அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 08 October 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை - 08   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Wednesday, 26 December 2007
01.
வன்னிவிளாங்குளத்திற்கு கிட்டவாக சித்தி கேட்டாள் தம்பி நான் கொஞ்ச தூரம் ஓடுறன் தாங்கோவன். நான் வேண்டாம் சித்தி நான் ஓடுறன் எண்டு சொன்னன். எனக்கு சைக்கிள் ஓடுறதுக்கு கஸ்டாமாகத் தான் இருந்தது. ஆனாலும் சைக்கிள் ஓடுவதை முழுத்தூரமும் யாரிடமும் கொடுக்காமல் ஓடுவது கிட்டத்தட்ட வீரம் மாதிரி. நான் வீரன் என்று பெருமைப்பட்டுக்கொள்வது மாதிரி. அப்போதெல்லாம் சைக்கிள் தான் வாகனம். சைக்கிள்களால் கடக்கமுடியாத் தொலைவென்று ஒன்று இருப்பதாகவும் படவில்லை. சைக்கிளால் எல்லாவற்றையும் கடந்து விடலாம்.

நான் ஓடிக்கொண்டிருப்பது ஒரு அரைச்சைக்கிள். அது நான் ஸ்கொலசிப் பாஸ்பண்ணினதற்காக மாமா வாங்கித்தந்தது. நான் பத்தாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோதும் அதையேவைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அந்த சைக்கிள் பார்ப்பதற்கு வித்தியாசமாக ஒரு ஒட்டகச் சிவிங்கியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். சைக்கில் சீற்றை உயர்த்து உயர்த்தென்று உயர்த்தி அப்பவும் கால் கான்டிலில் முட்ட, பிறகு நாதன் கராச்சில் சொல்லி ஒரு வட்ட இரும்புக்குழாய் வைச்சும் உயர்த்தியிருக்கும் சைக்கிள். என் உயரம் அவ்வளவு அசாதரணமானதொன்றும் அல்ல பதினைந்து வயதுக்கு கொஞ்சம் கூடத்தான். என்றாலும் கவலைப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் சைக்கிளின் உயரம் கவலைப்படவேண்டிய ஒன்று. நிச்சயமாக ஒரு பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியன் ஒடக்கூடிய சைக்கிள் அது அல்ல. ஆனால் நான் அந்தச்சைக்கிளில் தான் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தபோது. தம்பியை முன்னுக்கிருந்து பெடல்போடச் சொல்லிவிட்டு கிளிநொச்சியில் இருந்து கனகராயன் குளத்துக்கு பின்னால் ஒரு மூட்டை சாமானுடன் வந்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து கனகராயன் குளத்துக்கு வருமட்டும் அந்தச் சைக்கிள் ஒருக்காக்கூட காத்துப்போகவில்லை. நான் மட்டுமல்ல எங்கட குடும்பத்தில ஏலாதாக்கள் தவிர மிச்சாக்கள் எல்லாரும் சைக்கிளில்தான் வந்தோம். கனகராயன் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து துணுக்காய்க்கு வந்தபோதும் நான் அதே சைக்கிளைத்தான் ஓடிக்கொண்டு வந்தேன்.  பிறகு திரும்ப கிளிநொச்சிக்கு நாங்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து திரும்பியபோதும் சைக்கிள்தான். இப்படி எல்லாமே சைக்கிள் தான். ஆனால் சைக்கிளைத்தான் நான் மாற்றிவிட்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து போகும் போது ஓடிக்கொண்டு போன அரைச்சைக்கிளை ஒரு மாதிரி லேடீஸ் சைக்கிளாக மாற்றிவிட்டிருந்தேன். அதைத் தவிர போகும் போதுஇருந்ததிற்கும் வரும்போது இருந்ததற்கும் பெரிய மண்ணாங்கட்டி மாறுதல்களெதுவும் இருந்ததில்லை.

