அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 21 arrow நானும் என் எழுத்தும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நானும் என் எழுத்தும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுந்தரராமசாமி  
Saturday, 15 October 2005

(தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, ஆகியவற்றின் மூலம் ஆளுமை செலுத்திய எழுத்தாளர் சுரா அவர்களை அஞ்சலிக்கும் வகையில் அவருடைய இந்த உரை இங்கு வெளியிடப்படுகின்றது.)

 

1.

நானும் என் எழுத்தும் என்ற வரிசையில் பேச எனக்கு  சந்தர்ப்பத்தை அளித்த திருமதி. பிரசன்னா அவர்களுக்கு  முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு  பேச வரவேண்டும் என்று ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு  முன்னாலேயே இவர் என்னை அழைத்தார். பல சந்தர்ப்பச்  சூழ்நிலைகளால் எனக்கு வர வசதிப்படாமல் போயிற்று. ‘நானும் என் எழுத்தும்’ என்ற பேச்சு வரிசையில் இதற்கு முன்னால் பல எழுத்தாளர்களும் பேசியிருக்கிறார்கள் என்பதை பிரசன்னா  மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் என்ன பேசினார்கள்  என்பது எனக்குத் தெரியவில்லை. வெளியூரில் இருப்பதால் இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமல்  போகிறது. என் பேச்சுக்கு அவர்களுடைய பேச்சை  முன்மாதிரியாக வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமும்  இதனால் இல்லாமல் போயிற்று.
நான் இளைஞனாக இருந்த காலத்தில் ‘நானும் என் எழுத்தும்’  என்ற தலைப்புத் தரப்பட்டிருந்தால் இதைவிடவும் மகிழ்ச்சி  அடைந்திருப்பேனோ என்னவோ. இப்போது என்னைப் பற்றியும்  என் எழுத்துக்கள் பற்றியும் நானே சொல்லி அந்த ஆசை  தீர்ந்துவிட்ட நிலையில்தான் இருக்கிறேன். இப்போதும் பல  வாசகர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய  தேவை தமிழ்ச் சூழலில் இருப்பதை உணர்கிறேன். ஆனால் என்  பேச்சு மூலம் வாசகர்கள் என்னைத் தெரிந்து கொள்வதை விட  மற்றொருவரின் பேச்சின் மூலமும் என் புத்தகங்களின்  மூலமும் அவர்கள் தெரிந்து கொள்வது இன்னும் நன்றாக  இருக்குமே என்று தோன்றுகிறது.
தமிழில் பொருட்படுத்தும்படி எழுதியவர்கள், சற்று சிந்திக்கும்படி எழுதியவர்கள், வாழ்க்கையின் துன்பியல் தன்மையைப் பற்றிச்  சக மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முயல்கிறவர்கள்  எல்லோருமே வாசகனின் வருகைக்காகக் காத்துக்  கொண்டிருப்பவர்கள்தான். வாசகன் தன் முகத்தை எப்போது  பார்ப்பான் என்ற எண்ணத்தில் சதா அவன் முகத்தைத் தேடி  ஏங்குகிறவர்கள்தான். பாரதி, புதுமைப்பித்தன்  போன்றவர்களுக்குக் கூட அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில்  வாசகர்கள் சார்ந்த ஏக்கம் இருக்கத்தான் இருந்திருக்கும் என்று  தோன்றுகிறது.
‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்புடன் சில கேள்விகளும்  வந்துவிடுகின்றன. சிறுவயதில் எழுத்துத் துறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன்? இலக்கியத் துறையால் எப்படி கவரப்பட்டேன்? ஒரு  இளைஞன் செய்வதற்கு எவ்வளவோ காரியங்கள்  இருக்கின்றன. நம் சூழல் சார்ந்து பார்த்தால் அவன் இலக்கியத்  துறைக்கு வருவதற்கான காரணங்கள் எதுவும் இருக்க  நியாயமே இல்லை. இந்திய மொழிகள் ஒன்றிரண்டில் நிலைமை சற்று மாறாக இருக்கலாம். தமிழில் நிச்சயமாக அப்படி  இல்லை.
