனுக்குப் பெரும்பங்குண்டு. அது ஒரு அடையாளத்தைத் துலக்கமாகக் மேற்கிளம்புவதற்கு தொடர்ந்து சூழலும் களமும் பொருந்தியிருக்கவில்லை.
 
அமிர்தகங்கை தீவிர இலக்கியத்தளத்தில் இயங்கவில்லை. அதை  இடைநிலைத்தன்மையோடு வந்த இதழாகவே சொல்லலாம். செம்பியனின் படைப்பியக்கமும் ஏறக்குறைய இதேதன்மையுடையதுதான். ஆனால் அவர் புறக்கணிக்கக்கூடிய படைப்பாளியல்ல. அவருடைய நாவல்களையும் சிறுகதையும் விட அவர் எழுதிய கட்டுரைகள் ஓரளவுக்குச்சீரியசானவை.
 
யேசுராசா செம்பியனின் கட்டுரைகளை தன்னுடைய இதழ்களில் பிரசுரித்திருக்கிறார். ஆனால் அவருடைய கதைகளை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. இதுபற்றி செம்பியனிடம் ஒருதடவை கேட்டேன்.
 
அது யேசுராசாவின் விருப்பத்தையும் தேர்வையும் பொறுத்தது. அதில் தனக்கெந்தவிதமான   வருத்தமும் இல்லையென்றார் செம்பியன். இதுதான் செம்பியன். அவருக்கு எதிலும் வருத்தமில்லை. அவரை யார் எதிர்த்தாலும் சரி ஏற்றுக்கொண்டாலும் சரி அதைப்பற்றியெல்லாம் அவருக்குப் பொருட்டல்ல. அவருக்கு எல்லாம் ஒன்றுதான். அதுதான் அவருடைய பலம் என்று நினைக்கிறேன். அவர் இதைப்பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. எந்த நிலையிலும் சமநிலை தளம்பாமல் அவற்றைப் பொருட்படுத்தாமலே அவர் சாதாரணமாப் பேசிக்கொண்டிருப்பார்.
 
சிலர் தங்களுடைய கதைகளைப்பற்றியோ கவிதைகளைப்பற்றியோ யாராவது ஏதாவது அபிப்பிராயங்களைச் சொல்லி விட்டால் போதும். அதைப்பெரிய விவகாரமாக்கி விடுவார்கள். அது பாராட்டென்றால் அதைப் பெருங்கொண்டாட்டமாக்கிவிடுவார்கள். அது எதிர்மறையானதாக இருந்தால் அந்த விமர்சனத்தை வைத்தவர்மீது பெரும் தாக்குதலையே நடத்தி விடுவார்கள். இதற்கென்றே ஒரு அணியை உருவாக்கும் ஆட்களுமிருக்கிறார்கள். ஆனால் செம்பியன் இதிலிருந்து முற்றிலும் வேறானவராக இருந்தார்.
 
செம்பியன் செல்வனிடமிருந்த இந்தமாதிரியான குணங்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவருடன் நான் நெருக்கமாகத் தொடங்கினேன். அவருடன் பல நாள் சொக்கன் கடையில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். சைக்கிளில் இரண்டுபேருமாக யாழ்ப்பாணத்தின் ஒழுங்கைகளுக்குள்ளால் பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். போகும் வழிநெடுகவும் பேசிச்சென்றிருக்கிறோம். அந்த வழிகளில் இன்னமும் எங்களின் பேச்சுக்குரலும் பேசிய விசயங்களும் காற்றோடு படிந்திருக்கலாம்.
 
பசுவய்யாவின் ஒரு கவிதையில் உள்ளதைப்போல 'என்றேனும் காற்றையறியும் கருவியைக் கண்டுபிடித்தால் ' செம்பியன் பேசிய பேச்சுகளை அறியலாம்.
 
செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவல் திரைப்படமாக்கப்படும்போது செம்பியன் செல்வன்தான் அந்தப்படத்துக்கு கதை வசனம் எழுதியிருந்தார். அந்தப்படம் ஈழத்துத்திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க அடையாளத்தைப் பெற்றிருந்தது. ஆனால் அந்தப்படத்துக்காக செம்பியன் கடுமையாகக் கஸ்ரப்பட்டபோதும் அதை மறைக்கிற மாதிரி கே.எம். வாசகர் தன்னுடைய பெயரை முதன்மைப்படுத்திவிட்டார்.
 
ஆனால் செம்பியனுக்குத் தொடர்ந்தும் சினிமா ஆசை அவருடைய மனதில் ஒளிந்துகொண்டேயிருந்தது. பேச்சுகளின்போது அவருடைய அந்த ஆசை வெளிப்படும். ஆனால் அவருக்கான அந்த வாய்ப்புக்கடைசிவரையில் கிடைக்கவேயில்லை.
 