கனகராயன்குளத்திலிருந்து வரும்போது நான்கு பெரிய ஏத்தங்களையும் இரண்டு சின்ன ஏத்தங்களையும் கடந்து கொஞ்ச தூரம் வந்தால் மாங்குளம் சந்திவரும். மாங்குளம் சந்தியில் நிண்டு இடது கைப்பக்கம் பாக்குமாப்போல திரும்பி உழக்கினால் மல்லாவிக்கும் துணுக்காய்க்கும் உயிலங்குளத்துக்கும் ஸ்கந்தபுரத்துக்கும் போகலாம். சித்தி ஏத்தங்கங்கள் வரும்போதெல்லாம் சைக்கிளில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் குதித்து இறங்கிவிடுவாள். அவளுக்கு நான் எழும்பி எழும்பிக் கஸ்டப்பட்டு உழக்குவது காணச்சகியாது. அப்படி  ஒருக்கா கனகராயன் குளத்தில இருந்து மல்லாவிக்கு போகிற வழியிலதான் சித்தி கேட்டாள் தம்பி நான் ஓடுறன் எண்டு. ஆனால் சித்தி என்னைவிடவும் பயங்கரக்கட்டை என்னுடைய சைக்கிள் சீற்றோ ஓட்டகத்தின் திமில் மாதிரி கரியலுக்கும்,பாருக்கும் சம்பந்தமே இல்லை எனுமாப்போல தனித்து எழும்பியிருக்கிறது. ஆக அதைச்சித்தி ஓடமுடியாது. நான்தான் தொடர்ந்து ஓடினேன். தண்ணிப்பானைகளைக் கண்டஇடமெல்லாம் நிண்டு தண்ணிகுடிச்சோம். அப்போதெல்லாம் சித்தி எனக்கு வெளிநாட்டுக்குப்போய்விடுகிற பலன் இருக்கெண்டு சொல்லுவாள். வளர்ந்தாப்பிறகு நாதன் மாமா மாதிரி பெரிய மோட்டசைக்கிள் ஒண்டு எடுத்து ஓடவேண்டும். இப்படிச் சைக்கிள் ஓடித்திரியப்படாது என்கிற கனவு எனக்கு இருந்தது. சித்தி அதுக்கிடையில் நான் வெளிநாட்டுக்குப்போய்விடவேண்டும் என்று நினைத்தாள். சித்தியுடன் போகிற தூரச்சைக்கிள் பயணங்களிலெல்லாம் சித்தி கதைசொல்லுவாள் அநேகமாக படக்கதைகள் மூண்டு மணித்தியாலப்படத்தை கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் சொல்லுவாள். அப்படிச் சித்தி எனக்குச் சொன்ன கதைகள் எக்கச்சக்கம் நிறையக்கதைகள் சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் சினிமாப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன என்பதால் சித்தி வாயாலயே எனக்கு படம் காட்டிக்கொண்டிருந்தாள். அநேகமாக சித்தி சொல்கிற கதைகள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளாயிருக்கும் ஆண்கள் பெண்களை காதலித்து ஏமாற்றிவிட்டு போகிறகதைகள் பிறகு பெண்கள் அதைப்போராடி ஜெயிக்கிறமாதிரிக் கதைகள். எனக்கு நல்ல நினைவிருக்கிறது சித்தி எனக்கு நீயா படத்தின் கதையைச் சொன்னது. மாங்குளத்திலிருந்து திரும்பினாப்பிறகு சித்தி அந்தக்கதையை சொல்லத் தொடங்கினாள் வன்னிவிளாங்குளத்து அம்மன் கோயிலடியைக்கடந்ததும் சைக்கிளுக்குள் ஒரு பாம்பு முன்சில்லுக்க சிக்கித் சீறித் தப்பி ஓடியது. எனக்கு அதுக்கு மேல வேண்டாம் சித்தி வேறகதை சொல்லுங்க எண்டு சொல்லிவிட்டேன். பிறகு இப்போது யோசித்துப்பார்க்கிறேன் சித்தி அந்தக்கதைகளை சொல்லும்போதான உளவியலை. சித்தி ஏமாற்றப்பட்டிருந்தாள் ஒரு காதலால். அந்த ஏமாற்றம் அதை அடைவதற்கான வழிமுறைகள் உத்திகள் சித்தியைச் சாகும்வரைக்கும் வழிநடத்திக்கொண்டிருந்தன. அவளது வாழ்க்கை கடைசிவரைக்கும் போராட்டமாகவே கழிந்தது.

02.
அவளது சகோதரிகள் எல்லோருக்கும் அவள் பிடிவாதக்காரி,சகோதரர்கள் எல்லாருக்கும் அவள் அடங்காப்பிடாரி. ஆனால் அவளது அம்மாவிற்குமட்டும் தான் அவள் கடைக்குட்டி. சித்தியின் முகம் எப்போதும் எதையோ தீர்க்கமாக சிந்தித்த படியே இருக்கும். மனிதர்களின் உள்ளே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எல்லாரிடத்திலும் கண்டறியமுடியாது.  சித்தியிடமும் கண்டறிவது சிரமம் தான். சிந்தனைகள் இவளது முகத்தில் பிரதிபலிப்பதில்லை. சலனமற்ற தண்ணீர்போல இருக்கும் முகம் அவளுடையது. அவளை ஒரு இறுகிக்கிடக்கிற பாறையைப்போல என்று நான் உணர்ந்திருக்கிறேன். அவளது புன்னகைகள் செத்துப்போய் விட்ட நந்தியாவட்டைப்பூப்போல இருக்கும். அவள் சில சம்பிரதாயங்களிற்காக வாழ்ந்து கொண்டிருந்தாள். கேள்விகள் அவளைத் துளைத்த காலம் என்றொன்றிருந்தது. கேள்விகள் அவளைச் சுற்றிலும் கேள்விகள். விடையளித்துத் தீராதகேள்விகள். அவளது விடைகளுக்குள்ளிருந்தும் முளைக்கிற கேள்விகள். கேள்விகள் ஆயிரம் கரங்கொண்டு இறுக்கத்தொடங்குகையில் அவள் ஆக்ரோசமாய் உதறுவாள். மொய்த்துக்கிடக்கும் பிள்ளையார் எறும்புகளை வழித்து எறிவது போல சித்தி கேள்விகளை உதறுவாள். எனக்கு யாரும்; தேவையில்லை என்பதுமாப்போல உதறுவாள். கொஞ்ச நாளில் கேள்விகள் சலித்துப்போயின. யாரும் அவளைக் கேள்விகளோடு நெருங்குவதேயில்லை அவர்களும் சலித்துப்போய்விட்டார்கள்.