எந்த இளைஞன் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்து இலக்கியத்  துறைக்கு வந்திருக்க முடியும்? இளமையிலேயே ஒரு கனவு  உருவாகிவிடுகிறது. ஒரு ஆசை, வெறி, ஆவேசம்  ஏற்பட்டுவிடுகிறது. அந்த நேரத்தில் நாம் வேறு, கனவு வேறாக  இருப்பதில்லை. வெறியிலிருந்து விலகி நின்று யோசிப்பதற்கான முகாந்திரமே இருப்பதில்லை. இது போன்ற ஒரு ஆவேசம்  எனக்கு ஏற்படக் காரணங்கள் அதிகம் இல்லை. தந்தை வழியில் அப்படி ஒன்றும் கலைகளிலோ இலக்கியத்திலோ ஈடுபாடு  இல்லை. அவர்கள் வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்ந்து  கெட்டவர்களிடம் லௌகீகத் தளம் சார்ந்த அழுத்தம்தான்  அதிகமாக இருக்கும். இழந்து போன பிரதாபங்களை மீட்டெடுக்க அவர்கள் ஒவ்வொன்றையும் பரபரப்புடன் அள்ளிப் பிடித்துக்  கொண்டிருப்பார்கள். வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசை  வந்துவிட்டால் சில நியதிகள் உருவாகிவிடுகின்றன.  ஒழுக்கங்கள் உருவாகிவிடுகின்றன. சித்தாந்தங்கள்  உருவாகிவிடுகின்றன. நம் சமூகத்தில் பெரும்பாலும்  இவற்றிற்கெல்லாம் மதம் சார்ந்த ஒரு அடிப்படை இருக்கும்.  இவ்வாறு வெற்றியின் இலக்கை அடைய அதிகாரத்தைக்  கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் தெளிவான  வழிமுறைகளைப் பிரகடனப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.  சந்தேகம் இல்லாமல் இருப்பார்கள். சந்தேகம் இல்லாதவர்கள்  போல் ஆபத்தானவர்கள் யாரும் இல்லை என்பது என்னுடைய  எளிய அபிப்ராயம். என் அனுபவம் சார்ந்து நான் இதைத்  தெரிந்து கொண்டிருக்கிறேன். என் வாசிப்பு இந்த அனுபவத்தை  ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.
நல்லதோ, கெட்டதோ, நாம் விரும்புகிறோமோ  விரும்பவில்லையோ எல்லாவற்றிற்கும் ஊற்றுக் கண்ணாக  இருப்பது குடும்பம் என்ற மையம் தான். அதிகாலையில் எழுந்து படித்தால் அப்படியே மூளையில் பதிந்து விடும் என்பார்கள்.  இந்த வாக்கியத்தை என் சிறுவயதில் திரும்பத் திரும்பக்  கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து படிப்பது  குழந்தைகளுக்குச் சிரமமாக இருக்குமே என்று ஒருவராவது  ஒருதடவை கூடச் சொன்னதாக ஞாபகம் இல்லை. தூக்கம்  கண்களைச் சொக்கும் போது படித்தால் எதுவுமே மனதில்  பதியாது என்றும் எவரும் சொன்னதாக ஞாபகம் இல்லை.  இவ்வாறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத, தெளிவு சார்ந்த  தீர்மானங்கள் குடும்பத்திலிருந்து கல்வித் துறைக்குப்  போகின்றன. அரசியல் துறைக்கு வருகின்றன. தத்துவத்துக்குள்  புகுந்து ஆட்டம் போடுகின்றன. குறுகிய காலத்தில் மனிதனை  மாற்றி வாழ்க்கையை மாற்றி விடலாம் என்று  சொல்பவர்களிடம் போகின்றன. குறுகிய காலத்தில்  வாழ்க்கையை மாற்றி மனிதனையே மாற்றிவிடலாம் என்று  சொல்வபவர்களிடமும் போகின்றன.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெவ்வேறு நோக்கங்கள்  சார்ந்த மோதல் மனிதன் காட்டுமிராண்டிகளாக இருந்த  காலத்திலிருந்தே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு  பிரச்சனை என்றுதான் நினைக்கிறேன். இந்த நூற்றாண்டில் அந்த மோதலுக்கு மொழி சார்ந்த ஒரு அழுத்தம் கிடைத்தது. இந்த  மோதலை நம் நினைவுக்குக் கொண்டு வரும் நாவல்கள்,  சிறுகதைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள் என்று  எண்ணற்றவை இருக்கின்றன. துர்கனேவ்வின் ‘·பாதர்ஸ் அன்  சன்ஸ்’ நினைவுக்கு வரும் ஒரு நாவல். பிரான்ஸ் கா·ப்கா  தந்தைக்கு எழுதிய கடிதம் மற்றொரு ஆவணம். என்னிடம்  யாராவது எனக்கும் என் தந்தைக்கும் இடையிலான மோதலைப் பற்றிச் சொல்லச் சொன்னால் நான் அவர்களிடம் பிரான்ஸ  கா·ப்கா ‘தந்தைக்கு எழுதிய கடித’த்தைப் படிக்கச் சொல்வேன்.  இதுதான் மிக நியாயமான பதிலாக எனக்குத் தோன்றுகிறது.  கா·ப்கா அந்தக் கடிதத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த  வாதங்களையும் முன் வைக்கிறார். தெளிவான, கா·ப்கா தன்மை இல்லாத கா·ப்காவின் நூல் அது.
