அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 13 June 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.பொ.  
Monday, 14 July 2003

இன்று மரபாக நமக்குத் தோற்றுவது ஒரு காலத்து புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பது நாளைய மரபே. இதை இன்னும் விளக்கினால் மரபும் புதுமையும் மாறிமாறி ஊடாட்டங் கொண்டு இன்னொன்றை, மூன்றாம் ஒன்றை சதா பிறப்பித்துக் கொண்டிருக்கும், இயங்கியல் தன்மையை நாம் மனதில் பதித்தவாறே கவிதை பற்றிய நமது ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

இன்று செய்யுளில் வடிக்கப்படும் கவிதைகளை மரபுக்கவிதை எனக் கூறலாமா? இன்று நாம் மரபுக் கவிதையெனக் கொள்வனவும் பல மாற்றங்களுக்குள்ளாகியே வந்துள்ளன. அகவல், வெண்பா, கலிப்பா, விருத்தம் எனும் பாடல்கள் எல்லாம் இந்த மாற்றம் ஏற்படுத்திய வழித்தடங்களே. ஏன் இன்று புதுக்கவிதை என எழுதப்படும் பலவற்றை அகவல் பாவினத்துக்குள் அடுக்கிக்காட்டலாம் என்ற கருத்தை எம். ஏ. நுஃமானும், முருகையனும் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நுஃமான் தனது அகவல் பாங்கான கவிதைகளை இன்றைய புதுக்கவிதைப் பாணியில் மடக்கி, நீட்டி பிரசுரித்துள்ளார். ஆனால் அதற்காக செய்யுள் மரபைத்தாண்டிய கவிதைகள் இல்லை என்பதல்ல. ஆனால், இச்சந்தர்ப்பத்தில் எம்முன் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி செய்யுள் மரபை மீறி எழுதப்படுபவை எல்லாம் புதுக்கவிதைகளா? படுபிற்போக்கான கருத்தொன்றை செய்யுள் மரபை மீறிய கவிதையொன்று உள்ளடக்குமானால் அதைப் புதுக்கவிதையெனலாமா? அதேவேளை புதுமையான முற்போக்கான கருத்தொன்று மரபுக் கவிதை மூலம் வெளிப்படுமாயின் அது அப்பொழுதும் மரபுக்கவிதைதானா?

இதை இன்னொருவகையில் பார்க்கலாம், ஆங்கில கவிதை மரபை உடைத்துப் புதுமை செய்தவை என்று ரி.எஸ்.எலியட்டின் கவிதைகள் புகழப்படுவதுண்டு. ஆனால் அவரது கவிதைகளில் பிற்போக்கு பாஸிசக் கருத்துக் கூறுகள் உள்ளன என்பதால் அவற்றை புதுக்கவிதைகளில் இருந்து ஒதுக்கிவிடலாமா?

இதற்கு நாம் பதில் காண வேண்டுமாயின், கலைஇலக்கியத்தில் புது உருவ மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டும். ஆம், கலை இலக்கிய உருவ மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்றன.?

இதற்குப் பதில் எமது அனுபவ வெளிப்பாட்டை பிறரில் தொற்றவைப்பதற்கு ஏலவே இருக்கும் கலை இலக்கிய உருவங்கள் ஆற்றல் இழந்தவையாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், தமது சக்தியைப் பூரணமாக அவை இழந்து விட்ட நிலையில், புதிய உருவங்கள் தேவைப்படுகின்றன. ஒரேவகையான உருவங்களிலே பேசப்படும் விஷயங்கள் வாசகர்களுக்கு அலுப்பைத்தருவனவாக மாறுகின்றன. நல்ல விஷயங்கள் அவை போர்த்துள்ள உருவங்களால் வலுக்குன்றியவையாகத் தெரிகின்றன. ஆகவே இத்தகைய (நுஒhயரளவழைn) களைப்பிலிருந்து விடுபட வைப்பவை புதுக்கவிதைகளாக, புது இலக்கிய உருவங்களாக மாறுகின்றன. ஆனால், புது உருவம் தரிப்பவை எல்லாம் புதியனவாக மாறிவிடா. இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்.

