அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து - 05   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 19 July 2007

பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள்
பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள்

கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம்.
வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம்.
கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம்.
ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா.

(ஈழக்கதவுகள் - ப.ம் - 9)

01.

தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும்போது பிரசுரிப்பதில் சில சிக்கல்கள் நிலவுவதாகவும் பலருடன் இது பற்றி பேசிவருவதாகவும் குறிப்பிட்டார். பா.செ இந்த நூல் பற்றி குறிப்பிட்ட காலத்திலிருந்தே அதன் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தமிழகத்தின் தேர்ந்த இலக்கியவாதிகளில் ஒவரான பா.செயப்பிரகாசத்தின் ஈழம் பற்றி மனப்பதிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்பதுதான் எனது ஆர்வமாக இருந்தது. முன்று தினங்களுக்கு முன்னர்தான் இந்த நூல் எனது பார்வைக்கு கிடைத்தது இதனை படிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தேனோ அந்தளவு இது பற்றி எனது எண்ணங்களை பதிவு செய்ய வேண்டுமென்பதிலும் ஆர்வமாக இருந்தேன்.
 
02.
பா.செ அவர்களுக்கு இவ்வாறானதொரு நூலை எழுதுவதற்கு பின்புலமாகவும் வாய்ப்பாகவும் எந்த நிகழ்வு இருந்ததோ அதே நிகழ்வுதான் அவருக்கும் எனக்கும் இடையிலான தோழமையின் தொடக்கமாகவும் இருந்தது. 2002 மானுடத்தின் தமிழ் கூடல் நிகழ்வில் பங்கு கொள்ளும் போது எனது செயல்வெளிக்கு அப்பால் எவருடனும் தொடர்பில்லாத ஒருவனாகவே நான் நிகழ்வில் பங்கு கொண்டேன். அந்த வகையில் புதிய இலக்கிய, கருத்தியல் நன்பர்கள் பலரை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை 'மானுடத்தின் தமிழ் கூடல்' என்னைப் போன்ற பலருக்கும் வழங்கியது. என்னளவில் இது இன்னொரு வகையிலும் முக்கியமானது என்பதை நான் சொல்லியாக வேண்டும். உண்மையில் மானுடத்தின் தமிழ் கூடலுக்கு பின்னர்தான் நான் தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டுடன் சிந்திக்கத் தொடங்கினேன் எனலாம். அப்பொழுதெல்லாம் மிகவும் சலிப்புத்தரக் கூடிய வகையிலான நாசிசம், பாசிசம் குறித்த உரையாடல்களால் குழம்பிக் கிடந்தேன். என்னளவில் அதனை தடுமாற்றங்களின் காலமாக இருந்தது.

இப்படியொரு சந்தர்பத்தில்தான் பா.செயப்பிரகாசம் எனக்கு அறிமுகமானார். தமிழகத்தலிருந்து பா.செ உடன் இன்குலாப், திருமாவளவன், புகழேந்தி மற்றும் ரொட்ஸ்கி மருது ஆகியோர் வந்திருந்த போதும் பா.செயும் இன்குலாப்பும்தான் எனது ஈடுபாடு சார்ந்து நெருங்கக் கூடிவர்களாக இருந்தனர். உண்மையில் அப்போது தோழர் பா.செய்பிரகாசம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இன்குலாப்பை மட்டுமே அறிந்திருந்தேன் அவரது சில கவிதைகளைப் படித்திருந்ததுடன் அவரது புரட்சிகர அரசில் நிலைப்பாடு பற்றியும் அறிந்திருந்தேன். பின்னர்தான் அறிந்து கொண்டேன் பா.செயப்பிரகாசம், கி.ராஜநாராயணனுக்கு பின்னர் கரிசல் இலக்கியத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஒரேயொரு தமிழக இலக்கியவாதியென்று. பா.செ பற்றி கதைத்துத்துக் கொண்டிருக்கும் போது எனது கருத்தியல் நன்பரொருவர் சொன்னார், அந்த காலத்தில் பா.செ யின் எழுத்துக்களை தேடித்தேடி வாசித்ததாக, அந்தளவிற்கு மிகவும் அற்புதமாக கிராமத்தை சிறுகதையில் கொண்டுவருவார், ஆனால் ஒரு கட்டத்துடன் அத்தகைய படைப்பாற்றலிலிருந்து அவர் விலகிக் கொண்டது போல் தெரிகிறது என்றார். பா.செயுடனான தொடர்புகள் அதகரித்த பின்னர் அவரது அரசியல், கருத்தியல் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது. அன்று மானுடத்தின் தமிழ் கூடலில் தொடங்கிய தோழமை இன்றுவரை தொடர்கிறது. ஆரம்பத்தில் கடிதம் மூலம் அவ்வப்போது பேசிக் கொண்டோம். இப்போது இணையத்தில் மூலம் அடிக்கடி தொட்டுக் கொள்கின்றோம். ஆனாலும் கடிதமூலம் பேசிக் கொள்வதில் இருக்கும் உயிரோட்டமான பிணைப்பு இணையத்தில் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் விரைவை எதிர்பார்க்கும் சூழலில் இணையம் தவிர்க்க முடியாததாக மாற்றிவிட்டது.

