அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 19 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை - 09   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Thursday, 06 March 2008

கரைகளிற்கிடையே…

01.
அற்புதங்கள் நிறைந்தது சூரியன் விழும் கடல் சிவப்பெனக் கரைந்து மனசுக்குள் பூக்களாய் நுரையுடைக்கும். கரையை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது கடல் என்று எங்கேயோ கேட்ட அல்லது படித்த வரிகளின் ஞாபகம் மனசுக்குள் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாக்கவிதைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு ஆள் அவள்தான். கடிதங்களில் கவிதைகளை நிரப்பி எழுதுவது அவனுக்குச் சாத்தியமேயில்லை. அவள் மீது பொறாமையாய் உணரும் தருணங்களில் இதுவும் ஒன்று. நாளைக்கு போய்விடலாம் என்கிற நினைப்பே அவனை மிதக்கவைத்தக்கொண்டிருந்தது. "தம்பி கட்டாயம் நாளைக்கு ஏத்துறம் இனிச் சாட்டில்லை" ஓட்டியின் வார்த்தைகள் தேனாய் மனசுக்கள் புகுந்து இனிய நினைவுகளைக் கிளர்த்தியது.

நாளைக்கு அவளைப்பார்க்கலாம். அவளது முகத்தை நினைவுகளால் வரைந்தான். முடியவில்லை.மறந்து போய்விட்டதா? துண்டு துண்டாய் நினைவுகளில் மின்னி மின்னி எழுந்து கொண்டிருந்தன வார்த்தைகளிற்குச் சிக்காத பெண்ணுருவின் பிம்பங்கள். அவளைவிடவும் அவளது கண்களை. அவைதான் பரவசமூட்டுவன. அவளது முகத்தை முழுவதுமாய் தினேசால் ஞாபகப்படுத்திக்கொள்ளவே முடியாது. மனசுக்குள் மீன்குஞ்சுகளாய் நீந்திக்கொண்டிருப்பது அவளது கண்கள் தான். அவள் உடல் என்பது அவனுக்கு கண்களின் வியாபகம். கண்கள் தான் அவள். கண்கள் தவிர வேறொன்றுமில்லை அவள். பேச்சு, கோபம், கொஞ்சல்,அழுகை எல்லாவற்றையும் சொல்லிவிடும் அவளது கண்கள் அவனிடம். அந்தக் கண்களை மறுபடியும் காணப்போகிறோம் என்கிற நினைவு சில்லென்று படிகிறது கடல் காற்றைப்போல. மாலையின் மங்கிய ஒளிக்குள் நிழல் ஒளித்துவிட்டது  இனிமேல் இங்கு நிற்கமுடியாது. ஏனெனில் துயரம் பீடித்த இந்த நகரத்தின் இரவின் கண்கள் துப்பாக்கிகளாலானவை. துப்பாக்கிகள் புரியாதமொழியில் கேள்விகள் கேட்கும். வக்கிரமாய் உடல்தடவும். சந்தேகம் பூசிய பார்வைகளில் உடல்மேய்ந்து தாவாங்கட்டையை தூக்கி சுயம் உலுக்கும். அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் இருந்தது. இவர்கள் யாருக்கு காவல் அலைகளுக்கா? அலைகளுக்கு காவல் இருந்துவிட முடியுமா. ஒரு அலைவந்து அவன் காலடியில் சுருண்டு கால்களை கடலுக்குள் நகர்த்தியது.

அம்மாவிடம் சொன்னான் "நாளைக்கு போகலாமாம்" ஜெனிற்றா அம்மாவிடம் புறுபுறுத்தாள் இப்படித்தான் இவங்கள் ஒரு கிழமையையாய் பேக்காட்டுறாங்கள் காசை மாத்திரம் வாங்கிப்போட்டாங்கள் முதலே. அவள் எப்போதும் இப்படித்தான் எல்லாவற்றுக்கும் அவசரம். சின்னவள் மேரி ஒன்றும் பேசாமல் படுத்துக்கிடக்கிறாள். அம்மாவும் அவன் சொன்னதை கேட்பது மாதிரி பாவனை மட்டும் சொய்தாள் அவ்வளவுதான்.

சொல்லப்போனால் அம்மாவுக்கு இந்தியா போறதில் விருப்பமே இல்லை வீடு,காணி,மாமாரம்,பிலாமரம். அம்மம்மா சொல்லியிருக்கிறாள். அப்பாவிற்கு அடுத்து மரம்,தோட்டம், மாடுகள் எண்டு அவள் நேசித்தவை அவளை நேசித்தவை நிறையவே இருந்தன ஊரில். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அப்பா கட்டியவீட்டில் வாழ்ந்து விட வேண்டும் என்று விரும்பினாள். அதன் ஒவ்வொரு கற்களிலும் அப்பாவின் புன்னகை படிந்திருக்கிறது என்கிற நம்பிக்கை அவளுடையது. அது உண்மைதான் அம்மாவின் மீதான காதலும் அப்பாவின் வியர்வையும் சேர்த்துக்கட்டிய வீடு இதென்று அம்மம்மா சொல்லியிருக்கிறாள். அப்பாவின் மீதான அம்மாவின் காதல் மாறாமல் இன்னும் அப்படியே இருப்பதாய் தோன்றும். அம்மா தன் காதல் கதைகளை பகிர்ந்து கொண்டதேயில்லை எங்களிடம். ஒரு வேளை அப்பா இருந்திருந்தால் சொல்லியிருப்பாவோ என்னவோ. பாத்திரத்தில் தேக்கிவைத்திருக்கிற தேனைப்போல வெளியே கொட்டிவிடாமல் அம்மா தன்னுடைய காதலையும் அதன் நினைவுகளையும் பாதுகாக்கிறாள் என்று தோன்றும். ஆனால் அம்மம்மா கதைகதையாய்ச் சொல்லுவாள். முதுமையில் வார்த்தைகள் நதியைப்போல இல்லை காட்டாறுபோல உடைத்துக்கொண்டு பாயும். அழகான வருணணைகளோடு வரும் வார்த்தைகள் மனசிலிருந்து எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வரும் வார்த்தைகள் அம்மம்மாவினுடையவை. தன் எல்லாக்குழந்தைகள் குறித்த ரகசியங்களையும் அம்மம்மா சொல்லுவாள். அப்படிச் சொல்லப்படுகிற அம்மாவின் காதல்கதையில் அப்பா அம்மாவிநற்கு பொருத்தமில்லாத ஜோடி என்கிற அம்மம்மாவின் குறுகுறுப்பு தெறித்துவிழும். ஆனால் அம்மா அப்பாவை மிகவும் நேசித்தாள். அம்மாவுக்கு அப்பாவை இந்த ஊர் நினைவூட்டிக்கிடக்கிறது. அவர்களது பால்யத்தினதும் காதலினதும் சாட்சி இந்தஊர். இந்த ஊரின்மீது பிறர் கண்ணுக்குத்தெரியாத அவர்களின் காதல் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவளுக்கு இந்த நிலத்தை பிரிவது துயர் தருவது.