ஒருதடவை, அப்போது நான் என்னை யாரென்று அவருக்கு தெளிவு படுத்தியிருந்தேன். அதன்பிறகு அவர் இன்னும் என்னுடன் நெருக்கமானார். அன்றிரவு தங்களின் வீட்டில் என்னைத் தங்கும்படி சொன்னார். மறுப்புச்சொல்லாமல் அன்று அங்கே அவருடன் தங்கினேன். இடியப்பத்தோடு சொதியும் பச்சை மிளகாய்ச் சம்பலும் முட்டைப்பொரியலுமாக நல்ல சாப்பாடு.
 
பின்னிரவு வரை பேசினோம். அவர் அன்று சகல விசயங்களைப்பற்றியும் பேசினார். அரசியல், முற்போக்கு இலக்கியம் அதில் கைலாசபதி செய்த பங்களிப்புகள், அந்தப்பங்களிப்புகளுக்கு மாறாக கைலாசபதி வரட்டுத்தனமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் பார்க்கத்தவறிய விசயங்கள், அவர் செய்த இருட்டடிப்புகள் பாரபட்சங்கள்   என்று அந்தக்கதை ஒருபக்கம். மறுபுறத்தில் கனக செந்திநாதன், யாழ் இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய விவகாரங்கள். அப்பொழுது யேசுராசா தரப்பினரின் அலைக்கும் டானியல் அன்ரனியின் சமருக்குமிடையில் விவாதங்களும் கடுஞ்சமரும் நடந்து கொண்டிருந்தது. அந்த விவாதங்களில் உள்ள உள்நோக்கங்கள் பற்றி செம்பியன் பல விசயங்களைச் சொன்னார். டானியல் அன்ரனி கைலாசபதி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் உண்மையில் டானியல் அன்ரனி பரிதாபத்துக்குரியவர் என்றும் சொன்னார். அடுத்தது மு.தளையசிங்கத்தின் மெய்யுள் கோட்பாடு பற்றிய விளக்கங்களும் அது தொடர்பான விமர்சனங்களும் ஆய்வுகளும். அன்றிரவு இப்படிச் சிதறலாகப் பேசப்பட்ட விசயங்களோடு கழிந்தது.
 
ஆனால் அவருக்கென்றொரு பதிவும் பார்வையுமிருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதற்காக அவர் அதையிட்டு தன்னைச்சுற்றி எந்தக்கோட்டையையும் எழுப்பவுமில்லை. நிறங்களைப்பூசிக் கொள்ளவுமில்லை.
 
05. 
செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் இணையாசிரியர்களாக இருந்து  1965 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் விவேகி என்ற இதழை வெளிக்கொண்டு வந்தார்கள். விவேகியை ஆசீர்வாதம் வெளியிட்டார். நான்காண்டுகளாக விவேகி வெளிவந்தது.
 
இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள். பின்னர் கண்டி- பெரதெனியாப் பல்கலைக்கழகத்திலும் ஒன்றாகப்படித்தவர்கள். அதிலும் ஒரே துறையில் - புவியியல் துறையில்- பயின்றவர்கள். இலக்கியத்திலும் சமகாலத்தில் இயங்கினாhர்கள். இருவரும் இணைந்து தொடர்கதைகளை எழுதியதாகவும் நினைவுண்டு.
 
செம்பியனை விடவும் செங்கை ஆழியான் நிறைய எழுதினார். இருந்தபோதும் செம்பியன் செங்கை ஆழியானை விடவும் அகன்ற பரப்பில் தன்னுடைய உறவு வட்டத்தைக் கொண்டவராக இருந்தார். அவருக்கு எல்லா அணியினரோடும் எல்லா முகாமோடும் தொடர்பும் உறவுமிருந்தது. ஆனால் அவர் அந்த அணிகளின் வரையறைகளுக்குள்ளும் கோட்பாடுகளுக்குள்ளும் நிற்கவில்லை.   அதேவேளை மிக அன்பாகவும் நேர்மையாகவும் உறவைப் பேணினார். இதில் அவர் என்றைக்கும் புத்திபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது.
 
அவர் எதிலும் ஒருவித அலட்சியத்தன்மையோடு நடந்து கொள்வதாகவே உணர்ந்திருக்கிறேன். அதாவது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத்தனம் அவருக்குள்ளிருந்தது. இதை அவருடைய படைப்புகளிலும் காணலாம். அதையும் விட அவருடய உரையாடலிலும் அவருடைய பேச்சுகளிலும் இந்த விட்டேத்தித்தனமிருந்தது.
 
