அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 38 arrow ஓர் ஈழத்தமிழனின்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓர் ஈழத்தமிழனின்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சு. இராசரத்தினம் - கனடா  
Tuesday, 14 August 2007

ஓர் ஈழத்தமிழனின்
புலம்பெயர் வாழ்வின் உள் உணர்வுகள்.


மனித வரலாற்றில் கடந்த இருபதாம் நூற்றாண்டு தான் அதிகளவு மனிதர்கள் தமது பிறந்த இடங்களை, நாடுகளை விட்டுப் புலம் பெயர்ந்த நூற்றாண்டாக இருக்கும் என நம்புகிறேன்.

  
இப்புலப்பெயர்வுக்கான காரணங்களான அக, புற அரசியல், பொருளாதாரம், தனிப்பட்ட பாதுகாப்பின்மை, சகிப்பின்மை, அனைத்து வழிகளிலும் ஒதுக்கப்படுதல், ஒடுக்குமுறை, பேரழிவுகள், மோதல், போர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.


இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் நானும் ஒருவன்.  தற்போது கனடாவில் வசிக்கும் எனது புலப்பெயர்வு இரு கட்டமானது.  1980 பெப்ரவரி முதல் நைஜீரியாவிலும் 1987 செப்ரெம்பர் முதல் கனடாவிலுமாக அமைந்தது.

  
1983இல் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு வன்செயலுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த தமிழர்கள்.  ஒடுக்கு முறையாலும், ஒதுக்கப்பட்டமையாலும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே குடிபெயர்ந்தார்கள்.  அவற்றில் நானும் ஒருவன். 

 
நான் ஸ்ரீலங்காவில் உள்ள சிமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்திப் பகுதியில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்தேன்.  எனது தொழில் இயந்திரங்களுடனும், கனிமப் பொருட்களுடனும் கொண்ட தொழில்நுட்ப உறவுதான்.  பொது மக்களோடு எவ்வித தொடர்பும் கிடையாது.  ஆனாலும் நான் சிங்கள மொழியிற் தேர்ச்சி பெறல் வேண்டும் அல்லாவிடின் நான் ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ பெறத் தகுதி அற்றவன் எனச் சட்டம் கூறுகிறது.  ஏன் எனில் நான் ஒரு தமிழன் என்பதே.  ஆனால், என்னுடன் பணிபுரிந்த சிங்களவர்கள் தமிழ்ப் பிரதேசத்திற் தொழில் புரிந்த போதும் தமிழ் கற்க வேண்டியது இல்லை. 

 
இவ்வாறான மொழி அடிப்படையிலான இனவேறுபாட்டால் எனது திறமை புறக்கணிக்கப்பட்டு, நான் ஒதுக்கப்பட்டேன்.  இதுவே அன்றைய இலங்கைத் தமிழர் நிலை, எமக்குப் பின்னர் பதவியில் இணைந்த சிங்களவர்கள் அனைத்து உயர்வுகளையும் பெற்றனர்.  இந்நிலையால் பல்வேறு துறைசார்ந்த தமிழ் வல்லுநர்களும் தமது தாயத்தை விட்டுக் குடிபெயர்ந்தார்கள்.


நானும் குடிபெயரும் நோக்கோடே வாழ்ந்து வந்தேன். 1980இல் நைஜீpயாவிற்குக் குடும்பமாகக் குடிபெயர்ந்தோம்.


என்னால் அப்போது நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவு சம்பளமும் , பல வசதிகளும் கொண்ட பணிக்கான ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றேன்.  உள்ளத்தில் மகிழ்ச்சி, என் வாழ்வில் பெரும் திருப்புமுனை என்று எண்ணி மகிழ்ந்தேன்.  என் குடும்பம் மாத்திரம் அல்ல.  உறவுகள் அத்தனை பேரும் மகிழ்ந்தார்கள்.  சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு வானத்தில் என் மனம் சிறகடித்துப் பறந்தது.
பிறந்த மண்ணை, என் தாயகத்தை விட்டுப் பிரியும் போது எனக்கு எத்தகைய வருத்தமும் இருக்கவில்லை.  பெற்ற தாயை, உறவுகளைப் பிரிந்து செல்வதில் எனக்கு எவ்வித மனச்சஞ்சலமும் இருக்கவில்லை.  விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சியாகப் பறந்து சென்றேன். இந்நிகழ்வு என்னை வெறும் பொருளாக மாற்றிவிடும்  என்பதை நான் அறிந்திருக்கவில்லை.  என் உறவுகளுடன், அயலுடன் என் மக்களுடன் ஒட்டி உறவாடி, இணைந்தும் முரண்பட்டும், சகலவற்றையும் பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கை மெதுவாக ஆவியாகத் தொடங்குவதை அப்போது என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. 

