அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது நாட்குறிப்பிலிருந்து - 07   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Wednesday, 31 October 2007

சே குவேரா என்னும் கலைஞன்
ஊடுருவிச் செல்லும் நெருக்க உணர்வு பற்றி..

நமது பொதுப்புத்தி அடிப்படையில் சே குவேரா ஒரு கலைஞரல்ல ஆனால் அரசியல் நெருக்க உணர்வில் அவர் ஒரு கலைஞர்.

சேயின் இறப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அதே ஒக்டோபரில் பிடல் காஸ்ரோ ஆற்றிய உருக்கமான உரையிலேயே 'சே' யை கலைஞன் என விழித்து உரையாற்றினார்.

அந்த உரையில் பிடல் கலைஞன் என்ற தலைப்பிலேயே அதிக கவனம் செலுத்தினார். அதாவது சே குவேரா "கெரில்லா போர் முறையின் கலைஞன்"; என்ற அர்தத்திலேயே பிடல் காஸ்ரோ இந்த வார்த்தையை பிரயோகித்தார்.

இது பற்றி பிறிதொரு புரட்சிகர செயற்பாட்டாளரான சாந்தா மரியா 'சே' பற்றிய தனது குறிப்பில் காஸ்ரோவின் பிரயோகத்தை இன்னும் சற்று விரித்து "சேகுவேரா வின் மிகச் சிறந்த படைப்பு அவரேயாகும்" என்று குறிப்பிடுகிறார்.

'சே' தன்னளவில் முழு நிறைவான ஒரு புதிய மனிதனாக இருந்தார். தனது ஆழுமையின் மீது செயற்பட்டு வந்தார் இதுவே அவரது கலைப்படைப்பாகும்.

'சே' தானே ஒரு கலைஞனாக இருந்தார். சேகுவேராவும் கலைஞன் என்ற சொல்லை பறிதொரு இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். 'சே' தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் "நொய்ந்து போன என் கால்களையும், ஓய்துபோன எனது நுரையீரல்களையும் மனவலிமையால் ஒரு கலைஞனின் நுட்பத்தோடு சரி செய்து வைத்திருக்கிறேன்" என்றார்.

1960களில் உலக புரட்சிகர சக்திகளின் மத்தியில் மிகவும் உரிமையுடன் கையாளப்பட்ட ஒரு மனிதர் பற்றித்தான் நாம் இந்த இடத்தில் நினைவு கூர்கிறோம்.

வேறு எவரோடும் ஒப்பிட முடியாதளவிற்கு அன்றைய காலத்தின் புரட்சிவாதத்தினதும், அதிதீவிரவாதத்தினதும் குறியீடாக இருந்த ஒருவரைத்தான் நாம் இந்த இடத்தில் நினனவு கொள்கின்றோம்.

காஸ்ரோவின் வார்த்தையில் சொல்வதானால் அவர் அன்றைய காலத்தின் வீரம் செறிந்த கெரில்லா போராளியாக இருந்தார். ஆனால் ஒரு கலைஞன் படைப்பு எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியான பெறுமதியை தருவதில்லை என்பதை நாம் அறிவோம்.

1960களிலும் 70களின் தொடகத்திலும் சே குவேரா என்ற பெயர் ஒருவருக்கு ஏற்படுத்திய கனதியை, ஈர்ப்பை அது இப்பொழுதும் கொடுக்குமா என்ற கேள்வியிலிருந்துதான் நாம் சேகுவேரா குறித்த அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது.

இன்றைய அடையாள மற்றும் இனத்துவ தேசியவாத அரசியல் நெருக்கடிகள் மிக்க புதிய உலகச் சூழலில் சேகுவேராவின் பொருத்தப்பாடு என்ன?

'சே' இன்றைய சூழலில் இரண்டு நிலையில் கையாளப்படுவதாகத்தான் நான் நினைக்கிறேன். ஒன்று மேற்கின் வெகுசன கலாசாரத்தால் விழுங்கப்பட்ட (ஒரு வர்த்தக சினிமா நாயகனைப் போல்) கவச்சிகர மனிதர், மற்றையது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய புரட்சிகர சக்திகளின் மத்தியில் புரட்சிகர உணர்வுகளுக்கான குறியீடு.

