அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யூனிகோடு அமைப்பில் தமிழ்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நா. நந்திவர்மன்  
Friday, 28 December 2007

எட்டாண்டு முயன்றும் யூனிகோடு அமைப்பில்
தமிழ் எட்டாக்கனியாக உள்ளது ஏன்?
(நா. நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுவை.)
ஆங்கில நாளேடான டெக்கான் கிரானிக்கல் 30 நவம்பர் 2007 அன்று முதல் பக்கச் செய்தியாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. 'தமிழை இணையப் பயனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளத் தமிழ் எழுத்துகளுக்குக் குறியீடுகள் பெறுவதற்கு எட்டாண்டுகள் கடந்த தேடல் தோல்வியில் முடிந்தது' என்பது அச்செய்தி. வெங்காலூரில் (பெங்களூர்) வாழும் திரு. அன்பரசன் ஆப்பிள் சாஃப்ட் (Apple soft) நிறுவன உயரதிகாரி ஆவார். தமிழக அரசு நியமித்த குழு உறுப்பினருமாவார். அவரின் நேர்காணலில் அச்செய்தி வெளியாகியுள்ளது.

1999இல் தமிழக அரசு ஒரு மாநாடு கூட்டித் தமிழில் பலர் உருவாக்கியுள்ள எழுத்து மென்பொருட்களைத் தரப்படுத்தவும், பல்வேறு எழுத்துருக்கள் படிக்க இயலாமல் போகும் குழப்பத்தைப் போக்கவும் 'யூனிகோடு கன்சார்டியம்' என்ற பேரமைப்பில் தமிழ் எழுத்துக்களுக்கு உரிய குறியீட்டைப் பெறவும் நடத்திய பேச்சுகள் எட்டாண்டு கடந்தும் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை என்பதே அன்பரசனின் குறைபாடு. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் தமிழ் எழுத்துகளுக்குக் குறியீடுகளை ஒதுக்கிட யூனிகோடு கன்சார்டியம் முன்பு கோரிக்கைகளை வைத்தது. இவை அறிவியல் அடிப்படையில் அமைந்தவை அல்ல என யூனிகோடு கன்சார்டியம் ஏற்க மறுத்துவிட்டது.

தமிழக அரசு ஆடம்பர விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் ஒதுக்கிச் செலவழிக்கும் பணத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது. எட்டாண்டு போராடியும் தமிழ் எழுத்துகளுக்கு ஒரே குறியீடு பெறும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாவாணரைப் பணிக்கமர்த்திச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கச் சொன்னார் கலைஞர். ஆயின் உரிய ஏந்துகளோ பணியாளர்களோ தராமல் பாவாணர் பணி முற்றுப்பெறவில்லை. பாவாணர்க்குப் பின் மதிவாணன் வந்தார். அவர் பணியும் இடையில் துண்டிக்கப்பட்டது. இன்று எவ்வாறோ ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வண்டிபோலச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் முடிவடையும் இலக்கை எட்ட உள்ளது. இந்த அகரமுதலியை இணையத்தில் ஏற்றுவதுதான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணி. இந்த அகராதியின் மலிவுப்பதிப்புகள் மக்களிடமும் மாணவரிடமும் சென்று சேருமாறு செய்வதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

தமிழ்ச் செம்மொழித் திட்டத்துக்காக நடுவணரசு தந்துள்ள நூறு கோடிக்கும் மேற்பட்ட தொகை கொண்டு 1860இல் கால்டுவெல்லார் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை மேம்படுத்த வேண்டாமா? இன்று 73க்கும் மேற்பட்ட திராவிடமொழிகள் உள்ளன. புதிய புதிய மொழிகள் திராவிட மொழிக் குடும்ப மொழியாக இனங்காணப்பட்டு வருகின்றன. இவைகளை உள்ளடக்கிய புதிய ஒப்பிலக்கணம் எழுதப்பட வேண்டாமா?

விழா, மாநாடுகள், ஆடம்பரங்கள் வேண்டாம். சுற்றி வந்து கால்கை பிடிப்பவர்களே செம்மொழி அறிந்த செந்தமிழ் அந்தணர்கள் என்ற மனமயக்கம் வேண்டாம். உங்கள் காதுகளில் விழும் இனிய சொற்கள் அல்ல வரலாற்றில் உங்களை இடம்பெறச் செய்யக் கூடியது. நிலையான தமிழ்ப்பணிகளே தமிழை நிமிர்த்தும்! கலைஞர் அரசின் சாதனைகளை வரலாறு பேச வேண்டும்! போலிகளைப் புறந்தள்ளுங்கள், இலக்கண இலக்கிய அறிவற்ற எழுத்துக் கிறுக்கர்கள் போற்றிப் பாமாலை பாடலாம்! யூனிகோடு அமைப்பில் தமிழுக்கு உரிய இடம் பெற்றுத் தந்தால்தான் ஆங்கிலம் போல எந்தக் கணினி பயன் படுத்துவோரும் தமிழைப் படிக்க முடியும். கணினிக்கு மொழி தெரியாது! எந்த மொழியையும் குறியீடாக மாற்றித் திரையில் அந்தமொழி மிளிரக் காட்டுகிறது. சிக்கலான சீனமும் சப்பானியமும் உரிய குறியீடுகள் பெற்று எளிதில் தெரிகின்றன. ஆரவாரக்காரர்கள் அரவணைப்பில் இருந்து விடுபட்டு அறிஞர்களைப் பணிக்கமர்த்தி அறிவியல் அடிப்படையில் தமிழ் எழுத்து களுக்கு யூனிகோடு குறியீடு பெறப் பாடாற்றுங்கள்


     இதுவரை:  25695835 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9257 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com