அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காய்க்காத பலா   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மக்ஸ்வெல் மனோகரன்  
Monday, 27 August 2007

எங்கள் ஊரில் பலாப்பழமெல்லாம் கிடையாது. எங்காவது, யாருடைய வீட்டிலாவது நிற்கிற பலாமரங்களும் காய்த்தாக ஞபகம் இல்லை. ஏன், பள்ளிக்கூடத்தில நின்ற அந்தப் பெரிய பலாக்கூட காய்த்ததாகவோ பழுத்ததாகவோ சரித்திரமில்லை. எனக்குத்தெரிய அந்த மரம் ஒரு தடவை அய்ந்தாறு காய் காய்த்தது. ஆனால் அவ்வளவும் பொய்க்காய். அத்தனையும் சூத்தை. அதுவும் செல்வராசா அண்ணை அந்த மரத்துக்கு ஏதோ வைத்தியமெல்லாம் பார்த்த பிறகுதான் அது அந்தளவுக்காவது காய்த்தது.

முதல்ல அந்தப்பலா காய்த்தவுடன் எல்லாருக்கும் பெரிய ஆச்சரியம். காய்க்காத மரம் காயத்தால் யார்தான் ஆச்சரியப்பட மாட்டார்கள். நடக்காத தெல்லாம் நடந்தால் எங்களுக்கு ஆச்சரியம் வராதா என்ன.
 
பலா காய்த்தவுடன் செல்வராசா அண்ணையை எல்லாரும் 'கெட்டிக்கார' னெண்டு சொன்னார்கள். 'அந்தாளால ஏலாத காரியமொண்டும் இல்லை' என்னும் சொன்னார்கள். முப்பது வருசத்துக்கு மேலாக காய்க்காமலே நின்ற மரத்தைக் காய்க்கப் பண்ணிய மனிதனை கெட்டிக்காரனெண்டு சொல்லாமலிருக்க முடியுமா என்ன.
 
செல்வராசா அண்ணைக்கும் அது சந்தோசமாகத்தானிருந்தது. ஆனால் அந்தச் சந்தோசத்தையும் பெருமையையும் தட்டிக்கொண்டு போனதைப்போல பலா காய்த்து, ஒரு மாதத்துக்குள்ள எல்லாக்காயும் சூத்தையாகிப் போச்சுது.
 
'ஒரு காலமும் காய்க்காத மரத்தை காய்க்கப் பண்ணினால் இப்படித்தான். அது பொய்க்காயைத்தானே காய்க்கும். காய்க்க மாட்டன் எண்ட மரத்தை ஆராலேயும் காய்க்க வைக்க முடியுமா' என்று பிறகு திரும்பி மறுவளமாகக் கதைக்கத் தொடங்கினார்கள் எல்லாரும். 'அந்தளவுக்கு செல்வராசன் என்ன பெரிய கெட்டிக்காரனோ' என்றும் கேட்டார்கள்.
 
செல்வராசா தன்னைக் கெட்டிக்காரனென்று யாரும் சொல்ல வேணுமென்றதுக்காக அந்தப்பலாவைக் காய்க்க வைக்க யோசிக்கவில்லை. கனகாலமாக காய்க்காமலிருக்கும் பலாவை காய்க்கப்பண்ணினால் என்ன என்றுதான் யோசித்தான்.
 
அவன் படிக்கப்போன காலத்திலேயே அந்தப்பலா அப்படித்தான் காய்க்காமலே நின்றது. ஊரில் பலா மரங்களே இல்லை. ஐயம்பிள்ளையரின் வீட்டில் ஒரு மரம் நின்றது. அது செழிப்பில்லாத மரம். அதுவும் காய்ப்பதில்லை. ஏதோ மரக்கணக்குக்கு அது நின்றது. காய்க்காத மரத்தை ஏன்தான் அவர் விட்டு வைத்திருக்கிறாரோ தெரியாது. செழிப்பான மரமென்றால் ஒரு காலத்தில் பலகைக்காவது எடுக்கலாம்.
 