சங்க காலம், சங்கம் மருவிய காலம் , பல்லவர் காலம் என்று வந்த நமது கவிதை வரலாற்றில் அகவல், வெண்பா, கலிப்பா, குறட்பா என்று வந்த செய்யுள் உருவங்கள் கம்பனின் விருத்தத்தில் ஓர் உச்ச நிலையை அடைகின்றன.

உலகம்யாவையுமதாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண், நாங்களே

இங்கே கம்பனின் சொற்கையாள்கை முறையும் அவனது பரந்த கருத்தியலும் அவனது படைப்பை உச்ச நிலைக்கு ஏற்றி விடுகின்றன. இங்கே இவன் கையாளும் 'தாமுளவாக்கல்" என்கின்ற சொற்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தில் நாம் வேறொன்றையும் பெய்துவிட முடியாது. அவ்வாறே அவனது கவிதையில் காணப்படும் கருத்தியலும் இன்றைய சமயக் கொள்கை சார்ந்த குறுகிய கோட்பாடுகளை மீறி சகல மானிடத்தையும் இணைக்கும் பரந்த கருத்தியலாக விரிகிறது. இத்தகைய ஒரு பெரும் கலை இலக்கியப் பண்பு கம்பன் வாழ்ந்த ஆயிரம் வருடங்களுக்குப் பின்பு பாரதியில் தான் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அவ்வாறெனின் இவ்விடைப்பட்ட காலத்தில் கவிதையில், கவிதை எடுத்துச் சொல் முறையில் மாற்றங்கள் ஏற்படவில்லையா? என்ற கேள்வி நியாயமானது.

நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எந்த வகையில் என்பதுதான் முக்கியம், யமகம் திரிபு, சிலேடை என்றும் கோயில் புராணங்கள் பிரபந்தங்கள் என்ற வகையிலும் தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துச் சொல் முறையில் இந்த அவலம் ஏற்பட்டு உன்னத கவிதை ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?

இங்கேதான் நாம் கருத்தியல் வறுமையைக் காரணமாகக் காட்டலாம். ஃபிரான் ஃபனன் ஒரு முறை குறிப்பிட்டார். 'எங்கு கருத்தியல் வறுமை காணப்படுகிறதோ அந்த நாட்டில் ஆட்சிக்கு வருவோன் வெறும் கட்டிடங்களையும் கோபுரங்களையும் 'கட்அவுட்"களையுந்தான் கட்டியெழுப்புவான். ஆனால் மக்களோ மிகுந்த வறுமையிலே கிடந்துக் கொண்டிருப்பர்" என்றான். இதற்கு நல்ல உதாரணம் இன்றைய தமிழ்நாடு. கட்டிடங்களும் 'கட்அவுட்"களும் மலிந்தனவேயன்றி மற்றவையெல்லாம் 'சீரோடிக்றி" தான். மீண்டும் யமகம், திரிபு, சிலேடையையும் வித்துவச் செருக்கையும் அள்ளித்தந்த நாயக்கர் காலத்திற்குப் போய்விட்டோமோ என்று ஐயப்பட வேண்டிய எழுத்துக்கள். கேய்யிஸாம், லெஸ்பியனிஸம், ஸ்ரக்ஷறலிஸம், மொடனிஸம், போஸ்ட் மொர்டனிஸம் என்று மேற்கை அபிநயக்கும் போக்கு - தன் தேவையிலும் சூழலிலும் சூல்கொள்ளும் கருத்தியலுக்கான தரிசனமின்மையால் தறிகெட்டும் போன சில்லறைத்தனங்கள். கோணங்கியின் எழுத்துக்கள் இதில் இன்னொருவகை . குவன்டம் தியறி, அணுவின் பிளவு போன்ற சிக்கலான விஷயங்களையே இன்று மிகுந்த தெளிவோடு கவித்துவம் மிளிரத் தருகின்ற காலத்தில் சிக்கலற்ற விஷயங்களையெல்லாம் வார்த்தைச் சிக்கலால் 'உன்னதங்கள்" என்ற மாயையைத் தோற்றுவிக்கும் போலிப் போர்வைகள் அவசியமா? இவை மீண்டும் நாயக்கர் கால தத்துவ வறுமையின் வெளிப்பாடான யமகம், திரிபு, சிலேடை என்னும் வித்துவச் செருக்கை நோக்கிய ஓட்டம் எனலாமா?