அவள் வருவது எங்களுக்காகத்தான். ஒழுங்கைக்குள்ளயே முதல்வீட்டு காரனைச் சுட்டுப்போட்டுவிட்டு அவர்கள் போன அந்த இரவில் அந்த ஊரில் யாருக்குமே நித்திரையில்லை. சன்னமான துப்பாக்கிவெடிக்கும் ஓசை காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. ஒரு மரணத்தின் நீட்சியாய்…. அம்மா அன்றைக்கு முழுதும் தூங்காமல் இருந்தாள். யாரோடும் பேசக்கூட இல்லை. யாரும் பேசுகிற மனநிலையிலும் இல்லை. எல்லாரும் விழித்திருந்தோம் என்பது மட்டும் உண்மை. ஒளியற்ற இரவுகளுக்கு பழக்கப்பட்டிருக்கிறது வாழ்க்கை. அப்பா காணாமல் போன அந்த இரவும் அப்படித்தான் இருந்தாள்  அம்மா. அவன் எல்லா இடமும் அப்பாவைத் தேடித் தேடித் சலித்து துயருற்று திரும்புகையில் அம்மா ஒன்றும் பேசாமல் இருந்தாள். அவனுடைய தேடலின் விளைவு என்ன என்பதை அறியும் ஆவலெதுவும் அவளிடம் இல்லை. அம்மா மனதளவில் எதையோ அறிந்துவிட்டிருந்தாள் என்று மட்டும் தினேசுக்குத் தோன்றியது. சிலவேளைகளில் செய்திகளையும், சாட்சிகளையும் விட மனசின் குரல் அடர்த்தியானதாய் நிஜமானதாய்  இருக்கும். அம்மா மனசின் குரலை நம்பினாள். அம்மா மூன்றாம் நாளே அப்பா அற்ற ஒரு வாழ்க்கையை ஜீரணிக்கத் தொடங்கி இயங்கவும் தொடங்கிவிட்டாள். அப்பா காணாமல் போன இரவுக்கு பிறகு மறுபடியும் துப்பாக்கி வெடித்த அன்றுதான் அம்மாவின் முகம்  அன்றையதைப்போலவே உள்ளே ஒடிக்கொண்டிருக்கும் கேள்விகளை எதிரொலித்துக்கிடந்தது.

பெரியமாமாக்கள் இந்தியாவுக்கு எங்களை வந்துவிடச்சொல்லிப்போடுற கடிதங்களை அம்மா தூசு தட்டி எடுத்தாள். தம்பி மாமாக்களுக்கு நாங்கள் இந்தியாக்கு வாறம் எண்டு கடிதம்போடென்று அம்மா அன்றைக்குச்சொன்னாள். அம்மாவுக்கு தன் பிள்ளைகளை உயிர் தப்பவைக்கவேண்டும் என்கிற ஆசை. எனக்கு நிரஞ்சனியைப் பார்க்கிறஆசை. மாமான்ர மூண்டாவது மகள் நிரஞ்சி மாமா அம்மாக்கு நேர மூத்தவர். அவளை நான் காதலிக்கிறேன் என்பது அம்மாக்கும் தெரியும், மாமாவுக்கும் தெரியும். அம்மா காட்டிக்கொள்மாட்டாள். ஜெனிற்றா மட்டும் சொன்னாள் "ம் அண்ணாக்கு இந்தியா போறதெண்டால் ஒரே புழுகம் தான்" நான் காட்டிக்கொள்ளாமல் நடந்தேன். அம்மா நிரஞ்சனியுடனான எனது காதலை இயல்பாக எடுத்துக்கொண்டிருந்தாள் என்பது என்னை தைரியமூட்டியது. அது ஒருவேளை நிரஞசனி தனது அண்ணன் மகள் என்பதனால் இருக்கலாமோ என்ற தோன்றும். பிறத்தியாரை நாள் காதலித்திருந்தாலும் அம்மா இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாள் என்ற தோன்றியது. எனக்கும் இந்தியாவுக்கு போகவேண்டும் என்பது மனசுக்குள் தயக்கங்களை விரித்தது. நிரஞ்சியைத் தவிர எனக்கு வேறெந்த மகிழ்ச்சியும் அங்கில்லை. இங்கிருக்கிற நண்பர்கள் அது சரி நண்பர்கள் எங்கேயிருக்கிறார்கள் எல்லாரும் துப்பாக்கிகளிற்கு பயந்து பதுங்கிக்கிடக்கிறார்கள். அல்லது அவற்றிற்கு பலியாகிவிட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள். இத்தியடி அம்மன் கோயில், மகாவித்தியாலய மைதானம். நான் ஓடித்திரிந்த இந்த ஊரில் ஒழுங்கைகள் விளையாடி வீட்டு முற்றம் எல்லாவற்றையம் விட்டு போகவேண்டியிருக்கிறது. அந்த நினைப்பே மனசுக்குள் ஒரு வெறுமையை நிரப்புவதாயிருக்கிறது. மறுபடியம் போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச்சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா? இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள். அவை என்றைக்கு என்னிலிருந்து விலகுவதில்லை.