அம்மா சற்று வேறு மாதிரி. அவரிடமும் அதிக மனவெளி  இல்லை. இருக்கும் மனவெளியை முழுமையாகத்  தருவதற்கான ஆரோக்கியமும் அவருக்கு இல்லை. அப்பாவிடம் நெருங்கவே முடியாதிருந்ததால் அம்மாவிடம் இருந்த சிறிய  வெளியும் விசாலமாகவே இருந்தது. முக்காலியில் உட்கார்ந்து  பழகிவிட்டால் கையில்லாத நாற்காலியும் சிம்மாசனம்  போல்தான் இருக்கும். அம்மாவை அப்படி ஒன்றும் ஆழ்ந்த  இலக்கிய ரசிகை என்று சொல்லிவிட முடியாது. வாசிப்பதில்  ஆசை வைத்திருந்தவர் என்று சொல்லலாம். அவர் சில  பெயர்கள் சொன்னார். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத வயதில்  அந்தப் பெயர்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன.  மணிக்கொடி என்று ஒரு பெயர். ந.பிச்சமூர்த்தி,  கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் என்ற  சில பெயர்கள். பிச்சமுர்த்தியின் ‘தாய்’ என்ற கதையை  ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருக்கிறார்.  சம்பாஷனைகளைக் கொச்சையாகச் சொல்லியிருக்கிறார்.  கக்குவான் இருமலில் அவதிப்படும் தன் குழந்தையைத்  தூக்கத்தில் ஆழ்த்த பிராந்தியை ஒருவன் கொடுக்க முயலும்  போது சக பயணியான நாயுடு ஸ்திரீ, குறுக்கிட்டு, ‘பிராந்தியைத் தொடாதீங்க, பிள்ளையை இப்படி என்கிட்ட கொடுங்க’ என்று  சொன்னதை அம்மா கொஞ்சம் ஆவேசமாகவே சொல்வார். இந்த வாக்கியமும் இந்த வாக்கியம் சார்ந்த சித்திரமும் என் மனதில்  ரொம்ப ழமாகப் பதிந்தன. பின்னால் இன்று வரையிலும் மனதில் இருந்த நாயுடு ஸ்திரீயின் சாடையில் பல பெண்களைத் தமிழ்  நாட்டில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மதுரையைச்  சுற்றிச் சற்று அதிகமாகவே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய  முகங்களைப் பார்க்கும் போது அம்மாவுடைய கொச்சைப்  பேச்சுக் குரல் காதில் கேட்கும். நாயுடு ஸ்திரீ குழந்தைக்கு  முலை ஊட்டி விடுகிறாள். ‘அவள் நெஞ்சில் அருள் சுரந்தது.  ஆனால் மார்பில் பால் சுரந்ததோ என்னவோ’ என்று  முத்தாய்ப்பாக பிச்சமூர்த்தி கூறியிருக்கும் வாக்கியங்களையும்  அம்மா சொல்வார்.
கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ கல்கி இதழில் தொடராக  வந்தபோது எங்கள் குடும்பத்தில் எல்லோருமே கல்கியின்  வாசகர்களாக ஆகிவிட்டிருந்தார்கள். கல்கியின் வாசகர்களாக  இருப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தக் களிப்பு இருந்தது.  அந்தக் களிப்பு என் மனதில் தோன்றவில்லை. தொடர்கதைப்  பகுதியை அம்மாவோ அக்காவோ படிக்கும் போது எல்லோரும்  உட்கார்ந்து கேட்போம். அந்த வயதில் என்னால் அந்தக்  கதையைச் சரிவர வாங்கிக் கொள்ள முடியவில்லை. மாறி  மாறி வரும் கதை நிகழ்ச்சிகளையும் மர்மங்களையும் புரிந்து  கொள்வதில் பிறருக்கு இருந்த திறன் எனக்கு இல்லாமல்  இருப்பதை எண்ணி உள்ளூர வருத்தத்துடன் இருந்தேன். பல  வருடங்களுக்குப் பின்னால் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு  படுத்திருந்தபோது என்னைப் பார்க்க வந்த உறவினர் மூலம்  புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’ தொகுப்பு கிடைத்தது. அந்தத்  தொகுப்பு என்னை வெகுவாகப் பாதித்தது. அவருடைய  எதார்த்தப் பாங்கு என் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்திற்று  என்று சொல்லலாம்.