சில சந்தர்ப்பங்களில் மிக அருமையாகப் பேசுவார். சிலபோது என்ன பேசினார், எதைப்பற்றிப்பேசினார் என்று தெரியாமலே இருக்கும். ஆனால் அவர் வலு சீரியஸாகவும் விவரமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவரை ஒரேயடியாக விலக்கிவிடமுடியாது. அதேவேளை அவருடைய பேச்சுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கவும் இயலாது. சில சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சை அதிகமாக எதிர்பார்த்திருந்தால் அதற்கு மாறாக அவர் அன்று அதைக் கவிழ்த்துவிடுவார். ஒரு தடவை யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றியத்தில் மல்லிகைப்ந்தலின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் செம்பியனும் ஒரு பேச்சாளர். அன்று பத்தினியம்மா திலகநாயகம்போலும்   நா.சுப்பிரமணிய ஐயரும் பேசியிருந்தனர் என்று ஞாபகம்.
 
அன்று கூட்டம் குப்பைத்தனமாக சீரழிந்து கொண்டிருந்தது. யாருமே பொருத்தமாகவும் சரியாகவும் பிரயோசனமாகவும் பேசவில்லை. அடுத்ததாக செம்பியனாவது பரவாயில்லாமற் பேசுவார் என்று காத்திருந்தோம். ஆனால் அன்று செம்பியனும் கவிழ்த்து விட்டார். மண்டபம் பேதமைத்தனத்தாலும் எரிச்சலூட்டும் வார்த்தைகளாலும் நிரம்பியது. கூட்டம் முடியமுதலே நாங்கள் மண்டபத்தைவிட்டு வெளியேறினோம். அன்றிரவு அந்தக்கூட்டத்தைப்பற்றி நான் ஒரு கவிதையை எழுதினேன். அதில் செம்பியனைச் செம்மையாகத் திட்டியிருந்தேன்.
 
அதை நண்பர்கள் சத்துருக்கனும் சிறிக்குமரனும் செ.பொ.சிவனேசுவும் நன்றாக ரசித்தார்கள். பின்னர் அந்தக்கவிதை நண்பர்களிடத்தில் பிரபலமாகியிருந்தது. பிறகு அதை நாங்கள் செம்பியனிடமே காட்டினோம். அவரும் அதைரசித்தார். ஆனால் அந்தக்கவிதை தன்னைப்பற்றிய, தன்னுடைய பேச்சைப்பற்றிய கடுமையான விமர்சனம் என்றார். அதற்குப்பிறகு தான் எப்போதாவது பேசப்போனாலும் அநேகமாக அந்தக்கவிதைபோல வேறு யாரும் எழுதிவிடக்கூடாது என்பார். ஆனால் அவருடைய பேச்சு சீரியசுக்கும் வழவழாவுக்குமாக மாறிமாறித்தாவிக் கொண்டேயிருந்தது. செம்பியனின் உரையாடலிலும் இந்தத்தனம் இருந்தது. சிலவேளை அவருடைய பேச்சைவிட்டு எழுந்து போக மனமிருக்காது. அந்தளவுக்கு அவருடைய உரையாடல் ஆழமாகவிருக்கும். சிலசமயத்தில் அவர் எதைப்பற்றிப்பேசுகிறார் என்றே புரியாமலிருக்கும்.
 
செம்பியன் 1960 களில் எழுதத்தொடங்கினார். இதுவரையில் ஏழு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. மூன்று சிறுதைத்தொகுப்புகள். இரண்டு நாவல்கள். கவிதைத்தொகுதி ஒன்று. குறுங்கதைத்தொகுப்பு ஒன்று. இவற்றைத்தவிர அவர் எழுதிய கட்டுரைகள் நிறையவுண்டு. 
 
கவிதைபற்றி, இலக்கியக்கோட்பாடுகள் பற்றி, விமர்சனக்கூட்டங்களைப்பற்றி, நூல்களைப்பற்றியெல்லாம் அவர் நிறைய எழுதியிருக்கிறார். சில கட்டுரைகள் ஆழமான விவாதத்துக்கும் கவனத்துக்குமுரியவை. சில மேலோட்டமானவை. சில கூர்மையானவை. சில சோர்வானவை. ஆனாலும் அவருடய கட்டுரைகள்   கவனத்திற்குரியவை. அவருடைய பரந்த பார்வையையும் அவருடைய ஈடுபாட்டுப்புலத்தையும் அந்தக்கட்டுரைகள் சொல்கின்றன. அந்தக்கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படவுமில்லை. ஒரு கட்டுரைத்தொகுதியை வெளியிட அவர் விரும்பினார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது வெளிவரவேயில்லை.
 