ஆனால் அம்மம்மா எப்போதுமே அவளைக் கேள்விகளெதுவும் கேட்பதில்லை. ஆனால் எனக்குத் தெரியும் எனக்குள் நிறையக் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தச் சலனமற்ற முகத்தின் தோலினடியில் உறைந்திருக்கும் கொழுப்பைப்போல அவளிடம் கேள்விகள் இருந்தன. சித்தி கடைசி வரைக்கும் அப்படியே இருந்தாள். அண்ணா தம்பி அக்கா எல்லாவற்றையும் கடந்து,வெறுத்து தனது கனவுகளை ஜெயித்துவிடவேண்டும் என்பதில் ஆக்ரோசமாய் இருந்தாள். எனக்கு சித்தியிடம் புரியாமலிருந்ததே இதுதான். யாரெல்லாம் தன்னை நேசிக்கிறார்களோ அவர்களை சித்தி ஓரங்கட்டினாள். ஆனால் யார் தன்னைப் புறக்கணித்தபடி விலகி ஓடினானோ அவனுக்குச் சித்தி இன்னமும் நித்திய காதலியாய் இருந்தாள். அவன் இனிமேல் கிடைக்கவே மாட்டான் என்பதை அறிந்திருந்தும் அறியாதவள் போல அவனைத் துரத்திக்கொண்டேயிருந்தாள்.

அவளது காதல் புரியவேயில்லை எனக்கு. அது அறிவு நிலைக்கு முற்றிலும் புறம்பானது என்கிற நினைப்பு எனக்குத் தோன்றியது. சொல்லப்போனால் அது காதலே அல்ல வெறும் காமம். அவளது பதின்மங்களில் நிகழ்ந்து போன முதல் தொடுகை அது. ஒரு தாமரைக்குளத்தில் குளித்துப்போன எருமைமாட்டுக்காக குளம் காத்துக்கொண்டேயிருக்கிறது என்றுதோன்றும். இந்தச் சிக்கலான காதல் எனக்கு ஆச்சரியமூட்டியது அவனைப்பொறுத்தவரையில் அது காதலோ அல்ல பசி உடம்புப்பசி அவளைக் கல்யாணம் கட்டுவதாகச் சொன்னால் தான் கிடைக்குமென்றால் சொல்லிவிட்டுப்போவோமே என்னவாகும் என்கிறமாதிரியான எண்ணம் அவனுடையது.அவனுக்கு மனசுக்கும் உடம்புக்குமான தூரங்கள் தெரியவேயில்லை. ஆனால் சித்திக்கு அது காதல். என்றைக்கும் தீராத காதல். அவ்வளவுதான் எருமைமாடு குளித்துப்பின் கடந்து போயிற்று. ஆனால் குளம்தான் காத்துக்கொண்டேயிருந்தது. நதியின் தடங்கள் தீர்ந்து நீர்வற்றிப்போன பின்பும் குளம் காத்துக்கொண்டிருந்தது.

அவளது பருவத்தின் கதவுகளைச் மயக்கும் சொற்கள் மூலாமாகத்திறந்து உள்நுழைந்தவனை, அவனது வருகையை அவள் இன்னமும் காதலென்று நம்பினாள். அது உண்மையான அன்பென்று நம்பினாள். இருபது வருடங்களிற்கும் மேலாய் அந்தப்பதின்மத்தின் நினைவுகள் அவளிடம் ஓடிக்கொண்டிருப்பது அதுவும் அதுதான் வாழ்க்கை என்று எந்தவித சங்கடங்களுமின்றி பின்தொடர்ந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியம். அம்மம்மா அவளோடு கூடவேயிருந்தாள் எதையும் அம்மம்மா கேட்பதுமில்லை, அபிப்பிராயம் சொல்வதுமில்லை. அம்மம்மா கோயில் வைத்திருந்தாள் துர்க்கை அம்மன் கோயில். கொஞ்சம் கோபமான சாமிதான். ஆனால் சித்தி துர்க்கை அம்மனைக் கும்பிடுவதில்லை. எப்பவாவது கோயிலில் பொங்கல் பொங்கும்போது பூசைக்கு அம்மம்மாட கோயிலில் சித்தி தேவாரம் மட்டும் படிப்பாள். அது அவள் எல்லாநாட்களும் நான் அறிந்த வரையில் ஒரே தேவாரத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள். à®…வள் தேவாரம் படிக்கும் போதெல்லாம் ஒரு விருப்பின்மை அதில் ஒளிந்துகொண்டிருந்ததோ என்று தோன்றும் எனக்கு. ஆனால் அவளுக்கு நல்ல குரல் வளம் இருந்தது கணீரென்ற குரல். அவள் வளவுக்குள்ள இருந்த துர்க்கை அம்மனைக் கும்பிடவில்லை ஆனால் அவள் காளியைக் கும்பிட்டாள் சிவந்த கண்களும் தொங்கியநாக்கும் மண்டையோட்டு மாலையும் கொண்ட தெய்வம் காளி. துர்க்கை அம்மனைக் காட்டிலும் ஆக்ரோசமான தெய்வம். சித்தி ஏன் வீட்டிலிருக்கும் தெய்வத்தை விட்டு விட்டு காளியிடம் வேண்டுகிறாள் என்பது எனக்கு விளங்காமலிருந்தது. பிறகு என் பதினெட்டு வயசில் சித்தி என்னிடம் சொல்லுகிற வரை.

