Monday, 24 December 2007
திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; 2007ம் ஆண்டிற்கான ‘இயல் விருது’ பெறுகின்றார்.

2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இயல்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை ‘இயல் விருது’ பெற்ற வாழ்நாள் சாதனையளர்கள்: சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ. சீ. தாஸிசியஸ். 2007ம் ஆண்டிற்கான இயல் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் தெரிவாகியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாக பெங்குவின் பதிப்பகம் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' நாவலையும் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.
இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழி பெயர்ப்புப் பட்டறைகளை நடாத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்தில் பெரும் பங்காற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், லண்டனிலும் பிற இடங்களிலும், தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர். கனடாவில் வெளியான ஈழத்துத் தமிழ்க் கவிதை, புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான 'Lutesong and Lament' இல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசனநடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.
பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Award இனை (இது இந்தியாவின் Booker Prize எனக் கருதப்படுவது) முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்.
தமிழுக்கு அவர் ஆற்றிய, ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டொலர் பரிசையும் வழங்கிக் கௌரவிக்கின்றது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
விருது வழங்கும் விழா வழமைபோல் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுகின்றது.
இம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம், பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆகியோர். |