செம்பியன் யாழ்ப்பாணச்சமூகத்தின் கடந்த நூற்றாண்டின் யதார்த்தப்பிரச்சினைகளை விமர்சனரீதியாகப் படைப்பாக்கினார். குறிப்பாக குடும்பங்களுள் நடக்கின்ற மோதலை அவர் தன்னுடைய படைப்புகளின் மையமாக்கினார். அதேவேளை தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான அரசியற் கதைகளையும் அவர் எழுதினார். முதற்காலகட்டக்கதைகள் குடும்பம், சமூகம் என்ற இரண்டு தளங்களிலும் நடந்த சிதைவுகளையும் போராட்டங்களையும் உணர்வுகளையும் உள்விரிவாகக் கொண்டவை. அடுத்தகாலகட்டகக்தைகள் பெரும்பாலும் அரசியற்கதைகள்தான். அதிலும் போர்க்கதைகள்.
 
வெளிச்சம், ஈழநாதம் போன்ற ஏடுகளில் அவர் எழுதிய கதைகள்  போரில் தான் பட்ட அனுபவங்களின் பதிவாக இருந்தது. குறிப்பாக 1990களின் முற்பகுதியில் யாழ்ப்பாண நகரத்தை சிறிலங்கா அரசாங்கத்தின் விமானப்படை குண்டுவீசி அழித்தது. தினமும் குண்டுவீச்சு. அதிலும் இரவுபகலாக நடக்கும் குண்டு வீச்சு. நகரம் கண்முன்னே நொருங்கிச்சிதிலமாகிக் கொண்டிருந்தது. நகரத்தில்தான செம்பியனின் வீடுமிருந்தது. நகரத்தில் வீடிருந்த காரணத்தால் அவர் பங்கருக்குள்ளே இருந்தார். அவருக்கு பங்கருக்குள் இருப்பதைப்பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் தன்னுடைய நகரம் தன் கண்முன்னால் சிதைவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை. பொறுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
 
அவர் யாழ்ப்பாணக்கோட்டைப்பக்கம் போய்ப்பார்க்க ஆசைப்பட்டார். அப்போது கோட்டையைச் சுற்றி விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டிருந்தார்கள். முற்றுகைக்குள்ளாகியுள்ள படையினரை காப்பாற்ற வேண்டும். அல்லது அவர்களை மீட்க வேண்டும் என்ற பெரும் நெருக்கடியால் யாழ்ப்பாணத்தின்மீது அரசாங்கப்படைகள் கண்கெட்டதனமாகத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. யாழ்ப்பாண நகரம் அங்கிருந்து முற்றாக வேறிடத்துக்கு மாறியிருந்தது. அது பழைய இராசதானி இருந்ததாகச் சொல்லப்படும் நல்லூர் முத்திரச்சந்தைக்குப்போயிருந்தது. இந்தநிலைமைக்குள்தான் எப்படியாவது நகரத்தைப் பார்க்கவேண்டுமென்று அவர் விரும்பினார்.
 
அவருடைய ஆசையை யார் அனுமதிப்பார்கள். நகரம் மரணவலயமாகியிருந்தது. அந்த ஆபத்துக்குள் அவரை விடுவதற்கு-அவரை அனுமதிப்பதற்கு- போராளிகள் விரும்பவில்லை. ஆனாலும் அவர்  பொறுப்பானவர்களோடு பேசி அவர்களுடன் சேர்ந்து கோட்டையை அண்மித்த பகுதிவரை போய்வந்தார். பின்னர் அந்த விவரங்களையும் அனுபவங்களையும் வைத்து காலமை என்றொரு கதையை எழுதினார்.
 
செம்பியன் செல்வன், வரதர், சொக்கன், கனகசெந்திநாதன் பரம்பரையைச்சேர்ந்தவர் என்று சொல்லலாம். யாழ் இலக்கியவட்டம்தான் அவர்களின் இயங்கு மையம். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் பிற பொறுப்புகளிலும் செம்பியன் இருந்திருக்கிறார். ஆனால் அவர் எல்லோருடனும் பழகினார். நட்பு வைத்திருந்தார். அணிபிரிந்து செயற்படுவதில் அவருக்கு என்றைக்கும் ஈடுபாடில்லை. அவர் அலையுடனும் உறவை வைத்திருந்தார். சமருடனும் தொடர்பாக இருந்தார். யேசுராசாவோடும் கதைப்பார். அதேவேளை தாயகம் தணிகாசலத்துடனும் பேசுவார். ஆனால் மற்றவர்களைவிடவும் அவருக்கு யேசுராசாவுடன் பின்னாளில் கூடுதலான நெருக்கமிருந்தது. கடைசிவரையும் யேசுராசாவும் செம்பியனும் இணைந்து இயங்கியிருக்கிறார்கள். 'செம்பியன் எழுதும்' என்று அவரை யேசுராசா உற்சாகப்படுத்துவார். யேசுராசாவின் தெரிதலில் செம்பியன் தொடர்ந்து எழுதிவந்தார்.
 
