அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தொலைக்காட்சியும் மனித சமுகமும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அமரதாஸ்  
Monday, 03 December 2007

மானுட குலத்திற்கு தொலைக்காட்சியினுடனான பரிச்சயம் தொடங்கி நூற்றாண்டுகளாகின்றன. தொலைக்காட்சியானது தனது ஆரம்பகால அமைப்பிலிருந்து பாரிய மாற்றங்களை, வளர்ச்சிகளைக் கண்டு, இன்று உலகின் சக்திவாய்ந்த மின்னணுவியல் சார் காட்சி ஊடகமாயிருக்கிறது.
மானுட அறிவின் மிக முக்கியமான கண்டுபிடிப்பான வானொலிக்கு அடுத்த படியான மிகப்பிரதானமான, பலம்பொருந்திய திரள்நிலை ஊடகமாக   (Mass Media) தொலைக்காட்சி மிளிர்கிறது.
இன்றைய உலகின் தொடர்பாடல் நடவடிக்கைகளில் காட்சி ஊடகங்களின் பங்கு முதன்மையானது: முக்கியமானது. காட்சி ஊடகமான சினிமாவின் வீச்செல்லைகளையும் கடந்து பயணிக்கக்கூடிய சக்தி   தொலைக்காட்சிக்கு இருக்கிறது.
இன்று பல்வேறு நாடுகளும் தமது தேசிய எல்லைகளுக்கும் அப்பால் சர்வதேச அளவில்   தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நிகழ்த்தி வருகின்றன. இப்போது  தொலைக்காட்சியானது செய்மதிகளினூடாகத் தன் பயணிப்பைத் தொடங்கிவிட்டது: அது மனிதகுல இருப்பில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய உலகமயமாக்கல் சூழலின் விளைவுகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சார மூலங்களிலொன்றாக,   தொலைக்காட்சியை இனங்காணமுடியும். தொலைக்காட்சியின் பல்வேறு வகையான சாதனைகள், பயன்பாடுகள் போன்றவற்றிற்கு அப்பால், அதன் எதிர்மறையான விளைவுகள் இனங்காணப்படவேண்டியது அவசியம்.
தொலைக்காட்சியானது உலகின் எந்தவொரு மூலைக்கும் விடயங்களை எடுத்துச்சென்று, மனிதர்களின் பல்வகைப்பட்ட தேர்வுகளுக்கேற்ற சேவையை வழங்கிப் பொதுப்பயன்தரும் போக்கிலேயே, நுகர்வுச் சோம்பிகளை  உற்பத்திசெய்து வருவது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இணையத்தில் (Inter net) இருபுறத்தில் இருப்போரும் செயற்படமுடியும். அதுபோல இருவழிச்செயல் வசதி இல்லாத   தொலைக்காட்சி இயல்பில் ஒருவழிச்செயல் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. எனவே அது நுகர்விற்கு மாத்திரமேயான ஊடகமாக இயங்கவேண்டியிருக்கும் யதார்த்தத்தையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில், ஊடகங்கள் தொடர்பில் நுகர்வோருக்கான சவால் என்பது ஊடகங்களை விழிப்புணர்வுடன் எதிர்கொள்வதுதான். நமது இருப்பை, சிந்;தனையை, நேரத்தை ஊடகங்கள் எப்படி ஆக்கிரமிக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஊடகங்களின் அரசியலை, உள்நோக்கங்களை, தேவைகளை விளங்கிக்கொள்ள வேண்டும். ஊடகங்களிலிருந்து நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும், நமக்கு எது தேவை என்பதைத் தீர்மானிக்கவும் நமக்கிருக்கும் உரிமையை சரிவரப் பிரயோகிக்க வேண்டும்.
தமிழ்ச்சூழலில்   தொலைக்காட்சியின் தாக்கம் பற்றிய மதிப்பீட்டை அவசியம் மேற்கொள்ளவேண்டிய காலமிது.
பண்பாட்டை, மனிதாபிமானத்தை, அறத்தை, பொதுப்புத்தியை இழிவுபடுத்தும் வகையிலான தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தமிழ்த் தொலைக்காட்சிகள் பலவும் ஒளிபரப்பி வருகின்றன.
தமிழ்ச்சூழலின் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்கும்   தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலானவற்றின் இலக்குப் பார்வையாளர்கள் (Target Audience ) பெண்கள்தான்.
அலுவலக வேலைகள் அல்லது வெளி வேலைகள் எதுவும் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களையே இலக்குப் பார்வையாளர்களாகக் கருதும், பல தமிழ்த் தொலைக்காட்சிகள், பெண்கள்தான் நுகர்வதற்கான நேரத்தை, சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளக்கூடிய திரள்நிலையாளர்கள் (Mass Audience) என்று விளங்கி வைத்திருக்கின்றன.  
மனோதத்துவத்தில் Deindividuation என்ற ஒரு சொல்லுண்டு. அது தன்னை இழத்தல் என்பதைக் குறிப்பது.
இந்த இழப்பு எனப்படுவது கூட்டத்திலும் நடக்கலாம்: தனிமையிலும் நடக்கலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மனிதரில் தன்னை இழத்தல் என்ற அபாயத்தை மாத்திரம் நிகழ்த்துவதில்லை: அவை, கால உணர்வைச் சிதைத்து நேரத்தைக் கொள்ளையடிப்பதுடன் நச்சுவிதைகளையும் தூவிவிடுகின்றன.