 
லாகோசில் (Lagos) அமைந்துள்ள விமான நிலையத்தில் வந்து எனது தொழிற்சாலை அலுவலகர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.  மிகப் பெரிய விமான நிலையம். அழகிய  மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்த வாகோஸ் நகரத்தின் அழகைக் கண்டு மகிழ்ந்தேன்.  அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாக அது விளங்கியது.  நைஜீரிய நாடு பெற்றோலிய எண்ணைவளம் முதற்கொண்டு பல்வேறு கனிமம் பொருட்களைக் கொண்டிருந்ததால் அப்போது அது பெரும் பண பலம் கொண்ட நாடாக விளங்கியது. 
நாம் அன்று இரவு விக்ரோறியாத் தீவில் உள்ள எமது தொழிற்சாலை நிறுவனத்தின் விருந்தினர் விடுதியில் தங்கினோம். நவீன வசதி கொண்டதாக அது அமைந்திருந்தது.  இந்நிறுவனம் சுவிற்சலாந்து நாட்டவரால் நிர்வகிக்கபட்டதால் சுவிஸ்சுலாந்து நாட்டில் உள்ள விடுதிகளுக்கு இணையாக அல்லது அவற்றிலும் மேம்பட்ட வசதி கொண்டதாக அது அமைக்கப்பட்டிருந்தது என்று கூறலாம்.


எமது நிறுவனத்தினர் சிமெந்துத் தொழிற்சாலையை நைஜீரியாவின் மத்திய மாநிலமான பெனுவேயில் அமைத்திருந்தார்கள்.  மூலப் பொருட்கள் அம்மாநிலத்தின் காட்டுப் பகுதியில் இருந்தமையால் அங்கேயே அமைத்தனர்.  மறுநாள் காலை உணவு முடிந்ததும்.  வாகோசில் இருந்து விமானத்தில் ஏற்றி “எனுகு என்னும் நகரத்திற்கு அனுப்பினார்கள்.  அது ஒரு சிறிய விமான நிலையம். அங்கும் எமது  நிறுவனத்தினர் வந்து வரவேற்று அங்கே உள்ள விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.  மதிய உணவு அருந்தியதும் சிற்றூர்தி (கார்) ஒன்றில் எம்மைத் தொடர்ந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.  எவ்வளவு தூரம் என்று கேட்டேன் 400 கீலோ மீற்றர் என்றனர்.  அப்போது அது எனக்குப் பெரும் தூரமாகப் பட்டது.


வாகனம் புறப்பட்டது.  அதன் வேகமோ எனக்கு வியப்பைத் தந்தது.  120-160 கீலோ மீற்றர் வேகத்தில் அது ஓடிக் கொண்டிருந்தது.  இரு மணி நேரம் கடந்த பின்னர் ஒரு மண் ஒழுங்கையில் வாகனம் இறங்கியது. 

 
ஏன் “தார்றோட்” இலலையா? எனச் சாரதியிடம் கேட்டேன்.  à®šà®¿à®®à¯†à®¨à¯à®¤à¯à®¤à¯ தொழிற்சாலை காட்டுப் பகுதியில் கட்டப்படுவதால் இன்னமும் வீதி போட்டு முடியவில்லை என்று கூறினார்.  மேலும் அரை மணிநேரப் பயனத்தின் பின்னர் வீதி போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.