யேசுராசாவின் கவிதை இதழிலும் தெரிதலிலும் செம்பியன் அதிகமாக எழுதினார். இளைய படைப்பாளிகளை இலக்குவைத்தே இருவரும் இயங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவருக்கும் இளைய படைப்பாளிகளின் தொடர்பும் உறவும் அதிகமாக இருந்தது.
 
செம்பியனுக்கு அதிகம் மதிப்புக்குரிய மனிதராக ஏ.ஜே இருந்தார். ஏ,ஜே யை பலரும் சரியாகப்புரியவில்லை என்றும் அவரை மேலும் தமிழ்ச்சமூகம் ஊக்குவித்திருக்கலாம் என்றும் அடிக்கடி சொல்வார். அதேபோல செம்பியன் டொமினிக் ஜீவாவிவன் மீதும் அன்பு வைத்திருந்தார். ஜீவாவின் மீது அவருக்கு நிறைய விமர்சனங்களும் விலகல்களும் இருந்தன. ஆனால் ஜீவாவுக்கென்றொரு பாத்திரம் இருக்கிறது என்றும் அந்தப்பாத்திரத்தை ஜீவா பலமாக்கத் தவறிவிட்டார் என்பதும் செம்பியனின் கணிப்பு. ஜீவா பின்னர் சமரசங்களுக்குப்போனதாலேயே அவருக்குச்சரிவு வந்ததென்றும் செம்பியன் சொன்னார். எழுபதுகளில் வந்த மல்லிகைக்கும் பின்னர் வருகின்ற மல்லிகைக்கும் இடையில இந்த வேறுபாட்டை ஆதாரமாகக் காணமுடியும் என்று தன்னுடைய கருத்துக்கு ஆதாரம் தந்தார்.
 
தொண்ணூறுகளில் செம்பியனை ரெயினே இல்லாத, சிதைந்தழிந்து அகதிகளின் இருப்பிடமாகிவிட்ட யாழ்ப்பாண ரெயில்வே ஸ்ரேசனுக்கு முன்னாலிருந்த வசந்தம் புத்தகக்கடையிலும் மணியத்தின் யாழ் புக் ஹவுஸிலும் பெரும்பாலும் காணலாம். அப்போது வசந்தத்தத்துக்கு நல்ல புத்தகங்கள் நிறைய வரும். புதிய புத்தகங்கள் வந்த சேதியை அவர் பலருக்கும் சொல்லி அனுப்புவார். மணியமும் பின்னர் அங்கேதான் கடையை வைத்திருந்தார். இப்போது அங்கே, அந்த இடத்தில் பெரிய இராணுவமுகாமிருக்கிறது. யாழ்ப்பாத்துக்கு அதன் சரித்திரத்தில் எப்போதாவது புகையிரதம் ஓடியதா என்று கேட்கும் அளவில்தான் புகையிரத நிலையமும் வண்டிப்பாதைகளுமிருக்கின்றன. புகை வண்டிப்பாதைகள் இருந்த சுவடுகளே இல்லாது போய்விட்டன. 
 
06.
செம்பியனுடன் நான் செய்த பயணங்களில் இரண்டு பயணங்கள் மறக்கமுடியாதவை. ஒன்று உயிராபத்துகள் நிறைந்திருந்த கிளாலியூடான பயணம். அப்போது கிளாலிக் கடனீரேரியூடாகப் பயணம் செய்வோர் உயிரைப் பணயம் வைத்தே போகவேணும். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே போவதற்கும் வெளியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கும் பாதைகளேயில்லை. எல்லாப்பாதைகளையும் அடைத்து, சிறிலங்கா அரசு அங்கெல்லாம் படைகளைக்குவித்திருந்தது. சனங்கள் கடல்வழியாகவே சிறுபடகுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்தார்கள். அந்தப்பயணத்தையும் கடற்படை விடவில்லை. கடலில் வைத்தே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மனிதர்கள் அந்தப்பாதையால் போகவே அஞ்சினாhர்கள். ஆனால் அதைத்தவிர வேறு வழியும் இருக்கவில்லை. கடற்படைக்குத்தப்பினால் மேலே விமானங்கள் தாக்கும். அதனால் அந்தக்கடற்பயணம் இரவில்தான் நடக்கும்.
 
