அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow நூல்நயம் arrow ஈழப் போராட்டத்தின் வெண்கலக் குரல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழப் போராட்டத்தின் வெண்கலக் குரல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - யதீந்திரா  
Thursday, 09 August 2007

புதுவை இரத்தினதுரையின் ‘பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்’
கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி சில குறிப்புகள்..


 

 

 

 

 

 

01.
புரட்சியில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு பாடலை எழுதுவது மட்டுமே போதுமானதல்ல. மக்களோடு சேர்ந்து நீங்கள் புரட்சியில் ஈடுபட்டால் அதைப்பற்றிய பாடல் தாமாகவே வரும்.
- பிரான்ஸ் ஃபனான்

"தூரிகை தோற்கும் போதெல்லாம்
ஓவியன் வெற்றியடைகிறான்
கரும்புலிகளுக்கே இந்தச் சமன்பாடு
இனியும் தொடரும் அவர்கள் பயணம்
தேசம் ஒளிகொண்டு இலங்கும்வரை
பிரிவதும் கவல்துமாய் போகுமெம் காலம்
வாழ்வின் விதிமீறும் குழந்தைகளை
வரைவது எங்கனம்?
தோற்றுப்போவதே ஓவியப் பெருமை.."

இந்த வரிகள் ‘பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்’ தொகுப்பிலுள்ள ‘காலம் எழுதிகளின் கதை’ என்னும் கவிதையிலுள்ள வரிகள். ஈழத்தில் பெரும் கவிஞர்கள் வரிசையிலுள்ள வேறு எவரால் இத்தகையதொரு பேசு பொருளை எடுத்தாள முடியும் எனக் கோட்டால், புதுவை இரத்தினதுரை என்னும் பெயர் மட்டுமே நினைவுக்கு வருகின்றது. ஏனெனில் அவரது அரசியல் இயங்கு தளம் அத்தகையது. ஈழத்துக் கவிதைப் பரப்பில் புதுவை இரத்தினதுரை என்னும் கவிஞரின் இடம் என்ன? என்பதை புரிந்து கொள்ள முயலும் ஒருவர் முதலில் அவரது அரசியல் இயங்கு தளத்தை சரியாக புரிந்து கொள்வது அவசியம் இதனை ஒரு வகையில் புதுவையின் கவிதைகள் குறித்த புரிதலுக்கான முன்நிபந்தனை எனவும் சொல்லலாம். புதுவையின் அரசியல் இயங்கு தளத்தை சரியாக புரிந்து கொள்ளாத ஒருவர் அவரது கவிதைகளை புரிந்து கொள்ள முடியுமென நான் நினைக்கவில்லை. அதே வேளை அவரது அரசியலை ஏற்காத ஒருவர் அல்லது நிராகரிகிக்கும் ஒருவர் அவரது கவிதைகளை நிராகரிப்பின் அது ஆச்சரியத்துக்குரிய ஒன்றுமல்ல.

சமகால ஈழத்து படைப்புகள் சார்ந்த உரையாடல்கள் அனைத்துமே அரசியல் சார்ந்தே அணுகப்படுகின்றன. இது மிகவும் வெளிப்படையான ஒன்றும் கூட. தமக்கு அப்படியான அரசியல் இல்லையென்று சாதிக்க முற்படுவபவர்கள் கூட, தாம் அப்படியில்லை என்று கூறுவதனூடாகவே தமக்கான அரசியலை சொல்லிவிடுகின்றனர். நமது காலத்தின் சகல உரையாடல்களும் அரசியல் சார்ந்தே நிகழ்கின்றன. (லூசுன்) எப்பொழுதுமே அரசியல் முன்னுக்கு வருகின்றது கலை அதன் பின்னுக்கு வருகின்றது. உண்மையில் புதுவை என்பவர் யார்? அவரது அரசியல் எத்தகையது? ஈழத்தின் ஏனைய பெரும் கவிஞர்களிலிருந்து அவர் வேறுபடும் புள்ளி எது? இந்த கேள்விகளுக்கான விடைகளுடாகவே இத்தொகுப்பு குறித்த எனது சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். எனது அவதானம் மேற்படி தொகுப்பு குறித்ததும்தான் இன்னொருவகையில் கவிஞர் குறித்ததும்தான்.

