அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நண்பனுக்கு ஒரு கடிதம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Friday, 23 November 2007

பொருள்: கவிதை பற்றிய ஒரு முறைப்பாடு.

காலம்: திகதி மறந்த ஒரு சனிக்கிழமை.


ஒரு கவிதையை
சனியனேயென்று திட்டலாமென்றால்
சொல் நண்பா!
திட்டத்தக்கதாய் ஒரு கவிதை
என்னிடமிருக்கிறது

யானையை கட்டி
தீனி போடுதல் போல
அதைக்கட்டி
என்னைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்
சொல் நண்பா – நான்
சோழப்பொரியா?

ஒரு குருடன் யானையைப் பார்ப்பது போல்
நான் பார்க்கவில்லை
ஒரு கோட்பாட்டாளன்
கவிதையைப் பார்ப்பது போல்
நான் பார்க்கவில்லை
ஒரு தெரு நாய்க்கு எறிந்த கல்
வயிற்றில் பட்டாலும்
அது காலைக் கெந்திக் கொண்டு
ஓடுதல் போல – நான்
கவிதையைக் கெந்திக் கொண்டு
ஓடி வந்தேன்.
இது என் ஊனமில்லை
‘சாட்டு’
வாழும் ஆசையில்
சாவுக்குச் சொல்லும் சாட்டு

இப்போ சாட்டு வளர்ந்து வருகிறது
சாவு எறியும் கல்லும்
கனத்திருக்கிறது
மூலச் சாட்டு முட்டையிடுகிறது
அடைகாக்கிறது
குஞ்சு பொரிக்கிறது
அடைகாக்கும் காலத்தில்
என் ஆத்துமத்தைச் சிதைவு படுத்தி
தன்னில் உறைய வைக்கிறது
நானோ
கூழ் முட்டைகளை எங்கே
கொட்டுவதென்று திண்டாடுகிறேன்

சனியனேயென்று திட்டத்தக்க இது – உலகில்
எதனைச் சாதித்தது?
சாவுக்குச் சொல்லும் சாட்டாய் மட்டும்
இது எத்தனை காலம் இருந்துவிட முடியும்?

கவிதை பிறப்பிக்க கூடிய இயந்திரங்களை
எங்கேனும் கண்டால் சொல்
எல்லாவற்றையும் இயந்திரங்களிடம்
பறி கொடுத்த நாம்
இதனையும் ஒப்படைத்து விடுவோம்.
இனி கவிதை செய்யும் மூலப்பொருட்கள்
கடைகளில் கிடைக்கட்டும்
குத்தகைக்கு ஒரு கடையை எடுத்து- நாமும்
குப்பை கொட்டுவோம்.

முடிந்தால் பதிலனுப்பு இல்லையேல்
போ சனியனேயென்று இதனையும்
புறமொதுக்கிவிடு.

(உனக்கு வேலைப் பழு அதிகமாக இருக்கலாம்)

 

 


     இதுவரை:  24804098 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5273 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com