இந்தநிலையில்தான் நாங்களும் கிளாலியூடாகப் பயணம் செய்தோம். அதுவும் ஒரு இலக்கியக்கூட்டத்துக்கான பயணம். உண்மையில் அந்த நிலைமையில் அப்படி றிஸ்க் எடுத்து இலக்கியக்கூட்டத்துக்கு போகவேணுமா என்று நிiனைத்தேன். அதைவிட இப்படியான நிலையில் இலக்கியக்கூட்டத்துக்காக கிளாலியால் போகிறோம் என்றால் அதற்கு எந்த வீட்டிலும் சம்மதிப்பார்களா. என்றபடியால் அந்தப்பணயத்தில் வந்த யாரும் வீட்டில் சரியான காரணத்தைச் சொல்லியிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் நாங்கள் பயணம் செய்தபோது கடலில் கடற்புலிகள் சற்றுப்பலமான நிலையில் போக்குவரத்துக்கான பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் உயிராபத்து நீங்கியிருக்கவில்லை.
 
நான், செம்பியன், தணிகாசலம், எஸ்.ரி.அரசு, இளையவன் இன்னும் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து பயணித்தோம். அது நிலாக்காலம். உண்மையில் எந்த மரணபயமுமில்லாமல் அந்தப்பயணம் நடந்தது. போகவும் திரும்பவுமாக இரண்டுதரம் மரணவலயத்தைக் கடக்க வேண்டும். செம்பியன் வலு உற்சாகமாக கதைத்துச் சுவாரசியத்தை ஏற்படுத்தியபடி வந்தார். அந்தப்பயணத்தில் இன்னும் பலர் வருவதாகச் சொல்லியிருந்த போதும் இறுதிநேரத்தில் வராமற் தவிர்த்து விட்டார்கள். ஆனால் ஒருபோதுமே கிடைக்க முடியாத அந்தப்பயணத்தின்  அருமையான சந்தர்ப்பத்தையும் அனுபவத்தையும் அவர்கள் இழந்தே விட்டார்கள். சாவுக்குப்பயந்தால் வாழமுடியுமா என்று அப்போது செம்பியன் கேட்டது இன்னும் அப்படியே நினைவிலிருக்கிறது.
 
வன்னியில் மூன்று நாட்கள் மிகச்சுவாரசியமாகப் பொழுது போனது. வன்னியிலுள்ள் படைப்பாளிகளைச் சந்தித்து பல விசயங்கள் குறித்தும் பேசினோம். நல்ல சாப்பாடு. வன்னியின் இயற்கைச்சூழல் குளிர்ச்சி நிரம்பியது. கிளிநொச்சி விவசாயிகளின் நகரம் என்றார் தணிகாசலம். அது உண்மைதான். சுற்றிவர வயல்களும் வாய்க்கால்களும். சனங்களும் விவசாயப் பொருட்களோடும் விவசாயத் தேவைகளோடும்தான் திரிந்தார்கள். விவசாயப் பொருட்களுக்கான கடைகளும் அதிகமாக இருந்தன.
 
வன்னிப்பயணத்தை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினோம். யாழ்ப்பாணம் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் கடற்புலிகளுக்கும்; சிறிலங்காக் கடற்படைக்குமிடையில் சண்டை நடந்தது. ஆனால் மறு நாள் அதிகம் பிரச்சினைகளிருக்கவில்லை. ஆனாலும் பயம் கடல் முழுவதும் பரவிக்கிடந்தது. படகில் போகும்போது மேலே நிலவு அழகாக கடலுக்கு ஒளியூட்டியபடி நின்றது. நிலவில் அலைகள் பளிங்காக மினுங்கின. அது சிறுகடல். பரவைக்கடல். அங்கே பேரலைகள் கிடையாது. மீன்கள் துள்ளிப்படகில் ஏறின. சிலவேளை அவை அந்தப்படகில் பயணம் போவோர் யாரென்று அறிந்தும் இருக்கலாம்.
 
அடுத்த பயணம் தமிழ் சிங்களக் கலைக்கூடலுக்காக கொழும்புக்குச் சென்றது. கலை, பண்பாட்டுக்கழகமும் தமிழ் சிங்களக்கலைஞர்களும் இணைந்து நட்புறவு சார்ந்து அந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, மலையகம் எனச்சகல இடங்களிலிருந்தும் படைப்பாளிகள் கொழும்பில் திரண்டிருந்தனர். சிங்களப்படைப்பாளிகளும் பல இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.
 
கொழும்புக்கு நான்கு பஸ்களில் படைப்பாளிகளும் கலைஞர்களும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வன்னியிலிருந்தும்   போய்க்கொண்டிருந்தோம். செம்பியன் விவேக்குடனே சேர்ந்திருந்தார். நான் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபடியால் யாருடனும் ஆறதலாக இருந்து பேசமுடியவில்லை. அந்தப்பயணத்தின்போது செம்பியன் அதிக உற்சாகத்தைக்காட்டவில்லை. அவருக்கு   அந்த ஒன்று கூடல் நல்ல விருப்ப்த்துக்குரியதாகவே இருந்தது. ஆனால் அவருடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. மாநாட்டின்போதே இடையில் அவர் மருத்துவமனைக்குப் போய்வந்தார். அவர் மாநாட்டைப்பாதியும் தன்னுடைய உடலைப்பாதியுமே அங்கே கவனித்துக் கொண்டிருந்தார். சுவாசிப்பதற்கு அதிகம் சிரமப்பட்டார். 