03.
'மானுடத்தின் தமிழ் கூடல்' 2002 அக்டோபர், 19 தொடக்கம் 22 வரையாக ஜந்து நாட்கள் இடம்பெற்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு பா.செ தமிழர் தேசத்தில் கழித்த காலத்தின் அவதானங்களை இந்த நூல் மூலம் தமிழகத்திற்கு சொல்லியிருக்கிறார். எனது பார்வையில் பா.செயின் 'ஈழக் கதவுகள்' ஏற்கனவே தமிழகத்தின் பெரும் ஊடகங்களும், பார்ப்பனவாத சிற்றிதழ்களும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து கட்டமைத்துவரும் அபிப்பிராயங்களின் மீதான ஒரு தலையீடாக அமையக் கூடும். பா.செயின் நோக்கம் கூட அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் முனைவர் அரசும் தனது நேர்காணலொன்றில் ஈழப் போராட்டத்தை அங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் பாசிசத்தின் பிரச்சனையாகவே பார்க்க முற்படுவதாகவும், அதற்கு பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கையில் இருப்பதே காரணமென்றும் குறிப்பிட்டிருந்தார். எனது முன்னைய  குறிப்பொன்றிலும் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன் (பார்க்க எனது நாட்குறிப்பிலிருந்து – 02) இந்த இடத்தில் தமிழகம் குறித்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

தமிழக மக்கள் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து பெரியளவில் கரிசனை கொண்டிருந்ததாகவும், ஆனால் ராஜீவ் காந்தி தொடர்பான அந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னரே தமிழகத்தின் ஈழம் குறித்த ஆதரவு குறைந்ததாகவும் கூறப்படுவதுண்டு. என்னளவில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றென்றே சொல்வேன். ஒரு முறை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் காலச்சுவடு போன்ற பத்திரிகைகளை சிலர் ஈழத்தமிழர் தேசியத்திற்கு எதிரானது, போன்று கதைக்க முற்படுகின்றனர் இவர்களுக்கு தெரியாது ராஜீவ் விடயத்திற்கு முன்னர் அவர்கள் பெரிய நேச சக்தியாகத்தான் இருந்தனர் என்றார். உண்மையில் இது பற்றி எனக்கு பெரிதாக தெரியாது ஆனால் தமிழக ஆதரவுத்தளம் குறித்து என்னிடம் சில பொதுவான அபிப்பிராயங்கள் உண்டு.
                          