காதல் அறிவுபூர்மானதில்லை என்பதை நான் முதலில் சித்தியின் சொற்களில் இருந்துதான் கண்டடைந்து கொண்டேன். அது சில விசித்திரமான நம்பிக்கைகளும் சிந்தனைக்கோணங்களும் கொண்டது.  சித்தி காளியிடம் அல்ல காளி கோயில் வைத்திருக்கும் செட்டிச்சியிடம் சரணடைந்திருந்தாள். சித்தியும் நானும் ஒருக்கா மல்லாவியில் இருந்து ஸ்கந்தபுரம்போகிற வழியில் சித்தி என்னிடம் மிக ரகசியமான குரலில் கேட்டாள். தம்பி நான் ஒரு இடத்திற்கு கூட்டிக்ககொண்டு போவன் ஆனா அம்மாக்களிற்கு இந்த விசயம் தெரியக்கூடாது. நான் சரியெண்டு சொன்னேன் சித்தி அதைச்சொல்லியிருக்கவே தேவையில்லை சும்மாவே நான் வீட்டில் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. அன்றைக்குத்தான் நான் முதல் முதலில் செட்டிச்சியின் கோயிலுக்குப் போனேன். செட்டிச்சி தான் செய்வினை சூனியம் செய்வதிலெல்லாம் வல்லவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முகத்தில் மந்திரவாதிகளிற்கெல்லாம் இருக்கிற உக்கிரம். சிவந்த கண்கள், ஆளுயுரக் காளிபடம் என்று அந்த கோயிலின் சூழலே அச்சமூட்டுவதாயிருக்கும். சித்திக்கு அவளது காதலனை அடைவதற்கு கடந்த இருபது வருடங்களாக அவா செய்வினை செய்துகொண்டிருக்கிறாவாம். எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் மனசுக்குள் செய்விiனை சூனியத்தின் மீதான பயம் ஒரு ஓரத்தில் இருப்பதால் அடக்கிக்கொண்டேன். சரி இவ்வளவு காலமாக காளி ஏன் சித்திக்கு ஒண்டும் செய்யவில்லை என்று நான் செட்டிஆச்சியிடம் கேட்டேன். அதற்கு ஒரு பேச்சிரிப்பு சிரித்தா அவா. ஆத்தாக்கு விரும்பம்தான் தன்குழந்தைக்கு உதவவேண்டும் என்பது அவளுக்கு இஸ்டம்தான். ஆனா அவா களத்தில நிக்கிறா எண்டா? நான் எந்தக்களத்தில எண்டன்? செட்டிச்சி என்னை உத்துப்பாத்தா? போர்க்களத்திலயடா போர்க்களத்தில கொஞ்சம் உறுக்கிச்சொன்னா. போர்க்களத்தில நடக்கிறது மக்களோட பிரச்சினை. நாட்டுப்பிரச்சினை. இது ஆத்தாடமகளோட பிரச்சினை வீட்டுப்பிரச்சினை எதுமுக்கியம்? நாட்டுப்பிரச்சினைதானே அது முடிய அம்மா வந்து தன்ர மகளின்ர பிரச்சினையைத் தீர்த்து வைப்பா இதைச்சொல்லி முடிய செட்டிச்சி குரல் கம்மி மயங்கிவிழுந்துவிட்டார். நான் அப்பநாட்டுப்பிரச்சினை தீர்ந்ததத்தான் சித்தியின் பிரச்சினையும்தீருமோ எண்டு கேக்கநினைத்த கேள்வியை மனசுக்குள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அவாட உபதேச மொழிகளை பரவசத்தோடு கேட்டுக்கொண்டிருந்த சித்தி அவாவைத் தூக்கித் தண்ணிதெளித்து எழுப்பிவிட்டா. எனக்கு செட்டிச்சியின் தொழில் கனயோராக நடப்பதன் சூக்குமம் விளங்கிச்சுது. சித்தி கோயிலை விட்டு வெளியில வந்தோண்ண என்னிடம் கொஞ்சம் கோபமாகவே சொன்னாள் தம்பி தெய்வங்களோட விவாதிக்கக் கூடாது எண்டு நான் எதுவும் சொல்லவில்லை பேசாமல் வந்தேன்.

