அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தரிப்பிடங்கள் நகருகின்றன   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்.  
Tuesday, 02 October 2007

புள்ளிக் கோடுகளால்
முதுகு கிழிந்த தெருமுழுதும்
பிசைந்து கிடக்கிறது இசை.
அதன் சகதிக்குள் நின்று
ஆடுகிறாள் ‘அடலிற்றா’.
இசை முழுதும்
‘இன்டி’ பானத்தின் வாடை.


ஏயாயா கந்தாயினோ இலோடஸ்
ஏயாயா கந்தாயினோ இலோடஸ்
(கண்ணீர் சிந்தாதே, கண்ணீர் சிந்தாதே)

மெக்சிக்கோவின் மறியாச்சிகள்
சியலிற்று வின்ரோ இசையைக் குழைத்து
ஒவ்வொரு வாசல்களின் மீதும்
வீசுகின்றனர்
வாசல்கள் ஆவெனத் திறந்து
வாங்கிக் கொள்கின்றன.

எங்கிருந்து வந்தாய் செஞ்ஞோரே..?
ஈழத்தில் நின்று வந்தேன் முகேரே..

எத்தனை தூரம் செஞ்ஞோரே..?
துயரத்தின் எல்லைகள் முகேரே..

எப்படி வந்தாய் செஞ்ஞோரே..?
அலையுண்டு வந்தேன் முகேரே..


ஏயாயா கந்தாயினோ இலோடஸ்..
ஏயாயா கந்தாயினோ இலோடஸ்..


அவள் வினவுகிறாள்.. ..
அவன் பதில் சொல்கிறான் .. ..
ஆமாம் இங்கே எதற்கு வந்தாய்?

நேற்றென் கரையை
நெடும்பனங் கூடலை
காற்றுக் கடலை
கடல் விட்ட தோணியை
ஆற்றை அதையண்டி
அரிசி வயலினை
தேற்றுமென் ஆச்சியை
தெருவினை விட்டேகி

   à®•à®¤à¯ˆ சொல்ல.. .

நேற்றெந்தன் வாழ்க்கைக்குச்
சந்தம் இருந்தது
கூத்துக் கொட்டகை தானே
கோயிலாய் நின்றது
அம்பாவைச் சொல்லியே
தள்ளிய ஆயுளை
அக்கினி விழுங்கிட
ஆவென வந்தது .. .. 

கதை சொல்ல.. .

மெக்சிக்கோவின் தெருவில் இறங்கி
அவன் எட்டுப்போட்டு இசைத்தான்
தென்மோடி

நகரங்கள் எரிய
கிராமங்கள் பதைபதைக்க
வெள்ளை நிறத்தில்
ஒரு நெருப்புத் தேவதை
என் ஊருக்கு வந்தாள்

எங்கள் குடிசைகளை எரித்து
சாம்பலைப் புசித்தாள்
அவள் சோம்பல் முறித்த போதெல்லாம்
எங்கள் கட்டடங்கள்
இடிந்து விழுந்தன
அவள் உதிர்த்த கேசங்கள்
ஒவ்வொன்றிலும்
ஓராயிரம் உயிர்கள்
வெந்து மடிந்தன.. ..


ஏயாயா கந்தாயினோ இலோடஸ்
ஏயாயா கந்தாயினோ இலோடஸ்

அவள் உதிர்த்த
புன்னகைகளில் சிந்திய
நெருப்புத் துண்டுகளை அள்ளி
எம்மவர்கள் விக்கிரங்களைச் செய்தனர்
அவற்றை அவளுக்கெதிராக
ஏவி விடுகின்றனர்
நெருப்பை நெருப்புத் தின்னும் நெருப்பு
என்னூர் முழுதும்.


ஏயாயா கந்தாயினோ இலோடஸ்
ஏயாயா கந்தாயினோ இலோடஸ்


நான் மன்னர்களுக்குக்
கட்டியம் கூறிய மேடை
இடிந்து போனது
இடிந்து போன மேடையில் நின்று
பார்த்தேன்
ஊர் முழுதும் சரித்திரக்காரர்கள்
சரித்திரக்காரர்களுக்குக் கட்டியம் கூற
கடல்களையும்
மலைகளையும்  தாண்டிவந்தேன்.
உனது நாட்டின் ‘அக்க புழுக் கோவில்’ நின்று
எனதுக் கடலை காண்கின்றேன்
கடல் முழுதும்
சாதாளைகள் கருகிய வாடை

ஏயாயா கந்தாயினோ இலோடஸ்
ஏயாயா கந்தாயினோ இலோடஸ்


அவள் தொர்த்தியா வென்ற
சோழ உரொட்டிக்குள்
‘ரக்கோ’ இரையை வைத்து
அவனுக்குக் கொடுக்கிறாள்
பசியாறியவன் பாடுகிறான்
தென்மோடி சிந்து
தெருவை நிறைக்கிறது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


 

 


     இதுவரை:  25696190 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9586 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com