ஈழ விடுதலைப் போராட்டத்தை பொருத்தவரையில் அதன்  ஆரம்ப காலத்தில் தமிழகம் பெரியதொரு பின்தளமாக இருந்ததும், பின்னர் இந்தியா தனது நலன்களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை அணுகியதன் விழைவாக 1989களின் இறுதியில்; போராட்டத்தின் பின்தளம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்ததும் வரலாறு.  ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் அதன் இலங்கை விவகாரங்கள் மீதான தலையீடானது, பெருமளவிற்கு தமிழ் நாட்டை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இது தொடர்பில் இந்திய அரசின் கொள்கைவகுப்பு மட்டங்களிலிருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இலங்கை எவ்வாறு தனது இனத்துவப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் என்பது இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லாத விவகாரம் அல்ல. ஜே.ஆர்.ஜெயவர்தன இனப்பிரச்சனையை எவ்வாறு கையாள்கிறார் என்பதில் ஆர்வம் காட்டுவதற்கு ஜந்து கோடியே ஜம்பது இலட்சம் தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை தனது அங்கமாக வைத்திருக்கும் இந்தியாவிற்கு சட்டபூர்வமான ஈடுபாடுள்ளது, இலங்கை அரசாங்கம் தமிழர்கள் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்தால் தமிழ் நாட்டில் பாரிய அகதிப்பிரச்சனை தோன்றலாம், ஈழத் தமிழர் பிரிவினை அரசியல் திராவிட வாதத்தையும் இணைத்துக்கொண்டு எழுச்சி பெறலாம் என்றெல்லாம் இந்தியா நியாயவாத உரையாற்றியது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்தியா எந்த தமிழகத்தை தனது பிராந்திய விஸ்தரிப்புவாத நலன்களை மறைக்க ஆதாரம் காட்டிதோ, மறுபுறமாக சிங்கள பெரும்தேசிவாத சக்திகளும் ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும், தொடர்வதற்கும் அதே தமிழகத்தையே காரணம் காட்டியது. சிங்களவர்கள் திராவிடத்தினுள் ஒரு சிறுபாண்மையினராக உள்ளனர். அவர்கள் திராவிடப் பெரும்பான்மைக்கு எதிராக, தமது இருப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதே சிங்கள ஆளும்வர்க்கத்தின் வாதமாக இருக்கிறது. இவ்வாறான கருத்துநிலை வெறுமனே அரசியல்வாதிகளுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல பெருமளவு சிங்கள புலமையாளர்களும் இந்த விடயத்தில் குடிகொண்டிருக்கின்றனர் (மைக்கல் றொபேட்ஸ், சிங்கள தேசியவாதம் - 2001). இவ்வாறான வாதங்களுக்கு தமிழக பார்பனிய சக்திகளும் முண்டுகொடுத்து வந்தன. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கின்றது.

04.
இங்கு திராவிட அரசியல்வாதம் குறித்து மிகையான வாதங்கள் இருப்பினும், உண்மை என்னவென்றால் ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பான தமிழக ஆதரவென்பது பெருமளவிற்கு கலாசார மயப்பட்டதேயன்றி அரசியல்மயப்பட்டதல்ல. ஈழத்தமிழர் அரசியல் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்ததற்கான குறிப்பாக தமிழர் தேசிய அரசியல் தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி நகர்ந்தற்கான தோற்றுவாய்களை நாம் திராவிட அரசியலில்  தேடமுடியாது. அது முழுக்கவும் சிங்கள இனவாதத்துடனும், சிங்கள பெருந்தேசியவாதத்துடனும் தொடர்புபட்டதேயன்றி தமிழக அரசியலுடன் தொடர்புபட்டதல்ல. வேண்டுமானால் தமிழக அரசியல் இதில் ஒரு துணைக் காரணியாக இருக்கக் கூடும். குறிப்பாக 1948களுக்குப் பின்னர் திராவிட அரசியலானது பிரிவினைவாதத்திலிருந்து விலகி (பார்ப்பனியர்களால் வழிநடத்தப்படும்) இந்திய மத்திய அரசின் கொள்கைநெறிக்குள் அடங்கிப்போயின. தமிழகத்தின் பிரதான மரபுவழி திராவிட அரசியல் கட்சிகளான à®….இ.à®….தி.மு.க வும் தி.மு.க வும் ஒரு பெரிய சமஸ்டி அரசுக்குள் தாம் ஒரு பிரதேச கட்சிகள் மட்டுமே என்ற நிலைப்பாட்டுடன் தம்மைச் சுருக்கிக் கொண்டன. ஆனால் தமிழகத்திற்கும் நமது சூழுலுக்குமான கலாச்சார ரீதியான தொடர்பு மிகவும் பலமானதுதான். ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையில் அக்கலாச்சார ரீதியான உறவுகளே ஓர் அரசியல் ஆதரவுத்தளமாக பரிணமித்தது என நான் கருதுகின்றேன்.
 