அதற்குப்பிறகு சித்தி அம்மாவோடு சண்டைபோட்டுக்கொண்டு போய்விட்டாள். சண்டைபிடிப்பதற்கு எளிய காரணங்கள். கறிக்கு உப்புக்கூடிவிட்டது என்பதுமாதிரியான காரணங்கள். உண்மையைச் சொன்னால் சித்திக்கு ஒரு இடத்தில் கனநாளைக்கு இருக்கமுடியாது அது அவளைச் சங்கடப்படுத்தும் தான் கல்யாணம் கட்டாமல் தனது அக்காக்களின் பிள்ளைகளிற்கு சமைத்துப் போடுவது என்பதை அவள் வெறுத்தாள். அது தனது இயலாமையைச் சொல்வதாக மற்றவர்களில் தான் தங்கி வாழ்வதாக அவள் நினைத்தாள். அது தவிரவும் மலர் இப்ப என்ன இங்கயோ? என்கிற மாதிரியான விருந்தினர்களின் இரக்கம் பொதிந்த கேள்விகளிற்கு பதில் சொல்வதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவிரும்பினாள். அதனால் அவள் யார்வீட்டிலும் அதிகநாள் தங்குவதில்லை. இடம்பெயர்வுக்கு முதல் சித்தி அம்மம்மாவுடன் திருநகரில் இருந்ததால் பிரச்சினையில்லை இடப்பெயர்வுக்கு பிறகுதான் இந்தச்சிக்கல் எங்கேயிருப்பது என்கிற சிக்கல். சித்தி அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். ஒரு சில நாட்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. பெரியமாமா அவர்களிற்கு செலவுக்கு காசுகொடுப்பதற்காக அவர்களைத் தேடித்தேடிக்கண்டு பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் சித்தி இந்தப்பழக்கத்தை விடவேயில்லை. கொஞ்சநாள் எங்கேயும் சொல்லாமல்கொள்ளாமல் போய்விடுவாள் பிறகு திடீரென்று முளைத்து எதுவுமே நடக்காதது போல நாங்கள் பள்ளிக்கூடத்தால் வரும்போது பெரியம்மாவுக்கு வெங்காயம் உடைச்சுக்கொடுத்துக்கொண்டிருப்பாள். பெரியம்மா இவள் அலைகையில் எல்லாம்  திட்டுவாள்  ஆட்டக்காரி அம்மாவையும் கூட்டிக்கொண்டு திரியுறாள் ஒரு இடத்தில இருக்கிறாளா? அது இதெண்டு திட்டு திட்டென்று திட்டுவா. சித்தி அம்மம்மாவுக்கு செட்டிச்சியைக்கொண்டு செய்வினை செய்து மனிசியைத் தன்ர இஸ்டத்திற்கு ஆட்டுவிக்கிறாள் என்றெல்லாம் பேசுவா. ஆனா சித்தி திடிரென்று திரும்பி வந்ததும் எதுவுமே பேசாமல் இருந்து விடுவா. அதனால்தானோ என்னவோ சித்தியும் இந்தப்பழக்கத்தை விட்டுவிடாமல் இருந்தாள்.

03.
திடீரென்று ஒருநாள் நான் ரியூசன் விட்டு வரும்போது. அம்மம்மா வீட்டு முற்றத்தில் இருந்தாள். எனக்கு சித்தி இல்லாமல் அம்மம்மாவை காண்பது பெரிய விசயமாக இருந்தது. அம்மம்மாவின் சோடாபுட்டிக்கண்ணாடிக்குள்ளால் அவளது கண்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் அவளது கண்கள் உலக உருண்டைபோல தோற்றம் காட்டியதால் நான் அம்மாவைக் கேட்கலாம் எண்டு நினைத்து போனேன். சித்தி ஆஸ்பத்திரீலயாம் அம்மம்மாவை ஆரோ கொண்டு வந்து விட்டுப்போகினம் எண்டு தங்கச்சி சொன்னாள். நான் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு போனன். சித்தியைப் பாம்பு கடிச்சுட்டுதெண்டு சொன்னாங்கள். ஆனா உறுதியா என்ன கடிச்சதெண்டு சொல்ல முடியாம இருக்கிறதாய்ப் பட்டது. சித்தியை ஏதோ கடித்திருக்கிறது. இடப்பெயர்வுக்கு பிறகு எல்லாருடைய வாழ்க்கையும் காடுகளுக்குள் என்றுதான் ஆகிவிட்டது ஆனால் சித்தி இந்தமுறை போயிருந்ததோ பெருங்காடு ஒரு ஆயுர்வேத வைத்தியர் கூட இல்லாத காட்டுக்கிராமம். ஏதோ கடிக்க அவளை பார்வை பாக்கிற பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போவதற்கே ஆட்களைத்தேடி அலைந்து கடைசியில் பரியாரியிடம் கொண்டு போயிருக்கிறார்கள். அவரது கைங்கரியங்கள் தோற்றபிறகு தான் அக்கராயன் ஆஸபத்திரிக்கு அயர் மோட்டசைக்கிளில் சித்தியைக்கொண்டு வந்திருக்கிறார்கள். நல்லவேளை சித்திக்கு விசகடி என்பதால் ஒரு கட்டில் கிடைத்தது. மற்றும்படி அங்கே கட்டில் கிடைப்பது அபூர்வம். இப்படி விசகடிக்கேசுக்கும் முதலைவாயில் ஆப்பட்டு தப்பிவந்த கேசுகளுக்கும், அல்லது செல்லடி கிபிரடியில காயப்பட்டு வாற கேசுகளிற்கம்  கட்டில் நிச்சயம். விசகடிக்காரனெண்டாலும் தப்புறதுக்கான சான்ஸ் நிறையக்கிடக்கு. ஆனா முதலையிட்ட மாட்டினா கதி குளத்துச்சகதிதான்.