எனது பால்யத்தின் தடங்களில் சப்பாத்துக்கால் தடங்களும் துப்பாக்கிகளின் கண்களும் ஊன்றிப்பிடித்துவிட்டபிறகு எப்படியிருக்க முடியும் இந்த ஊரில். துப்பாக்கிகளில் நல்லதுப்பாக்கிகள் கெட்ட துப்பாக்கிகள் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச்சனங்கள். துப்பாக்கிகளிற்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான். ஆக நான் இந்தியாவுக்க போகலாம் அங்கே அச்சமூட்டும் இந்த இரவுகள் கிடையாது. இரவில் பயந்து குலைத்தபடியிருக்கும் நாய்களும்,முறிந்தபடியிருக்கும் வேலியின் அரவமும் தூக்கத்தை தொலைலைப்படுத்தாது. எல்லாவற்றிற்கும் மேலாக அங்கே நிரஞ்சியிருக்கிறாள் என்மீது தீராக்காதலை கொட்டித்தருவதற்கு. நிம்மதியாய் கந்தகத்தின் வாடையற்ற ஒரு புதுக்காற்றை நுரையீரல்களில் நிரப்பிக்கிடக்கலாம். நாங்கள் இந்தியாபோவதற்கான நியாயங்களும் காரணங்களும் போதுமானதாய் இருந்தன. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது ரகசியமான திரில்லான அனுபவமாயிருந்தது. கடற்கரையில் யார் ஆக்களை ஏத்துகிறார்கள் என்று ரகசியமாய் விசாரித்து. ஆளைப்பிடித்து எவ்வளவு காசெண்டு கேட்டு எப்பபோகலாம் எண்டு கேட்டு. கடகடவென்று எல்லாம் பேசி முடிஞ்சது. நாங்கள் கடல்கடப்பதற்கு விலைபேசினோம் தலைக்கு பத்தாயிரம்.

இங்க பேசாலைக்கு வந்து ஒரு கிழமை. 'நாளைக்கு போகலாம்', 'இண்டைக்கு ஏத்துறம்', 'ஆக்கள்சேரயில்லை', 'ஓட்டியில்லை', 'நேவியின்ர அசுமாத்தம் கூடவாக்கிடக்கு' சாட்டுகள், பயங்கள், ரகசியங்கள் ஒருவாரமாக கடலைக்கடப்பதை தள்ளிவைத்தன. இன்றைக்கு சொல்விட்டான் நாளைக்கு கட்டாயம் ஏத்திறம் தம்பி என்னை நம்புங்கோ. அந்த வார்த்தைகளில் கள்ளமில்லை என்று தான் அவனுக்குப் பட்டது. அதைத்தவிரவும் மனசுக்கள் குருவி ஒன்று ஓரமாய்ச் சொன்னது. நாளைக்கு போகலாம். மனசின் குரலை நம்பித்தான் ஆகவேண்டும். அது சொன்னால் சொன்னது தான் உள்ளுணர்வு கடலின் படுகை போல ஆயிரம் உண்மைகள் உருண்டு கொண்டிருக்கிற படுகை. எனக்கு அந்த குரலின் மீது நம்பிக்கை உண்டு. நாளைக்கு போய்விடலாம்.

அம்மா எல்லாவற்றையும் விட்டு வரும் போது மிகவும் வருந்தியதாய்பட்டது. எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுச் சேர்த்த சாமானையெல்லாம் விட்டு விட்டு எமக்கான பொருட்கள் ஓரு கறுத்தப் பையிற்குள் அடங்கியது. எல்லார் கையிலும் ஒவ்வொருபை அவ்வளவுதான். இப்போது இதுதான் 25 வருசமாய் நான் வாழ்ந்த வாழக்கையா? 55 வருசமாய் அம்மா வாழ்ந்த வாழ்க்கையா? இந்த கடல் முன் எல்லாமே சரணாகதி. கடல்தான் எல்லாவற்றையும்  தீர்மானிக்குமா? ஐந்தா ஆறா ஏழா எட்டா எத்தனை மணிநேரம் என்று தெரியாத பயணம். எவ்வளவு நேரத்தில் போய்ச்சேருவியள் எண்டு வாகனம் ஓடுறவையைக் கேக்கக்கூடாது என்று அப்பா சொல்லியிருக்கிறார். அது ஒரு வகையான மூட நம்பிக்கை என்று எனக்கு பின்னாளில் தோன்றியது. ஆனால் சாரதிகள் இன்னமும் அதைக்கைவிடவில்லை. அதே நம்பிக்கை தொடர்கிறது பயணம் கெட்டுவிடுமென்ற நம்பிக்கை. நான் ஓட்டியிடம் கேட்கவில்லை. ஆனால் விடியமுதல் போய்ச்சேர்நது விடலாம் என்று தெரியும் போனவர்கள் திரும்பி வந்தவர்கள் என்று கதைகதையாய் வைத்திருந்தார்கள் ஊரில். நடுக்கடலில் தத்தளித்த கதைகள், படகிற்குள் தண்ணீர் நிரம்பி மூழ்கிச் செத்தவர்களின் கதைகள் இப்படி நிறையக் கதைகள். துயர் தரும் மரணத்தின் கதைகளிற்கு இந்த நாட்டில் பஞ்சமா? குருதியும், எரிந்ததசைகளின் துர்மணமும் நிறைந்த கதைகள் தவிர வேறென்ன இருக்கிறது இங்கே. எல்லாரையும் கொன்று கொண்டோ அல்லது கொல்வதற்கு கட்டாயப்படுத்திக்கொண்டோ இருக்கிறது.