பலா மரத்தில்தான் தவிலுக்கு, மிருதங்கத்துக்கு எல்லாம் கொட்டு எடுப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கொட்டுக்கென்று தனி நாதமிருப்பதாக நான் நினைத்தேன். தேர் செய்வதற்காகவும் பலாமரத்தை எடுத்தார்கள். மருதடித் தேருக்காக நாரந்தனை ஆட்கள் வந்து பல மரங்களைத் தறித்ததை தென்மராட்சிப் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். அதை திருநெல்வேலி காளிகோவிலடி ஆட்கள் பக்குவம் பாரித்து ஏற்றிப் போயிருக்கிறார்கள். மற்றப்படி பலாவை எதுக்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
 
ஆனால், இன்னுமொன்று, கூழ் காய்ச்சும் போதும் கஞ்சி காய்ச்சும்போதும் பலா இலை பயன்பட்டது.   கூழையும் கஞ்சியையும் குடிப்பதற்கு பலா இலையைத்தான் பயன்படுத்தினார்கள்.
 
பாலா இலையை வளைத்து அதைக்கரண்டியைப் போல மடித்து ஈர்க்கிலிலால் குத்திப் பாவித்தார்கள். அப்படி அந்த இலைக்கரண்டியால் கஞ்சியை அள்ளிக்குடிக்கும் போது அந்த இலை சூட்டில் வாடிவரும் மணமும் சேர, அதுவொரு தனிச்சுவையாகவும்; இதமாகவும் தானிருக்கும். அப்படித்தான் கூழ் குடிக்கும்போதும்.
 
ராமப்பா பலா இலைக்கரண்டியை வலு சோக்காக கோலுவார். சின்னனப்பிள்ளைகள் எல்லாம் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டு அந்தப்பலா இலைக் கரண்டிக்காக காத்திருப்பார்கள். ராமப்பா வலு பொறுமையாக இருந்து எல்லாருக்கும் கரண்டி செய்தே கொடுப்பார். அவரைப்போல ஒரு மகா பொறுமைசாலியை என் வாழ்நாளில் நான் வேறெங்கும் கண்டதேயில்லை.
 
அவர் பலா இலைக்கரண்டியை கோலிக் கொடுக்கும் போது சில பிள்ளைகள் அதை பிடிக்கத் தெரியாமல் பிடித்து குழப்பி விடுவார்கள். ஆனால் ராமப்பா அதற்குக் கோவப்படாமல் திரும்பவும் அவர்களுக்கு அதை கோலிக் கொடுப்பார். அதை அவர்கள் திரும்பவும் கைவிட்டாலும் சலிக்காமல் மீண்டும்; அதைக் கோலிக் கொடுப்பார்.
 
கூழ் ஒரு தனி வாசந்தரும் அற்புதக்கலவை. அந்தக் கலவைக்கு பலா இலையின் வாசமும் சேர்ந்தால் பிறகு கேட்கவும் வேணுமா.
 
சிலவேளை ஐயம்பிள்ளை இந்த வாசத்துக்காகத்தான் அந்தப்பலாவைத் தறிக்காமல விட்டு வைத்திருக்கிறாரோ என்னவோ. அவர் பலாவுக்காகவே கூழ் காய்ச்சக்கூடிய ஆளும்தான்.
 
ஐயம்பிள்ளை ஒரு மச்சக்காரன். மச்சக்காரனெண்டால் எந்த நாளும் மச்சம் அவருக்கு வேணும். வெள்ளி திங்கள் என்ற நாள் கிழமை பேதமெல்லாம் அவருக்குக் கிடையாது. எந்த நாளிலும் அவருக்கு ஏதாவது ஒரு மச்சக்கறி இருக்க வேணும். மச்சம் மணக்கா விட்டால் அவர் சாப்பிடமாட்டார். ஆகக் குறைந்தது கருவாடாவது சுட்டுக் கொள்ள வேணும். முத்தப்பாவைப் போல ஐயம்பிள்ளையும் தனிரகமான ஆள்.
 