 
அவருக்கு நீரிழிவு வியாதியும் பிடித்திருந்தது.
பத்தாண்டுகளுக்கு முன்னிருந்த செம்பியன் திடகாத்திரமானவர். கம்பீரமானவர். அழுத்தமாக வாரிவிடப்பட்ட அடர்ந்த முடியும் பரந்த முகமும் அவருடைய பொலிவைக்கூட்டியிருந்தன. ஆனால் இப்போது அவர் சற்று மெலிந்து விட்டார். வாடியிருந்தார். மெல்லிய சோர்வு அவரில் படியத்தொடங்கியிருந்தது. ஆனாலும் அவர் வந்திருந்த எல்லோரோடும் கதைத்துக் கொண்டிருந்தார். இரவு நீண்ட நேரம் பேசுவதைத்தவிர்க்குமாறு   அவருடைய உடல் நிலையைக்கருதி மெல்லிதாக அவருக்குச் சொல்லியிருந்தேன். அவர் அதைக்காதில் எடுத்துக்கொண்டதாக இல்லை. இரவிரவாகப் பேசினார். அதைவிட்டால் பின்னர் வேறு சந்தர்ப்பங்கள் இனி அப்படி வாய்க்காது என்பதைப்போல அவர் பேசிக்கொண்டேயிருந்தார்.
 
இரண்டாம்நாள் இரவு கவிஞர் வில்வரெத்தினம் விடுதியில் பாடினார். ஆனால் அது உற்சாகமான இரவாக இருக்கவில்லை.   வில்வரெத்தினத்தின் பாடல் பிரபஞ்சத்தையே கரைத்துவிடக்கூடியது. அன்று பகல் ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் - இவை இரண்டுமே கடுமையான இனவாதச் சிங்களக்கட்சிகள்- மாநாட்டைக் குழப்புவதற்கான பெருந்தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இந்தக் குழப்பத்தால் பகல் சில மணிநேரம் மாநாடு இடைநிறுத்தப்பட்டுமிருந்தது. அந்தக்குழப்பங்கள் இரவு எல்லோரையும் சோர்வுக்குள்ளாக்கியிருந்தன.
 
தமிழ் மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்ட சிங்களப்படைப்பாளிகளும் ஹிரு என்ற சிங்கள ஊடக அமைப்பொன்றுமே அந்த மாநாட்டுக்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தன. பகல் சிங்கள இனவாதிகள் கத்தி, பொல்லு, இரும்புக்கம்பிகளுடன் வந்து தாக்கத்தொடங்கியதால் அதை எதிர்த்து மாநாட்டிலிருந்த சிங்களக்கலைஞர்களும் தொழிற்சங்கப்பிரதிநிதிகளும் படைப்பாளிகளும் தாக்குதலை நடத்தியிருந்தனர். இரு தரப்பிலும் காயங்களும் குருதிப்பெருக்கும். அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம்.
பொலிசுக்கு அறிவிக்கப்பட்டபோதும் பதிலாக எந்த நம்பிக்கையூட்டக்கூடிய நடவடிக்கையையும் காவல்துறை எடுத்தமாதிரித் தெரியவில்லை.
 
ஆனால் பேராசிரியர் சுசரித்த கம்லத், சிங்களச்சினிமா மற்றும் நாடக நெறியாளர் தர்மசிறி பண்டார நாயக்க, ஹிரு இதழின் ஆசிரியர் ரோஹித பாசண,   பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் அவசரமாக மாநாட்டு மண்டபத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி உண்மை நிலையை தெளிவுபடுத்தினர். ஏனெனில் அந்தப்பகல் சம்பவத்தில் தாக்க வந்த தரப்பினரை திருப்பித்தாக்கி அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர் ஹிரு குழுவினர். தமிழ்ப்படைப்பாளிகளைப் பாதுகாப்பது தங்களின் கடமை என்றும் அதற்காகத் தங்களின் உயிரையும் அவர்கள் கொடுப்பதற்கு ஆயத்தமாக இருந்தார்கள்.
 