நீங்கள் ரெடியா இருங்கோ ஒரு 7.30 போல வாறன் கூட்டிக்கொண்டு போக என்று செல்வம் அண்ணை சொல்லியிருந்தார் அவர்தான் ஒட்டி. ஆறரைக்கே வெளிக்கிட்டாகி விட்டது. அம்மா பதட்டமே இல்லாமல் இருந்தாள். இருக்கும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். எனக்கென்னவோ அடிவயிற்றில் பட்டதம் பூச்சிபறந்தது. ஏனென்று தெரியாத பயம் பதட்டம்,சந்தோசம் எல்லாம் கலந்த நிலை. மேரியும் அம்மாக்கு பக்கத்திலேயெ ஒட்டிக்கொண்டிருந்தாள். ஜெனிற்றா பேசாமல் இருந்தாள். அவளது முகத்தில் எதையும் படிக்கவே முடியவில்லை. ஆனால் மூவரும் என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கினம். நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாங்காய் போன்ற தீவை விட்டு வெளியேறி ஓடிவிடுவதற்காய் காத்திருக்கிறோம். கால் நூற்றாண்டாக நான் வாழ்ந்த இடம் இது என்று யோசித்தேன. ஏதோ அதிகமாய்த் தோன்றிது. நான் சட்டென்றற ஒரு கிழவனாய்ப்போனது போல 25 வருடங்கள் என்று நினைத்தேன். குறைவாகத் தோன்றியது.
 

02.
மணி எட்டாகியிருக்கும் ஒரு பீடி வெளிச்சம் வீட்டை நெருங்கிவந்தது. குரல் மிகவும் அனுக்கமாக வந்தது "தினேஸ்" நான் "ம்" என்றேன். வெளிச்சம் செருமியபடி திரும்பி நடக்கத் தொடங்கியது. நாங்கள் வெளிக்கிட்டோம். இப்போது பீடிவெளிச்சம் தெரியவில்லை ஒரு நிழல், ஜக்கற் போட்ட நிழல். நாங்கள் அதைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தோம். கொஞ்ச தூரம் போனதும் நிழல் நின்று பீடி வெளிச்சமாகியது. நாங்கள் வருவதை ஊர்ஜிதம் செய்து கொண்டு மறுபடி நிழலானது. இப்போது கால்கள் மணலுக்குள் புதையுண்டன உலர்ந்த மணல். கரையில எஸ் ரீ எவ் நிப்பான் அவன்ர கண்ணில படாமப் போகவேணும். இரவில் கடல் அதிக ஒளியோடு இருப்பது மாதிரிப்பட்டது நிலவில்லை. ஆனாலும் படகுகள் தெரிந்தன. மணல் ஈரமாகி கால்கள் முதலடியை தண்ணீருக்குள் 'சளக்' கென்று வைத்தன. ஜெனிற்றா திடீரென்று என் கையை பிடித்தாள் எனக்குப் புரிந்தது. அவர்களது நம்பிக்கை பூராவும் நான்தான். நான் ஒரு தைரியம். அப்பா இடத்தில் இப்போது நான். சளக் சளக் கால்களினிடையில் ஏதோ தேங்காய்ப்பூ மாதிரியான ஒன்று கரைந்து கொண்டிருப்பது போன்ற பிரமை. ஏதேனும் கடல் தாவரமாயிருக்கும். 'ப்ளக் ப்ளக்' என்று படகின் இருகரையிலும் மோதி மோதி கடல் குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.

இது கடலா அலைகளெதையும் காணவில்லையே என்று நினைத்தேன். தண்ணீர் முழங்காலுக்கு கொஞ்சம் மேலாய் ஏறியபோது நிழல் ஒரு படகின் மீது எறி நின்றது. நான் ஜெனிற்றாவை ஏத்தினேன் அடுத்தது மேரி பிறகு அம்மா கடைசியாக நான் . யாரும் எதுவும் பேசவில்லை. அவர் இப்போது படகை கட்டியிருந்த கயிறை அவிழ்த்தார். ஒரு நீள்கம்பால் கடலின் தரையில் ஊன்றி ஊன்றி படகை நகர்த்தினார். யாரும் எதுவும் பேசவேயில்லை ஒரு அச்சம் கலந்து மௌனம் வயிற்றுக்குள் எதுவோ புரண்டது. மீன் வாடை குப்பென்று அடித்தது குமட்டிக்கொண்டு வந்தது. நான் அம்மாவையும் தங்கச்சிகளையும் பார்த்தேன். அவர்கள் எதைவைத்தோ முகத்தை பொத்தியபடி இருந்தனர். படகு நகர்கிறதா அங்கேயே நிற்கிறதா என்பதை தீர்மானிப்பதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. படகிற்கும் கடலுக்குமான மொழி புரியவில்லை. ஆனால் கரையின் கறுத்த பிம்பங்களில் உயரம் சிறுத்துக்கொண்டிருப்பது படகு முன்னகர்கிறது என்றுணர்த்தின. கம்பு ஒருகணத்தில் தரைபாவாமல் தண்ணீர் தடவியது. அவர் கம்பை ஊன்றாமல் கொஞ்சநேரம் படகை நகர விட்டார். நான் அணியத்தில் சாய்ந்து இருந்தேன் அவர் பின்னால் இஞ்சின் பக்கமாப்போனார் 'சர்ர்ர்ர் க்'. பெற்றோல் காட்டி இழுத்தார். 'விர்ர்ர்ர்ர்' இன்ஞ்சின் உறுமி ஓய்ந்தது. மறுபடி இழுத்தார் ட்ர்ர்ர் நின்றது. பச் என்ற சத்தம். மறுபடி இழுத்தார். எனக்கு பயமாக இருந்தது நான் அவரை நெருங்கினேன். கடல் அலைகள் படகில் மெத்தென மோதிக்கொண்டிருப்பது தெரிந்து. படகு லேசாக தளம்பியது. போகமுடியாதோ இன்ஞ்சின் கைவிட்டு விட்டதோ இப்பவே மக்கர் பண்ணுது நடுக்கடலில் நிண்டால் மனசுக்கு அவநம்பிக்கை வருவதற்கும் தோல்வியின் பிம்பத்தை கற்பனை பண்ணுவதற்கும் அதிக நேரம் ஆவதில்லை. எனக்கு எங்கேயோ ஒரு வீட்டில் மீனின் வயிற்றுக்குள் மனிதனின் பெருவிரல் மிச்சங்கள் இருந்ததாய் யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. மீன்கள் சூழ்ந்து மொய்த்து கடித்து துண்டு துண்டாய் கரைத்து அப்பா….. திகலூட்டு வதாய் இருக்கிறது அந்தக் கற்பனையே…..