பொதுவாகவே சேகுவேரா எல்லைகளற்ற வகையில் சகல விடுதலை விரும்பும் சக்திகளுக்கும் நெருக்கமான ஒருவராக இருந்தார். அவரை நாம் நமக்கு நெருக்கமான ஒருவராக புரிந்து கொள்வதன்  காரணம், வேறு எந்தவொரு புரட்சியாளரைக் காட்டிலும் அவரை நாம் அறிந்து கொள்ளக் கூடிதாக இருந்தது.

ஏனென்றால் எந்தவொரு புரட்சியாளரும் சேகு வேராவைப் போல் தனது அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யவில்லை. இதனால்தான் ‘சேகுவேராவைப் போல் இருங்கள்’ என்ற வாசகம் பரவலடைந்தது. இன்றும் கியூப மானவர்கள் காலையில் சேகுவேராவைப் போல் இருங்கள் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர். காஸ்ரோவின்  இந்த பிரயோகத்தை பின்னர் பல புரட்சிகர சக்திகளும் பயன்படுத்தின. இன்றும் பயன்படுத்துகின்றன.

1967இல் சன்டினிஸ்டா புரட்சிகர அமைப்பு 'சே' யைப் போல் இருங்கள் என்ற வாசகத்தை தனது போராளிகளுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

லெனினைப் போல் இருங்கள், மாவோவைப் போல் இருங்கள் என்பது இந்தளவிற்கு கனதியுடையதாக உணரப்படவில்லை. ஏனெனில் அவர்களின் சிந்தனைகள் நமக்குத் தெரிந்த அளவிற்கு அவர்கள் பற்றி அதிகம் நமக்குத் தெரியாது.

தவிர அவர்கள் அவர்களது துறையில் பெரும் மேதைகளாக இருந்தார்கள். அவர்களை நாம் சாதாரணமாக நெருங்க முடியாது. பலரும் லெனினை, மாவோவை தோழர் என்று அழைத்தாலும் அது வெறும் வாய் வாதத்துக்கே அன்றி அதில் உணர்வு பூர்வமான ஈடுபாடோ நெருக்கமோ இருப்பதாக சொல்ல முடியாது.

ஆனால் சே குவேரா என்று உச்சரிக்கும் போது அது நமக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது இந்த இடத்தில்தான் கவிஞர் றெடாமர் குறிப்பிடும் 'ஊடுருவிச் செல்லும் நெருக்க உணர்வு' என்ற சொற் பிரயோகம் மிகவும் பொருந்தி வருகின்றது.

இன்றைய சூழலில் இடதுசாரி அரசியல் செயற்பாடுகளுக்கு, குறிப்பாக புரட்சிகர இடதுசாரி செயற்பாடுகளின் உயிர்ப்பை தக்கவைத்திருக்கும் லத்தீனமெரிக்க சூழலுக்கு, சே என்னவகையான உணர்வு பூர்வமான பங்களிப்பை வழங்கிவருகின்றார் என்பது முக்கியமானது.

இதனூடாகவே நாம் இடதுசாரித்துவத்தின் மீள் எழுச்சி பற்றிய உரையாடலுக்கு செல்ல முடியும். அதிலும் குறிப்பாக சோசலிசம் பற்றி நமக்கு எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் அது உயிர்வாழும் கியூப அரசியல் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது.

சேயைப் பொருத்தவரையில் கியூப புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அதனை முன்மாதிரியாகக் கொண்டு அகண்ட லத்தீனமெரிக்கப் புரட்சி குறித்து சிந்தித்தவர். அதன் தொடர்சியாகத்தான் பொலிவிய புரட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உயிர் நீத்தார்.

1997இல் சேயின் உடலங்கள் கியூபாவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் லத்தீனமெரிக்க இடதுசாரித்துவ அரசியல் செயற்பாடுகளில் 'சே' மீண்டும் வலுவானதொரு பாத்திரமாக அடையாளப்படுத்தப்பட்டார்.