ஏற்கனவே கொழும்பில் புலிகள் மாநாடு நடத்துகிறார்கள் என்றும் அதற்கு சில சிங்களப் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஆதரவளிக்கிறார்கள் என்றும் சிங்கள் ஊடகங்கள் சில அப்போது செய்திகளை அபாயகரமாக வெளியிட்டும் இருந்தன. பகல் நடந்த சம்பவத்தில் அடிவாங்கிய சிங்களத்தரப்பினர் வேறு ஏதாவது விபரீதமான காரியங்களில் ஈடுபடலாம் என்று எதிர்பார்ப்பும் எச்சரிக்கையும் உருவாகிவிட்டது. அதனால் அன்றிரவு யாரிடமும் அதிக உற்சாகம் இருக்கவில்லை. ஆனால் அன்று தமிழ்ப்படைப்பாளிகளைச் சுற்றி ஹிரு குழவினரும் பிற சிங்களப்படைப்பாளிகளும் காவலிருந்தார்கள். அதை மறக்கவே முடியாது. அன்றிரவு பகல் நடந்த தாக்குதலைப்பற்றியும் அடுத்து என்ன நடக்குமோ என்பதிலுமே பெரும்பாலும் எல்லோருடைய பேச்சுமிருந்தது.
 
இவ்வளவுக்கும் இந்த ஒன்று கூடல் நடந்தது போர்நிறுத்தம் உச்சத்தில் இருந்தபோதுதான். அப்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. நல்லிணக்கத்துக்கான ஒரு   புரிந்துணர்வுத்தளத்தை நிர்மாணிப்பதற்காகவும் தமிழ் சிங்கள மக்களின் மனவுலகை பகிரங்கப்படுத்துவதற்காகவுமே அந்த மாநாடு நடத்தப்பட்டது.
 
ஆனால் அதற்கு எதிர்மறையாகவே பெரும்பாலான சிங்கள ஊடகங்களும் தரப்பினரும் நின்றனர். இனமுரண்பாட்டைத்    தீர்ப்பதற்கு ஒரு போதும் இந்தச்சக்திகள் விடப்போவதில்லை என்று அங்கே கூடியிருந்த சிங்கள தமிழ் படைப்பாளிகள் வருத்தத்துடன் பேசினோம்.
 
மறுநாள் அந்தச்சிங்கள நண்பர்களிடமிருந்து விடைபெற்றபோது நிகழ்ந்த பரவசமான நிலையை யாராலும் எந்தச்சந்தர்ப்த்திலும் மறக்கமுடியாது. வரும்போது செம்பியன் உடைந்து தழும்பிய குரலில் அந்தச்சிங்கள நண்பர்களைப்பற்றிப் பேசிக்கொண்டு வந்தார். அவர் சொன்னார், "இனவாதத்தை சிங்களத்தரப்பினர் எல்லா மட்டத்திலும் பலமாக   நிறுவனமாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்குள் சிக்காத சக்திகள் பலமற்ற நிலையிலேயே இருக்கின்றன. அவர்களுக்கு பாதிக்கப்படும் தமிழ்மக்களின் ஆதரவும் அனுதாபமும் தான் உண்டு" என்று. செம்பியன் சொன்னது பெரும்பாலும் முழுமையான உண்மையே.
 
செம்பியனுக்கு இனிப்புப்பண்டங்களில் பெரும் விருப்பமுண்டு. பின்னாளில் அவருக்கு நீரிழிவு வியாதி வந்து அவர் கஸ்ரப்பட்டபோதும் அவர் இனிப்புபப்ண்டங்களைத் தின்பதில் இருந்த ஆர்வத்தைக் குறைக்கவில்லை. சாப்பாட்டு விசயத்தில் அவர் எப்போதும் சிறு பிள்ளைகளைப்போலவேயிருந்தார். கட்டுப்படுத்தமுடியா ஆசையும் அல்லது விருப்பமும் சிறு பிள்ளைகளின் பிடிவாதமும் இருந்தது.
 
"கரு, என்ர வருத்தத்துக்கு இனிப்புக்கூடாதெண்டு தெரியுது. ஆனா மனங்கேக்குதில்லையே" என்று அப்பாவித்தனமாகச் சொல்வார். அவரைப்பார்க்கப் பரிதாபமாக இருக்கும். சாப்பாட்டுப்பிரியரான அவர் பத்தியம் காக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருந்தார். பின்னாளில் சொக்கன் கடையில் அவருக்கான பத்தியத்தோடு சாப்பாட்டைப் போட்டார்களா தெரியாது.   அதையெல்லாம் அறியக்கூடியமாதிரி நான் அங்கே போக முடியவில்லை. அவர் இறந்தபோதுகூட நான் அங்கே போக வாய்க்கவில்லை.
 
செம்பியன் தொடர்பாக எனக்கு தீராமலே இரண்டு துக்கங்கள் மிஞ்சியிருக்கின்றன. ஒன்று அவரை இழந்தது. மற்றது அவருடைய மரணநிகழ்வில் கலந்து கொள்ள முடியாமற்போனது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  25811514 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6509 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com