தொடர்ந்த எத்தனங்களிற்குப் பிறகு ட்ட்ர்ர்ர்ர்ர்ர்; ஒலிஎழுந்து அதிகரித்து பின் மந்தித்து அதிலேயே நிலைத்தது. கியர் போடும் ஒலி படகு கடலை பிரித்து சர் என்று பின்புறத்தில் வெள்ளையாய் தடங்கள் எழுப்பி புறப்பட்டது. படகின் பின்னால்எழுந்த  வெள்ளைத் தடங்கள் கொஞ்சதூரத்திற்கு படகோடு ஓடிவந்து பிறகு கடல்விழுங்கிக் காணாமல் போயின. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. கடல்காற்று தடிமனானதாய் இருந்தது தரைக்காற்றிலும். கடல் இப்போது அதிக ஒளியோடு இருப்பதாய்ப்பட்டது. கண்கள் பழகிவிட்டன. எல்லாம் துலக்கமாய் இருப்பதாய் பட்டது. அலையின் விழிகள் மின்னிமின்னி மறைவது போல இருக்கிறது. செல்வம் அண்ணை பீடி ஒன்றை நிதானமாகப் பற்றவைத்துக்கொண்டார். ஒண்டரை மணித்தியாலம் ஓடினாத்தான் இவங்கள் அறுவாங்களின்ர தொல்லையைத் தாண்ட முடியும் எண்டார். எனக்கு கடல் புதுசாய் இருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லா ஒன்றாய் பெரும் வெளி. ஒரு கம்பளியென விரிந்து கிடந்தது. கரையென்பதே இல்லை தண்ணீர் தண்ணீர் எல்லா இடமும் தண்ணீர். இடைக்கிடை பெரும் அலைகளில் தொபுக்கடிர்; என்று படகு விழுந்தது. எல்லாரும் உள்ளே குந்தியிருக்கிறார்கள். எனக்கு மனசுக்குள் நம்பிக்கை பிறந்தது போய்ச்சேர்ந்து விடுவோம். அம்மா செபமாலையைக் கையில் வைத்திருக்கிறாளாயிருக்கும் மனசுக்குள் செபம் சொல்லுகிற மாதிரி இருந்தது.
 
கடல் தீராமல் நீண்டுகொண்டேயிருந்தது. நீலமாயும் கறுப்பாயுமில்லாத கடல் இருளாயும் ஒளியாயும் இல்லாத கடல். பீடீ வெளிச்சத்தில் செல்வம் அண்ணையின் கண்கள் நன்றாக தெரிந்தது. ஜக்கற்றுக்கள் மறைத்து வைத்து பீடி மூட்டினார். கடல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது இனிமேல் இந்த தீவிற்கும் எனக்கும் சம்பந்தமில்லையா? நான் பிறந்த ஊர் எனது உயிருக்கு பாதுகாப்பானதாய் இல்லையா? என் ஊரே என்னை பிழைத்துக்கொள்ளச் சொல்லி திருட்டுத்தனமாய் கள்ளத்தோணியில் பக்கத்து நாட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. எனக்குள் பலவாறாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. படகின் ஒலியைத் தவிர வேறு ஒலிகளேயில்லை. இந்தப்பெரும் வெளியின் ஒலிகளையெல்லாம் தேக்கித்தான் கடல் கரையில் உறுமுகிறதாயிருக்கும். தம்பி இதை இப்படியே பிடிச்சிருங்கோ என்றார் செல்வம் அண்ணை. நான் இன்ஞ்சினின் கைபிடியைப்  பிடித்தேன். மனசுக்குள் டக்கெண்டு ஒரு பெருமிதம் முளைத்தது நான் படகைச் செலுத்துகிறேன். அவர் அணியத்தில் நிண்டு எதையோ பார்த்தார். பிறகு வந்து வாங்கிக்கொண்டார். கடல் போய்க்கொண்டேயிருக்கிறது. யாரும் பேசிக்கொள்ளவும் இல்லை. பேசிக்கொள்ள எதுவும் இருக்கவுமில்லை. நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன வானத்தில். இறந்தவர்கள் எல்லாரும் நட்சத்திரமாய் ஆனால் அப்பாவும் நட்சத்திரமாய் ஆகியிருப்பாரா? எனக்கு மனசு எடைகுறைந்ததது மாதிரி இருந்தது. அப்பா காணாமல் மட்டும்தான் போயிருக்கிறார் அவர் சாகவில்லை என்று எங்கள் குடும்பம் நம்புவதாக நாங்கள் காட்டிக்கொண்டிருந்தோம் எல்லாரிடமும். அம்மா எதுவும் பேசுவதில்லை அவள் நம்புவது போன்ற வார்த்தைகளையோ அல்லது நம்பாதது போன்ற வார்த்தைகளையோ எதையும் பேசுவதில்லை. எனக்கு இப்போது தோன்றியது எல்லாரும் தனித்தனியே அப்பா செத்துவிட்டதாக நம்பினோம் ஆனால் ஒருமித்து அப்பா இறந்துவிட்டார் என்பதை நம்பாதது போல நடித்தோம்.