ஆனால் யாரும் கோவிலுக்குப் போவதையோ விரதம் பிடிப்பதையோ அவர் தடுப்பதோ பகிடி பண்ணுவதோ எல்லாம் கிடையாது. யாருக்கும் எந்த இடைஞ்சலுமில்லாமல் தன்ர பாட்டில தனக்களவாக ஒரு சின்னக்கறியை அந்த நாட்களில் வைத்துக்கொள்வார். 
 
அதுவும் அவருக்கென்று அவர் சண்முகத்தைக் கொண்டு தனியாக ஒரு சிறு கொட்டில் போட்டு வைத்திருந்தார்.
 
இந்த விசயத்தில் மட்டுமல்ல அவர் எந்த விசயத்திலும் ஆரையும் புண்படுத்தவோ ஆருக்கும் தொல்லை, தொந்தரவு கொடுக்கவோ   விரும்பாத மனுசன். தன்ர கொள்கைகள், கோட்பாடுகளை யாரிலும்  திணிக்காத ஒரு ஆள்.
 
அவர் பலாமரத்தை வைத்திருந்ததுக்கும் அப்படி அவரறிய ஏதாவது காரணங்ககளிருக்கலாம் என்றுதான் இப்பவும் யோசிக்கிறன்.  
 
பள்ளிக்கூடப் பலா பொய்க்காய் காய்த்தது என்றதுக்காக செல்வராசா மனஞ்சோர்ந்து விடவில்லை. அவன் விக்கிரமாதித்தனின் தம்பியோ (அதற்காக அவனைப் பட்டி என்று எண்ண வேண்டாம்)   அல்லது விக்கிரமாதித்தனின் மறுபிறவியோ என்றுதான் சொல்ல வேணும்.
 
எதிலும் சோர்ந்து பின்வாங்கி விடமாட்டான். ஒன்றைத் தொட்டால் வெற்றியோ தோல்வியோ அவன் அதுக்கொரு முடிவு காணாமல் விடமாட்டான். இப்போது அவனுக்கு இன்னொரு சவாலும் ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடப்பலா அவனை இப்போது பெரும் சங்கடத்துக்குள் தள்ளி விட்டிருக்கிறது.
 
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்றதைப் போல அவன் அவ்வளவு காலமும் பேசாமல் நின்ற பலாவில் கைவைத்து விட்டான். இனி அதைக் காய்க்கப்பண்ணாமல் விட முடியாது. அப்படி விட்டால் அவனை தலைநிமிர்ந்து நடக்க மகேந்திரம் விடமாட்டான்.
 
மகேந்திரம் மகா பகிடிக்காரன். அவன் ஆட்களை மட்டந்தட்டுவதிலும் கேலிப்படுத்துவதிலும் வலு விண்ணன். இந்தப் பலாக்கதை ஒன்றே போதும் மகேந்திரத்துக்கு. அவன் செல்வராசாவை கறந்து எடுத்து விடுவான்.
 
எங்க கண்டாலும் எப்ப கண்டாலும் அவன் இந்தப் பலாக்கதையை வைத்து செல்வராசாவைச் சீண்டிக் கொண்டேயிருப்பான். 'ஏன் மச்சான் பிலா இந்தமுறையெண்டாலும் காய்க்குமோ ' என்று கேட்பான்.
 
அல்லது, 'எப்பிடி மச்சான் காய்க்காத பிலாவைக் காய்க்க வைக்கலாம் எண்டு யோசிச்சனி, அந்த ஐடியாவுக்காக உன்னைப் பாராட்டத்தான் வேணும் ' என்பான்.
 
' இனி ஊரில எல்லாரும் உன்னைக் கொண்டுதான் பிலாக்கண்டுகளை வைக்கப் போகினம்' என்று கிண்டலடிப்பான். மகேந்திரத்தோடு இந்தப் பகிடிக்குணம் கூடப்பிறந்தது.
 