பொதுவாக,   தொலைக்காட்சி நிறுவனங்கள் பார்வையாளரை வகைப்படுத்தி, அவர்களை எந்தெந்த நேரங்களில் வசப்படுத்த முடியுமென்பதைக் கணித்து, அதற்கேற்பத் தமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பண்பைக் கொண்டிருக்கின்றன.  
சன்   தொலைக்காட்சி, ஜெயா  தொலைக்காட்சி போன்றவை தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து, அவர்கள் வீடுகளில் செலவிடும் நேரங்களுக்கு அமைவாகத் தமது  தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்பி வருவதனை அதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.
தொலைக்காட்சி நேரப்பிரிப்பில்  ப்ரைம் ரைம் (Prime time) என்று வர்ணிக்கப்படும் இரவு ஒன்பது மணிக்கு, சன்  தொலைக்காட்சியில்,  தொலைக்காட்சிப் பெருந்தொடர்களான மெட்டி ஒலி யும் தொடர்ந்து அண்ணாமலையும் ஒளிபரப்பாகி, அதிகமான பெண் பார்வையாளர்களைத் தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய   தொலைக்காட்சித் தொடர்கள், பெரும்பாலும் தமிழ்ச்சமுகத்தின் கசடுத்தனங்களை மறு உற்பத்தி செய்யத்தக்கதாகவே உருவாக்கப்படுகின்றன. சமுகத்திற்குப் பயன்படக்கூடிய நல்லதொரு கலை வடிவமான  தொலைக்காட்சித் தொடரானது, பெரும்பாலான தமிழ்த்   தொலைக்காட்சிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.
தொலைக்காட்சித் தொடர் மாத்திரமல்ல, பெரும்பாலான  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ்ச்சூழலில் பார்வையாளரை இழிவுபடுத்தும் விதமாகவும், அவர்களை வசியப்படுத்தும் விதமாகவும், சமுகப் பொறுப்பற்றவையாகவும், கலைநேர்த்தியற்றவையாகவும், ஒரே தன்மை கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. அவை, பார்வையாளரை வெறும் நுகர்வோராக மட்டுமே தொடர்ந்து வைத்திருந்து மீளப்பெறமுடியாத அவர்களது நேரத்தைக் கொள்ளையடிக்கின்றன.
தமிழ்த் தொலைக்காட்சிகளின் நுகர்வோர் பலர், தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வான நேரத்தை, விருப்பமில்லாத   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடனிருந்தும் போக்கி விடுகிறார்கள். பல வீடுகளின் வரவேற்பறைகளில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (Chanel) தொலைக்காட்சிப் பெட்டிகள் இயங்கிக்கொண்டிருப்பதும், வீட்டவர்களோ விருந்தினர்களோ அவற்றின்முன் நேர விரயம் செய்துகொண்டிருப்பதும் தமிழ்ச்சூழலின் அபத்தமான காட்சிகள். நல்ல நிகழ்ச்சியொன்றை வேறு அலைவரிசையில் பார்க்கவிரும்புகிற ஒருவர், மோசமான நிகழ்ச்சி ஒன்றின் பார்வையாளர்களிடமிருந்து ரிமோட் கொன்றோலைப் பெற்றுவிட முடிவதில்லை.
வீட்டுக்குவரும் விருந்தாளிகளுடனோ உறவினருடனோ நேரத்தைப் பகிர்ந்து கொள்ளாமல்,   தொலைக்காட்சித் தொடர்களுடன் மாரடிக்கும் மனிதர்கள் தமிழ்ச்சூழலில் பெருகி வருகிறார்கள்.
வந்தோரை வரவேற்கும், விருந்தோம்பும் தமிழ்ப்பண்பாட்டியலில்   தொலைக்காட்சியின் தாக்கம் பற்றிய அவதானிப்பு அவசியமானது.
தமிழ்ச்சூழலில்   தொலைக்காட்சியானது பொழுதுபோக்கிற்குரியதாகவே பெரும்பாலும் அணுகப்படுகிறது.  பொழுது, போக்குவதற்குரியதா?   பொழுது, போனால் திரும்பி வருமா? திரும்பப்பெறமுடியாத பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கக்கூடாதா?  
தொலைக்காட்சியுடன் மினக்கெடும் ஒருவர் வேறு காரியங்களுக்கான நேரத்தை நிர்வகிப்பதில் திணறுவதைக் காணமுடியும். அப்படிப்பட்ட ஒருவர் தனது முக்கிய காரியங்களைச் செய்யத்தவறிப் பாதிப்புக்களுக்குள்ளாகிறார்.
மோசமான   தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் கல்விநிலையில் பின்னடைவிற்குள்ளாகும் மாணவர்கள் பெருகி வருகிறார்கள். நல்ல  தொலைக்காட்சிகளின் வெளிப்பாடுகள் பலவும் இனங்காணப்படாமல், உள்வாங்கப்படாமல் அண்டவெளியில் அலைகின்றன.
தொலைக்காட்சியில் தேவையானவற்றை இனங்கண்டு, அதற்கான நேரத்தை ஒதுக்கிப் பெற்றுக்கொள்வதற்குப் பழகிக்கொள்ளும் ஒருவரால்   தொலைக்காட்சியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு,  தொலைக்காட்சியைத் தனக்கான பயனுள்ள ஊடகமாக்கிக்கொள்ள முடியும். 
 
 

 


     இதுவரை:  25811422 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6520 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com