02.
புதுவை என்னும் கவிஞரின் வாழ்நிலையை அறிந்தவன் என்ற வகையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரோடு அரசியல் சார்ந்த உரையாடல்களில் ஈடுபட்டவன் என்ற வகையிலும் அவரது தத்துவார்த்த ஈடுபாடு, அரசியல் இயங்கு தளங்கள் பற்றி என்னால் சிலவற்றை சொல்ல முடியும். இலங்கையின் அரசியல் அரங்கில் இடதுசாரிகள் செல்வாக்குச் செலுத்திய காலமான 1960,1970களில், அதன் தீர்க்கமான குரலாகத் தொழிற்பட்டவர்களில் புதுவை முக்கியமானவர். அந்தக் காலத்தில் இருந்த பல மார்க்சியர்களைப் போலவே புரட்சிகர இலங்கைத் தேசம் என்ற நம்பிக்கையில் ஒன்றிக் கிடந்தவர் புதுவை. தமிழ், சிங்கள், முஸ்லிம் புரட்சிகர சக்திகள் இணையும் ஒரு வர்க்க புரட்சியினூடாக முன்னுதாரணமான இலங்கையொன்றை கட்டியெழுப்ப முடியும் என்பதை திடமாக நம்பியவர். அவர் எந்தளவு தூரம் அதனை நேசித்தார் என்பதற்கு அவரது இந்த வரிகளே சான்று.

"மாத்தளையிலே பொடிமெனிக்கே துவக்கெடுப்பாள்
மாதகலில் கந்தசாமி
பொல்லெடுப்பான்
நாத்தாண்டியாவில் காசிம் லெவ்வை
நாருரிக்கும் கத்தியை கரமெடுக்க
வாடாத கால்மார்க்சின்
தத்துவங்கள் வழிகாட்டும் அந்த வழி நடந்து சென்று
ஓடான பாட்டாளி வர்கமிங்கு
உயர்ச்சி பெற்று கட்டாயம் இருந்து பாரும்."

அதே புதுவை இரத்தினதுரை என்னும் இந்தக் கவிஞர் 1986இல் தென்னிலங்கைத் தோழனுக்கு என்ற கவிதையில் தனது நம்பிக்கையின் சிதைவை இவ்வாறு பதிவு செய்கின்றார். இந்த நம்பிக்கைச் சிதைவின் நீட்சிதான் அவரது பின்னைய அரசியல் இயங்கு தளமாகவும் இருந்தது

"முன்பெல்லாம்
சிங்களவர்
தமிழர்
சோனகர்கள் என்றெல்லாம்
எங்களுக்குட் பேத எதுமில்லா ஈழமதைப்
பெற்றுச்
சமதர்மப் பூமியதை உருவாக்கும்
கற்பனையில் மூழ்கிக் களித்தோம்
முடிந்ததுவா.."