அவன் ஆரையும் இல்லை அல்லது உண்டு என்று ஆக்கிவிடுவான். எப்படித்தான் அவன் கிண்டலடித்தாலும் அவன்மீது யாருக்கும் கோவம் வராது.
 
இப்போது  செல்வராசா  ஆருக்காக இல்லையென்றாலும் மகேந்திரத்தின் அறுவை, ஆய்க்கினையிலிருந்து தப்புவதற்காக அந்தப்பலாவைக் காய்க்க வைக்க வேண்டியிருந்தது.
 
ஆனால் அந்த கிழட்டுப்பலா அதுக்கு ஒத்துழைக்குமா எண்டது இப்ப அவனுக்கு இன்னொரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.
 
செல்வராசா வேறுவழியில்லாமல் வேளாண் செய்கைபற்றிய புத்தகத்தையெல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டான். இந்திய வானொலியில் வரும் வீடும் வயலும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்டான். விவசாய விரிவாக்க நிலையத்துக்குப்போய் காணவேண்டிய விரிவாக்க உத்தியொகத்தரையெல்லாம் கண்டு காய்க்காத பலாவைக் காய்க்க வைக்க படு கஸ்ரப்பட்டான்.
 
இளைய பலா வென்றால் அதை ஒருவாறு காய்க்க வைக்கலாம் என்று சொன்னார்கள். அவனுக்கும் அது சரியென்றே பட்டது. ஆனால் இது கிழட்டுப்பலா. அதுவும் இதுவரையில் காய்க்காத பலா. அந்தப்பலாவில் போய் கைவைத்திருக்கிறேனே என்று அழாக்குறையாக செல்வராசா நினைத்தான்.
 
பேசாமல் மரத்தைத் தறித்து விடலாமா என்றுகூட யோசித்தான். ஆனால் அது சாத்தியப்படாது. பள்ளிக்கூடப்பலாவை உரிய அனுமதியெல்லாம் இல்லாமல் யாரும் தறிக்க முடியாது. அதுவும் அங்கே நிழலுக்காக நிற்கிறது. அவன்கூட அந்த நிழலில் பத்து வருசத்துக்கும் மேல் விளையாடியிருக்கிறான். அந்த நிழலை யாராலும் மறக்கத்தான் முடியுமா.
 
இப்போது என்னதான் செய்வது. அந்த மரத்தைக் காய்க்க வைக்கலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு மெல்ல மெல்ல தூர்ந்து கொண்டே போனது. ஆனால் அவன் தன் முயற்சியை விட்டுவிடவில்லை.
 
மனிதனுக்கு மானப்பிரச்சினை வந்து விட்டால் அதற்குப்பிறகு அவனால் தூங்கவோ சாப்பிடவோ முடியாது. அவன் அந்தப்பிரச்சினையிலிருந்து விடுபடவே எப்போதும் முயற்சிப்பான். அதுதான் இப்போது செல்வராசாவுக்கும் நடந்திருக்கிறது. அவனால் நிம்மதியாக தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை.
 
செல்வராசாவின் விதி என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். இதென்ன காய்க்காத பலாவுக்காக அவன் இப்படி வருந்தினானா என்று இப்போது நீங்கள் கேட்கக்கூடும். ஆனால் இது உண்மையில் அவனுக்குப் பெரிய விவகாரமாகியே விட்டது.
 
சிலருக்குப்பெரிய விசயங்களாக இருப்பவை சிலருக்கு மிகச்சாதாரணமாக இருக்கின்றன. சிலருக்கு சிறிய விசயங்களாக இருப்பவை சிலருக்கு பெரிய விசயங்களாகிவிடுகின்றன.
 
செல்வரசாவுக்கு காய்க்காத பலா தீராத தலையிடியாகிவிட்டது. அதை அவன் பெரிது படுததாவிட்டாலும் ஊராக்கள் விடுகிறமாதிரியில்லை. அவன் என்ன செய்ய முடியும். அதைவிடவும் அவன் ஊராக்களின் உசார்ப்பொறிக்குள் சிக்கிவிட்டான். இதுதான் அவனைப் பாடாய்ப்படுத்துகிறது.
 