கடல் கடந்தது. கரைமாதிரிக் கிட்டவாய் ஒரு பெரும் புள்ளியாய் நிலம் தெரிந்தது. அண்ணை கரை வந்திட்டுதா. இல்லை இது கச்சதீவு என்றார். இனி இந்தியா போடர்தான். எனக்கு ஒருபக்கம் சந்தோசமாக இருந்திச்சு இன்னொருபக்கம் துக்கமாயிருந்திச்சு மனசுக்குள் மறுபடியுமொருதரம் தண்ணீர் வத்தியது. ஜெனிற்றா அண்ணா சோடாக குடியன் எண்டு தந்தாள் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்பது போல இருந்தது. வாங்கி செல்வம் அண்ணைக்கு கொடுத்தேன். அவர் குடித்தார். அவருக்கு பதட்டமேதுமில்லை அல்லது அவருக்கு இந்த பதட்டம் பழக்கமான ஒன்று அவர் தொழில் அல்லவா இது. நான் அவரைப்பற்றியும் அவர்போன்றவர்களின் இன்னல்களையும் நினைத்தேன். அவர் தம்பி கரை தெரியுது என்கிறபோது எனது கனவுகள் கலைந்தன. ஏனோ எனது இதயத்தின் துடிப்பு எனது காதுகளிற்கு கேட்டது. இயல்பற்று கால்கள் நடுங்கின. அவர் காட்டிய திசையில் கறுப்பாய் கட்டிடங்கள் இருப்பதுபோல தெரிந்தது. படகுகள் தெரிந்தன ஆட்கள் நடப்பது போல இருந்தது. சரி கொஞ்சம் கிட்டவா விடுறன் நீங்கள் நடந்து போங்கோ. என்று செல்வம் அண்ணi சொன்னார். எனக்க உண்மையா அழுகை வந்தது. திரும்பிப்போய்விடலாம் போல இருந்தது. இனிமேல் ஊருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற நினைப்பு ஒரு தன்னிரக்கத்தை வரவழைத்தது. பெரும் மின்னல் வாள்கொண்டு என்னைத்தாக்கியது ஊர் நினைப்பு. நிச்சயமாய் அந்தக்கணத்தில் நான் திரும்பிப்போய்விட நினைத்தேன். இனிவழயில்லை இறங்க வேண்டியதுதான். எனக்கும் என் ஊரிற்குமான தொடர்பறுக்கும் ஒரு காலடியை. இன்னொரு ஊருக்கும் எனக்குமான தொடர்பைத் துவங்கும் ஒரு காலடியையும் நான் வைக்கவேண்டும். நான் எழுந்தேன். "சரி மெத்தபெரிய உபகாரம் அண்ணை" "இதென்ன தம்பி சரி நான் வாறன்" எண்டார். அம்மாக்கு சந்தோசம் அம்மா "தம்பி இதைக்குடு கடற்கரை அந்தோனியாருக்கு மெழுகுதிரி வாங்கிக் கொழுத்திவிடச்சொல்லு எண்டா" நான் அம்மா தந்த காசை செல்வம் அண்ணையிடம் கொடுத்தேன் அவர் சரி தம்பி என்றார் நான் முதல் காலடியை இந்தியாவில் வைத்தேன். 'சளக்' தண்ணீருக்கள் கால்புகுந்து நிலத்தில் பதிந்தது. எல்லாரும் இறங்கியாச்சு செல்வம் அண்ணையின் படகு வெள்ளையாய் தடங்கள் எழுப்பி கடலைப் பிரித்தது. கடல் மறுபடியும் தடங்களை அளித்தது. கடல் தடங்களெதையும் வைத்திருப்பதில்லை என்று தோன்றியது. அது நல்லதாயினும் கெட்டதாயினும் தடங்களெதையும் வைத்திருப்பதில்லை. தனது முகத்தை யாருக்காகவேனும் மாற்றிக்கொள்வதில்லை அது எப்போதும் ஒரே மாதிரி தன் முகத்தை வைத்திருக்கவிரும்புகிறது.


நாங்கள் அந்த ஈரமணலில் நடக்கத்தொடங்கினோம். என் மீது ஒரு புதுக்காற்று படர்வதாய் உணர்ந்தேன். பதுசு, எல்லாமே புதுசு நான் இனி இந்த நிலத்திற்கு அன்னியன், நான் ஒரு கள்ளத்தோணி, நான் ஒரு அகதி ஒரு நிலத்தின் எஜமானன் காலத்தால் தூக்கிஎறியப்படக்கூடாத ஒரு பள்ளம் இது. இப்போது நான் ஒரு அகதி. அது எனக்கு ஒரு உறுத்தலாயிருக்கிறதா? இல்லையா? என்பதை நான் சரியாக அறியாதிருந்தேன். ஆனால் மனசுக்குள் ஓரமாய் ஒரு மகிழ்ச்சி இருந்தது. ஏதோ ஒரு கொடியவிலங்கிடமிருந்து தப்பின மகிழ்ச்சி. பெரும் தொல்லையினின்றும் விலகிய மகிழ்ச்சி. செருப்புகளை அங்கேயே கழற்றி விட்டிருந்தோம். அந்த மாம்பழத்தீவின் கரையில் நான்கு ஜோடிச்செருப்புகள் எஜமானர்களைத் தொலைத்துவிட்டுகரையில் காத்திருக்கும். ஒரு வேளை அவற்றுக்கு பதிய எஜமானர்கள் கிடைத்திருக்கலாம்.  செருப்புகள் கடற்கரைக்கு உதவா. வெறுங்கால்கள் கரையோடு பேசுகையில் ஒரு ஆனந்தம். கரை மணல் விரலிடுக்கில் நுழைகையில் கரையும் விரலும் தழுவிக்கொள்ளும் ஆனந்தம். இந்த ஈரமணல் இறுகிக் கிடந்தது. ஜெனிற்றா கொஞ்சம் வேகமாகத்தான் நடக்கிறாள். எல்லாரிடமும் ஒரு உற்சாகம் அம்மாவிடம் ஒரு நிம்மதி இருந்தது.

அந்த நிம்மதியின் ஆயுள் அடுத்த நான்கு காலடிகளில் நொருங்கித் தெறித்து காலடியில் உருண்டு கடலில் மூழ்கியது. நாங்கள் உறைந்து போனோம். ஒரு கொஞ்ச தூரம் நடக்க மறுபடியும் கடல். எங்களைச் சுற்றிக் கடல் இது கரை அல்ல இது ஏதோ ஒரு தீவும் அல்ல கொஞ்சம் பெரிய மணல்திட்டு. அப்போ செல்வம் காட்டிய கரை! அந்த வீடுகள்! படகுகள்! எல்லாம் பொய்யா! மகிழ்ச்சியின் மாயத்தோற்றமா? தரையில் கானல் நீர்மாதிரி கடலில் கானல் தரையா? எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அம்மா என்ர அந்தோனியாரோ எங்களை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டீரே என்று கதறத்தொடங்கிவிட்டிருந்தாள். எனக்கு சிந்திக்கமுடியவில்லை இன்னமும் சரியாக விடியவில்லை ஒரு நான்கு மணியிருக்குமா. மணிக்கூடு இருக்கிறது அம்மாவின் பாக்கிற்குள் எடுத்து மணியைப் பார்க்கலா என்று நினைத்தேன். அனால் வேண்டாம் என்று தோன்றியது. மணியைப் பார்த்து இப்போ என்னவாகப்போகிறது. வேசமோன் இப்படி ஏமாத்திப்போட்டானே என்று ஆத்திர ஆத்திரமாக வந்திச்சு காசை வாங்கிக்கொண்டு இப்படி நடுக்கடலில் அநாதரவாக இதுதான் கரையெண்டு எங்களை நம்பவைச்சு…... பொறுக்கி.