இந்தக் காலகட்டமானது புதுவையின் அரசியலைப் பொருத்தவரையில் ஒரு மாறுநிலைக் காலகட்டம் எனலாம். உண்மையில் இலங்கை அரசியலைப் பொருத்தவரையிலும் குறிப்பாக தமிழ் தேசிய அரசியலைப் பொருத்தவரையிலும் இக்காலப்பகுதி ஒரு கொதிநிலைக் காலகட்டமாக இருந்தது. 1983இல் மேற்கொள்ளப்பட்ட இன அழித்தொழிப்பு அனுபவங்களுடன் தமிழ் தேசிய ஆயுதவழிப் போராட்ட அரசியல் ஒரு தெளிவான பிரிகோட்டின் அடிப்படையில் நகரத் தொடங்கியது. தமிழர் தேசியம் ஒரு தெளிவான கோட்பாட்டின் அடிப்படையில் நகரத் தொடங்கிய காலமெனவும் இதனைச் சொல்லலாம். இந்த அரசியல்போக்கானது புதுவை இரத்தினதுரை என்னும் கவிஞரின் ஒன்றிணைந்த அரசியல் செயல்பாடுகளுக்கான இறுதி நம்பிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கக் கூடும் ஆனால் அவரது மார்க்சிய நம்பிக்கையைப் பொருத்தவரையில் இது ஒரு மாறுநிலைக்காலகட்டமாக இருக்கவில்லை என்பதை நானறிவேன். அவர் இப்பொழுதும் ஒரு மார்க்சிய நம்பிக்கையாளராகத்தான் இருக்கின்றார். அவரது கருத்துக்களை நன்கு அறிந்தவன் என்ற வகையில் இதனை என்னால் சொல்ல முடியும். ஆனால் ஒர் அரசியல் நம்பிக்கையின் பேரால் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்த கவிஞன் தனது இனத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகளை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கான விடையாகவே அவர் இன்று தொழிற்பட்டு வருகின்றார். 1986களுடன் தமிழ் தேசியவாத விடுதலை அரசியல் தளத்துடன் தன்னை முழுமையாக பிணைத்துக் கொண்டவரான புதுவை, அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தேசியத்தினதும், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தினதும் ஒரு தார்மீகக் குரலாகத் தொழிற்பட்டுவருகின்றார். இன்று தமிழர் தேசத்தில் அவரது இடம் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியைக் கொண்டது. தமிழர் தேசத்தின் துயரத்தையும், வலிகளையும், வெற்றியையும், மகிழ்ச்சியைiயும் பாடும் கவிஞராக இருப்பதால் அவரை தேசம் அத்தகைதொரு இடத்தில் அமர்த்தியிருக்கின்றது. ஆனால் அவர் ஒரு போதும் தன்னையொரு ஆஸ்தான கவிஞராக எங்கும் குறிப்பிடதில்லை.

ஒரு மார்க்சியவாதி, அனைத்து இனங்களும் இணைந்த புரட்சிகர இலங்கைத் தேசம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த கவிஞர், ஏன் தமிழ் தேசியவாத அரசியலை நோக்கி நகர்ந்தார்? அவரது பதில் இவ்வாறிருக்கிறது. “ஒரு காலத்தில் நாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமான இலங்கைக்குள் ஒரு அற்புதமான வாழ்வை சமைக்க ஆசைப்பட்டோம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற எந்த வேறுபாடுமற்ற, வர்க்க பேதமற்ற, ஒர் அழகான நாட்டை நிர்மானிக்க விரும்பினோம். எங்களில் கணிசமான ஈழத்து படைப்பாளிகள் கூட்டாக இணைந்து வர்க்கபேதமற்ற ஒடுக்குமுறையற்ற தேசத்தை கனவு கண்டோம், பாடினோம். இன்றும் நான் அதை பிழையென்று சொல்ல மாட்டேன் ஆனால் கால நகர்வில் எனக்கு சிறிது விளங்கியது. நாங்கள் ஒட்டுமொத்தமான ஏதொவொரு நுகத்தடியை உடைக்க புறப்படும்போது எங்கள் மீதே புதிய புதிய நுகத்தடிகள் போடப்படுகின்றனவே! நான் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் இனத்தின் மீது பின்னே குழி பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதன் பின்னர் பெரியளவில் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது முதலில் எமது பிரச்சனைக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழ் தேசியத்தின் பக்கம் திரும்பினேன். இந்த போராட்டமும் மானுடம் தழுவியதுதான, அடிமை நுகத்தடிகளை உடைப்பதற்கான போராட்டம்தான். நான் இன்றும் சிங்கள மக்களுக்கு எதிராக எழுதவில்லை வனையப்பட்டிருக்கம் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகத்தான் எழுதுகின்றேன். நான் இப்பொழுதும் கூறுகிறேன் எப்பொழுதும் கூறுவேன் நான் அன்று தேவைகருதி அங்கு நின்றவனுமல்ல இன்று தேவைகருதி இங்கு நிற்பவனுமல்ல எனக்குள் இருக்கும் விடுதலைக்கனல் என்னை இந்தப் பக்கம் நோக்கி நகர்த்தியிருக்கின்றது." (நேர்காணல், சுட்டும்விழி -2003)

03.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதவழி தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் பயணத்தில் இணைந்திருக்கும் புதுவையின் வெளிப்பாடுகளில் சிலவற்றை உள்ளடக்கியதுதான் இத்தொகுப்பு. 1993 இருந்து 2005 வரையான காலப்பகுதியில் அவர் எழுதிய 256 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள ஒடுக்குமுறை வாழ்வின் துயரம், ஒடுக்குமுறையை தகர்ப்பதற்கான நம்பிக்கை, சிங்களத்தின் ஒடுக்குமுறை நிழல் பரவாத காலத்தின் நினைவுகள், போராளிகளின் தீரத்தினதும் அர்ப்பணிப்பினதும் மீதான பெருமிதம், ஆகியவையே இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளின் பேசு பொருளாக இருக்கின்றன. ஒரு காலத்தில் எங்களுக்கு இப்படியும் ஒரு வாழ்வு இருந்தது என்பதை கவிஞர் இவ்வாறு நினைவு கூர்கின்றார்.