ஏதாவது அதிசயம் நடந்தால்தான் இதிலிருந்து அவனால் மீளமுடியும். அது நடக்குமா.
 
அது நடந்தது.  யாரும் எதிர்பார்க்காமலே அது நடந்தது.
 
ஒரு கோடை மழையின்போது நடந்த கடுமையான மின்னலில் அந்தப்பலா கருகியது. மின்னல் அந்தப்பலாவைத் தாக்கியது. அந்த முதிய பலா அதுவரையிலும் எத்தனை மழையையும் இடி மின்னலையும் கண்டிருக்கும். எத்தனை கடுங்காற்றுக் கெல்லாம் எதிர்த்து நின்றிருக்கிறது.
 
தனக்கு எப்போதும் எதனாலும் அழிவேயில்லை என்றமாதிரி அது நிமிர்ந்து நின்றது. காய்க்கா விட்டாலும் அது செழிப்புக்கு குறைவில்லாமல் சடைத்து நின்றது. ஆனால் அது இப்போது ஒரு கணத்தில் கருகிவிட்டது.
 
இனி அதுக்குப்பிரச்சினையில்லை. அதையிட்டு செல்வராசாவுக்கும் பிரச்சினையில்லை. ஒரு வகையில் செலவராசா இப்போது சற்று ஆறதலடைந்து விட்டான். அவனுக்கு இப்போது  ஒரு பெரும் சுமை குறைந்ததைப் போலாகிவிட்டது. இனி அந்த மரம் காய்க்காமலிருந்ததைப் பற்றியோ அதைக்காய்க்க வைக்க அவன் பட்ட பாடுகளைப்பற்றியோ யாரும் நினைகக்ப் போவதுமில்லை. அதைப்பற்றி யாரும் கதைக்கப் போவதுமில்லை.
 
காய்த்து பழுத்து பலனெல்லாம் தந்த பல மரங்களையே மறந்து போன இந்த ஆட்களுக்கு இந்தக்காய்க்காத மரத்தைப்பற்றியா நினைவிருக்கப்போகிறது என்ற செல்வராசா எண்ணினான்.
 
செல்வராசாவுக்கு ஒரு துயரம் தீர்ந்தாலும் இன்னொரு துயரம் தீராமல் பெருகியது. காய்க்காத மரத்தைப்பற்றிய துக்கம் போனாலும் நிழலாக தலைமுறை தலைமுறையாக நின்ற அந்த மரம் இப்போது கருகிப்போனதையெண்ணி அவன் உள்ளுக்குள்ளே நொந்தான். அவனால் அந்த வலியில் இருந்து மீளமுடியவில்லை. சிலவேளைன தான்தான் அந்த மரத்தின் அழிவுக்கு காரணமாகினேனா என்ற சந்தேகமே அவனுக்கு வந்தது.
 
தன்னுடைய துக்கத்ததைப் போக்கத்தான் அந்த மரம் இப்படி தன்னை அழித்துக்கொண்டதோ என்றும் அவன் நினைதான். ஆனால் அவன் அதை யாருக்கும் சொல்லவில்லை.
 
உண்மையைச் சொன்னால் அந்தப்பலா உயிரோடிருந்த போதிருந்த துக்கத்தையும்விட அது பட்டபிறகு அவனுக்கிருந்த துக்கம்தான் பெரியது.
 
ஆனால் அதை யாரும் புரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் இல்லை. அதற்குரிய உணர்கொம்புகள் யாரிடமும் இல்லை. இந்த உணர்கொம்புகள்தான் எப்போதும் பிரச்சினைகளாக இருக்கின்றன. 
 
(முற்றும்)

நன்றி: உலகத்தமிழர் - கனடா

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 


     இதுவரை:  25360990 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2137 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com