இந்த பின்னணியில் தமிழகத்தின் புரட்சிகர சக்திகளும், தமிழ்த் தேசியவாத சக்திகளும் ஈழவிடுதலையின் ஆதரவு சக்திகளாக தொழிற்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆதரவுத்தளத்தை பொருத்தவரையில் இதில் ராஜீவ் காந்திக்கு முன், பின் என்று பிரிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. அவை எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருப்பது போல் தெரிகிறது. வேண்டுமானால் சிறிது காலம் அவைகள் மௌனம் சாதித்திருக்கலாம். ஆனால் தமிழகத்தின் பெருவாரியான மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் ஈழவிடுதலை குறித்த ஆதரவானது பெரியளவு நாம் பிரமிக்கும் நிலையில் இல்லை. இதற்கு சிலர் தமிழ் மக்களின் மனோபாவத்தையும் சமூக உருவாக்கத்தையும் காரணங்களாகச்  சொல்லுகின்றனர். இது பற்றி இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் கூறும் விடயம் இந்த உரையாடலில் மிகுந்த முக்கியமானது எனலாம்.  "ஈழத்திற்கு பதிலாக வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப் போர் தொடங்கியிருக்கும்" (Hindu April,26, 1987)

05.
இன்று ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பாக பேசும் குறிப்பிடத்தகு இலக்கியவாதிகளில் பா.செயப்பிரகாசம் முக்கியமானவர். தமிழகத்தின் மரபுசார் இடதுசாரிகள், பின்நவீனத்துவ வாதிகள் என சிலர் ஈழப் போராட்டம் தொடர்பாக பல்வேறு குழப்பகரமான புரிதல்களை சொல்லிவரும் சூழலில்தான் பா.செ இப்படியானதொரு நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

"மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில் எங்களுக்குப் பல சாளரங்கள் திறந்தன. அதன் வழி தெரிந்த ஒரு காட்சி - ஈழப் போராட்டம் பற்றி இங்குள்ள இதழ்கள், தொலைக்காட்சி, அறிவாளர்கள் உண்மை பேசவில்லை என்பது. இன்னுமொன்று உண்மை தேடாத மொட்டை மூளையாளர்கள் உலககெங்கிலும் இருக்கிறார்கள் என்பது. நேரடியாய் நாங்கள் ஈழத்தில் கால் வைத்த போது இந்த அறிவு வங்கிகளின் கற்பனை முடிந்து போயிருந்ததைக் கண்டோம்."
(ஈழக்கதவுகள் ப.ம் 12)

ஒரு எழுத்தாளன் என்பவன் யார்? ஒரு போராட்ட சூழலில் ஆகக் கூடியது அவன் என்ன செய்ய முடியும்? என்பவற்றுக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு வாழும் சாட்சியாக இருக்கின்றார் பா.செயப்பிரகாசம். அந்த வகையில் ஈழத்து எழுத்தாளர்களில் சிலர் கூட அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமுண்டு. எழுத்து பெரிதாக சாதித்துவிடும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. லூசுன் சொல்லுவது போன்று புரட்சிக்கு புரட்சியாளர்கள்தான் தேவை. ஆனால் எழுத்தாளர்கள் போராட்டத்தின் நியாயங்களை சொல்ல முடியும், அதன் பக்கபலமாக தொழிற்பட முடியும். என்னளவில் அவ்வாறு செயலாற்றும் போதுதான் ஒரு எழுத்தாளன் முழுமை பெறுகிறான் என்பேன். உலகு முழுவதும் ஒடுக்கு முறைக்கு எதிரான பேராட்டங்களின் போதெல்லாம் பல எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் அவ்வாறுதான் செயலாற்றியிருக்கின்றனர். எங்கெல்லாம் ஒடுக்கு முறைக்கு எதிரா மக்கள் கிளந்தெழுகின்றார்களோ அங்கெல்லாம் அவ்வாறானவர்களின் சிந்தனைகள் உயிர்த்தெழுகின்றன. அதே வேளை எல்லாக் காலங்களிலும் ஆதிக்க சக்திகளின் அடிவருடிகளாக, ஊதுகுழல்களாக செயற்படுபவர்களும் உண்டு. அவ்வாறானவர்களே அதிகம்.

