அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 05 December 2023

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 06
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 06   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 17 January 2007

6.

வைகாசிப் பொங்கல் முடிந்த அடுத்தநாள் காலையிலே கோவிலுக்கு வந்திருந்த மக்கள் தத்தம் வீடுகளையும், ஊர்களையும் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். வற்றாப்பளையிலிருந்து பல நூற்றுக் கணக்கான வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. வழமையாக இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்க விழையும் கங்காதரன், வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சோர்ந்துபோய் இருந்தான்.

சிறுவயது தொட்டே சித்திராவின் நினைவு அவன் சிந்தையைக் கவர்ந்திருப்பினும், நான்கு மதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுதான் அவன் சித்திராவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அந்த நாட்களின் இனிமை நிறைந்த சந்திப்புக்களின் பின்னர் அவன் எவ்வளவோ முயற்சித்தும் அவளை அவனால் காணமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் வன்னிச்சியாரின் கண்டிப்பு நிறைந்த கட்டுக்காவல்தான் என்பதையும் அவன் புரிந்து கொண்டிருந்தான்.

அமெரிக்காவில், கலிபோனியாவில் படித்துக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் சிவராசாவின் முயற்சியினால் அவனுக்கும் அங்கே உல்லாசப் பயணத்துறையில் நிர்வாகம் சம்பந்தமான பட்டத்தை, வேலை பார்த்துக் கொண்டே படித்து அடையும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. இத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த கங்காதரன், கடந்த இரண்டு வாரங்களுள் எத்தனையோ ஏற்பாடுகளை அவசரமாகச் செய்து முடிக்க வேண்டியிருந்தது. அத்தனை அலுவல்கள் மத்தியிலும் சித்திராவைப் பற்றிய இனிய நினைவுகளுடன், அவளை எப்படியாவது பொங்கல் விடுமுறையினுள் சந்தித்து விடை பெற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணிக் காத்திருந்தான். ஆனால் காத்திருந்ததன் பலன்?

'சித்திரா ஏன் என்மீது இப்படி வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றாள்?" ஆசைகள் நிறைவேறாத நிலையில் கங்காதரன் மனங் கசிந்தான்.

வன்னிச்சியார், சித்திராவின் கல்யாண விஷயமாக தங்கள் வீட்டுக்கு வந்து ஆத்திரத்துடன் திரும்பும்போது தான் அவளை வழியிலே சந்தித்து, நேரடியாகவே தன் எண்ணத்தைக் கூறி, தான் இரண்டு வருடத்தில் திரும்பியதும் சித்திராவைத்தான் மணந்து கொள்வேன் என்று உறுதி கூறியதும், அவள் 'இனிமேல் சித்திராவை மறந்துபோடு மோனை!" என்று அறுதியாகக் கூறியதும் அவன் நெஞ்சில் இப்போ உறைத்தது.

..... வன்னிச்சியாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் சித்திராவும் என்னை முற்றாக வெறுக்கின்றாளோ? .... அவளுக்கு என்னைவிட அவளுடைய பெத்தாச்சியின் சொல்தான் முக்கியமென்றால் ..... நான் எதற்காக அவளை நினைத்து வாடவேண்டும்? .... எனக் கங்காதரன் ஆத்திரப்பட்டுக் கொண்டான்.

கண்களில் கனல் பறக்க, 'நீ ஆர் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட? " என்று சித்திரா எரிந்து விழுந்தது அவனுடைய தன்மானத்தை உசுப்பி விட்டது.

000

கங்காதரனுடைய தாயார் பல விஷயங்களையிட்டுச் சிந்தித்தவாறே குசினியுள் அலுவலாக இருந்தாள்.

.... கண்காணாத தேசத்துக்குப் போய் இரண்டு வரியம் இருந்தாலும் பறவாயில்லை! .... சித்திராவை இவன் மறந்தால் போதும்! ... என்று மனதுக்குள் புழுங்கிய அவளுக்கு, சித்திராவும் குமாருவும் பாதையோரமாக நெருங்கி நின்றிருந்தது நினைவுக்கு வந்தது.