ஒட்டுமொத்தமா கிளிநொச்சியில இருந்த சனம்முழுக்க இடம்பெயர்ந்து வந்து அக்காராயனையும்,ஸ்கந்தபுரத்தையும் தீடீர் நகரமாக்கினார்கள். அதுகளோ தாங்களுண்டு தங்கடவிவசாயம் உண்டு எண்டிருந்த விவசாயக்கிராமம். பக்கத்திலயே யானைகள் வசிக்கும் காடு. ஆடுமாடுகள் பின்னேரம் நாலுமணியில் இருந்து றோட்டில படுக்கலாம் யாரும் கேட்பாருமில்லை றோட்டால போவாருமில்லை. கிளிநொச்சிக்கு ஆமி எப்படி திமுதிமுவெண்டு வந்தானோ? அதே மாதிரி இந்தச் சுற்றுவட்டாரக் கிராமங்களிற்கு சனங்கள் திமுதிமுவெண்டு வந்தார்கள். அந்த கிராமத்து வாசிகளின் மனங்கள் அநேகமாக அவர்களுடைய காணிகளைப்போலவே பெரிசாக இருந்தன. அவர்கள் தங்கள் காணிகளில் இவர்கள் தங்க இடம்கொடுத்தார்கள். ஆனால் ஆடுமாடுகளும் பக்கத்து காடுகளில் வசித்த யானைகளும்தான் பாவம். இந்த சமநிலை மாற்றத்தை அவைகளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்தப்புதிய மண்பட்டினத்தின் ஆரம்ப நாட்களில் யானைஅடித்து நாள்தோறும் ஆட்கள் செத்தார்கள். ஆடுமாடுகள் வயல்களில் தூங்கின. ஊர்க்கிணறுகளில் நீண்ட வரிசைக்கு சனம் நிண்டது. கிணறுகள் போதவில்லை தண்ணீர் இல்லை. அக்கராயன் குளத்து முதலைகளுக்கு வரலாறுகாணாத வேட்டை. அங்கங்கே ஓரமாக குளித்துக்கொண்டிருக்கிறவரை இழுத்துப்போய்விடும். அப்போதெல்லாம் முதலை மனிதர்களைச் சாப்பிடுகிற விதம்குறித்து வாய்மொழி மூலமான ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்போலவே முதலையிடமிருந்து தப்பும் வழிகளும் சொல்லப்பட்டு வந்தன. முதலை பிடிச்சிழுக்கும் போது அய்யோ என்று கத்தவே வராது வெறும் காத்துத்தான் வரும். இதுக்குள்ள முதலையின்ர வயித்தை தடவவருமே? குளத்திலும் அவ்வளவு காலமும் இல்லாமல் நிறைய விருந்தினர்கள் வந்தார்கள்.  குளத்தில குளிக்கேக்க முதலை வருதோ இல்லையோ வட்டக்கடி,சொறி, சிரங்கு இவைகள் கட்டாயம் வரும். சனமெண்டால் அவ்வளவு சனம். அநேகமாக எல்லாரும் அந்தக்குளத்தைத்தான் எல்லாரும் நம்பியிருப்பதால் அநேகமாக ஒரு நோய் வந்தால் எல்லாருக்கும் வருவது நிச்சயமம் அதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழியும். ஆனால் மருந்துகள் தான் இருக்காது. சனங்கள் விடியப்புறம் இரண்டு மூன்று மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்துலைனில் நிக்கத்தொடங்குவார்கள் சரியாக விடிவதற்கிடையில் அப்படியே ஆஸ்பத்திரி நிரம்பி நோயாளிகளில் தீனக்குரல் அந்தப்பிராந்தியத்தையே நிரப்பும். அநேகமாக எல்லா வருத்தங்களிற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மருந்தையே கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நோயாளிகளை மருந்துகளை விட நாங்களும் மருந்தெடுத்தோம் என்கிற நம்பிக்கைதான் காப்பாற்றிக்கொண்டிருந்தது. மலேரியா வராத ஆள் ஒருத்தன் அந்தக்காலத்தில்  வன்னிக்குள்ள இருந்ததாய் எவராவது சொன்னால் நான் அரைமொட்டை அடிக்கத் தயார். மூளைக்காய்ச்சல் நெருப்புக்காய்ச்சல் இப்படி டிசைன் டிசைனான காய்ச்சல்கள் வந்தன. நெருப்புக்காய்ச்சல் வந்து அங்க ஒருத்தன் செத்தானாம். மூளைக்காய்ச்சல் வந்து இங்க ஒரு பள்ளிக்கூடப்பிள்ளை செத்துட்டுதாம். இன்னொருத்தருக்கு விசராக்கினதாம் எண்டதையெல்லாம் நீங்கள் கேட்டு திகைச்சுப்போய் நிக்கத்தேவையில்லை அதுஅங்க சர்வசாதாரணம். வயித்தாலடி ஒரு ஊரில இருக்கிற கந்தசாமி அண்ணையிட கடைசிப்பெட்டைக்கு வந்தாக்காணும் அந்த ஊரில இருக்கிற வயசுபோன கிழவர் வரைக்கும் ஒரு தர்மஅடி அடிச்சுத்தான் நிப்பாட்டும். அந்த அடியோட சேத்து கிழவரின் உயிர்போகாம இருக்கிறது அவற்ற அதிஸ்டத்தைப்பொறுத்து.