"மாடெல்லாம் மேய்ந்து
மடிநிரப்பி
வரம்பேறி
வீடு திரும்ப வெளிக்கிட்டு
உடல் நெளிக்கும்.
‘அரசவெளிஅம்மன்’ ஆலயத்து பூசை மணி
தரவை வயல் கடந்து தாவி
ஊர் எல்லைவரை
விரையும்.
நீரள்ளி வீடேகும் சிற்றிடையார்
காற்சலங்கையோசை
கல்லொழுங்கை மீதிருந்து
மேற்கிளம்மி
இளசுகளின் மேனியில் கிளுக்கிண்டும்.
விழுந்தெறிந்த ஆலவிருட்சத்தின் கீழிருந்து
பொழுதுபடும் வரையும் பேசிக்கழிகின்ற
கிழடுகளும் மெல்ல கிளம்பி நடைபயில்வர்.
தோட்டக்கிணற்றின் துலா இருந்து
பாட்டு வரும்…
தித்தித்த வாழ்கையினி எப்போது?"        
(நேற்று இன்று நாளை – ப.ம் - 62)

ஒரு காலத்தின் வாழ்வை இவ்வாறு வர்ணித்துச் சொல்லும் கவிஞர், சிங்கள ஒடுக்குமுறையால் சிதைந்துபோன அத்தகையதொரு வாழ்வை மீளவும் அடைவதற்கான நம்பிக்கையை அதே கவிதையிலேயே இவ்வாறு பதிவு செய்கின்றார்

"அஞ்சற்க!
எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
‘நஞ்சணிந்தவீரர்’ நாடமைப்பர்.
நடக்கின்ற
வெஞ்சமரை வென்று
வீதியெங்கும் முரசறைவர்.
வேலியொன்று போட்டு
வெறிநாய்கள் உட்புகுந்து
காலில் கடிக்காமல்
காவலுக்கு நிற்பர்…
மரங்களெல்லாம் புதிதாய் துளிர்த்துவரும்.."
(நேற்று இன்று நாளை – ப.ம் - 63)

பெரும்பாலான கவிதைகளில் நேற்றைய வாழ்வின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் கவிஞர். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழக் கூடும் அப்படியாயின் ஈழத் தமிழரின் பழைய வாழ்வில் (நேற்றைய வாழ்வு குறித்த நினைவு கூரல்களின் அடிப்படையில்) எல்லாமும் சிறப்பாகவா இருந்தன? அந்த வாழ்வு அகநிலையில் அசிங்கமான ஒடுக்குமுறைக் கூறுகளை கொண்டிருக்கவில்லையா? நிட்சயமாக கொண்டிருந்தன அதனை மற்றையவர்களை விட கவிஞர் புதுவை நன்கு அறிவார். இலங்கை இடதுசாரித்துவ அரசியல் போக்கில் சீனசார்பு அணியில் இணைந்திருந்த புதுவை இரத்தினதுரை, சீனசார்பு அணியினர் மேற்கொண்ட சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டவர். தமிழ் சமூகத்தில் புரையோடிப் போய்க்கிடந்த அந்த அசிங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். ஆனால் அவர் இங்கு எடுத்தாளும் விடயமோ வேறொன்று பற்றியது. சிங்கள மேலாதிக்கம் தமிழர் தேசத்தின் மீது பரவாத ஒரு காலத்தின் வாழ்வு குறித்தே அவர் இங்கு பேச முயல்கின்றார் அந்த வாழ்வில் இருந்த அழகு குறித்தே பேசுகின்றார்.