யாரும் வராமல் பசித்து பட்டினியாய் யாருமற்ற இந்த மணல்காட்டிற்குள்ளேயே நால்வரும் சாகப்போகிறோமா. விடியட்டும் ஏதேனும் படகுகள் வரும் காலடியில் சொரிந்து கிடந்த நம்பிகையைக் கூட்டி அள்ளி நிமிர்த்த முயன்றேன். அவன் கரையென்று காட்டிய திசையைப் பார்த்தேன் இப்போதும் கரை தெரிகிற மாதிரித்தான் இருந்தது. கரை கிட்டத்தான் இருக்கிறது. எப்படியும் போய்விடலாம் யாரேனும் வருவார்கள் அல்லது இந்தியன் நேவியாவது வராதா: மனசுக்குள் பிரார்த்தித்தேன். அம்மா ஏற்கனவே அழுது ஓய்ந்து செபமாலையோடு இருந்தாள். நான் சூரியனுக்காக காத்திருந்தேன். கரையின் தொலைவைக் கண்களால் அளந்தேன் மனசுக்குள் நம்பிக்கையை நிரப்பினேன். நாளைக்கு நிரஞ்சனியைப் பார்க்கலாம் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு கொஞ்ச முத்தங்களைப் பரிசளிக்கலாம் நம்பினேன். அது மட்டும்தான் முடியும். நம்பவேண்டும் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது இனிமேல் போவதா கஸ்டம்? இவ்வளது நேரம் விழுங்காத கடலம்மா இனிமேல்தான் எங்களை விழுங்குவாளா? அவள் கருணையும் அன்பும் நிறைந்தவள்தான் என்று தோன்றியது. நிச்சயமாக அவள் கருணையும் அன்பும் நிறைந்தவள் தான். சூரியன் ஒரு பெரிய யானை மிதந்து வருவதைப்போல வந்தான். கிசுகிசுவென்று வானம் வெளுத்து நான் எங்கேயிருக்கிறேன் என்று சொன்னது கரை. உண்மையாகவே அது கரைதான். அது கடலுக்குள் நீண்டிருக்கும் கரையின் வால். ஒரு ஒன்றரைக் கிலோமீட்டர் நீளமான வால். வாலைக் கொஞ்சம் கொஞ்சமாக இடையிடையெ அறுத்துச் சேர்ந்திருக்கிறது கடல். தண்ணீர் தன் கத்தி கொண்டு பூமியின் வாலைத் துண்டுபோட்டிருக்கிறது. துண்டுகளை நிரப்பி கடல் தன்னை நிரப்பிய வாய்க்கால்களை நீந்திக்கடந்தால் வாலைப்பிடித்து கரைக்கு போய்விடலாம். மனசுக்குள் நம்பிக்கை ஊற்றெடுத்து எனக்கே வெட்கமாக இருந்தது. இதற்கா அத்தனை பயந்தோம்.  எழும்பினேன் நாலெட்டில் அந்த கடல்கால்வாயை நெருங்கி காலை வைத்தேன். சுரீர் என்று இழுத்தது. இது கால்வாயா? சுழியா? கிபிரைவிட வேகமாகப் பாய்கிறது. சுழித்தபடி ஆளைப்புரட்டும் வேகத்தில் ஓடும் கடலின் முகம் பார்ப்பதற்கு சாதுவாய் இருந்தது. தன்னை நெருங்கி வரும்வரை அமைதியாயிருந்து திடீரெனச்சீறும் சர்ப்பமெனச் சீறியது கடல். இழுத்து வேகமான ஒரு நதியைப்போல ஒடும் கடல் வெள்ளம் இது. ஆளைப்புரட்டி சிதைத்து மூழ்கடித்து எங்காவது கரையில் துப்பிவிடும் என்று தெரிந்தது.

அழுகையே வந்தது. இனி வழியே இல்லை. நான் ஒன்றும் நீச்சல் வீரன் கிடையாது. யாரும் இதை எதிர்த்து நீந்திக்கடக்கவும் முடியாது. ஒற்றைக்காலையே உருவி விடுமாப்போல்  இந்த இழுவை இழுக்கிறது. இரண்டு காலையும் வைத்தால் அவ்வளவுதான் என்று தெரிந்தது. எல்லாரும் இப்போது அழுதோம் பசித்தது. மிக்சர் பக்கற்றுகள் பிஸ்கற்றுகள் சோடாப்போத்தல் கிடந்தது. வெயில் தலைக்கேறி நிழல் காலுக்குள் ஒரு புள்ளியாய்ச் சுருண்டது. சோடா தீர்ந்து விடக்கூடாதே என்பது என்கவலையாக இருந்தது.  சுற்றிலும் தண்ணீர் ஆனால் குடிக்கமுடியாது. தண்ணீர் அது உண்மையில் ஒரு வித்தியாசமான பொருள்தான் தான் எதில் இருக்கிறோமோ அதுவாயே ஆகிவிட்டாலும் அதன் ரகசியங்களை யாரும் திறக்கமுடியாது. இப்போது கடல் எங்கள் நாலுபேரையும் காவுகேட்கிறதா? மறுபடியும் மீன்வயிற்றுக்கள் நுழைந்த பெருவிரல் நினைவில் அச்சுறுத்தியது. கடல் எங்களை மீன்களிற்கு இரையாக்கப்போகிறதா? உடலெங்கும் மீன்மொய்த்து கடித்து தின்று எவர் வீட்டுக்கறிச்சட்டியிலோ என் பெருவிரலோ அல்லது என் சிலுவை மோதிரமோ விழுமா? நினைப்பே அருவெறுப்பையம் பயத்தையும் ஊட்டியது. ஏதாவது படகு வரும் என்கிற நம்பிக்கையின் நாக்குகள் செத்துக்கொண்டிருந்தன. ஒரு பறவையின் தலை கூட இல்லை. சூரியனின் தலையைக் கடல் சீவித் தனக்குள் புதைத்துக்கொண்டு விட்டது போல இருக்கிறது. வானம் சிவக்கிறது இரவு வரப்போகிறது. இந்த இரவை இந்த மணல்திட்டியில்தான் கழிக்கவேண்டுமா? நான் அம்மாவையும் தங்கச்சிகளையும் பார்த்தேன் மேரி மயங்கும் நிலையில் இருந்தாள். ஒரு கணம் குற்றவுணர்வு மனசுக்குள் தலை தூக்கியது. இவர்கள் என்னை நம்பி வந்தவர்கள் என்கிற நினைப்பு எனக்குள் ஓடியது. இவர்களைச் சாகவிடுவதா போனால் போகட்டும் இவர்களைக் காப்பாற்ற வேண்டும் இல்லை நான் சாகவேண்டும். செத்துப்போவேனா? இந்தக் கடலுக்கு இரக்கமில்லை என்றால் என்னைக்கொல்லட்டும். என் உயிரைக்குடித்து உடலை மீன்களிற்கு இரையாக்கட்டும். படகுகள் எதுவும் வருவதாயில்லை.