சித்தி இப்ப பேசமுடியாமல் கிடந்தாள். அவளை என்ன கடித்தது என்பது அவளுக்கே தெரியவில்லை என்பதைவிட அவளுக்கு தெரியுமா என்பது யாருக்கும் தெரியாது அவளுக்கு நினைவு திரும்பவில்லை. பாம்பாக இருக்கலாம் என்று தீர்மானித்து சிகிச்சை அளித்தார்கள். திடீரென்று விசகடிக்கு குடுக்கிற மருந்து ஆஸ்பத்திரியில் முடிஞ்சு விட்டது எண்டு சொன்னார்கள். அம்மா பெரியம்மா எல்லாரும் அழத்தொடங்கிவிட்டார்கள். எல்லாம் கடந்து சித்தி மருந்தில்லாமச் சாகப்போறாளோ என்று எல்லாருக்கும் பயம். ஆஸ்பத்திரியில அந்த மருந்து ஜெயபுரம் ஆஸ்பத்திரியில இருக்குது எண்டு சொல்லிச்சினம். ஆஸ்பத்திரிக்காரரிட்ட ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு ஜெயபுரத்திற்கு அயர் மோட்டசைக்கிளில இரவு எட்டுமணிக்கு ஆனைவிழுந்தான் யானைகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருக்காமல் போனேன். ஆனையடிக்காமல் திரும்பிவந்தால் ஆஸ்பத்திரி வாசலில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு ஊதுபத்தி கொழுத்துறதா வேண்டிக்கொண்டேன். கற்பூரம் அப்ப தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜெயபுரத்தில் அந்த மருந்து இருக்கவில்லை. நாங்கள் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு கிட்ட இருக்கிற அம்பலப்பெருமாள் சந்தி வரும்வரைக்கும் மோட்டசைக்கிள் சில்லு தரையில் முட்டிக்கொண்டிருந்ததா என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பெரிய நீட்டுப்பலகை வைத்துக்கட்டப்பட்டு பின்இருக்கையில் கிட்டத்தட்ட சீற்றில் குண்டியை முட்டியும் முட்டாமலும் வைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் திரும்பி வந்து அங்க இல்லை என்று சொன்னோம் மல்லாவியில் இருந்தாலும் இருக்கும் என்றார்கள். எவ்வளவு வேகமாக் கொண்டுவரமுடியமோ அவ்வளவு வேகமாக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னார்கள். நாங்கள் மல்லாவிக்கு வெளிக்கிடும் போது அம்மாவும் மாமான்ர மகளும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு போனார்கள் அவர்கள் ஏதாவது அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவார்களா? வவுனியாவுக்கு கொண்டுபோவதற்கு என்று கேட்பதற்கு . அவர்கள் வழக்கம்போலவே கொஞ்சம் இரக்கப்பட்டுவிட்டு முடியாதென்று சொல்லிவிட்டார்கள்.

பெரியமாமாவும் வவுனியாவுக்கு போனவர் வரமுடியாமல் அங்கேயே மாட்டுப்பட்டு விட்டார். சண்டை பாதைகள் பூட்டப்பட்டு விட்டன. பொருளாதாரத்தடை, மருந்துக்கு தடை, மனிதர்கள் போவரத் தடை தடையற்ற விசயங்கள் குறைவு. நாங்கள் இப்போதுதான் மருந்து பாதுகாக்கிற ஐஸ் பெட்டியைக் காவிக்கொண்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தவில்லை. இடம்பெயர முதலும் இதே கதிதான் வீட்ட நிக்கிற நாய்க்கு விசர் பிடித்து வீட்டில எல்லாருக்கும் பாவம் புண்ணியம் பாக்காம கடிச்சப்போட்டு மாமி தண்ணிய ஊத்த செத்துப்போச்சு. மருந்தெடுக்கபோகேக்க எங்கள விட நாயில தான் கூட அக்கறையோட கேள்விகள் கேட்டினம் நாய் செத்துப்போச்செண்டோண்ண தொப்புளைச் சுத்தி ஊசி தொடர்ந்து 14 நாளைக்கு. 3வது நாளே மருந்து முடிஞ்சுது ஆஸ்பத்திரியில. அப்பயும் பெரியமாமா இப்படித்தான் அயர் மோட்டசைக்கிள்ள ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு மருந்து கொண்டு வந்தவர்.அண்டைக்கு மட்டும் மருந்து இருந்திருந்திருக்காட்டி செல்லையற்ற பரம்பரையில் மூண்டிலொண்டு இல்லை. இப்ப மாமா வவுனியாவுக்குள்ள மாட்டுப்பட்டதால நான். சித்திக்கு மருந்து தேடி அலையுறன். ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம் இங்க பாம்புகடிச்சாலும் மருந்தில்ல நாய்கடிச்சாலும் மருந்தில்லை. மல்லாவியில் மருந்து இருக்கிறதெண்டு சொல்லிச்சினம் நாங்கள் வாங்கிக்கொண்டு கோட்டைகட்டின குளத்திலயும், தென்னியங்குளத்திலயும் இருக்கிற யானைகளின் மீதான நம்பிக்கையில் மறுபடியும் பறந்து வந்தோம். மோட்டசைக்கில் எத்தனை பள்ளத்தில் விழுந்ததெண்டு கணக்கேயில்லை ஏனெண்டா றோட்டே பள்ளம் தானே. நாங்கள் மல்லாவியில் இருந்து இளைக்க இளைக்க ஓடிவந்தபோது. சித்தியின் கட்டிலை காம்பிறாவை நோக்கி உருட்டிக்கொண்டு போய்கொண்டிருந்தார்கள். கடைசியில் சித்தி மருந்தில்லாமல் செத்துவிட்டாள். எனக்கு எங்களை யானை அடித்திருக்கக் கூடாதா எண்டிருந்தது.