சுதந்திரம் கிடைத்த காலத்தில் வீட்டில் அடிக்கடி வ.ரா., கல்கி,  ராஜாஜி, திரு.வி.க., à®®.பொ.சி, ஜீவா, காமராஜர், பெரியார்,  அண்ணா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.சண்முகம், கவிமணி,  டி.கே.சி., முத்துராமலிங்கத் தேவர், à®….சீனிவாச ராகவன்,  தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பி.ஸ்ரீ., போன்றவர்களின்  பெயர்கள் அடிபடத் தொடங்கின. இவர்களைப் பற்றிப் பல  சுவையான சம்பவங்களை என் தாய் மாமா (அவர் பெயர்  வெ.நாராயணன்) சொல்லிக் கொண்டே இருந்தார். மனதில்  புதிரும் குழப்பமும் வியப்புமாக இருந்தது. இவர்கள் யாருமே  எங்கள் உறவினர்கள் அல்ல. எங்கெங்கோ வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். மாமா போல், பெரியப்பா போல், சித்தப்பா போல்,  தாத்தா போல் எப்படி குடும்பத்துக்குள் இவர்களுக்கும் ஒரு  முக்கியத்துவம் ஏற்படுகிறது? அம்மா சிறுவயதில்  சொல்லியிருந்த கு.ப.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி,  பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் போன்ற பெயர்களையும்  மாமா பின்னால் சொன்ன புகழ்பெற்ற ஆளுமைகளின்  பெயர்களையும் நான் ஒன்றாக இணைத்துப் பார்த்துக்  கொண்டிருந்தேன். இதில் புதுமைப்பித்தன் மட்டும் எனக்குச்  சொந்தம் ஆகிவிட்டவராகவும் மற்றவர்களிடமெல்லாம் நான்  உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாகவும் இருப்பதை  உணர்ந்தேன்.
இந்த உறவை எப்படி ஏற்படுத்திக் கொள்வது? அப்போது எனக்கு வாசிப்பில் அதிக ருசி ஏற்பட்டிருக்கவில்லை. வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்த அக்கா இவர்களைப் பற்றியெல்லாம் வெகு  வேகமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவள்  புத்திசாலி. எந்த அளவுக்கு அவள் புத்திசாலியோ அதைவிட  அவள் புத்திசாலி என்ற எண்ணம் எனக்கு அப்போது இருந்தது.  மற்றொரு சுயஞானமும் தீர்மானமாக இருந்தது. எந்த  விஷயத்தையும் கிரகித்துக் கொள்ள என் மூளைக்குச் சக்தி  இல்லை. முக்கியமான ஆளுமைகளுடைய  புகைப்படங்களையெல்லாம் திரட்டி அந்தப் புகைப்படங்களை  என் அக்காவிடம் காட்டி அவர்களுடைய பெயர்களையும்  சொல்வேன். இந்தச் சாகசத்தை அவள் வெகுவாக  அலட்சியப்படுத்தினாள். இந்த சந்தர்ப்பத்தில்தான் சிறிய மாமா  உதவிக்கு வந்து சேர்ந்தார். அவர் வீட்டோடு வந்து சேர்ந்ததால்  மிக நெருக்கமான தோழமை கிடைத்தது. அவர் என்னை விட  இரண்டு வயதுக்குத்தான் மூத்தவர். அவரிடம் ஊர்  அக்கப்போர்கள் நிறைய இருந்தன.
எங்கள் ஊர்ப் பெரிய மனிதர்களைப் பற்றியும் சினிமா  நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் திரைக்குப் பின் செய்திகளை ஏகமாகச் சேர்த்து வைத்திருந்தார். அவருடைய  மூளை ஒரு இரயில் எஞ்சின் போலவும் என்னுடைய மூளை  ஒரு பலாப்பழ விதை போலவும் என் மனதில் தோன்றிக்  கொண்டிருந்தது. ஊர் சுற்றுவதில் அவருக்கு அசாத்தியமான  நம்பிக்கை இருந்தது. நானும் அவருடன் ஊர் சுற்றத்  தொடங்கினேன். எழுத்து, வாசிப்பு ஆகியவற்றைத் தாண்டி  உங்களை அதிகமாகப் பாதித்த விஷயம் என்ன என்று  கேட்டால் ஊர் சுற்றியது என்று தான் சொல்வேன். ஊர்  சுற்றுவது என்றால் மணிக்கணக்காகச் சுற்றுவோம். வீட்டிற்குப்  போக இரண்டு காரணங்கள்தான் இருந்தன. பகல் என்றால்  தாங்க முடியாத பசி. இரவு என்றால் தூங்க ஒரு இடம். மற்றபடி வீட்டிற்கு வர எந்த காரணமும் இருக்கவில்லை.