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 'தற்கால கவிதைகள்" தொகுப்பு நூலுக்கு பி.Nஐ. என்ரைட் வழங்கிய முன்னுரை கவிதை பற்றி பின்வருமாறு கூறுகிறது. 'இருண்மை உயர்ந்த இலக்கியத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்றும் எளிதில் புரிந்துக் கொள்ளக்கூடியது நல்ல இலக்கியமல்ல என்றும் கருதப்பட்டது. ஒரு கவிதையின் இயல்பாலேயே கடினமாக இருக்கிற கவிதைவேறு, எழுதியவனே புரிந்து கொள்ள முடியாத கவிதைப்படைப்பு வேறு. ஒரு கவிதை மீண்டும் நம்மை படித்துப் புரிந்துக் கொள்ள வைக்கிற ஆவலை உண்டாக்குகிறதா? இது தான் நல்ல கவிதையின் அடையாளம்".

இவற்றின் பின்னணியிலேயே கடந்த நு}ற்றாண்டு ஈழத்துக் கவிதைப் பற்றிய ஆய்வுக்குள் நுழைகிறோம். எவ்வாறு பாரதியின் பரந்த தரிசனவீச்சும் அதன் வழிவந்த கவிதைப் பரிசோதனைகளும் மரபுடைப்பும் அவர் பின் வந்த தமிழர்நாட்டுக் கவிஞர்களுக்குச் சித்திக்காமல் போயிற்றோ, அவ்வாறே அனேகமான ஈழத்துக் கவிஞர்களின் நிலையும். ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான போக்கே, கடந்த நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைபோக்கின் ஆரம்ப கர்த்தாக்களாக விளங்கிய பாவலர் துரையப்பாபிள்ளை, ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, மகாலிங்கசிவம், முத்தமிழ்ப்புலர் மு. நல்லதம்பி, நாவலியூர் சோமசுந்தரப்புலவர் ஆகியோரிடம் செல்வாக்கு செலுத்திற்று. ஆகவே இவர்களை நவீன ஈழத்துத் தமிழ் கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் என்று சொல்லமுடியாது.

இவர்களுக்கு முன் நாவலர் காலத்தில் வாழ்ந்த 'கனகிபுராணம்" எழுதிய கவிஞர் சுப்பையாவிடமிருத்துதான் ஈழத்து நவீன கவிதை ஆரம்பிக்கிறது எனலாம்.

'புல்லை மேயத் தங்கு நின்ற திமிர்புரி இடபக்கன்று
கல்லையும் இழுத்துக் கொண்டு காட்டிடை ஓடும்"

என்ற கவிஞர் சுப்பையாவின் கவிதை வரிகளில் நாம் இன்று அதிகமாகப் பேசப்படும் யதார்த்தத்தையும் பேச்சோசைப் பண்பையும் காணலாம்.

ஈழத்துக் கவிதையின் உயிர்த்துவத்தையும் அது இன்று எய்தியிருக்கும் நிலையையும் சுருக்கமாக அறிவதற்கு இன்றைய ஈழத்துக் கவிதைப் போக்கின் வகைகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்.