நான்கு புறமும் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் கடல் அலையினூடு செல்லும் வள்ளம் போல் பாய்ந்து பாய்ந்து ஓடியது.  அரைமணி நேர ஓட்டத்தின் பின்னர் போக்கே (புடிழமழ) என்னும் சிறு நகரத்தை அடைந்தோம்.  அங்கு குளிர் பானம் வாங்கக் கூடியதாக இருந்தது.  அந்நகரமே சீமேந்துத் தொழிற்சாலைக்கு அண்மையில் உள்ள நகரம் ஆகும். 
தொழிற்சாலை அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.  தொழிற்சாலையைக் கட்டத் தொடங்குவதற்கு முன்னர் மின்சார வசதிகளைச் செய்து கொண்டு பலதுறை வல்லுனர்களும் தங்குவதற்கு வீடுகள், அவர்களுக்கான மருத்துவமனை நீச்சல் தடாகம் உட்படச் சகல பொழுது போக்கு மற்றும் விளையாட்டு நிலையங்களையும் அமைந்து இருந்தனர்.

  
எம்மை எமக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்குத் தொழிற்சாலை நிறுவன அதிகாரி அழைத்துச் சென்று வீட்டின் சாவியைத் தந்தார்.  அனைத்து வசதியும் கொண்ட வீடு, எமக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சென்றிருந்த எனது நண்பர் உடனே ஓடோடி வந்தார். நாம் இளைப்பாறியதும் அன்றிரவு உணவு அவர்களுடன் தான். 

 
நாம் வாழ்ந்த அந்தக் குடியிருப்பில் 150 வீடுகள் வரை இருந்தன.  எம்மில் ஐவரைத் தவிர மற்றையவர்கள் ஐரோப்பியர்கள், பல ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்தவர்கள்.  நாம் உற்பத்திப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.  ஆதலால் புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அத்தொழிற்சாலையின் இயந்திரங்களையும் அதன் கருவிகளையும் நாளாந்தம் பார்வையிpட்டு எம்மைத் தயார் படுத்திக் கொண்டோம்.  தொழிற்சாலை இயங்க இன்னும் குறைந்தது.  ஆறு மாதங்கள் ஆகும் என்பதனைக் கண்டு கொண்டோம்.

 
தொழிற்சாலையின் கட்டமைப்புக்கு எமது அறிவினையும் பகிர்ந்து கொண்டோம்.  
தாயகத்தில் ஓர் ஆண்டில் உழைத்த மொத்தப் பணத்தையும் ஒரு மாதத்தில் பெற்றுக் கொண்டோம்.  அனைத்து வசதிகளும் எம்மைச் சூழ இருந்தன.  இருப்பினும் எம்மனம் மகிழ்ச்சியை மெல்ல மெல்லத் துறந்தது. 


ஒவ்வொரு நாளும் தாயகத்தில் இருந்து எப்போது கடிதம் வரும் என்ற எதிர்பார்ப்பே. கிடைக்கும் கடிதத்தை நானும் மனைவியும் பல தடவைகள் படித்து முடிப்போம். 

 
நாம் வாழும் அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட அறுபது தமிழ்க் குடும்பங்கள் இருந்தன.  அடிக்கடி சந்திப்போம்.  பேசியவற்றை மீண்டும் மீண்டும் பேசுவோம். படித்த புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்போம்.  பார்த்த படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்போம்.


பொருளுக்குக் குறைவில்லை.  வசதிக்குக் குறைவில்லை.  பணத்திற்குக் குறைவில்லை. இருப்பினும் மன நிறைவில்லை.


காலம் மிக மெதுவாக நகர்ந்தது, கிழக்கே உத்வேகத்துடன் உதித்த சூரியன் பிரகாசத்தோடு மேல் எழுந்து மிக விரைவிலேயே மேற்கு வானத்தை நோக்கிச் சென்று விட்டான்.  மங்கிய மாலைப் பொழுது எம்முன்னே நின்றது. 

 
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே எந்தப் பிடிப்பும் அற்று மிதப்பதைப் போன்ற உணர்வே என்னுள் இருந்தது.  அது அடிப்படையில் ஆன்மிக, தார்மிக மாற்றத்தை என்னுள் உருவாக்கியது.


மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்கிக் கொள்ள, எங்கே தமிழர் ஒருவர் இருக்கிறார் என்று அங்கு வாழ்ந்த ஒவ்வொரு தமிழரும் மற்றவரை நாடிச் சென்று இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு ஒன்றி வாழ்ந்தனர்.  வாழ முயற்சித்தனர்.  அங்கு தமிழர்களிடையே சாதியைக் காணவில்லை. சமயத்தைக் காணவே முடியவில்லை. 

 
சுருங்கக் கூறின் அவர்கள் நைஜீரிய நாட்டில் வசிக்கவில்லை.  தமிழ்மொழியில் வசித்தனர்.  வசிக்க ஏக்கத்துடன் அலைந்தனர் என்றே கூறலாம். 
வெளிநாடுகளில் எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் அவர்கள் அயலவர்கள் என்ற நிலையில்; ஒருபோதும் மாறுவதில்லை. மாறவும் முடியாது.  அவர்களின் இன்றியமையாத ஒரு பகுதி அவர்களின் தாயகத்தில் நங்கூரமிட்டு நிற்கிறது.  என்பதனை நைஜீரியா சென்ற ஓர் இரு ஆண்டுகளுக்குள் முடிவாக அறிந்து கொண்டேன்.

என்னைப்பற்றி,
என் குடும்பத்தைப்பற்றி,
என் உறவுகள் பற்றி,
என் சொந்த நாடு, பிறந்த மண், இனம் என்பன பற்றிச்
சிந்திக்க நிறையவே நேரம் கிடைத்தது.
இவைகள் மீது கொண்ட மீளாக் காதலினால்
துயரம் மேலெழும்,
மனம் சுமை கொண்டதாகும்.
இத்துயரமே என்னை ஊருவாக்கியது. 
இத்துயரம் குறித்து பெருமிதமும் ஏற்படுகிறது. 
இத்துயரம் என் தாய் நாட்டின் மீதும்,
இனத்தின் மீதும்
ஒரு புனிதத் தன்மையை என்னுள் ஏற்படுத்தி விட்டதை
உணர்ந்து கொண்டேன்.
நைஜீரியாவில் நான் வாழ்ந்த இடத்து மக்கள் ‘திவ்’ இனத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்களின் மொழியிற் சில தமிழ்ச் சொற்கள் இருந்தன.  அது என்னை ஆச்சரியப்பட வைத்தது.  பண்பு நிறைந்த ஒழுக்கம் மிக்க மக்கள்.  நாம் செல்லும் போது அவர்கள் ஆதி வாசிகள்.  நெறிப்படுத்தப் பட்ட ஒரு மக்கள் கூட்டம்.  அரை நிர்வாணமாகவே ஆண்களும் பெண்களிற் பலரும் இருந்தனர்.

  
ஆற்றில் ஆண்களும் பெண்களும் முழு நிர்வாணமாக நின்றே குளித்தனர்.  ஆனால், ஓர் ஒழுக்கக் கேட்டையோ, வன்முறையையோ, கேலிப்பேச்சுக்களையோ நான் வாழ்ந்த எட்டு ஆண்டுகளிற் கண்டதில்லை. 

 
மனித நாகரிக வளர்ச்சி, பொருள் சார் பண்பாட்டின் மேம்பாடு, மனித மனங்களிற் பலவித குறைபாடுகளை உருவாக்கி வைத்துள்ளது என்பதை முதன் முதலில் எனக்கு உணர்த்தியது.  நைஜீரிய வாழ்க்கை.
விடுமுறை எப்போது வரும்;இ எப்போது எம் ஊருக்குத் திரும்புவோம், என்று எதிர் பார்த்த வண்ணமே நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வந்தோம்.  சிறிது காலத்தில் பெரும் பணத்தைச் சேர்த்துக் கொண்டு ஊர் சென்று சிறப்புடன் வாழலாம் என எண்ணிக் கொண்டே காலத்தைக் கழித்தோம்.


சிறீலங்காவில் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டித் தமது வாழும் உரிமை வேண்டிச், சுதந்திரம் வேண்டி, ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கினர்.
இப்போராட்டத்தினால் உயிருக்கு அஞ்சியும், அரச இராணுவ வன்முறைகளுக்குப் பயந்தும், பயமற்ற வாழ்வு வாழ வேண்டியும் தமிழர்கள் உலகெங்கும் ஓடத் தொடங்கி விட்டனர்.