.... இருட்டுக்கை தட்டத்தனிய ஒரு இளம் பொடியனோடை ... இரண்டு பேரையும் சேத்துக் கதையைக் கட்டிவிட்டால்? ..... ஊர் முழுக்கச் சிரிக்கும்! .... வன்னிச்சிக் கிழவி கொதிக்கும்! ..... சித்திரா உயிரை மாய்ச்சுக் கொள்ளுவாள்! ... என்று அவள் மனம் அலை பாய்கையில், 'மோனை முத்தம்மா! " என்று அழைத்தபடி வந்து சேர்ந்தாள் ராசம்மா ஆச்சி!

ராசம்மா ஆச்சி நல்ல காலம் படித்திருக்கவில்லை. கல்வி கற்றிருந்தால் அவள் இப்போ ஒரு எம். பி. யாகவோ அல்லது ஒரு அப்புக்காத்துவாகவோ ஆகியிருப்பாள்! அவ்வளவு குயுக்தி! இளமையிலேயே கணவனை இழந்து, பிள்ளைகளும் இல்லாத அவளுக்கு இப்போ கிழடு தட்டிய காலத்தில் கதை காவுவதே தொழிலாகவும், பொழுது போக்காகவும் இருந்தது. ஒரு இடத்தில் சொல்லாததை அதை எந்த இடத்தில் சொல்லக் கூடாதோ அங்கேயே போய், கதைக்குக் கண், காது, மூக்கு எல்லாம் படைத்து உலவ விட்டு வருவாள் ராசம்மா!

இந்தச் சமயத்தில் அவள் வந்ததும் கங்காதரனுடைய தாய்க்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது.

'எப்பிடி மோனை இந்தமுறை பொங்கல்?"  என்று கிழவி விசாரித்தபோது, 'ஏனணை ஆச்சி, உங்கடை எங்கடை காலத்தைப் போல இப்ப ஆரும் பயபக்தியோடை கோயிலடிக்கு வருகினமே .. பத்தினித் தெய்வம் ... அம்மாளாச்சியடியிலேயே அக்கிரமமாய் நடக்கத் தொடங்கீட்டாளவை இந்தக் காலத்துப் பொட்டையள்!"....

கிழவிக்கு உடல் முழுவதுமே காதாகிப் போய்விட்டது. 'ஏன்ரி புள்ளை? என்னடி சங்கதி? என ஆவலுடன் அவள் கேட்டபோது, தன்னுடைய அறையில் படுத்திருந்த கங்காதரனுடைய செவிகளிலும் விழட்டும் என்றே உரத்த குரலில், 'எங்கடை பொடியன் அமெரிக்காவுக்குப் போய்ப் படிச்சிட்டு வரட்டும் ... இவள் சித்திராவை இவனுக்கு முடிச்சு வைப்பம் எண்டுதான் நாங்கள் நினைச்சிருந்தம்! .... ஆன ராத்திரி இந்த இரண்டு கண்ணாலையும் நானே கண்டதுக்குப் பிறகு என்ரை மனம் மாறீட்டுது!...."

'ஏன்ரி மோனை என்ன நடந்தது?" என்று பரபரத்த கிழவியினடியில் குனிந்து குசுகுசுத்தாள் சித்திராவின் மாமியார். நாறிய மீனைக் கண்ட பூனைபோலக் கிழவி நாக்கைத் தீட்டிக்கொண்டு, 'பொரி! ... இது எத்தினை நாளாய்?...." என்றாள்.

'எத்தினை நாளோ ஆருக்குத் தெரியும்! ... ஏதோ அந்தக் கண்ணகை அம்மன்ரை அருள்தான் என்ரை புள்ளை இதுக்காலை தப்பினது!...." என்று நீட்டி முழக்கிப் பெருமூச்சு விட்டாள் கங்காதரனுடைய அருமைத் தாயார்.

உள்ளே தன்னுடைய அறையில் படுத்திருந்த கங்காதரனுக்கு இவற்றைக் கேட்கவே எரிச்சலாகவும், வேதனையாகவும் இருந்தது. சிந்தையை அடக்கிக்கொண்டு எழுந்து, அன்று மாலை புறப்படுவதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

 

 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 05 Dec 2023 12:23
TamilNet
HASH(0x559bf7de22f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 05 Dec 2023 12:23


புதினம்
Tue, 05 Dec 2023 12:23
















     இதுவரை:  24328579 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2144 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com