பிரதானத் தெருக்களில் நடை பயிலுவதில் மாமாவுக்கு  நம்பிக்கையே இருக்கவில்லை. அவர் புகுந்து புறப்பட்டவை  எல்லாம் சந்து பொந்துகள். முடுக்குகள். தெருவடைச்சான்  சந்துகள். பள்ளமாக  அதள பாதாளம் நோக்கி வழியும் குறுக்குப் பாதைகள். வெளியுலகம் தெரியாத எனக்கு ஒவ்வொன்றும்  மிகுந்த ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் தந்தது. என் முன்  தீர்மானங்கள் நொறுங்கிக் கொண்டே இருந்தன. பல  தெருச்சண்டைகளைப் பார்த்தேன். அழகான பெண்கள் கெட்ட  வார்த்தை சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் எனக்கு  இருந்தது. ஏழைகள் பசி தாங்காமல் அழுது கொண்டிருப்பார்கள்  என்ற எண்ணம் இருந்தது. அம்மா கையால் அடிபடும்  குழந்தைகள் அம்மாவை வெறுக்கத் தொடங்கிவிடும் என்ற  எண்ணம் இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அடி  முட்டாள்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. தாடி,  மீசை வைத்துக் கொள்பவர்களைப் பார்த்துக் குழந்தைகள்  பயப்படும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கிதமாக  பேசுபவர்களை நம்பலாம். பெண்கள் ஆண்களை  அடிக்கமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது  போன்ற பல எண்ணங்கள் கண்ணாடி ஜாடிகள் வைத்திருக்கும்  அலமாரி கவிழ்ந்தால் ஜாடிகள் எப்படி நொறுங்குமோ அப்படி  மூளைக்குள் கவிழ்ந்தன. இந்த நொறுங்கல் ஏமாற்றத்தைத்  தரக்கூடிய அளவுக்கு உவகையையும் தந்தது. நொறுங்க  வேண்டியவை எல்லாம் நொறுங்கட்டும் என்று தோன்றிற்று.
விதம் விதமான பேச்சுக்கள் காதில் விழுந்து மனதில் படிந்தன.  சந்து பொந்துக்களில் சுற்றிவிட்டுப் பிரதான வீதிக்கு  வரும்போது எங்கிருக்கிறோம் என்ற திகைப்பு எனக்கு ஏற்படும்.  அது ஒரு பெரிய தவிப்புதான். ஒரு நிமிடத்திற்குள் விடை  தெரியாவிட்டால் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்று  தோன்றும். அப்போது மாமாவிடம் ‘வேப்ப மரம்  எங்கிருக்கிறது?’ என்று கேட்பேன். வேப்பமரம் எங்கிருக்கிறது  என்பதை மாமா சொல்லி எனக்கும் அது புரிந்துவிட்டால்  உலகத்தில் எந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்துவிடும். வேப்ப மரம் இருக்குமிடம்  தெரிந்தால் எனக்கு எல்லாமே தெரிந்த மாதிரித்தான். வேப்ப  மரத்திற்கு இந்தப் பக்கம் மணிமேடை. அந்தப் பக்கம் பூங்கா.  வேப்பமரத்தைத் தாண்டிப் போனால்  எஸ்.எல்.பி. பள்ளிக்குப்  போய்விடலாம். பள்ளிக்குப் பின்பக்கம் எங்கள் வீடு. வேப்ப  மரத்தோடு பிற இடங்களுக்கு இருக்கும் உறவை வைத்துத்தான் எங்கள் ஊரையே நான் புரிந்து கொண்டேன்.
ஊரில் ஒவ்வொரு இடமும் நினைவு வரும்போது அங்கு  வசிக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் நினைவு வரும்.  ஒரு சந்தில் ஒரு வீட்டு வாசலில் என் 15வது வயதில் பார்த்த  ஒரு 5 வயது பெண்குழந்தையை கிட்டத்தட்ட 50 வருடங்களாக  வெவ்வேறு இடங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே  குழந்தையை ஒரு ஆரம்பப் பள்ளிக்கு முன்னால் அரைப்  பாவாடையுடன், எஸ்.எல்.பி. பள்ளிக்கு முன்னால் முழுப்  பாவாடையுடன், சாரியில் கல்லூரிக்குப் போகும் கோலத்தில்,  திருமணம் முடிந்து கணவனுடன் சினிமாவுக்குப் போகும்  லகரியில், கர்ப்பிணிப் பெண்ணாக, அதன் பின் பல  குழந்தைகளுடன், வகிடு ஓரங்களில் நரையுடன், தொய்ந்து  போன முகத்துடன், முன் பற்களை இழந்துவிட்ட கோலத்தில்,  நெற்றியில் வைதவ்யம் பூசியிருந்த விபூதியுடன் என்று இன்று  வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் உலகத்தில் 50  வருடங்களாக முக்கியமான ஸ்தானத்தில் வாழ்ந்து  கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது. இதுபோல்  எத்தனையோ பேர். நிச்சயமாகப் பெண்கள் மட்டுமல்ல.  ஆண்களும் இருக்கிறார்கள். சில முக்கிய மரங்களும்  இருக்கின்றன. இதுபோல் எவ்வளவோ அனுபவங்கள்.