எம் தாய்மண்ணில் நாம் மீண்டும் சென்று எமது உறவுகளுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்பே, குடிபெயர்ந்து வாழும் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்தது.  வைக்கின்றது.


தமிழர் மீதான சிறீலங்கா அரசின் போக்கினால் இத்தகைய எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடுமோ…? என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது.  அந்த எண்ணம் நிறைவேறும் காலம் உடனே இல்லை என்பதைப் பலரும் உணர்ந்தனர். 

 
1986இன் பின்னர் நைஜீரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.  பொருளாதாரம் மோசமாகச் செயற்படும் போது எப்போதும் இனவெறி தலை தூக்கும்.  புலம்பெயர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் உள்ளாவார்கள், தேசியவாதிகளாற் புறக்கணிக்கப்படுவார்கள்.

 
இந்நிலை குடியேறி வாழும் எந்த இனத்திற்கும் எந்த நாட்டிலும் எப்போதும் உருவாகலாம் என்ற உலக வரலாற்றைப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.  வளமான நாடுகளிற் பலசலுகைகள், பதவிகள் பெற்று வாழ்ந்தாலும் அவர்கள் அயலவர்கள் என்ற நிலையில் இருந்து ஒருபோதும் மாறுவதில்லை என்பதே உண்மை நிலை.


நைஜீரியாவிலும் இத்தகைய நிலைமை மெல்ல மெல்ல உருவாக என்னைச் சுற்றியிருந்த பல தமிழ்க் குடும்பங்கள், தாயகம் திரும்பக்கூடிய சூழல் இல்லாமையால் கனடா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து என்று சென்று விட்டனர்.  இறுதியில் மூன்று குடும்பங்களே இருந்தோம்.  அனைத்து வசதிகள் இருந்தும் என் வாழ்வு எனக்குச் சூனியமாகப்பட்டது.  அப்போது நான் கற்ற ஒரு விடயத்தை அச்சூழல் எனக்கு முழுமையாக விளங்கிக் கொள்ள வைத்தது.

– அது,
“பண்டைக் காலத்தில் ஒரு சமுதாயம் தனது உறுப்பினர்களின் வாழ்வை முறைப்படுத்தி வந்தது.  அப்போது ஒரு சமுதாயத்தில் இருந்து நாடு கடத்தப்படுவது, மரண தண்டணை பெறுவது போல் அல்லது அதற்கும் மேலாகக் கருதப்பட்டது.  நாடு கடந்து வாழ்வோர் எதிர் காலத்தைத் தன்னந் தனியாக எதிர் கொள்ள வேண்டியிருந்தது.  அவர்கள் தமது பிறந்த நாள் முதற் கொண்ட உறவுகள் அனைத்தையும் இழந்தார்கள்.  ஒரு சமுதாயத்தில் இருந்து விலக்கப்பட்ட ஒரு தனிமனிதன் மீட்பற்ற ஆன்மாவாகவே கருதப்பட்டான் என்பதாகும்.”


இத்தகைய ஆன்மாவாகவே அப்போது நான் இருந்தேன்.  போதிய பண வசதி இருந்த போதும் தாய் நாட்டில் என் தாயுடன், என் உறவுகளுடன் சென்று வாழலாம் எனில் தாய் நாட்டில் அத்தகைய சூழல் இல்லை.  எனவே எனது பல உறவுகள் சென்று குடியேறியுள்ள கனடாவிற்கே நானும் செல்வதாகத் தீர்மானித்தேன்.  அதற்கு முன்பாக என் தாயகம் சென்று என் தாயையும் மற்றும் உறவினர்களையும் கண்டு வரவிரும்பினேன். 