சிங்கள பெருந்தேசியவாத ஒடுக்குமுறை வரலாற்றின் வயது அறுபதை கடந்து செல்கின்றது. இந்த காலகட்டத்தில் சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டம் படிமுறை சார்ந்த வளர்ச்சிக்கட்டத்தில் நகர்ந்திருக்கிறது. ஒடுக்குமுறையின் வளர்ச்சிக்கு ஏற்ப போராட்ட வடிவங்களில் மாற்றமும் இறுக்கமும் ஏற்பட்டது. ஆனால் சிங்கள மேலாதிகத்திற்கு எதிரான விடுதலைப் போரில் சிங்கள பெருந்தேசிவாதம் ஆட்டம் கண்டதும் தடுமாறியதும் விடுதலைப்புலிகளின் அர்ப்பணிப்பும் தீரமும் மிக்க போராட்டத்தில்தான். இன்றும் சிங்கள பெருந்தேசிவாத சக்திகளுக்குள்ள உணர்வுநிலை தாம் விடுதலைப்புலிகளிடம் தோற்றுவிட்டோம் என்பதுதான். என்னைப் பொறுத்தவரையில் இன்றைய சிங்களத்துவ அரசியல் என்பது ஒரு தோல்விமையப்பட்ட தேசியவாத அரசியலாகும். தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டிருந்த சிங்கள பெருந்தேசியவாத அரசியலை தோல்வி மையவாத அரசியலாக மாற்றியவர்கள் புலிகள். இதற்காக அவர்கள் அளப்பரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்திருக்கின்றனர். இது குறித்து எப்போதுமே தமிழ் சமூகத்திற்கு பெருமிதமுண்டு. விடுதலைப் போராளிகளில் ஒருவராக இருக்கும் புதுவை எவ்வாறு பெருமிதம் கொள்ளாமல் இருப்பார். அவர் தனது பெருமிதத்தை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்.

"எழுதும் வரிகளே உருகிக் கசியும்
கவிதை இவர்.
அடையாளமற்றிருந்த இனமொன்றின்
முகவரி இவர்.
விதி வலியதல்ல
வலியதே விதியாகிறது என
எழுதிய புதுவிதியிவர்.
பிறப்புக்கு இறப்பால் அர்த்தம் சொல்லி
சிறப்புற்ற சீவன்முத்தர்கள்.
தலை சாய்த்து வளைந்தாடுவதே
வாழ்வெனக் கருதும் நாணற்புற்களிடையே
நிமிர்தெழும் வழியுனர்த்திய நிர்மலர்கள்."           (கார்த்திகைப்பூ பூத்திருநாள் ப.ம் - 416)