நமது தமிழ்ச் சூழலைப் பொருத்தவரையில் 'சே' பற்றி அதிகம் உரையாடப்படுவது மிகவும் குறைவு. தமிழகத்தில் சில இடதுசாரிக் குழுக்களால் உரையாடப்பட்ட போதும் ஏனைய மார்க்சிய செயற்பாட்டாளர்கள் எடுத்தாளப்படுவது போன்று சே எடுத்தாளப்படுவதில்லை.

இதற்கு காரணம் சேகுவேரா அசாத்தியமான துணிச்சல் மிக்க செயற்பாட்டாளராகவும் தனது கொள்கைகளுக்காக தன்னை எந்த தருணத்திலும் பணயம் வைக்கக் கூடிய ஒரு புரட்சியாளராக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக மரபுவழி மார்க்சியர்கள் செல்வாக்குச் செலுத்தும் இடங்களில் சேகுவேரா போன்றவர்களை முன்னிறுத்தும் சாத்தியப்பாடின்மையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் மிகவும் அப்பாவித்தனமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்த வைதீக மார்க்சியர்கள் காஸ்ரோ, சேகுவேரா போன்றவர்களை எடுத்தாள்வதில்லை.

பின்னர் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகளவில் சோசலிச முகாம்கள் படு மோசமான தோல்வியை சந்தித்தன. மாவோவிற்கு பின்னரான சீனா சர்வதேசியத்தை கைகழுவியது.

1984இல் சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘மக்கள் தினசரி’ மார்க்சியம் குறித்த தங்களது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியது.

"101 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய மார்க்ஸ், ஏங்கல்சின் சிந்தனைகள் இனியும் நமக்கு பொருத்தமற்றவை அவர்களது எதிர்வு கூறல்கள் பல்வேறு பொருத்தப்பாடுகளை கொண்டிருக்கலாம் ஆனாலும் இனியும் நாம் அவற்றை பின்பற்ற முடியாது".

இந்த பின்புலத்தில்தான் முன்னிறுத்துவதற்கு உதாரணங்களற்ற நிலையில் மரபுவழி மார்க்சியர்கள் கியூபா குறித்தும் காஸ்ரோ குறித்தும் பேசத் தலைப்பட்டனர்.

இந்த இடத்தில் ஈழத்தின் நிலைமைகளை பார்ப்போமானால் இலங்கையில் சேகுவேராவின் அறிமுகம் ஒரு வகையில் தூரதிஸ்டமானதுதான்.

தெற்காசியாவின் கை தேர்ந்த இனவாத அமைப்பொன்றினால் சே இலங்கைக்கு அறிமுகமானார். 1971 இல் தென்பகுதியில் à®œà¯‡à®µà®¿à®ªà®¿ என்ப்படும் அமைப்பினர் மேற் கொண்ட ஆயுத நடவடிக்கைகள் ‘சேகுவேரா கிளச்சி’ என்றும் பிரபலப்படுத்தப்பட்டது.

அதன் தலைவரான ருகுணு விஜயவீர இலங்கையின் சேகுவேரா என வர்ணிக்கப்பட்டதும் ஒரு வகையில் துரதிஸ்டவசமானதே.

நமது சூழலில் வைதீக மார்க்சியர்கள் ‘சே’யை எவ்வாறு நோக்கினார்கள் என்பதற்கு இலங்கையின் மிகப்பெரிய மார்ச்சியத் தலைவராகச் சொல்லப்படுபவரும் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்ட மார்க்சிய-லெனினிச அமைப்பின் தலைவருமான திரு.சண்முகதாசன், குறிப்பிட்ட ஒரு கருத்தை இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம்.