 
1987 தை முதலாம் நாள் பல இராணுவக் கெடுபிடிகளுக்கூடாக, பல இராணுச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி என் ஊரைச் சென்றடைந்தேன்.  அன்றைய நாள் தான் ஸ்ரீலங்கா அரசால் பொருளாதாரத்தடை யாழ்ப்பாணத்துக்கு விதிக்கப்படும் அறிவித்தலை வானொலி மூலம் கேட்டறிந்தேன்.  
என் வீட்டை அடைந்ததும் என் தாயார் என்னை எதிர்பார்க்கவில்லை.   என் வரவைக் கண்டு கண்ணீர் மல்கக் கட்டி அரவணைத்துக் கொண்டார்.  சிறு நிமிடம் கழித்து முதலில் அவர் என்னுடன் பேசிய வார்த்தை. “இப்போது இந்தக் கெடுபிடிக்குள் இங்கு ஏன் வந்தாய்?” என்ற கேள்விதான்.

 
இது ஒன்றே அவர்கள் எத்தகைய மன நிலையில் வாழ்கிறார்கள் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியது. என் தாயின் குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.  
பல்வேறு குண்டு சத்தங்களுக்கும் துப்பாக்கிச் சூட்டு ஒலிகளுக்கும் மத்தியில் ஒரு மாதம் என்தாயுடன் உறுவுகளுடன் தங்கி இருந்த பின்பு நைஜீரியா நோக்கிப் புறப்பட ஆயத்தமானேன்.  என் வீட்டை விட்டு வெளிக் கிழம்பும் போது என் தாயார் என்னை அரவணைத்து முத்தம் தந்து “நீ திரும்பி வரும் வரை நான் உயிரோடு இருப்பேன்” என்று கூறி அனுப்பி வைத்தார்.


நாம் பிறந்த மண்ணில் எம் உறவுகள் பயமின்றி அமைதியாகச் சுதந்திரமாக வாழ முடியாத நிலை கண்டு எனது உள்ளம் வருந்திய வண்ணம் இருந்தது.  அம்மாவிடம் விடைபெற்றுப் புறப்படும் போது நான் எதுவும் பேசவில்;லை.  ஆனால், என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட சொற்களற்ற, ஓசையற்ற அந்த ஒலி, எமது இனத்துக்கான விடுதலையை, அவர்களுக்கான சுதந்திரத்தை, அவர்களின் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறைகளை உடைத்தெறிய வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் ஒலித்த வண்ணம் இருந்தது.

 
என் தாய் உயிரோடு இருப்பேன் என்று கூறியனுப்பினார்.  ஆனால் அவர் 1995-ஆம் ஆண்டு யாழ்க்குடா நாட்டை இராணுவம் கைப்பற்ற முயன்ற போது இடம் பெற்ற யாழ்க் குடா நாட்டு மக்களின் வரலாற்று இடம் பெயர்வின் போது, கிளாலிக் கடல் ஏரியைக் கடக்கும் போது இறந்து விட்டார்.  சுதந்திரத்தை விலை கொடுத்தும் உயிர் வாழ முடியாது ஏதிலியாகி விட்டார் என் தாய்! என் தாய் போன்ற ஆயிரக் கணக்கான ஈழத்தமிழர்களின் கதி இவ்வாறே அமைந்தது. அமைந்துள்ளது.


கொழும்பு விமான நிலையம் நோக்கிய எமது பயணத்தில் பல இடங்களிலும் இராணுவத்தினரின் கடும் சோதனை.


ஓர் இடத்தில் என் உறவுகளின் நினைவாக என் வீட்டின் நினைவாக என் புகைப்படக்கருவியினால் (உயஅநசய) படங்கள் எடுத்திருந்தேன்.  அப்படச் சுறுழை ஓர் இராணுவச் சிப்பாய் பரிசோதிக்கத் தொடங்கினான்.  அப்படச் சுறுள் பிரிக்கப்பட்டால் படங்கள் அழிந்து விடும்.  என் மனம் பதைபதைத்தது.  நான் விளங்கப்படுத்திக் கூறியும் அவனுக்கு அது விளையாட்டாகவே இருந்தது. என் நிலையை உணர்ந்த என்னோடு அருகே நின்ற என் வாகனச் சாரதி சிங்களத்தில் அவனுடன் கதைத்து அதனை மீட்டுத் தந்தார். 