இந்த அனுபவங்களை எழுதத் தொடங்கும் போது  சூட்சுமங்களைத் தொடமுடியவில்லை என்ற எண்ணம்தான்  எனக்கு ஏற்படுகிறது. அனுபவம் பல சந்தர்ப்பங்களில்  ஏற்படுத்துகிற உவகைக்கு முன் மொழி தோற்றுக் கொண்டே  இருக்கிறது. சுழலும் மின்விசிறியைத் தொட நீளும் கை எப்படித் தயங்குமோ அப்படி மொழி அனுபவங்களின் சூட்சுமங்களைத்  தொடத் தயங்கிப் பின்னகர்ந்து கொள்கிறது. இருந்தாலும் ஊர்  சுற்றலின் விளைவுதான் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்று   பாதி சரியாகவும் பாதி தவறாகவும் கற்பனை செய்து கொள்ள  முடிகிறது. அந்த அளவுக்கு அனுபவங்கள் ஒரு நிறைவைத்  தருகின்றன.

2.
சுய அனுபவம் சார்ந்துதான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும்  என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சிறுவயதில் ஏற்பட்ட  எண்ணம் இது. இன்று வரையிலும் விசேஷப் பாதகம்  இல்லாமல் அந்த எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  சுல்பிகார் கோஷ் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் தீவிரமான  படைப்பு இயக்கம் கொண்டவர். பிறந்த ஊர் பம்பாய்.  அமெரிக்காவில் டெக்ஸாஸில் பேராசிரியராகப்  பணியாற்றுகிறார். அனுபவங்களை முற்றாக உதறிவிட்டு  கற்பனை சார்ந்துதான் நாவல்களை உருவாக்க வேண்டும்  என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர். அவருடைய பேட்டி  ஒன்றில் இதை வற்புறுத்துகிறார். இவ்வாறு அனுபவத்தைத்  தாண்டி முழுக்கவும் கற்பனை சார்ந்து எழுதுவதாகச் சொல்லும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்குபோது அவர்களுடைய  எழுத்துக்கும் அடிப்படையாக அனுபவம் இருப்பது போல்தான்  தெரிகிறது. படைப்பாளியின் குறிக்கோள் சார்ந்து அனுபவம்  படைப்புக்குள் பெரும் குலைவுக்கு ஆட்பட்டுவிடுகிறது.
ஒரு பெரிய காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்துக் காற்றில்  விசிறிவிட்டது போல் அனுபவம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது  என்று வேண்டுமென்றால் சொல்லலாம். மூளைக்குள் வேறு  என்ன பதிவுகள் இருக்க முடியும்? அனுபவத்தைத் தவிர.  எல்லாம் பொறிகள் வழியாகப் போன பதிவுகள் தானே?  தொடர்ந்து இந்தப் பதிவுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.  அடுத்த கணம் நிகழப்போகும் பதிவைப் பற்றி நமக்கு இப்போது  ஒன்றும் தெரியாது. இப்போது என் பேச்சைக் கேட்டுக்  கொண்டிருக்கும் பதிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான்  மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் வேறு பதிவுகள்  தொடங்கிவிடும். இந்தக் கூட்டத்தில் நெருப்பு மூண்டு  விட்டதென்றால் எழுந்து ஓடத் தொடங்கிவிடுவோம். இப்போது  களேபரம் சார்ந்த பதிவுகள் உருவாகின்றன. முன் கட்டுப்பாடு  எதுவுமே இல்லாத பதிவுகள் நம்மை நோக்கி வந்து  கொண்டேயிருக்கின்றன. விழிப்பு நிலையில் இதுபோன்ற  பதிவுகள், உறங்கும் போது கனவுகள். இவற்றின் மீதும் நமக்குப்  பிடிமானம் எதுவும் இல்லை. இந்தப் பதிவுகளின் அர்த்தம்  என்ன?இவற்றில் ஏதேனும் பொருள் இருக்கிறதா?  இப்பதிவுகளின் சாராம்சம் என்ன? என்பதுதான் படைப்பின்  முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.  அப்படிப் பார்க்கும் போது அனுபவம் நேரடியாகப்  பிரதிபலிக்காவிட்டாலும் கூட மறைமுகமாகவேனும்,  உருக்குலைந்த நிலையிலேனும், அல்லது உருக்குலைக்கப்பட்ட நிலையிலேனும் படைப்புக்குள் வந்தாக வேண்டும். மனிதனைக்  கட்டுப்படுத்தும் விதிக்கு முற்றிலும் முரணான ஒரு விதியைப்  படைப்புக்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது.

3.