1. முதலாவது எந்தவிதக் கருத்தியல் சார்புமற்ற யதார்த்தப் பாங்கான கவிதைகள்.
2. இரண்டாவது பழமைபேண் மார்க்சீயக் கருத்துக்கள் அல்லது சமயக் கருத்துக்கள் சார்ந்த கவிதைகள்.
3. இன்னவைதான் என்று எந்தக் கருத்தியலையும் சாராத எதிர்ப்பு இலக்கிய வகையைச் சார்ந்;தவை. அதாவது தமிழீழப் போராட்டத்திற்கு சார்பான எதிர்ப்பிலக்கியக் கவிதைகள்.
அடுத்தது போராட்டத்தை தற்போது மேற்கொள்ளும் அமைப்புக்கு எதிரான் எதிர்ப்பிலக்கிய கவிதைகள்.
4. ஒத்தோடும் இன்றைய பலதரப்பட்ட சமூக அமைப்புகளுக்கும் எதிரான புதிய கருத்தியல் சார்ந்த எதிர்ப்பிலக்கிய கவிதைகள் .
இப்போக்குகளை இனங்காணும் போது ஈழத்து நவீன கவிதைகளையும் இனங்காண முடியும் எனலாம் . நான் நவீன கவிதை என இனங்காணுவது மேற்கூறப்பட்ட 4 வகைகளிலும் எடுத்துச் சொல் முறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ள ஏற்படுத்திவரும் கவிதைகளையே.
கனகி புராணம் எழுதிய கவிஞர் சுப்பையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது நவீன கவிதையென்றால் அதற்குக் காரணம், அவர் மரபுக் கவிதைக்குள் கையாண்ட எளிமையான சொற்களைக் கொண்ட பேச்சோசை பாங்கான கவிதைகளே. இப்போக்கு தனது முழு விரிவையும் மஹாகவியின் கவிதைகளில் பெற்றுக்கொள்கிறது.

பாரதியின் நேர் வாரிசாகக் கொள்ளப்பட்ட பாரதிதாசன் இனிய தமிழில் கவிதை எழுதினார். ஆயினும் அவரது கவிதைகளை மேலோங்காது தடுத்தது அவரது குறுகிய திராவிடக்கருத்தியலாகும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஈழத்து நவீன கவிதையின் ஆரம்ப கர்த்தாவாக கொள்ளப்படும் மஹாகவி பாரதியால் அதிகம் கவரப்படாது, பாரதிதாசனாலும் கலைவாணனாலும் கவரப்பட்டார். இவர்களிடம் மஹாகவியிடம் கையளிப்பதற்கு பாரதியின் தரிசனம் இருக்கவில்லை. ஆகவே மஹாகவி யாழ்ப்பாணத்து மத்தியத்தர வர்க்கத்து மக்களது ஆசை அபிலாசைகளை வெளிப்படுத்தும் யதார்த்தக் கவிஞராகவே நிற்க்கிறார். ஐரோப்பிய இலக்கியத்தில் பால்சாக் எவ்வாறு ஒரு சிறந்த யதார்த்த வாதியாக கருத்தப்பட்டாரோ அவ்வாறே மஹாகவியையும் நாம் கொள்ளலாம்.

'காலை ஒன்று கிழக்கில் விடிந்தது"என்று மஹாகவி தனது ஒரு சாதாரண மனிதன் சரித்திரம் என்னும் காவியத்தின் முதல் கவிதையை ஆரம்பிக்கும் போதும்.

'இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே" என்று அகலிகை கவிதையை ஆரம்பிக்கும் போதும் எவ்வாறு எளிமையான சிறு சிறு பேச்சோசைப் பாங்கான சொற்களால் இனிமையான கவிதைகளை தோற்றுவிக்கலாம் என்பதைக் காட்டிச் செல்கிறார்.
இவர் காவியம்,,நாடகம், தனிக்கவிதைகள் என்று நிறையவே எழுதியுள்ள போதும் இவர் தனது படைப்புகளை அதிகமாக கலிவெண்பா, கட்டளைக் கலிப்பா, வெண்பா என்கிற செய்யுள் வகைகளுக்குள்ளேயே புகுத்தியுள்ளதால் இவரது கவிதைகள் அனைத்தும் ஒருவித ஆழழெவழழெரள என்கிற ஒரே வகைத்தன்மைக்குள். ஓசைக்குள் வீழ்வது ஒரு பலவீனமாகவே கொள்ளலாம், அவரது நவீனத்துவத்தை கட்டிபோட்டு விடுகிறது என்று கூட சொல்லலாம்.