"இளைஞர்களை மாஓசேதுங் சிந்தனையின் புரட்சிகர உண்மையிலிருந்து திசை திருப்பி விடுவதற்காக பிற்போக்கு வாதிகள் ‘சேகுவேரா’ என்ற நாமத்துடன் தொடர்பான போலி புரட்சித் தத்துவத்தைத் துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது. அவர்களது தத்துவம் முழுக்க முழுக்க மார்க்சிச-லெனினிச எதிர்ப்புத் த்துவமாகும். ஓப்பீட்டளவில் ஒரு சிறிய கூட்டம், ஆயுதம் தாங்கிய வீரசிகாமணிகள் அல்லது கெரில்லாக்கள் அரசு இயந்திரத்தைக் கைப்பற்றி விட்டு அதன் பின்னர் மக்களை தமது பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற சேகுவேராவின் நம்பிக்கையை அவர்கள் பரப்பினார்கள்"

இது திரு.சண்முகதாசனின் வாதம். உண்மையில் இது சண்முகதாசனின் பிரச்சனையல்ல வைதீக மார்க்சியத்தின் வரையறை இவ்வளவுதான்.

சேகுசேராவை சாகசங்கள் நிறைந்த மனிதர் என்றும் சொல்வதுண்டு. அவ்வாறான அபிப்பிராயங்கள் பற்றி சேகுவேராவே ஒரு முறை இவ்வாறு குறிப்பிடுகின்றார். "பலர் என்னை சாகசக்காரன் என்று அழைக்கலாம். ஒரு வித்தியாசம் தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கும் சாகசக்காரன்தான் நான்".

உண்மையில் வரலாற்றில் தனிமனிதருக்குள்ள பாத்திரம் என்ன என்பதை விளங்கிக் கொள்வது குறித்த சிக்கல்களிலிருந்தே இவ்வாறான வாதங்கள் வெளிவருகின்றன. வருங்காலத்தில் மொத்த சமூதாய நன்மைக்காக தனிமனித திறமைகள் பயன்படும் விதத்தில் தனிநபர் வாதம் என்பது உபயோகிக்கப்பட வேண்டும் என்று சே குறிப்பிடுவதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம்.

ஆனால் சே ஒரு வழிபாட்டு பொருளாக மாற்றப்படுவது குறித்து நாம் கவனம் கொள்ளலாம்.

‘சே’ யை நினைவு கொள்கின்ற இந்த சந்தர்பத்தில் பின்னடைவுகளும் தோல்விகளும் நிரம்பிக் கிடக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேசியம், சோசலிசம் குறித்த நமது பழைய உரையாடல்களை மீள நினைவு கொண்டு வருவதற்கும் அதிலுள்ள குறைபாடுகள் குறித்து உரையாடுவதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக நாம் கருதிக் கொள்ளலாம்.

சே என்னும் மனிதரை ஒரு வழிபாட்டுக்குரியதாக மாற்றுவதல்ல இன்றைய தேவை. இன்று சே ஒரு வழிபாட்டுக்குரிய ஒரு பொருளாகவும் உருமாறியிருப்பது உண்மை.

இது பற்றி ஆய்வாளர் கிஸ்தோப்பர் கிட்டனஸ்சன் கூறும் அபிப்பிராயம் கவனம் கொள்ளத்தக்கது சேயின் பரம்பரை அவரை ஒரு (ஐஉழniஉ ளவயவ) விக்கிரகமாக உயர்த்திவிட்டது. இது அவருக்கு தோல்வியே என்கிறார் கிட்டன்சன்.

1960, 70 களில் சேகுவேரா ஒரு சர்வதேசியவாதியாக சர்வதேச புரட்சியாளராக அடையாளம் கானப்பட்டவர். இப்பொழுதும் சர்வதேசிய வாதம் எந்தளவு பொருத்தமுடையதாக இருக்கின்றது?

இனியும் நாம் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற கோசத்தை உயர்த்தி பிடிக்க முடியுமா?

நமது மூத்த தலைமுறையினர் மிகவும் அசட்டுத்தனமான இந்த கோசங்களில் கடந்த காலத்தை லெவிட்டது போன்று இனியும் செலவிட முடியாது. ஏனெனில் தொழிலாளர்கள் பாலைவனத்தில் இருப்பவர்களல்ல அவர்களுக்கும் தேசம் உண்டு தேசிய உணர்வுண்டு. தேசியத்தை புரிந்து கொள்ளாத மார்க்சியம் இனியும் உயிர்வாழ முடியுமா என்பது குறித்த கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கின்றது.