வாசிப்பின் மூலமும் நண்பர்களின் மூலமும் பல்வேறுபட்ட  பாதிப்புக்களை அடைந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.  ஆனால் அவற்றைப் பற்றித் தெளிவாகச் சொல்ல  முடியவில்லை. புதுமைப்பித்தனின் பாதிப்பைத் தெளிவாக  உணர முடிவது போல் மற்ற பாதிப்புக்களை உணர  முடிவதில்லை. சிறிய வயதில் முற்போக்கு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்  அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பக்கின் கிரேப்ஸ் ஆப் ரேத்  (Grapes of Wrath£) என்ற நாவல் என்னைக் கணிசமாகப்  பாதித்திருக்கிறது. அந்தக் காலத்தில் அவருடைய பல  நாவல்களைப் படித்தேன். சமீபத்தில் அவருடைய ஒரு  புத்தகத்தைப் படிக்க  முற்பட்டபோது அதில் ஈடுபாடே  ஏற்படவில்லை. சிறுவயதில் படித்த பலரைப் பற்றி இன்றும்  மனதில் உயர்வான எண்ணம் இருக்கிறது. மீண்டும் அவர்களைப் படித்துப் பார்த்தால் அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பை  இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.  எழுத்தாளர்களைக் குறை சொல்லும் நோக்கில் நான் இதைச்  சொல்லவில்லை. காலத்தைத் தாங்கும் எழுத்தை உருவாக்குவது கடினம் என்பதால் இதைச் சொல்கிறேன். ஒரு ஆமையின்  ஆயுளோடு ஒப்பிடும் போது ஒரு சிறந்த நாவல் அல்லது ஒரு  சிறந்த கதையின் ஆயுள் குறைவாக இருப்பது வருத்தத்தை  தருகிறது. பாரதியின் மீது எனக்கு எந்த அளவிற்கு மரியாதை  இருக்கிறதோ அந்தளவுக்கு அவர் என்னைப்  பாதிக்கவேயில்லை.
நிச்சயமாக நண்பர்கள் என்னைப் பாதித்திருக்கக்கூடும்.  தெரிந்தோ தெரியாமலோ ஜீவாவுடன் இருந்த நெருக்கத்தினால்  வாழ்க்கையைப் பற்றிய அக்கறை வலுப்பட்டிருக்கிறது என்று  நினைக்கிறேன். இல்லாமை சார்ந்த கொடுமைகள் மனத்தில்  முனைப்பு கொள்ளவும் ஜீவா ஒரு காரணமாக இருந்தார்.  புதுமைப்பித்தன் மீது இருந்த மயக்கம் 50-க்களின் ஆரம்பத்தில் ரகுநாதனைப் பார்க்க ஆவலைத் தூண்டிக் கொண்டிருந்தது. அது  போன்ற ஒரு ஆவலைத் தூண்டியவர் அந்த நாட்களில் அவர்  மட்டும்தான். அவர் புதுமைப்பித்தனின் சிஷ்யர், வாரிசு, பிரதிநிதி  என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவர் அதிகமாகப்  பேசக்கூடியவர் அல்ல; பகிர்ந்து கொள்ளக்கூடியவரும் அல்ல.  ஆனால் எங்களுக்குப் பொதுவாக இருந்த நண்பர்கள் வியந்து  கூறும்படி அவர் என்னுடன் பேசினார். பகிர்ந்து கொண்டார்.  அவருடைய ‘சாந்தி’ இதழில் நான் எழுதித் தந்த  எல்லாவற்றையும் வெளியிட்டார். அவை வெளிவந்ததைவிட  சந்தோஷத்துடன் அவர் அவற்றை வெளியிட்டது  முக்கியமாகப்பட்டது.
அவருடனும் ஜீவாவுடனுமான நெருக்கம் நெல்லையில் பல  நண்பர்களைத் தேடித் தந்தது. எல்லோரும் வாசிப்பதில் அவரவர் அளவில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். அண்ணாச்சி  சண்முகம் பிள்ளை, பால தண்டாயுதம், சமீபத்தில் காலமான  கம்யூனிசத் தலைவர் ப.மாணிக்கம், ரகுநாதன், சிவசங்கரன்,  என்.டி.வானமாமலை, ஜி.நாகராஜன், முருகானந்தம்,  என்.வானமாமலை எல்லோருமே வாசிப்பதில் நம்பிக்கை  கொண்டிருந்தவர்கள். பேசுவதில் நம்பிக்கை  கொண்டிருந்தவர்கள். கருத்துக்கள் சார்ந்து விவாதிப்பதில்  நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். இந்தக் காரியங்கள் எல்லாம்  நிச்சயமாக என்னைப் பாதித்திருக்க வேண்டும்.
என் 20 வயதிலிருந்து கிட்டத்தட்ட 45 வயது வரையிலும் சுமார்  25 வருடங்கள் சகல விஷயங்களையும் நான் கிருஷ்ணன்  நம்பியுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். நகைச்சுவை உணர்வு  மிகுந்தவர். பேச்சு மூலம் காட்சி ரூபங்களை உருவாக்கிக்  கொண்டே இருப்பார். அவருடன் இருக்கும் போது பேசாது  இருக்கும் நேரங்களில் கூட ஒரு தோழமை, தோழமையின்  தென்றல் அல்லது தோழமையின் நறுமணம் வீசிக் கொண்டே  இருக்கும்.
