அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கிளிநொச்சி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தீபச்செல்வன்  
Thursday, 11 October 2007

01.

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.
இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02.
நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை
இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03.
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை
இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04.
வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்
வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05.

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.
அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06.

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07.

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
அந்த முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தார்
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை
நேரம் சரியில்லை.

08.

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.
நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09.

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.
சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10.

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11.

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.
பசிக்கிறது.
கொஞசமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.

பதுங்குகுழியினூளான வாழ்வு
மனித நாகரீகத்தை
வியந்துகொண்டிருக்கிறது
பதுங்குகுழியின் விளம்பரங்களோடு.

வீதியில் நடந்துகொண்டிருக்கையில்
வேலியோர
கால்வாய்களை அண்டியபடி
அன்றாட வாழ்வு
சென்றுகொண்டிருக்கிறது.

வெள்ளைச்சீருடைகளை
அணிந்துகொண்டு
புத்தகங்களை
பதுங்கு குழிகளில் நிரப்பி
அதன் சுவர்களில்
பாடத்தை எழுதி
படித்துக்கொண்டிருக்கிறார்கள்
மாணவர்கள்.

அடிக்கடி திடுக்கிட்டு
சிறுசிறு பள்ளங்களில்
விழுந்து கிடக்கும்
குழந்தைகள்
சத்தமிடாமல் மூச்சிட்டு
பதுங்கு குழியின் மூலைகளில்
ஒளிந்துகொண்டு
செவிகளை அறுத்து
வீசினார்கள்.

காற்றைக்கேட்டுப்
பயந்துகொண்டார்கள்
வானத்தை பார்க்க மறுத்து
குப்புற விழுந்தார்கள்.

இப்பொழுது இங்கே
வீடுகட்டத் தேவையில்லை
பள்ளிக்கூடம்
கட்டத் தேவையில்லை
வீதிசெய்யத் தேவையில்லை?
மண்ணைக் கிண்டியே
வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்
மண்ணைக்கீறியே
பயணம்செய்யவேண்டும்.
நிலத்தின்கீழ்
இயல்பான தேவைகள்
அடங்கிக் கிடக்கின்றன.
உரிமைகளும் அடையாளங்களும்
புதைந்துபோகின்றன.

ஒவ்வொருவரும் தங்களுக்கான
பதுங்கு குழிகளைப்பற்றியே
தீவிரமாக செயற்படவேண்டியிருக்கிறது
சில வேளையில்
தூக்கிப் புதைப்பதற்கு
யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள்
மொத்த வாழ்வும்
பதுங்கு குழியில் அடங்கி
புதைகுழிகளாகவும் மாறலாம்.

நமது மனித வாழ்வு
மண்ணைக்கிண்டி
பூமியின் அடியைநோக்கி
சென்றுகொண்டிருக்கிறதே?
இவைகள்
புதிய நாகரீகத்தின்
வாழ்க்கை முறையா?
விஞ்ஞானங்களின் பிரதிபலிப்பா?
மனித உரிமைகளும்
சிறுவர் உரிமைகளும்
உக்கித்தொலைகின்றன
வாழ்வும் கேள்விகளும்
பதுங்கு குழியில் புதைகின்றன।

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24713601 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6439 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com