Monday, 14 July 2003
கடந்த மே மாத இறுதியில் (22-05-2003 தொடக்கம் 05-06-2003வரையில்) ஊர் சென்று திரும்பியிருந்தேன். பதினைந்து நாட்கள்தான் அனுமதி கிடைத்திருந்தது. அகதியாய் இருந்த நிலையிலும், பதின்மூன்று ஆண்டுகளின் பின்னால் ஊர் செல்ல தாயாரின் இறப்புத்தான் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கியது. செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பதுபோல் அம்மா எனக்களித்த கொடையிது.
எனதூரில் தெருக்கள் கட்டிடங்கள் சிறுத்திருந்தன. அல்லாதவை சிதைந்திருந்தன. தெருக்களில் தாறுமாறாய் வாகனங்கள் சைக்கிள் மிதிக்க நடுங்கின கைகள் நெஞ்சினுள் அச்சம்
புழங்கிய சந்திகள் தெருவோரங்கள் இடம்பெயர்நது விட்டனவா? தேடவேண்டியிருந்தது. முற்றவெளியும், முது மரங்களும், வெளிகளை நிரப்பிய வரலாற்று கட்டங்களும் சூனியத்தில் உறைந்திருந்தன. யாழ்ப்பாண பட்டணம் தொலைந்து போயிருந்தது. கடைத்தெருவில் பட்டணத்தை காண்போர் என்னை மன்னிக்க.
ஊரின் வெயிலிலும் புழுதியிலும் மண்வாசனையை முகர்ந்தேன். வீட்டின் சீமெந்து நிலத்தில் காற்றாட உறங்கினேன். வியர்வையில் குளித்தேன். கிணற்றில் நீரள்ளித் தோய்ந்தேன். சரி இதற்கப்புறம்?
ஊரின் இருப்பு, நெருக்கம், நேசம் எதனைச் சார்ந்திருக்கக்கூடும்? வீடும் பாடசாலையும் தெருவும் கட்டங்களும் சில நினைவுகளைச் சொல்லாம்தான். கல், மண், மரம், செடி, தோப்பு, சில நினைவுளை மீட்டடும்தான்.
ஆனால்
அறிந்த, பழகிய, நேசித்த, தெருவோரங்களில் வணக்கம் சொல்கின்ற, மனிதர்கள் இல்லையேல்.. அந்த ஊர்..? அந்நியம்தான். நானும் அந்நியன்தான்.
(விரிவான பதிவினை கட்டுரையாக விரைவில் தருவேன்)
ஊர் சென்று திரும்பியபோது அங்கு வெளிவரும் இலக்கியச் சஞ்சிகைகள் வன்னியில் வெளிவந்த நூல்கள் பலவற்றை எடுத்து வந்தேன். இவை பற்றிய தகவல்கள் இங்கே கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. அவைகளை பார்த்தபோது தாயகத்திற்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையேயான உறவின் துண்டிப்பு தெளிவாகப் புரிந்தது. இலக்கியப் பரிமாற்றம் நிகழ்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவ்வெளியீடுகள் உணர்த்தி நின்றன. இந்தப் பகுதியில் தொடர்ந்தும் அவைபற்றிய அறிமுகத்தை வெளியிட உள்ளேன். முதலில் இலக்கியச் சஞ்சிகையில் இருந்து தொடங்கலாமென எண்ணுகின்றேன். சுட்டும்விழி திருக்கோணமலையில் இருந்து வெளிவருகின்றது. சமூக கலை இலக்கிய அரசியல் ஏடு என்று தன்னை அழைத்துக் கொள்கின்றது. இது காலாண்டிதழகாக வெளிவருகின்றது. முதல் இதழ் வெளிவந்துள்ளது. இரண்டாவது இதழ் தயாராகிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இரண்டு இதழ்கள் வெளிவந்ததன் பின்தான் இவ்விதழ் பற்றிய மதிப்பீட்டைக் கூறமுடியும். தொடர்ந்து மற்றைய இதழ்களை அறிமுகம் செய்வேன். ஆர்வம் உள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
|