மௌனி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன் போன்றோர்களது  படைப்புக்களின் மீது என் கவனம் அழுத்தம் கொள்ள அவர்  ஒரு காரணமாக இருந்தார். ஜானகிராமனுடைய மிகப் பெரிய  ரசிகர். தான் நடத்திவரும் வியாபாரத்தில் அதிகப் பணம்  ஈட்டும்போது ஜானகி ராமனுக்கு ஒரு தங்க மோதிரத்தை  அன்பளிப்பாகத் தரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கண்ட கனவு நிறைவேறவில்லை.
ரகுநாதன் மூலம் சாந்தியில் கிடைத்த இடத்திற்குச் சற்றும்  குறையாத ஒரு இடம் விஜய பாஸ்கரன் மூலம் ‘சரஸ்வதி’யில் கிடைத்தது. சரஸ்வதியில் எழுதத் தொடங்கியபின் க.நா.சு.,  சி.சு.செல்லப்பா, பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன் என்று  பழைய தலைமுறையைச் சேர்ந்த பல எழுத்தாளர்களையும்  சந்தித்தேன். க.நா.சு. நண்பராகப் பாவித்து என்னுடன் பழகியது  பெரிய விஷயம். அவர் என்னுடைய பார்வையை  பாதித்திருப்பதாக நான் உணரவில்லை. ஆனால் வாசிப்பதில்  எனக்கிருந்த  ஆசை அவர் மூலம் பல மடங்கு பெருகிற்று. ஒரு புத்தகத்தைப் படித்ததும் மனதிற்குள் ஒரு கறாரான  அபிப்ராயத்தை - அதை எழுதவோ அல்லது சொல்லவோ  முடியாததாகக் கூட இருக்கலாம். அது வேறு விஷயம் - என்  மனத்தளவிலேனும் உருவாக்கிக் கொள்ள கவனம்  ஏற்பட்டதென்றால் அதற்கு க.நா.சு.தான் முக்கிய காரணம்.  சென்னையில் க.நா.சு.வுடன் பழகிய காலத்தில்  கு.அழகிரிசாமியும் நா.பார்த்தசாரதியும் மிக நெருக்கமான  நண்பர்களாக இருந்தார்கள்.
எனக்கு இடங்கள் மீதும் காலத்தின் மீதும் மனிதர்களின் மீதும்  மனித உறவுகளின் மீதும் அக்கறை உண்டு. புளியமரத்தின்  கதையை இடமும் காலமும் சார்ந்த படைப்பு என்றும்,  ஜே.ஜே.சில குறிப்புக்களை காலமும் கருத்தும் சார்ந்த படைப்பு என்றும், குழந்தைகள் பெண்கள் ஆண்களை காலமும் மனித  உறவுகளும் சார்ந்த படைப்பு என்றும் பொதுவாகச்  சொல்லலாம்.
எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பகுதி பேச்சு, ஒரு பகுதி  கேள்விகளுக்கான பதில் என்று பிரசன்னா சொல்லியிருக்கிறார்.  கேள்விகளுக்கான நேரத்தையும் வைத்துக் கொள்ள  வேண்டியிருக்கிறது. கேள்விகள் உருவாவதற்கான  பின்னணியைத் தான் சொல்லிக் கொண்டு வந்தேன் என்று  நினைக்கிறேன். நண்பர்கள் மனந்திறந்தும் வெளிப்படையாகவும்  கேள்விகளைக் கேட்கலாம். சிலவற்றிற்கு நான் தெளிவாகப்  பதில் சொல்ல முடியும். சிலவற்றிற்குச் சொல்ல முடியாமல்  இருக்கலாம். சிலவற்றிற்குப் பதில் தெரியாமல் இருக்கலாம்.  சிலவற்றிற்குப் பதில் தெரிந்த நிலையிலும் முழுக்கச் சொல்ல  முடியாமல் இருக்கலாம். இயன்றவரை பகிர்ந்து கொள்ளலாம்  என்று நினைக்கிறேன்.

9.7.99 அன்று சென்னையில் நடைபெற்ற சாகித்ய அகாதமிக்  கூட்டத்தில் ஆற்றிய உரை


மேலும் சில...
நான்..
ஈழத்து மலையகக் கூத்துக்கள்
அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு
சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை
மோகினிப் பிசாசு
நேர்காணல் ஒன்றில்:
வாழ்புலம் இழந்த துயர்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 12:09
TamilNet
HASH(0x563bcf1688e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 12:09


புதினம்
Mon, 15 Jul 2024 12:09
     இதுவரை:  25360864 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2030 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com