 
வாகனத்தில் ஏறி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.  வாகனச் சாரதி “என்ன எதுவும் பேசாது வாறீங்கள்... என்ன பயந்து விட்டீர்களோ” என்றார். 
இல்லை இது எனது இயலாமை என்றேன்.  மேலும் என் நண்பனான அச்சாரதி எனதுமன நிலையை விளங்கிக் கொள்ள மசிடோனியாக் குடியரசைச் சேர்ந்த ஆன்டே பாப் போவ்ஸ்தி என்பர் எழுதிய கதையை அவருக்குக் கூறினேன்.


“அவன்படகு
புதிய உலகில்
தரைதட்டியது.
முன்பின் தெரியாத
மக்கள் கூட்டம்
கரையில் தெரிந்தது.
வானத்தில்
பெரும் விண்மீன்கள் மின்னின.
அவன் கையில் இருந்தவற்றை
அவர்கள் கேட்டார்கள்.
மூட்டையை அவிழ்த்து
ஒரு மண்ணாங் கட்டியை நீட்டினான்.
அவன் கையிலிருந்து
அதைப் பிடுங்கி
உடைத்துச் சிதறினார்கள்.
அவன் அழுதான்
“என் தாயகம்” என்றான்
இரவு முழுவதும்
சிதறிய மண்ணைச் சேகரித்தான்
கடைசித் துண்டு,
கடைசித்துகள் வரைத்
திரட்டியெடுத்தான்.
மற்றவர்களுக்கு அது மண்ணாங்கட்டி ஆனால் அவனுக்கு - அது ‘தாயகம்.’ 

 
நைஜீரியாவை அடைந்த நாம் ஆறுமாதம் அங்கு தங்கிய பின் கனடா நோக்கிப் புறப்பட்டோம்.  நைஜீரியாவுக்கு அழைக்கப்பட்ட பணியாளராக வரவேற்கப்பட்டுச் சென்றோம்.  ஆனால், கனடாவுக்கு ஏதிலியாகப் புறப்பட்டோம்.  சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து ஏதிலியாகப் புறப்பட்டோம்.  கனடாவிலும் இருபது வருடங்கள் ஓடிவிட்டன.  நைஜீரிய, கனடியப் புலம்பெயர் வாழ்க்கையை ஒரு கட்டுரையில் கூறமுடியாது.  அது ஒரு புத்தகம்.


இருப்பினும் சுருக்கமாகப் புலம்பெயர் ஈழத்தமிழர்களைக் குறிப்படின் அவர்கள் மாறிவரும் உலகில், தங்கள் பிறந்த நாட்டை ஒரு தொலை தூர நிலையான  பொன் உலகமாக – வாழ்க்கையின் நிலை மாற்றங்களுக்கு இடையிலேயும் பாதுகாப்பான புகலிடமாகக் கருதுகின்றார்கள்.  அதனால், ஒரே நேரத்தில் வாழும் நாட்டிலும் தாயகத்திலும் இருக்கின்றார்கள்.  அப்படி இருப்பது அவர்களால் விரும்பப் படுகிறது.  இத்தகைய உணர்வுகளைக் கொண்ட இரட்டை வாழ்க்கையைக் கொண்டவர்களாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். à®‡à®¤à¯à®¤à®•à¯ˆà®¯ இரட்டை வாழ்க்கையில் - ஒன்று உண்மை நிலையையும் மற்றது விருப்பத்தையும் எதிரொலிக்கிறது. 

 
அவர்களது விருப்பம் தமது தாயகம் சுந்திரம் பெற்று, அங்குள்ள தமது உறவுகள் அமைதியாக வாழ்வதைக் காண்பதோடு - தமது பொன்னுலகமான, பாதுகாப்புக்கான புகலிடமான, தமது தாயகத்திற்குச் சென்று வருவதாக அல்லது சென்று வாழ்வாதாக இருக்கின்றது.  அதுவரை தாயக விடுதலைக்கான அவர்களின் தார்மிகப்பணி எத்துணைத் தடைகள், இடையூறுகள் வந்த போதும் தொடரும்.

நன்றி: உலகத்தமிழ் பண்பாட்டு 10வது மாநாட்டு மலர்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 12:09
TamilNet
HASH(0x563bcf1688e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 12:09


புதினம்
Mon, 15 Jul 2024 12:09
     இதுவரை:  25360723 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1913 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com