இவருக்குச் சற்று பிந்தியவர்களான நீலாவாணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் மரபுவழிவந்த செய்யுளிலேயே தம் கவிதைகளை வடித்துத் தந்துள்ளனர். இவாகளில் முருகையன் மரபு வழிவந்த மார்க்சீய பார்வையை வரித்தவராகவும் அதே வேளை ஆறுமுகநாவலர் வழிவந்தோர் அழுத்தும் சைவ சித்தாந்த இறுக்கமும் இவர் கவிதைகளில் செல்வாக்கு செலுத்துவதை காணலாம். எவ்வாறாயினும் இவர் கவிதைகளில் தெறிக்கும் விஞ்ஞானப் பார்வையின் மினுக்கமே வேறு கவிஞர்களிடம் காணப்படாத அழகூட்டும் அம்சமாகும். இவரது காவியமான "நெடும்பகல்" நாடகங்களான 'கடூழியம்" 'வந்துசேர்ந்தான்" இதற்கு நல்ல உதாரணமாகும்.

நீலாவாணனின் கவிதைகளை ஏனைய இவர்காலக் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவர் தனது படைப்புக்களை பல் வகைப்பட்ட செய்யுள் வடிவங்களில் தந்ததோடு அவற்றுள் என்றும் இன்பந்தவரல்ல ஆத்மார்த்தப் பண்பைப் புகுத்தியதுமே. இதை இன்னோர் வகையில் சொல்வதானால் ஒரே வகையான எடுத்துச் சொல் முறையில் வௌ;வேறு ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தியோர் என முருகையனையும் நீலாவாணனையும் குறிப்பிடலாம்.

ஓ.....ஓ.....வண்டிக்காரா ஓட்டுவண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போகுமுன் ஓட்டு
பனியின் விழிநீர்த்துயரத் திரையில் பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் நிலவின் நிழல் நம் பின்னால் தொடருமுன்னே
ஓ.....ஓ......வண்டிக்காரா ஓட்டுவண்டியை ஓட்டு

மேற்காணும் நீலாவணனின் கவிதை அவர் பற்றி நான் கூறுவதை தெளிவு படுத்தும் இனிய கவிதையாகும்.

சில்லையூர் செல்வராசன் மேற் கூறப் பட்ட கவிஞர்கள் போல் காவியங்கள் நாடகங்கள் என்று எழுதா விட்டாலும் தனிக் கவிதைகள் நிறையவே எழுதியுள்ளார். அங்கதச் சுவை மிளிரக் கவிதை எழுதுவதில் இவருக்கென தனியான இடம் உண்டு .
எவ்வாறாயினும் நீலாவணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகிய இவர்கள் மஹாகவியின் எடுத்துச் சொல் முறை யிலிருந்து அதிகம் வேறு படவில்லை. நீலாவணன் தனது ஆத்மார்த்தப் பண்பை மரபுச் செய்யுள் வழியேதான் ஓட விட்டார். இக் கவிஞர் எவரும் வசனக் கவிதையைச் சிறிதும் வரவேற்காதவர்.

அப்படியானால் மஹாகவிக்குப் பின்னர் கவிதையில் நவீன மாற்றத்தை எற்படுத்தியை எடுத்துச் சொல் முறைக்கு வரவேண்டுமானால் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதத் தொடங்கியோரான மு. பொன்னம்பலம், தா.இராமலிங்கம், எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, சு.வில்வரத்தினம், சீ.சிவசேகரம், சேரன். வ.ஐ.ச.nஐயபாலன் ஆகிய கவிஞர்களின் கவிதை பற்றி நாம் சிறிது பார்க்க வேண்டும்.

தொடரும்.


 


     இதுவரை:  25114521 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5679 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com