நான் அப்பா செத்தாப்பிறகு இரண்டாவது தடவையாக வீட்டிலேயே ஒரு மரணத்தை பார்த்தேன். அப்பா சாகும் போது எனக்கு 6 வயசு மறுபடியும் பதினெட்டு வயசில் ஒரு சாவு. இந்த இரண்டு சாவுகளுக்குமே யுத்தம் ஒருவகையில் காரணம். மரணத்தின் துயரநெடி ஊர்முழுதும் விரவிக்கிடக்கிறபோது எங்களது வீட்டில் என்ன சுகந்தமா வீசும். காலம் அநியாயமாகக் ஒருத்தியைக் கொன்றுவிட்டது. எனக்கு சித்தி சாகும்போது என்ன நினைத்திருப்பாள் என்று ஓடியது. அம்மம்மாவின் துர்க்கை அம்மனைத்தான் விடு அவளது காளியாவது காப்பாற்றியிருக்கவேண்டாமா அவளை. எனக்கு அப்பாவின் மரணம் உடனடியான துக்கங்களெதையும் தரவில்லை துக்கம் நுழைகிற வயதில் நான் அன்றைக்கில்லை. ஆனால் சித்தியின் மரணம் என்னை ஏதோ செய்தது யார் மீதென்றில்லாத கோபம் மனசுக்குள் உருண்டது. காம்பிறாவுக்குள் சித்தியைப் பெட்டிக்குள் வைத்து நானும் பெரியண்ணாவும் தூக்கியபோது ஒரு பிளாஸ்டிக் பொம்மையைத் தூக்குவது போலத்தான் இருந்தாள் சித்தி அத்தனை எடைகுறைவாய். நான் முதல் முதலாய் பெட்டியைத் தூக்கினேன். அப்பாவைப் பெட்டிக்குள் பார்த்தபோது எனக்கு பிணத்திற்கு கையைக்காட்டினால் கைஅழுகிவிடும் என்கிற பயம் இருந்தது. இப்போது அழுகினால் அழுகட்டும் இருந்தென்ன எத்தனை பிணங்களைப் பாhத்துவிட்டோம் மரணத்தை தவிரவும் வேறென்ன இருக்கிறது இந்த ஊரில். செஞ்சிலுவைச் சங்கத்தில் சொல்லி சித்தியின் மரணம் கொள்ளிவைக்கவேண்டிய பெரியமாமாக்கு சொல்லப்பட்டது.  கொள்ளி வைக்கவேண்டிய மாமா வரமுடியாமல்  பாதைபூட்டப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்கிறேனென்று ராணுவம் உண்மையில் பாதையைப் பூட்டிவைத்திருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்துக்கும், இன்னும் என்னென்ன வெளிநாட்டு சங்கங்கள் இருக்கிறதோ அதுக்கெல்லாம் நாங்கள் செத்துப்போனது வவுனியாவிற்குப் போய் வரமுடியாமப்போயிருக்கிற சபாவின்ர சொந்தத்தங்கச்சி எண்டதையும் அவர் கடைசியா முகத்தை பார்க்கவேணும் எண்டதையும் அவர்தான் கொள்விவைக்கவேணும் எண்டதையும் உருக்கமா எழுதி மனுக்களாய் குடுத்தம். ஆனா ஒருத்தராலயும் அவருக்கு சித்தியின் முகத்தை கடைசியாகாணுறது என்கிற விசயத்தை செய்யமுடியாமப் போச்சுது. நாங்கள் மூண்டாவது நாளா என்னதான் போஸ்மோட்டம் பண்ணினதெண்டாலும் சித்தியின்ர பொடியை வைச்சிருக்கேலாதெண்டு ஆச்சுது.

மாமாவை எந்தச்சங்கங்களும் அவரது கடைசித்தங்கச்சிக்கு கொள்ளிவைக்கவோ? அவளது முகத்தை கடைசியாக்காணவோ உதவிசெய்யமாட்டார்கள் என்று நாங்கள் முடிவெடுத்தபோது. ஏற்கனவே அப்பாக்கு கொள்ளிவைத்து அனுபவமிருக்கிற நான்தான் சித்திக்கும் கொள்ளிவைக்கிறதென்றாயிற்று. யாரோ சித்திக்கு இப்போது பெரிய சைசில் குங்குமப்பொட்டு வைத்திருச்சினம். எனக்கு அதைப்பார்க்கிறபோது அவளது நெத்தியில் சிவப்பாய் தீ இருக்குமாப்போல இருந்தது. இதற்காகத்தானே அவள் இவ்வளவு காலமும் அலைந்தாள் இந்த அங்கீகாரத்திற்குத்தானே….. அந்தத்தீ அவளை உடலை விழுங்கித்திளைத்தது.

சுடலையால வந்து குளிச்சிட்டு எனக்கு சாப்பாடு போடும்போது பெரியம்மா சொன்னா… "இதெல்லாம் ஒரு பாக்கியம் அய்யா அவள் உன்னில பாசம்" … எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சித்திக்கு என்னில ஒரு நம்பிக்கை இருந்தது உண்மைதான். இல்லாவிட்டால் செட்டிச்சியின்ர கோயிலுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போயிருக்கமாட்டாள். தான் ஏமாற்றப்பட்ட கதையை எனக்கு சொல்லியிருக்கமாட்டாள். நான் அவளுக்குச் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன் சித்தி நான் கடைசிவரைக்கும் அதை யாரிடமும் சொல்லவில்லை என்று. பெரியம்மா சொன்னது போல கொள்ளிவைக்கிறது பாக்கியமாவெண்டும், சித்தி என்னில பாசமாவெண்டும் எனக்கு தெரியாது… எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சித்தி ஆஸ்பத்திரியில் மருந்தில்லாமலுக்கு அநியாயமாச்செத்துப்போனாள் என்பதுதான்…


     இதுவரை:  25811413 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6520 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com