சேயை சர்வதேசியவாதி எனக் குறிப்பிட்டாலும் அவர் கியூபாவில் ஒரு கியூப தேசியவாதியாகத்தான் இருந்தார்.

நாம் நமது நம்பிக்கைகளை தேசியத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டிய காலத்திலேயே இருக்கிறோம். தேசியத்துடன் இணையாத எந்த புரட்சிகர சிந்தனையும் இனி உயிர்வாழ்வது கடினம்.

இந்த இடத்தில் லெனின் கூற்றை நாம் நினைத்துப் பார்க்கலாம். "இதற்கு முன்னர் முற்றுமுழுதாக அழிந்து போன புரட்சிகர கட்சிகள் அனைத்தும் அவை ஒரு விதமான மனத்திருப்தி நிலையை வளர்த்துக் கொண்டிருந்தமையாலும், தம்முடைய ஆற்றல்கள் திரண்டிருக்கும் இடங்களை கண்டுகொள்ள தவறியமையாலும், தமது பலவீனங்கள் குறித்து பேசுவதற்கு அச்சம் கொண்டமையாலும் அழிவுற்றன".

 à®ªà®¿à®©à¯à®©à®°à¯ அதே நிலைமை மார்க்சிய வழி  அமைப்புக்களுக்கும் நேர்ந்ததுதான் துரதிஸ்ட வரலாறு.

லத்தீனமெரிக்க புரட்சி அனுபவங்களின் பின்னர் அன்று அந்த அரசியலுடன் தன்னை இனைத்துக் கொண்டிருந்த பிரஞ்சு மார்ச்சியர் ரெஜிரேப்கே சோசலிசம் தேசியத்துடன் இணைந்தாலன்றி இனி உயிர்வாழ முடியாது அதே வேளை சோசலிச உள்ளடக்கம் இல்லாத தேசியம் விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்தவிதமான விமோசனத்தையும் வழங்கப் போவதில்லை என்னும் ரெப்கேயின் வாதத்தில் நாம் உடன்பாடு கான வேண்டியிருக்கின்றது.

ஒரு காலத்தின் நம்பிக்கைகள் எல்லா காலத்திலும் மாற்றங்களற்ற முறையில் நம்பக் கூடியதாக இருக்குமென்ற வரட்டு நம்பிக்கைகள் இனியும் உதவாது என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இது வரை தோன்றிய கோட்பாடுகளிலேயே மிகவும் உயர்ந்த கோட்பாடாக கருதப்படும் மார்க்சியம் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாகத்தான் அமைந்திருக்கும் என்பது அதனை ஒரு மோசமான மதவாதமாக குறுக்கிவிடும்.

மார்க்சியம் என்பது ஒரு மதமல்ல என்றுதான் நான் நம்புகிறேன். அதற்காக மிகவும் கொச்சசைத்தனமாக மார்க்சியம் என்பது ஒரு பெரும்கதையாடல் என்ற பெறுமதியற்ற உளறல்களை நாம் ஏற்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்.

உலகமயமாக்கல் அச்சுறுத்தல், நவதாராளவாதம் என்ற பேரிலான மேலாதிக்கம், அடிப்படைவாத அரசியல் எழுச்சி இவற்றிலிருந்தெல்லாம் மீள்வதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நம்பிக்கைளை வழங்குவதற்கும் மார்க்சியம் ஒன்றுதான் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றது.

பிற்குறிப்பு :
லத்தீனமெரிக்க கவிஞர் றெடாமர் 1962இல் சே பற்றிய தனது பதிவொன்றிலேயே ஊடுருவிச் செல்லும் நெருக்க உணர்வு என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்துகின்றார்.

(சே குவேரா வின் 40வது நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை “அறிவோர் மன்றம்” ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வில் ஆற்றிய உரை.)

 

 

 


     இதுவரை:  24712629 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5630 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com