தினேஸ் எழுந்தான். "நான் நீந்திக் கரைக்கு எப்படியாவது போய்ப் படகை அழைத்து வருகிறேன்" என்று தீர்மானமாய் அம்மாவிடம் சொன்னான். அம்மா வேண்டாமய்யா செத்தாலும் எல்லாரும் ஒரேயடியாய் சாவம் போகாதை எண்டாள் மேரியும் ஜெனிற்றாவும் அழுதார்கள் அம்மாவும் அழுதாள் அவனுக்கும் கத்திஅழவேண்டும் போல இருந்தது. "இல்லை அம்மா நான் போய்க் கொண்டு வருவன் எனக்கு நம்பிக்கையிருக்கு நீங்கள் அந்தோனியாருக்கு நேத்தி வையுங்கோ" எண்டு சொன்னான். வேற வழியில்லை. அம்மா செபமாலையை தினேசின்ர கழுத்தில் போட்டா. நீங்க இருங்கோ கொஞ்ச தூரம்போலத்தான் கிடக்கு.  அப்படியே தாண்டி தாண்டி கரைக்கு போயிருவன் ஆரையும் போட்டோட கூட்டிக்கொண்டு வாறன் எண்டு சொன்னன்.

அம்மா திடீரெண்டு கட்டிப்பிடிச்சு கொஞ்சினா. வளர்ந்தாப்பிறகு அம்மா அவனைக் கொஞ்சினதில்லை அவனுக்கு அழுகையாய் வந்தது. நான் தைரியத்தை வரவழைத்தேன் கடலின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைத்தேன். காலை மெதுவாய் வைக்காமல் கடலில் பாய்ந்து குதித்தால் பயமிருக்காதெண்டு நினைத்தேன். ஜெனிற்றா எழும்பி வந்தாள். அம்மா இருந்தே பார்த்துக்கொண்டிருந்தாள். மேரி அம்மாவின் மடியில் படுத்திருந்தாள் அவள் கடைசிப்பிள்ளை எல்லாருக்கும் செல்லம். அண்ணா கவனம் ஜெனிற்றா கைகளைப் பிடித்து இறுக்கினாள். அந்த அழுத்தம் நிறைய நம்பிக்கைகள் சொன்னது.


தினேஸ் குதித்தான். அவ்வளவுதான் கடல் தன் ஆயிரம் கரங்களால் அவனைச் சுழற்றி அடித்து உள்ளேஅமத்தி தள்ளியது. அவன் கால்களை உதைத்தான் இது கீரிமலைக்கேணியல்ல என்று தெரிந்தது. கடல் அக்ரோசமாய் அவனை உருட்டி வேகமாய் தள்ளியது அவன் எம்பி எம்பி மேலே வரப்பார்த்தான் கடல் சுழற்றி சுழற்றி அடித்தது. வேகமாய் முன்னிலும் வேகமாய் அதன் ஆழங்களிற்குள் அவனைச் செலுத்திப் புரட்டி கடல் அவனைச் சருகெனச் சுழற்றிற்று. கடல் கொடுங்கடல். இதோ நாலெட்டில் அடுத்த துண்டு வால். ஆனால் கடல் அவன் உடலைப் புரட்டியது. ஜெனிற்றா அண்ணா என்று அலறிய அலறல் கடல் நீரில் கரைந்து ஒரு முறை அவன் காதில் கேட்டது. கடல் நிரம்பியது உடலெங்கும் கடல் மேலே கீழே கடல் எங்கேயும் கடல். கடலின் விஸ்வரூம் அவனை ஆட்கொண்டது. அவன் கடலானான். கடலை எதிர்க்கமுடியாது திணறித்திணறி அவன் ஒய்ந்தான் கால்கள் சோர்ந்தன கைகள் செத்துவிட்டன. கடல் அவனை விழுங்கியது. அவனை சுருட்டி ஒரே வாயில் மென்று விட்டு கடல் நீலமாய் ஏதுமறியாதது போல கிடந்தது. அம்மா அலறி மயங்கிச் சரிந்தாள். கடல் பொல்லாத கடல் அவள் ஒரே மகனை கண்ணெதிரில் விழுங்கிவிட்டது. அவர்களின் அலறல் விழுவதற்கு எந்தக்காதுகளும் அங்கே இல்லை. இந்தப் பேய்க்கடலின் செவிகள் இரக்கமற்றவை. ஜெனிற்றா முழங்காலில் விழுந்து கரை மண்ணள்ளி கடலைத் தூற்றினாள். கடல் பேசாமல் இருந்தது ஏதுமறியாப் பூனையைப்போல மணல்திட்டின் கரைகளில் மெத்து மெத்தென்று மோதிக்கொண்டிருந்தது. 


 


     இதுவரை:  25695868 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9284 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com