ஒவ்வொரு ஆதிக்க சக்தியும் (கிராம்ஸி) தனக்கான சொந்த புத்திஜீகளை உருவாக்கிக் கொள்கின்றன என்பதுதான் வரலாறு நெடுகிலும் நாம் கண்டுவரும் உண்மை. என்னளவில் நான் அவ்வாறானவர்களை இரண்டு வகையில் பார்க்கின்றேன். ஒடுக்கும் சக்திகளை நேரடியாக ஆதரித்து அவர்களுக்காக சிந்திக்கும் அறிவாளர்கள், மற்றையவர்கள் எல்லைகளை கடந்து சிந்திப்பதாக கதை சொல்பவர்கள். அவ்வாறானவர்கள் இன, வர்க்க வரையறைக்குள் சிந்திக்க முடியாதென கூறி மறைமுகமாக ஆதிக்க கருத்தியல்வாதிகளுக்கான வெற்றிடங்களை உருவாக்கிக் கொடுப்பவர்கள். ஒரு எழுத்தாளன் வாழும் காலத்தில் தனது கண்னுக்கு முன்னர் நிகழும் ஒடுக்குமுறைகள் குறித்து எதிர் குரல் எழுப்பாமல் நாங்கள் எல்லைகளை தாண்டி மானுடவாதம் பேசப் போகிறோம் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து, ஒரு வகையில் நழுவி ஓடும் வாதம். அந்த வகையில் பா.செயப்பிரகாசம் ஒரு உயிர்ப்புநிலை எழுத்தாளராக (Organic Writer) தெரிகின்றார்.

"எங்கெங்கோ காணாமல் போன சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையை அந்த மக்கள் இனி ஒன்று கோர்க்க வேண்டும். அதற்கு ஜம்பது, நூறு ஆண்டுகள் எடுக்கலாம். எவ்வளவோ முட்டியும் முயன்றும் பார்த்தும் சிலரது வாழ்வு மீட்டெடுக்கப்பட முடியாமல் போகலாம். வாழ்ந்தும் வாழாமல் அலைகிற அவர்களின் கதைகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாய் சொல்வதற்கு நீளும்"
(ஈழக்கதவுகள்,ப.ம் - 13)

பிற்குறிப்பு:
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Organic Writer என்ற கருத்து இத்தாலிய மாக்சிய சிந்தனையாளர் கிராம்ஸியின் Organic Intellectual  என்ற கருத்திலிருந்து நான் உருவாக்கியதாகும். பொதுவாக புரட்சிகரமான குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது அதில் தம்மளவில் பங்கு கொள்ளும் அதன் நியாயத்திற்காக போராடும் புத்திஜீவிகளே கிராம்ஸியின் வரையறையில் Organic Intellectual என்று அழைக்கப்படுகின்றனர் ஆனால் இந்த வரையறையை புரட்சிகர சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிந்திக்கும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின்போது தமது எழுத்துக்களால், படைப்புக்களால் அதனுடன் இணைந்து நிற்கும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றவர்களுக்கும் பொருத்த முடியும். அவ்வாறு கையாளும் போது நாம், Organic Writer, Organic Poets போன்ற கருத்துக்களில்; பிரயோகிக்க முடியுமென்பது என்பது எனது கருத்து.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  25696568 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9925 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com