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் மட்டுமல்ல அவரது முன்னைய தொகுப்புக்களிலுள்ள கவிதைகளிலும் எப்போதுமே போராளிகள் குறித்த பெருமித உணர்வும், நானும் அவர்களோடு இருந்தேன் என்ற பெருமித உணர்வும் விரவிக்கிடப்பதை காணலாம். பெரும்பாலும் அவர் தனிப்பட்ட உணர்வுநிலை சார்ந்தோ அல்லது அனுபவங்கள் சார்ந்தோ கவிதைகள் எழுதுவபரல்ல பொதுநிலைப்பட்டே தன்னை வெளிப்படுத்துபவர் இந்த தொகுப்பின் முன்னுரையில் கூட அவர் இதனைக் குறிப்பிடுகின்றார் “மனுக்குலத்தின், என்னினத்தின், நான் வாழும் காலத்தின் மகிழ்ச்சி, துயரம், வெற்றி, தோல்வி, வாழ்வு இவை தவிர, தனிப்பட்ட வாழ்வும், உணர்வும் எனக்கில்லை” இதுதான் (இவ்வாறான வெளிபாடுகள்) ஏனைய கவிஞர்களிலிருந்து புதுவை வேறுபடும் புள்ளியுமாகும். அதே வேளை ஏனைய ஈழத்துக் கவிஞர்கள் தம்மிலிருந்து புதுவையை வேறுபடுத்தி நோக்கும் புள்ளியும் இதுதான். புதுவை ஏனைய கவிஞர்கள் போன்று படிமம், பரிசோதனை என்றெல்லாம் அலட்டிக் கொள்பவரல்ல. தனக்குத் தெரிந்ததைச் சொல்பவர் அவரது கவிதைகளின் சிறப்பே, இன்று தமிழர் தேசத்தில் வாழும் ஒரு சாதாரண தமிழ் குடிமகன் தனது அனுபவங்களை இவரது கவிதைகளில் உரசிப் பார்க்க முடியுமாக இருப்பதுதான். அவரது நேற்றைய வாழ்வு குறித்த ஏக்கங்களை படிக்கும்போது எனது கிராமத்து வாழ்வு குறித்த நினைவுகள் மெல்லிதாக உரசிச் செல்வதை என்னால் உணர முடிகிறது. இதுதான் அவரது கவிதைகளின் வெற்றியென நான் நினைக்கிறேன். ஈழத்தின் புகழ்பெற்ற ஏனைய கவிஞர்களின் வெளிப்பாடுகளில் அப்படியொன்றை என்னால் அவதானிக்க முடியவில்லை. கவிஞர்புதுவையின் கவிதைகள் இரண்டு நிலைகளைக் கொண்டிருப்பதாக நான் கருதுகின்றேன். ஒன்று, ஒரு கவிஞருக்கே உரித்ததான ஒடுக்குமுறைக்கு எதிரான கோபாவேசம், மற்றையது ஒரு போராளிக்குரிய பொறுப்புணர்வு இந்த இரண்டு நிலையில்தான் அவர் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார். இந்த இரண்டாவது நிலையென்பது ஈழத்தின் ஏனைய புகழ்பெற்ற கவிஞர்களுக்கு அன்னியமான ஒன்றாகும். இந்த அன்னியமான நிலைதான் ஏனைய கவிஞர்கள் புதுவையை நெருங்கத் தயங்குவதற்கும், பெரும்பாலான இடங்களில் புதுவை குறித்து மௌனம் சாதிப்பதற்கும் காரணம். இது விமர்சகர்களுக்கும் பொருந்தும் (இது பற்றி இந்த இடத்தில் விவாதிப்பதை தவிர்த்துக் கொள்கின்றேன்.)

குறிப்பாக தமிழகச் சூழலில் ஏனைய சில ஈழத்துக் கவிஞர்கள் பேசப்பட்ட அளவிற்கு அவர் பேசப்படாமல் இருப்பதற்கும் கவிஞர் என்பதற்கு அப்பால், அவர் வரித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது நிலைதான் காரணம். நான் எப்போதுமே அரசியல் சார்ந்தே படைப்புக்களை அனுகும் ஒரு வாசகன் என்ற வகையில் ஈழத்து கவிதைப் பரப்பில், அரசியலடிப்படையில் தனது வெளிப்பாட்டிற்கு ஏற்ப வாழும் ஒருவரை தேடினால் எனக்கு முதலில் தெரிபவர் புதுவை இரத்தினதுரை என்னும் கவிஞர் மட்டும்தான்.

இது கவிஞர் இடசாரித்துவ அரசியலுடன் தன்னை பிணைத்துக் கொண்டிருந்த 1976களில் எழுதிய வரிகள்

"தும்மற் படைப்புக்களால் தூசுதட்ட முடியுமென
நம்புகின்ற இயக்கமதில் நானில்லை, ஆதலினால்
பேனா பிடித்தெழுவேன் புரட்சிக்கு வேளைவர
தூணாய் நிமிர்தெழுந்து துவக்கும் கரமெடுப்பேன்"

(ஒரு தோழனின் காதல் கடிதம் பக் - 13)

அவரது சிறப்பே இந்த வரிகளுக்கு ஏற்ப அவர் இப்பொழுதும் இருப்பதுதான். இப்பொழுதும் புதுவை இரத்தினதுரை என்ற இந்தக் கவிஞர் தும்மற் படைப்புகளால் தூசு தட்ட முடியமென நம்பும் ஒரு இயக்கத்தில் இல்லை, எப்போதுமே எதிரிகளுக்கு அச்சத்தையும், வியப்பையும், தடுமாற்றத்தையும் கொடுக்கும் ஒரு பெரும் விடுதலை இயக்கத்தின் போராளி.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09
TamilNet
HASH(0x556accd7e310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09


புதினம்
Thu, 28 Mar 2024 22:09
















     இதுவரை:  24714220 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4415 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com